குறளின் கதிர்களாய்…(496)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(496)
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறும் மன்ன னிலம்.
– திருக்குறள் – 386 (இறைமாட்சி)
புதுக் கவிதையில்…
எல்லோரும்
எளிதில் காணத்தக்க
எளிமையுள்ளவனாய்
குடிமக்கள் எவரிடமும் கடுஞ்சொல்
கூறாதவனாயும்
மன்னன் இருந்தால்,
அவன்
ஆட்சிக்குட்பட்ட நாட்டை
அவனி புகழும்…!
குறும்பாவில்…
குடிமக்கள் எளிதில் காணத்தக்கவனாய்
கடுஞ்சொல் சொல்லாதவனாய் அரசன் இருந்தால்
அந்நாட்டை அகிலமே புகழும்…!
மரபுக் கவிதையில்…
மக்கள் எளிதில் எப்போதும்
மன்னன் தன்னைக் கண்டிடவே
தக்க எளிமை யுள்ளவனாய்,
தன்னை வந்து பார்த்திடவே
பக்க மணுகும் குடிகளிடம்
பணிவோ டின்சொல் உரைப்பவனாம்
மிக்க நற்கோன் நாடதையே
மிகவும் போற்றும் வையகமே…!
லிமரைக்கூ…
காண எளிதாய் நேரில்
கடுஞ்சொல் கூறாதிருத்தல் உலகப் புகழ்சேரும்
நாட்டு மன்னன் பேரில்…!
கிராமிய பாணியில்…
நடக்கணும் நடக்கணும்
நல்லாட்சி நடக்கணும்,
நாட்டுல மக்களெல்லாம் விரும்புற
நல்லாட்சி நடக்கணும்..
நாட்ட ஆளுற ராசா
எல்லாரும் எப்பவும்
பாக்கிறாப்புல
எளிமயா இருந்தாலும்,
குடிமக்களுக்கிட்ட
கடுஞ்சொல்லு
சொல்லாம இருந்தாலும்
அந்த நாட்டப்பத்தி
ஒலகமெல்லாம் பொகழுமே..
அதால,
நடக்கணும் நடக்கணும்
நல்லாட்சி நடக்கணும்,
நாட்டுல மக்களெல்லாம் விரும்புற
நல்லாட்சி நடக்கணும்…!