எம்.ரிஷான் ஷெரீபின் ஐந்து புதிய நூல்கள் வெளியீடு

தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு மொழிபெயர்ப்பு நாவல்கள், இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு என முக்கியமான ஐந்து புதிய மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கையின் மலையகத்தில் வாழும் இந்தியத் தமிழர் வாழ்வியலைக் குறித்து முதன்முறையாக சிங்களத்தில் ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ‘எதிர் வெளியீடு’ பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள ‘சாமிமலை’ எனும் அந்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு நிகழ்வில், சிங்களத்தில் அந்த நாவலை எழுதிய சிங்கள எழுத்தாளர் சுஜித் ப்ரசங்க இலங்கையிலிருந்து வந்து கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெற்றிருப்பது இதுவே முதன்முறையாகும். அதே பதிப்பகம் மூலமாக சிங்கள எழுத்தாளர் சுஸந்த மூனமல்பேயின் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, அது ‘ஐந்து விளக்குகளின் கதை’ எனும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
‘வம்சி’ பதிப்பகம் மூலமாகவும் மேலும் இரண்டு முக்கியமான நூல்கள் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில், போர் உக்கிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் வடக்கில் எவருமே பணி புரிய முன்வராத சமயத்தில், மிகவும் தைரியமான இளம்பெண்ணாக அங்கு மருத்துவ சேவையாற்றியவர் மருத்துவர் போதினி சமரதுங்க. அங்கு தனது சேவைக்காலத்தில் பல முன்னாள் போராளிகளுக்கும், சிறுவர் போராளிகளுக்கும் உள மற்றும் உடல் நல சிகிச்சைகளை மேற்கொண்டு அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார். அந்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலை எழுதியிருக்கிறார். நாம் அறிந்திருந்திராத உலகுக்குள் நம்மை அழைத்துச் செல்லக் கூடிய அந்த நூலில் இடம்பெற்றிருக்கும் உண்மைச் சம்பவங்கள் ‘இப்படியும் நடக்குமா?’ என்ற திகைப்பை ஏற்படுத்துபவை. அந்த நூல் ‘மருத்துவக் குறிப்புகள் அல்லாதவை’ எனும் தலைப்பில் வம்சி பதிப்பக வெளியீடாக தற்போது தமிழில் வெளிவந்திருக்கிறது. அத்தோடு, உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகச் சிறுகதைகளின் தொகுப்பான ‘அடிமைகள்’ தொகுப்பும் எம். ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வம்சி பதிப்பக வெளியீடாக தற்போது வெளிவந்திருக்கிறது.
இவற்றோடு, முஸ்லிம்களின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கும் நாவல் என சர்ச்சைக்குள்ளாகியிருந்த ‘மூன்றாவது மனைவி’ எனும் இஸ்லாமிய நாவலானது ஆசியப் பெண்ணான சீதா எனும் தமிழ்ப் பெயருடைய சிங்கள எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தமை அந்தக் கால கட்டத்தில் பலராலும், பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
இஸ்லாமியக் குடும்பங்களில் காணப்படும் ஆண்களின் பலதார மணம் இந்தக் கதையின் பிரதான கருவாக அமைந்திருக்கிறது. எழுத்தாளர் நேரில் சந்தித்த பெண்ணொருத்தியின் உண்மைக் கதையே இவ்வாறு ஒரு நாவலாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாவலானது தமது பெற்றோரின் கடன்களை அடைப்பதற்காக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்படும் பாலகிகள் பற்றிய கதையையே கொண்டிருக்கிறது. அவ்வாறே அந்நிய மத, கலாசாரத்தைச் சேர்ந்த பெண்ணொருவரால் எழுதப்பட்டிருக்கும் இந்த இஸ்லாமிய நாவல் இலங்கையில் இவ்வாறு எழுதப்பட்ட முதலாவது நாவல் என்று கருதப்படுகிறது. இந்த நாவலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியில் நன்னூல் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தையும் தற்போது எதிர் வெளியீடு, வம்சி, நன்னூல், புது உலகம் அரங்குகளில் பெற்றுக் கொள்ளலாம்.