குறளின் கதிர்களாய்…(462)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(462)
வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு.
-திருக்குறள் – 844 (புல்லறிவாண்மை)
புதுக் கவிதையில்…
புல்லறிவுடைமை என்று
சொல்லப்படுவது எதுவெனில்,
தெளிந்த அறிவுடையேம் யாமென்று
தம்மைத் தாமே மதித்துக்கொள்ளும்
தன்னலச் செருக்காகும்…!
குறும்பாவில்…
புல்லறிவு என்பது எதுவெனில்,
தம்மைத் தாமே தெளிந்த அறிவுடையவரென
மதித்திடும் மயக்கமே யாகும்…!
மரபுக் கவிதையில்…
எதுவென வினவிடில் புல்லறிவு
என்பதின் பொருளதே இதுதானே,
பொதுவினில் பேசிடும் போதினிலே
போற்றிடும் அறிவுளோன் தானெனவே
மதுவதன் மயக்கமாய்ப் பேசுதல்போல்
மனதினில் கர்வமும் கொண்டேதான்
எதுவுமே தெரிந்திடா தாங்கொருவன்
இருந்திடும் செருக்குடைச் செயலதுவே…!
லிமரைக்கூ…
புல்லறி வென்ப திதுவே,
தம்மைத் தாமே தெளிந்த அறிவுடையவராய்
மதித்திடும் மயக்க மதுவே…!
கிராமிய பாணியில்…
அறிவில்லாம அறிவில்லாம
இதுதான் அறிவில்லாம,
புல்லறிவுங்கிற அறிவில்லாம..
புல்லறிவுண்ணா என்னண்ணு கேட்டா
வேற ஒண்ணுமில்ல இதுதான்,
ஒருத்தன்
தனக்குத்தானே பெரிய அறிவாளிண்ணு
நெனச்சிக்கிட்டுத்
தலகால் தெரியாம
அறிவுகெட்டு ஆடுறதுதான்..
தெரிஞ்சிக்கோ
அறிவில்லாம அறிவில்லாம
இதுதான் அறிவில்லாம,
புல்லறிவுங்கிற அறிவில்லாம…!