நிலவொளியில் ஒரு குளியல் – 5

8

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_Venkateshமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாட வீதியில் ஒரு கடையில் வண்ணம் பூசப்பட்ட கம்புகள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அவை என்ன என்றும் அவற்றுக்கு என்ன உபயோகம் என்றும் என் மகள் கேட்டாள். அவைதான் கோலாட்டக் கம்புகள் என்று கூறி, கோலாட்டம் அடிக்கும் முறை, அதைக் கொண்டாட வேண்டிய விதம் ஆகியவற்றை என் மகளோடு பகிர்ந்துகொண்டேன் இப்போது உங்களோடும்.

சாதாரணமாகத் தீபாவளி முடிந்து ஒரு வாரத்திற்குள் கோலாட்டம் தொடங்கப்படும். தொடங்கப்படும் என்றால் அது அத்தனை எளிமையான விஷயம் இல்லை. முதலில் தெருவில் இருக்கும் பெண் குழந்தைகள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும். பின்னர் அந்த வருடம் கோலாட்டத்தை யார் முடித்துத் தருவது என்பதை தீர்மானிக்க வேண்டும். முடித்துத் தருவது என்ற பொறுப்பு இருக்கிறதே அது சரியான தலைவலி. அதனால் யாருமே முன்வர மாட்டார்கள். ஏன் முன்வர மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் அந்தப் பொறுப்புப் பற்றி உங்களுக்குத் தெரியவேண்டும்.

கோலாட்டம் முடிப்பதற்கு என்று ஒரு நல்ல நாள் குறிக்கப்படும். பொதுவாக ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாளைக்குள் குறித்து விடுவார்கள். பசுவன் என்று ஒரு சிறுவனை தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும். அந்த சிறுவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருப்பான். அவனுக்குக் கோலாட்டம் முடிக்கும் தினத்தன்று புது உடைகள் வாங்கிக் கொடுக்கப்படும். வசதிக்குத் தகுந்தபடி ஆட்டோவிலோ, டாக்சியிலோ ஊர்வலம் நடக்கும். இதற்கெல்லாம் பணம் நாங்கள் கலெக்ட் செய்வதுதான். அப்போதுதான் ஆரம்பிக்கும் எங்களின் சூறாவளி கோலாட்ட வசூல்.

வீடு வீடாகச் சென்று கோலாட்டம் அடித்துக் காசு கேட்போம். எங்கள் தெரு மட்டுமல்லாமல் பக்கத்துத் தெருக்களில் கூட சென்று கேட்போம். பக்கத்துத் தெரு என்ன, பக்கத்து ஊர்களுக்கே கூட செல்வதுண்டு. பேருந்தில் சென்றால் காசு விரயமாகும் என்று, நடந்து செல்லக்கூடிய ஊர்களுக்குத்தான் செல்வோம். அவ்வாறு செல்வதில் கௌரவப் பிரச்சனை என்றுமே வந்ததில்லை. எங்கள் ஊர் பண்ணையாரின் பேத்திகளும் எங்களோடு வருவார்கள், பணம் பிரிக்க.

இவ்வாறு சேர்த்த பணம் முழுவதையும் கோலாட்டத்தை முடிக்க யார் ஒப்புக்கொண்டார்களோ அவர்கள் வீட்டில்தான் கொடுத்து வைப்போம். அவர்கள்தான் அந்தப் பணம் முழுமைக்கும் பொறுப்பாளி. ஊர்ப் பொது விஷயம், பலர் பல விதமாகப் பேசுவார்கள் என்பதால் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ள மிகவும் தயங்குவார்கள் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். பேசி, கெஞ்சிக் கூத்தாடி வருடா வருடம் யாரையாவது பிடித்து விடுவோம், கோலாட்டத்தை முடித்துத் தர.

kolattamஅந்த குறிப்பிட்ட நாளும் ஆமை வேகத்தில் வந்து சேரும். அன்று ஒரே கோலாகலம்தான். நிச்சயமாக அன்று பாடப் புத்தகத்தை கையால் கூடத் தொடமாட்டோம். பலவிதமான பின்னல்கள், பட்டுப் பாவாடைகள் எல்லாம் கண்ணைப் பறிக்கும். எங்கள் அம்மாமார்களும் இதில் ஆர்வத்தோடு கலந்துகொள்வார்கள். எல்லோரும் ஊர்வலமாக, பொழுது சாயும் நேரம் குளக்கரைக்குச் செல்வோம். அங்கே கொண்டு வந்திருக்கும் பல வகை சித்ரான்ன வகைகளை ஒரு கை பார்த்து விட்டு பாட்டு பாடிக்கொண்டே மீண்டும் எங்கள் தெருவுக்கே வருவோம்.

அந்த வருடம் வசூலைப் பொறுத்து மைக் ஏற்பாடு செய்யப்படும். அப்படி மைக் இருக்கும் பட்சத்தில் நாங்கள் மேடையை பிடித்துக்கொண்டு விடுவோம். சுமார் பத்து அல்லது பதினொரு பேர் சேர்ந்து மைக்கில் பாட்டுப் பாடுவோம். தப்பு! தப்பு! எங்கள் அண்ணன்மார்கள் சொல்படி பார்த்தால் காட்டுக் கத்தல் கத்துவோம். எதேச்சையாக பார்வையாளர்கள் அதிகம் சேர்ந்துவிட்டால் நடனம் வேறு ஆடுவோம். எங்களில் யாருமே முறைப்படி நடனம் கற்றவர்கள் அல்ல என்பது மட்டுமல்ல, பரத நாட்டியக் கச்சேரியைக் கண்ணால் பார்த்தது கூட இல்லை என்பது இங்கே குறிப்பிடதக்கது.

