குறளின் கதிர்களாய்…(457)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(457)
வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங்
கேட்பினுஞ் சொல்லா விடல்.
-திருக்குறள் -697(மன்னரைச் சேர்ந்தொழுகல்)
புதுக் கவிதையில்…
அரசர் விரும்பும்
ஆட்சிக்குப் பயன்தரும் செய்திகளை,
அவர் கேட்காதபோதும்
சொல்ல வேண்டும்,
அவரே கேட்டாலும்
பயன்தராத செய்திகளை
அவரிடம் சொல்லாமல்
விட்டிட வேண்டும்…!
குறும்பாவில்…
அரசர் விரும்பும் செய்திகளை
அவர் கேட்காதபோதும் சொல்லவேண்டும், பயன்தராதவற்றை
அவரே கேட்டாலும் சொல்லவேண்டாம்…!
மரபுக் கவிதையில்…
நாட்டை யாளும் மன்னனவன்
நாடிக் கேட்கா நிலையினிலும்
ஆட்சிக் குதவும் செய்திகளை
அவரே யறியச் சொல்லவேண்டும்,
நாட்டுக் கேதும் பயன்தராத
நலமே யில்லாச் சேதிகளைக்
கேட்ட போதும் சொலவேண்டாம்
கெடுத லில்லை யதனாலே…!
லிமரைக்கூ…
நலந்தரும் செய்திகளைச் சொல்லு
நாட்டரசர் கேட்காதபோதும், பயன்தராதவற்றை அவரே
கேட்டாலும் சொல்லாதே நில்லு…!
கிராமிய பாணியில்…
சொல்லணும் சொல்லணும்
நல்ல சேதியாச் சொல்லணும்,
நாட்டு ராசாகிட்ட சொல்லணும்..
ராசாவுக்கு விருப்பமான
நாட்டுக்கு நன்ம தருற சேதியள
அவுரு கேக்கல்லண்ணாலும் சொல்லணும்,
நன்மயே தராத சேதியள
ராசாவே கேட்டாலும்
சொல்லப்பிடாது..
எப்பவும்
சொல்லணும் சொல்லணும்
நல்ல சேதியாச் சொல்லணும்,
நாட்டு ராசாகிட்ட சொல்லணும்…!