ஸ்ரீஜா வெங்கடேஷ் 

10.12.2011 அன்று ஏற்பட்ட முழுச் சந்திர கிரகணத்தை அனைவரும் கண்டு ரசித்திருப்பீர்கள். இதைக் குறித்து எத்தனையோ மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றைத் தவிர்த்து கிரகணம் எதனால் ஏற்படுகிறது, எத்தனை வகையான சந்திர கிரகணங்கள் உள்ளன? அவைகளுக்குள் இருக்கும் வேறுபாடுகள் என்னென்ன? என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 

நிலவு, பூமி, சூரியன் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் அல்லது மிக மிக அருகில்  சந்திக்கும் போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வு முழு நிலவு நாளன்று தான் ஏற்படும். அதனால் சந்திர கிரகணம் பௌர்ணமி அன்று தான் ஏற்படும். கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும்? எந்த வகையான கிரகணம் ஏற்படும் என்பதெல்லாம் நிலவு பயணம் செய்யும் வளிப் பாதையைப் பொறுத்து அமையும். சூரிய கிரகணத்தைப் போலில்லாமல் சந்திர கிரகணம் இரவு நேரத்தில் பூமியின் எந்தப் பகுதியிலிருந்தும் பார்வைக்குத் தென்படும். மற்றொரு வேறுபாடு என்னவென்றால் சூரிய கிரகணம் சில நிமிடங்களே நீடிக்கும், ஆனால் சந்திர கிரகணம் சில மணி நேரம் நீடிக்கும். காரணம் நிலவு சூரியனை  விட மிகச் சிறியது  என்பதே. 

பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்று பார்த்தோமல்லவா? அந்த நிழலையே அறிவியலாளர்கள் இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். அம்ப்ரா (நடுப்பகுதி), பெனம்ப்ரா (வெளிப்பகுதி)  என்பவையே அவை.  நிலவு பூமியின் பெனம்ப்ரா பகுதியில் இருக்கும் போது பெனம்பரல் கிரகணம் (வெளிப் பகுதியில் வரும் கிரகணம்) ஏற்படுகிறது.  இதனால் சற்றே கருமை நிறமாக நிலவு காணப் படும்.  நிலவு முழுக்க முழுக்க பூமியின் வெளிப்பகுதி (penumbara) நிழலிலேயே இருக்கும் போது ஏற்படுவது முழுமையான பெனம்பர கிரகணம் (total penumbaral eclipse)  ஏற்படுகிறது. இது மிகவும் அரிய வகையாகும். இந்த கிரகணம் ஏற்படும் போது பூமியின் நடுப்பகுதி நிழலுக்கு (umbra) மிக அருகில் இருக்கும் நிலவின் பகுதி மட்டும் முழுமையாக இருளடைந்து காணப் படும். 

ஒவ்வொரு மாதமும் நிலவு இருமுறை கிரகணம் ஏற்படக்கூடிய  வளிமனையை (orbital nodes)  இருமுறை கடக்கிறது. அவ்வாறு நிகழும்போது முழுநிலவு நாளாக இருந்தால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. நிலவின் சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே பூமியின் நடுப்பகுதி நிழலுக்குள் (umbra) இருக்குமானால் அப்போது ஏற்படுவது பகுதி சந்திர கிரகணம் (partial lunar eclipse) . நிலவின் முழுப் பகுதியுமே நிலவின் நடுப்பகுதி நிழலுக்குள் வந்து விட்டால் அது முழு சந்திர கிரகணம் (Total Lunar Eclipse) எனப்படும். நீள் வட்டப் பாதையில் நிலவு நகரும் வேகம் கிட்டத்தட்ட 1கி.மீ/நொடி.  அதனால் முழு சந்திர கிரகணத்தின் நீளம் 107 நிமிடங்கள் வரை இருக்கலாம். இந்த நீளத்தை தொடுகைகள் (contacts) தான் நிர்ணயிக்கின்றன. 

தொடுகைகள் என்றால் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

P1 முதல் தொடுகை (First Contact) 

பெனம்பரல் கிரகணத்தின் ஆரம்பம். அதாவது நிலவின் வெளிப்பகுதியை பூமியின் நிழலின் வெளிப்பகுதி(penumbra)  தொடும் சமயம். 

