சிங்கப்பூரில் உருவான தமிழ்ப் படம்

0

gurushetramமெட்ரோ பிலிம்ஸ் (பி) லிமிடெட் உடன் இணைந்து, சிங்கப்பூர் பிலிம் கமிஷன் மற்றும் புளு ரிவர் பிக்சர்ஸ் தயாரித்து,  திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ள புதிய திரைப்படம், ‘சிங்கையில் குருஷேத்திரம்’.

சிங்கப்பூரில் ரசிகர்களை மட்டும்தான் பார்க்க முடியும் என்ற நிலை மாறி, அங்கும் நல்ல படைப்பாளிகள் தோன்றி இருக்கிறார்கள் என்பதற்கு இத்திரைப்படம் சிறந்த சான்றாகும். இதில் சிங்கப்பூர் நடிகர்களைக் கொண்டு, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதைதான் கதாநாயகன்.ஆங்கிலப் படத்திற்கு நிகராகக் கதைக் களம் அமைத்துள்ளார் இயக்குநர் டி.டி.தவமணி.

கதைச் சுருக்கம்:

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாத பின்தங்கிய மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தால் தடம்மாறும் இளைஞர்கள், போதைப் பொருள் கடத்துதல், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுச் சீரழியும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் இப்படத்தின் கரு.

இப்படத்தில் சிங்கப்பூர் புதுமுக நட்சத்திரங்கள் விஷ்ணு, சிவக்குமார், மதியழகன், ராஜேஷ் கண்ணன், குணாளன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இதன் இயக்குநர் ஜி.ஜி.தவமணி, கதை, திரைகதை, வசனம், எழுதி, இயக்கி, இணை தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த லூகாஸ் ஜோடோன் (The maid, Eating air) முதல் முதலாக இந்தத் தமிழ்ப் படத்திற்கு ஒளிப்பதிவாளராகிறார். சரத்குமார் நடித்த ‘ஜக்குபாய்’ படத்திற்கு இசையமைத்த ரஃபி, இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவா, கந்தசாமி, சரோஜா படங்களுக்குப் படத்தொகுப்பு செய்த பிரவீன்.கே.எல். இந்தப் படத்தில் எடிட்டிங் வேலையை மேற்கொள்கிறார். இப்படத்தின் சண்டைப் பயிற்சியாளர் ஜிம்மி, பல சீனப் படங்களுக்கும், தமிழில் பரத் நடித்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்திற்கும்
பணியாற்றியவர்.

‘எந்திரன்’ படத்தின் பாடல்களை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி, இப்படத்திற்கு ஒரு பாடலை எழுதி வலுச் சேர்க்கிறார். இப்படத்திற்குத் தேவையான காட்சிகளைச் சிங்கப்பூர், மலேசியாவில் மிகச் சிறப்பாகவும், கவரும் வகையிலும் வடிவமைத்திருக்கிறார், இந்தப் படத்தின் கலை இயக்குநர் வீரராகவன். இப்படத்தில் ஒரு பாடல் மட்டுமே இடம்பெறும். இப்பாடலை இசையமைப்பாளர் ரஃபி மற்றும் தினேஷ் கனகரத்னம் பாடியுள்ளார்கள். எல்லாக் கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது.

===============================
தகவல்: மக்கள் தொடர்பாளர் செல்வரகு

படத்திற்கு நன்றி: evpstamil.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *