குறளின் கதிர்களாய்…(461)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(461)
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்ற லினிது.
– திருக்குறள் -811 (தீ நட்பு)
புதுக் கவிதையில்…
உள்ளன்பு மிகுதியால்
உருகுபவர் போலத் தோன்றிடினும்
உயர்ந்த பண்பற்றவர்
உடனான நட்பு,
வளர்ந்து பெருகுவதைவிடத்
தேய்ந்து குறைவதே
உண்மையில் நல்லது…!
குறும்பாவில்…
அன்பால் உருகுவதாய்த் தோன்றினாலும்,
பண்பற்றவரது நட்பு வளர்ந்து பெருகுவதைவிடத்
தேய்ந்து குறைவதே நல்லது…!
மரபுக் கவிதையில்…
உண்மை யன்பு கொண்டேதான்
உருகி நிற்பார் போல்தோன்றும்
பண்பே யில்லா மாந்தரவர்
பாசாங் காகக் கொளும்நட்பு,
உண்மை யாக வளர்ந்தேதான்
உறுதி யாகும் நிலையைவிட
திண்ண மாகத் தேய்ந்ததுவே
தீரக் குறைதல் நன்றாமே…!
லிமரைக்கூ…
அன்பில் உருகுவார் என்றே
அசலாய்த் தோன்றும் பண்பிலார் நட்பது
வளர்வதிலும் தேய்ந்திடுதல் நன்றே…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
நல்லவுங்க நட்பு,
வேண்டவே வேண்டாம்
கெட்டவங்களோட கெட்ட நட்பு..
பாசத்தில உருகுற மாதிரி
பாசாங்கு செய்யிற
பண்பு கெட்டவங்க கூட
கொண்ட நட்பொறவு
வளருறதவெட
தேஞ்சி
இல்லாமப் போறதே நல்லது..
அதால
வேணும் வேணும்
நல்லவுங்க நட்பு,
வேண்டவே வேண்டாம்
கெட்டவங்களோட கெட்ட நட்பு…!