அப்படி ஒலிபெருக்கி இல்லாத வருடங்களில் எங்கள் திறமையைக் வெளிக்காட்டும் பொருட்டு, பக்கத்து தெருவுக்குச் செல்வோம். அப்போது நாங்கள் செய்யும் அலம்பல்கள் எங்களாலேயே தாங்க முடியாது. நாங்கள் என்னவோ தேவலோகத்திலிருந்து வந்தவர்கள் போலவும், அந்த தெருப் பெண்கள் எல்லோரும் நரகத்தில் உழலுபவர்கள் போலும் நடந்துகொள்வோம். அவர்களை வெறுப்பேற்றுவதற்காகவே புதிதாக கோலாட்ட வகைகளைக் கற்றுக்கொள்வோம். அதில் ஒன்று தான் பின்னல் கோலாட்டம்.

அதாவது மூன்று மூன்று கயிறுகளாக இடைவெளி விட்டு விட்டத்தில் கட்டியிருப்பார்கள். ஒரு கயிறுக்கு ஒன்று அல்லது இரண்டு பேர் வீதம் பிடித்துக்கொண்டே பாட்டுக்கு ஏற்றபடி கோலாட்டம் அடித்தபடியே ஊடாட வேண்டும். பாட்டின் முடிவில் அழகான பின்னல் வந்திருக்கும் கயிறுகளில். இது சற்றுக் கடினமான வகை கோலாட்டம். விடுவோமா நாங்கள்! பிடிவாதம் பிடித்து ஒரு மாமியிடம் கற்றுக்கொண்டோம். கற்றுக்கொண்டோம் என்று சொல்கிறேனே தவிர, ஒரு நாளாவது சரியாக வந்ததில்லை.

சொல்லிக் கொடுத்த மாமி எவ்வளவோ எச்சரித்தும் எங்கள் தன்னம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்து அடுத்த தெருவில் அந்தக் கோலாட்டத்தை போட்டே விட்டோம். “துணிவே துணை”, “துணிந்தவனுக்கு கடலும் முழங்கால் அளவு” என்பதெல்லாம் எங்கள் விஷயத்தில் பொய்த்து விட்டது. ஆம்! அடிக்கத் தெரியாமல் அடித்ததாலோ, போதுமான பயிற்சி இல்லததாலோ, அல்லது எங்கள் கவனக் குறைவு காரணமோ தெரியவில்லை, பின்னல் கோலாட்டம் கன்னா பின்னா கோலாட்டம் ஆகிவிட்டது.

ஒரு நிலையில், கயிறு எங்களில் சிலரை சுற்றிக்கொண்டு, அவர்கள் மேலும் மேலும் நகர்ந்ததில் சிக்கலாகிவிட்டது. அப்போது நாங்கள் வழிந்த அசடும், பக்கத்து தெருக்காரர்கள் எங்களைப் பார்த்துச் சிரித்த சிரிப்பும் இந்தப் பிறவியில் மறக்காது. இப்போது நினைத்தால் சிரிப்பு தாங்கமுடியாமல் வருகிறது. பிறகு ஒருவழியாகக் கயிறுகளை வெட்டி, எங்களை விடுவித்தார்கள். அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில் நாங்கள் கோலாட்டம் அடிக்க அந்தத் தெருப் பக்கம் போகவே இல்லை.

இது போன்ற அனுபவங்கள் எல்லாம் இன்றைய தலைமுறைக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை நினைக்கும்போது சற்றே வருத்தமாகத் தான் இருக்கிறது. இத்தகைய அனுபவங்களை எனக்கு வழங்கிய என் கிராமமான ஆழ்வார்குறிச்சியை நினைத்துக்க்கொண்டே நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்….

==================================

படத்திற்கு நன்றி – melissaenderle.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 5

  1. அட! கோலாட்டம் பற்றி அழகாச் சொல்லி இருக்கீங்க!!!!

    இன்னிக்குத்தான் கார் வெளியே போயிருக்கேன்னு பஸ்ஸில் வந்தா……… ஆட்டமான ஆட்டம் கோலாட்டம்.

    இனிய பாராட்டுகள்.

  2. The writer is right in mentioning that this sort of kollattam is not seen nowdays. Where the present generation is really leading to………..? Are we forgetting the happy events to be celebrated or so pretending to be busy in our day to day routines?

  3. மிகவும் அருமையான சம்பவம். வாழ்த்துக்கள்

  4. நண்டு சிண்டுகள் கோலாட்டம் பொழுது அடிக்கும் லூட்டிகளை மிக அழகாக எழுதியதற்கு பாராட்டுக்கள்……….

  5. படிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. நல்ல தலைப்பு. மேலும் எழுத வாழ்த்துக்கள்!

  6. கோலாட்ட சம்பவமும், படமும் அருமை. பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.