குறளின் கதிர்களாய்…(458)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(458)
அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉ மில்.
-திருக்குறள் -713(அவையறிதல்)
புதுக் கவிதையில்…
அவையின் தன்மையை
அறியாமல் அங்கு
சொல்லுதலை மேற்கொள்பவர்
சொல்லின் வகையினை
அறியாதவர்,
அதோடு
அவர் கற்றுத்தேர்ந்த கல்வியும்
அவர்க்கில்லை…!
குறும்பாவில்…
பேசும் அவையின் இயல்பறியாமல்
பேசத் தொடங்குபவர் சொல்லின் வகையறியாதவர்,
அவர்கற்ற கல்வியும் அவர்க்கில்லை…!
மரபுக் கவிதையில்…
அவையின் இயல்பை அறியாமல்
அங்கே பேசத் தொடங்குபவர்
அவையில் சொல்லும் சொல்வகையை
அறவே அறியா இயல்பினராம்,
இவையோ டவரும் இவ்வுலகில்
இயல்பாய்க் கற்றுத் தேர்ந்திட்ட
தவறாக் கல்வி தானதுவும்
தனக்கா யிலையென் றாகிடுமே…!
லிமரைக்கூ…
அறியாமல் அவையின் எல்லை
அங்கு பேசுவோர் அறியார் சொல்வகையே,
கற்ற கல்வியுமவர்க் கில்லை…!
கிராமிய பாணியில்…
பேசணும் பேசணும்
நல்லா அறிஞ்சி பேசணும்,
பேசுற சபய
அறிஞ்சி பேசணும்..
சபயோட தன்மய அறியாம
அங்க பேசுறவருக்கு
சொல்லுற சொல்லோட
வகயே தெரியாது,
அவுரு படிச்சறிஞ்ச
படிப்பும்
அவுருக்கில்ல..
அதால
பேசணும் பேசணும்
நல்லா அறிஞ்சி பேசணும்,
பேசுற சபய
அறிஞ்சி பேசணும்…!