குறளின் கதிர்களாய்…(459)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(459)
அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு.
– திருக்குறள் -757 (பொருள் செயல்வகை)
புதுக் கவிதையில்…
அகிலத்தில்
அன்பு ஈன்றெடுத்த
அருள் என்னும் குழந்தை,
பொருளென்று பலராலும்
போற்றப்படுகின்ற
செல்வத்தை உடைய
செவிலித் தாயால்
வளர்க்கப்படுகிறது…!
குறும்பாவில்…
அருள் என்று அழைக்கப்படும்
அன்பு பெற்றெடுத்த பிள்ளை, பொருளென்னும்
செல்வச் செவிலியால் வளர்க்கப்படும்…!
மரபுக் கவிதையில்…
அன்பெனும் தாயவள் பெற்றெடுத்த
அருளெனப் பேர்பெறும் பிள்ளையது,
மன்பதை தன்னிலே என்றென்றும்
மாபெரும் மகிமையைக் கொண்டதுவாம்
குன்றிடா வளமுடைப் பொருளென்றே
குவலய மனைத்துமே போற்றியேதான்
என்றுமே மதித்திடும் செல்வமுடை
எழில்மிகு செவிலியால் வளர்ந்திடுமே…!
லிமரைக்கூ…
அருள் என்னும் சேய்
அன்பாம் அன்னை பெற்றது, வளர்ப்பததனை
பொருளெனும் செவிலித் தாய்…!
கிராமிய பாணியில்…
பெருசு பெருசு
பொருளே பெருசு,
ஒலக வாழக்கயில
ஒசத்தியானது பொருளே..
அருளுங்கிற புள்ளய
அன்புங்கிற தாயவ பெத்தாலும்
அத
ஆரட்டி சீராட்டி வளக்கிறது
ஓலகத்தில ஒசத்தியான
பொருளுங்கிற
செவுலித் தாயார்தான்..
அதால
பெருசு பெருசு
பொருளே பெருசு,
ஒலக வாழக்கயில
ஒசத்தியானது பொருளே…!