U1 இரண்டாம் தொடுகை (Second Contact) 

பகுதி நேர கிரகணத்தின் துவக்கம். அதாவது நிலவின் வெளிப்பகுதியை பூமியின் நிழலின் நடுப்பகுதித்(umbra) தொடும்  சமயம்.  

U2  மூன்றாம் தொடுகை (Third Contact)

முழு சந்திர கிரகணத்தின் துவக்கம்.அதாவது நிலவு முழுவதும் பூமியின் நிழலின் நடுப்பகுதிக்கு(umbra)  வரத் துவங்கும் சமயம். 

சிறப்பு கிரகணம் (Greatest Eclipse) 

கிரகணத்தின் உச்சம். நிலவின் எல்லாப் பகுதியும் பூமியின் நிழலின் நடுப்பகுதிக்கு (umbra) மிக அருகில் இருக்கும் சமயம். 

U3  நாலாம் தொடுகை (Fourth Contact) 

முழுச் சந்திர கிரகணத்தின் முடிவு. நிலவின் வெளிப்பகுதி பூமியின் நடு நிழலை விட்டு வெளியேறும் சமயம். 

U4 ஐந்தாம் தொடுகை  (Fifth Contact) 

நிலவின் முழுப்பகுதியும் பூயின் நடு நிழலை விட்டு வெளியேறும் சமயம். 

P2 ஆறாம் தொடுகை (Sixth Contact) 

பெனம்பரல் கிரகணத்தின் முடிவு. (Penumbaral Eclipse). நிலவின் எந்தப் பகுதியுமே பூமியின் நிழலில் இல்லை. 

சந்திர கிரகணத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் சூரிய அஸ்தமனத்தையும், கிரகணம் பிடித்த சந்திரனையும் ஒரே சமயத்தில் பார்க்கலாம் என்பது தான். சூரிய அஸ்தமனமும், சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நிகழும் இடங்கள் உலகில் பல நாடுகளில் உண்டு. அத்தகைய இடங்களில்  மேற்கூறிய நிகழ்வைப் பார்க்கலாம். நிலவு சூரியன் இரண்டுமே தொடு வானத்திற்குச் சற்று மேலே நேரெதிர் திசைகளில் காணக்கிடைக்கும் ஒரு அபூர்வ காட்சி இது. 

பொதுவாகக் கிரகணம் ஏற்படும் போது நம் வளி மண்டலத்தில் நிறைய மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடலுக்கு தீங்கு செய்யும் கதிர்கள் அந்த சமயத்தில் பூமியில் இருக்கக் கூடும். அதனால் தான் நம் முன்னோர்கள் அந்த நேரத்தில் உணவு தயாரிக்காமலும், உண்ணாமலும் இருப்பது சிறந்தது எனக் கூறியுள்ளனர். மேலும் அத்தகைய விஷக் கதிர் வீச்சுக்களின் பாதிப்பைக் குறைக்க வேண்டியே கிரகணம் முடிந்ததும் நீராடும் பழக்கத்தை ஏற்படுத்தினர். 

இன்று அறிவியல் பிரம்மாண்டமாக வளர்ந்து விட்ட சூழ்நிலையில் கிரகணம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து கொள்வது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் செயற்கைக் கோள்கள், கணினிகள் என்று எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரவிருக்கும் சூரிய கிரகணத்தையும் , சந்திர கிரகணத்தையும் கணித்துச் சொல்லியிருப்பதை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர்களுடைய வானவியல் அறிவும், கணக்கியல் அறிவும் தெற்றென விளங்குகிறது. 

முழுச் சந்திர கிரகணத்தைப் பற்றி நான் உங்களோடு பகிர்ந்து கொண்ட விஷயங்களை நீங்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அறிவில்  மேம்பட்டோர் ஆக்குங்கள்.

 

படத்திற்கு நன்றி: http://z6mag.com/science/lunar-eclipse-december-2011-for-the-last-time-until-2014-163589.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “முழுச் சந்திர கிரகணம் – 10.12.2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *