பட்டம் பறக்குது பார்

0

விசாலம்

vishalam“கொக்கு பறபற! கோழி பறபற! மைனா பறபற! மயிலே பற”  இந்தப் பாட்டைக் கேட்டாலே நமக்கு ஞாபகம் வருவது,  ஆகாயத்தில் பறக்கும்  பட்டங்களும் அதை ஒருவருக்கொருவர் கீழே  வெட்டி வீழ்த்தும்  செயல்களும் தான். வடநாட்டில்  நவராத்திரி முடிந்த பிறகு இந்தப் பட்டம் பறக்கத் தொடங்கி  விடும். குடியரசு தினத்தின் போது, களை கட்டும். அதே போல் ஹோலியின் போதும்  நிறைய பட்டங்கள் பறந்து ஆகாயத்தை நிரப்பும்.

நான்  மலேசியா சென்ற போது இந்தப் பட்டம் பற்றியும் நிறைய அறிந்துகொண்டேன். அங்கு “கிளந்தான்” என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கு இருப்பவர்கள், எல்லோருக்கும் பட்டங்கள் பறக்க விடுவதில் தான் எத்தனை ஆசை. இதை வெறியென்றும் சொல்லலாம். பசியில்லை, தாகமில்லை.  பகல் முழுதும் ஆகாயத்தைப் பார்த்தபடி பட்டங்களை லாவகமாகப் பறக்க விடுகிறார்கள். இதில் கிழவர்களும் சளைத்தவர்கள் இல்லை.  இவர்களது ஏர்லைன்ஸ் சின்னத்தில் இந்தப் பட்டமுள்ளது. இதன் பெயர் ‘வாயுபுலான்’.

kiteஇது, ஒரு மாதிரி பட்டம். இதன் வால், சந்திரன் போல் உருவாகி இருக்கும். இதன் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை அளவு சுமார் மூன்று மீட்டருக்கு மேல் இருக்கும். ஆகாயத்தில் பறந்து பல சாகசங்களைச் செய்யும். இதைப் பறக்க விடுபவர், மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருப்பர்.
பட்டம் விடுவது ஒரு பெரிய கலைதான் அங்கே! இதற்கென்று பட்டத் திருவிழாவும் மிக விமரிசையாக நடக்கிறது. கிபி 1500இல் மலாக்கா சுல்தான்கள் இருந்தபோதே இந்தக் கலை ஆரம்பித்துவிட்டதாம். மலேயா மொழியில் பட்டத்தை “வாயு” என்கிறார்கள்.

பெரிய மூங்கில் சட்டங்களே இதைச் செய்ய உபயோகிக்கப்படுகின்றன. பின் அதில் வண்ண வண்ணக் காகிதங்கள் அல்லது துணிகள் கொண்டும்
செய்யப்படுகின்றன. பட்டங்களில் பல விதமான உருவங்களையும் காண முடிகிறது. பட்டம் ஆரம்பத்தில் மேலே கிளம்பும் போது வருகிறதே ஒரு “ங்கொய்” என்ற சப்தம்! பின்  பறக்கும் போது சுருதி கூட்டுவது போல் ஒரு திவ்யமான ஒலி நம் காதை நிரப்பி, மகிழ வைக்கிறது

இந்தியாவிலும் இந்தக் கலை தொன்றுதொட்டே தொடர்ந்து வருகிறது. ஆகஸ்டு 15 சுதந்திர நாளில் பார்க்க வேண்டுமே ஆகாயத்தை……..

வண்ணப் பட்டங்கள் ஆகாயத்தில் அழகாகப் பவனி வருவது, கண்கொள்ளாக் காட்சிதான். அதுவும் ஒருவர் பட்டம் மேலே பறக்க, மற்றவர் ‘மாஞ்சா’  என்று சொல்லப்படும் கண்ணாடித் துகள்கள்  தடவிய  கயிற்றால் அதை அறுக்க “போ காட்டே” என்று வட இந்தியாவில்  எல்லோரும் கூச்சல் போட, பசி தாகம் ஒன்றும் இல்லாதது போல்  மணிக்கணக்காய் இந்த விளையாட்டில் ஈடுபட்டுக் களிப்பார்கள். சிலர் இதில் பணம் கட்டுவதும் உண்டு.

ஆனால் இதே விளையாட்டு  வினையாகவும் ஆகிறது. பல சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. மொட்டை மாடியில்  தண்ணீர்  டேங்கின் மேல் நின்று ஒருவன் பட்டம் விட, கால் வழுக்கிக் கீழே  விழுந்து விட்டான். பட்டம் அறுந்தது  உயிரும் பிரிந்தது.

சில  குழந்தைகள் பட்டம் அறுந்து விழும் போது, கண்மண் தெரியாமல் ஓடி, அதைப் பிடிக்க முயல்வார்கள். அப்போது அவர்கள் கவனம்  முழுவதும் ஆகாயத்திலிருந்து விழும் பட்டதிலேயே இருக்க…. நடப்பது என்ன? விபத்து தான். கார் இவர்கள் மேல்  மோதி…. நேரே  மருத்துவமனை தான். சில சமயம், அந்தக் கண்ணாடித் தூள்கள் தடவிய கயிறு, சதையை அறுத்தும்  விடுகிறது.

முன்பு  சென்னையில் வண்ணாரப்பேட்டையில் நடந்த சம்பவம். அந்த இடத்தில் நிறைய  மார்வாடிகள் வசிக்கின்றனர். பாபு என்ற  துணி வியாபாரி  அயன்புரத்தில் இருக்கும் உறவினரைப் பார்க்கக் கிளம்பினான். அவன்  அன்புச் செல்லம், இரண்டு வயது சசாங். தான் தனியாகப் போகாமல் அவனையும் அணைத்து எடுத்துக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில்  கிளம்ப,”அதோ பட்டம் பார் என் செல்லக் கண்ணா” என்று ஓட்டிக்கொண்டே காட்ட, அந்தப் பாப்பாவும்  கழுத்தத நீட்டிப் பார்க்க, வந்ததே  ஒரு “மாஞ்சா” கயிறு. அறுத்தது அதன் பிஞ்சுக் கழுத்தை.

இரத்தம் பீரிட்டுக்  கொட்ட, தந்தை செய்வது  அறியாது ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டான். பின் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்க, சசாங்கின் உயிரும் பிரிந்துவிட்டது. வண்ணாரப்பேட்டை முழுவதும் அன்று திரண்டு வந்து அஞ்சலி  செலுத்தியது. தந்தை  அந்த ஷாக்கிலிருந்து இன்னும் விடுபடவில்லை. தானே தன் குழந்த்தைக்கு எமனாகி விட்டோமே என்று புலம்புகிறான்.

இதுதான் விதியோ? பட்டத்தின் கயிறு, எமனின்  பாசக் கயிறோ ?

================================

பட்டம் படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *