குறளின் கதிர்களாய்…(445)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(445)
உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித
லனைத்தே புலவர் தொழில்.
-திருக்குறள் – 394 (கல்வி)
புதுக் கவிதையில்…
கற்ற
கல்வியால் ஒன்றாக் கூடி
கலந்து பேசிக்
களித்தே யிருந்து பழகி
இனி இவரை
எப்போது காண்போமென
வருந்தி நினைக்குமாறு
பிரிதல்
கற்றறிந்த புலவர்
செயலாகும்…!
குறும்பாவில்…
கல்வியால் கூடிப் பழகி
மகிழ்ந்திருந்து எப்போதினி காண்போமென எண்ணுமாறு
பிரிதல் கற்றறிந்தோர் செயலே…!
மரபுக் கவிதையில்…
கற்றிடும் கல்வியால் ஒன்றுகூடி
கலந்துதான் பேசியே களித்திருந்தே
ஒற்றுமை யாகவே பழகியபின்
ஒருவரை மற்றவர் பிரிகையிலே,
பெற்றயிப் பொழுதினை போலினியே
பெற்றிவர் தம்மையே பார்க்கமீண்டும்
மற்றொரு காலமே வரயேங்கி
மயங்கியே பிரிவரே புலவோரே…!
லிமரைக்கூ…
கல்வியால் நன்றாய்ப் புரிந்தே
கலந்தோர், காலமிது வருமோ மீண்டுமெனக்
கலங்குவர் செல்கையில் பிரிந்தே…!
கிராமிய பாணியில்…
பெரும உண்டு பெரும உண்டு
எப்பவுமே பெரும உண்டு,
படிச்ச படிப்புக்குப் பெரும உண்டு..
படிச்ச படிப்பால
ஒண்ணாக் கூடி
கலந்து பேசி
நல்லாப் பழகினபொறவு
எனி இவுர
எப்ப பாக்கப்போறோமுண்ணு
ஏங்கி நெனைக்கிறாப்புல
பிரிஞ்சிபோறது நல்லாப்
படிச்சவுங்க செயலாக்கும்..
தெரிஞ்சிக்கோ
பெரும உண்டு பெரும உண்டு
எப்பவுமே பெரும உண்டு,
படிச்ச படிப்புக்குப் பெரும உண்டு…!