ஆலப்பாக்கம் தாயம்மா
பாஸ்கர் சேஷாத்ரி
சென்னையிலிருந்து தள்ளி உள்ள ஒரு கிராமப் பகுதிக்கு நேற்று சென்றிருந்தேன். அற்புதமான, அழகான ஒரு சிற்றூர். நகர வாசனை கொஞ்சம் கூட இல்லை. ஆனாலும் சிலர் கைப்பேசி வைத்திருந்தனர். தை மாதத்தின் ஆரம்ப வெப்பத்தில் கொஞ்சம் தகிப்பு தெரிந்தது. விடுமுறை நாள் என்பதனால் நிறையக் குழந்தைகள் சிறிய மரத்தின் மீது ஏறி நின்றுகொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். சுற்றி இரண்டு குட்டிக் கோவில்கள் திறந்தே இருந்தன.
எல்லோர் பார்வையும் ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தது. சகஜமாகப் பேச தொடங்கியும் அவர்கள் தங்கள் நிலையில் இருந்து விலகாமல் தள்ளியே இருந்தார்கள். சிரிக்க யோசித்தாலும் சில நிமிடங்களில் இயல்பாகிவிட்டார்கள். எண்பது வயது அம்மா என் கன்னத்தை வருடி எங்கேந்து வரே எனக் கேட்டாள். மெட்ராஸ் என்றேன். எங்க அம்மா மாதிரி என்று அவர்களின் தலையைக் கோதினேன். இருந்த பல் மொத்தத்திலும் சிரித்தார்கள். பச்சை வைக்கோல் போர் வாசனையில் நகர வாசனை மறந்து போனேன்.
ஒரு புறம் ஆட்டுக்குட்டிகள், மறுபக்கம் மழலை உலகம், இன்னொரு பக்கம் முதியவர் உலகம், எப்போதோ யாரோ ஏற்றின கற்பூரத்தின் வாசனை என எல்லாம் கலவையாக இருந்தது. கொஞ்சம் தள்ளி ஒரு குளம். தாமரை சுற்றிப் படர்ந்து நீர்நிலை வெப்பத்தைத் தடுத்தது. கொஞ்சம் கால்களை நனைத்தேன். சென்ற முறை வந்த போது இது வற்றி இருந்தது. அண்மையில் பெய்த மழை இந்த நீர்நிலையைக் குளிப்பாட்டி இருக்கிறது.
என்ன தவம் செய்தனை? இந்த ஊருக்கு மட்டும் மழை பெய்தது போல நீர் தளும்பி நின்றது. நீர், காற்று, வெளி, வான், மண் எல்லாம் நமக்குக் கிடைத்த வரம். அந்த வரத்தை நுகரப் புலன்கள். நாம் தர்மத்திற்குப் படைக்கப்படவில்லை. என்னைப் பார் சிரி எனக் கழுதை சொல்லும் படம் போல, என்னைப் பார் ரசி என்கிறது இந்த இயற்கை.
இன்னொரு பக்கம் பெரிய வயல் பிரதேசம். அதைப் பார்க்கும் போதே அதன் மேல் உறங்குவது போல நினைப்பு மனசுக்கு வந்தது. இயற்கையோடு நாம் இணைந்தால் வாழ்வு சுகம் பெறும். தள்ளிப் போதல் தவறு. அது படைப்புக்கு எதிரானது.
செங்கல்பட்டுக்கு அப்பால் ஒரு பத்து காத தூரத்தில் இருக்கிறது ஆலப்பாக்கம். அங்கு எந்தத் தேநீர்க் கடையோ, உணவகமோ இல்லை. மனிதர்களும் மரங்களும் தவிர எந்தத் திட்டமும் இல்லாமல் முடிந்தால் அங்கு சென்று வாருங்கள். இயற்கையின் முழு வீச்சும் கிராமத்தின் முழுப் பேச்சும் அங்கு உண்டு. எங்கள் குடும்பத்தின் குல தெய்வ ஸ்தலம் அது. அந்த வயதான அம்மாவிடம் உங்க பெயர் என்ன எனக் கிளம்பும்போது கேட்டேன். ஆலப்பாக்கம் கன்னித்தாயம்மா என்றாள். அந்த மண்ணும் தாயம்மா தான்.
(புகைப்பட உதவி – என் மகன் கார்த்திக்)