குறளின் கதிர்களாய்…(420)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(420)
யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்.
-திருக்குறள் – 341 (துறவு)
புதுக் கவிதையில்…
வையத்து வாழ்வில்
எந்தெந்தப் பொருள்மீது
வைத்திருக்கும் பற்றினை
உண்மையிலே துறந்த
ஒருவனுக்கு,
அந்தந்தப் பொருட்களால் வரும்
துன்பமேதும் வருவதில்லை…!
குறும்பாவில்…
எந்தப் பொருள்மீதுள்ள பற்றை
எவன் துறந்துலகில் வாழ்கிறானே அவனுக்கு
அந்தப்பொருளால் வருந்துன்பம் இல்லை…!
மரபுக் கவிதையில்…
வாழ்விது தன்னில் எப்பொருளில்
வைத்திடும் பற்றில் முழுதுமாக
ஆழ்ந்திடா வகையில் எவனொருவன்
அதனையே துறந்து பற்றின்றி
வாழ்ந்திடும் வாழ்வி லவனுக்கே
வருவதே யில்லை அப்பொருளால்
வீழ்த்திடும் துன்பம் வேறெதுவும்
வேதனை தரவே வாராதே…!
லிமரைக்கூ…
பற்றைத் துறந்தான் பொருளில்,
அவனுக் கப்பொருளால் அவதியே வராதே
ஆட்டிடும் துன்ப இருளில்…!
கிராமிய பாணியில்…
துன்பமில்ல துன்பமில்ல
வாழ்க்கயில துன்பமில்ல,
ஒலகத்துப் பொருள்களுல
ஆசயத் தொறந்தவனுக்கு
துன்பமில்ல துன்பமில்ல..
எந்த எந்த பொருள்மீது
ஒருத்தன் பற்றுதல் இல்லாம
தொறவு வாழ்க்க வாழுறானோ
அவனுக்கு
அந்தப் பொருளால
எந்தத் துன்பமும் வராதே..
தெரிஞ்சிக்கோ,
துன்பமில்ல துன்பமில்ல
வாழ்க்கயில துன்பமில்ல,
ஒலகத்துப் பொருள்களுல
ஆசயத் தொறந்தவனுக்கு
துன்பமில்ல துன்பமில்ல…!