வென்றிடு வாருனீ

தமிழில் ‘கஸ்தூரிமான்’, ‘மிளகா’, ‘சொல்ல சொல்ல இனிக்கும்’ படங்களிலும், தெலுங்கில் நாகவள்ளி’, மற்றும் கன்னடத்தில் ‘ஆப்தரக்ஷகா’ ஆகிய படங்களில் நடித்த சுஜா தற்போது தனது பெயரை சுஜா வாருனீ என மாற்றியுள்ளார்.

வாருனீ – மழைக்கடவுளின் பெயர். பெயர் மாற்றம், புதிய படங்கள் என தனது ட்ராக்கை மாற்றியிருக்கும் வாருனீயிடம் பேசினால்…

“எப்போதும் எல்லா படங்களையும் பண்ணிக்கொண்டிருக்கமுடியாது. குடும்பம் முக்கியம். அம்மா, தங்கை இவர்களை ஒரு ஆணாக நின்று பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை எனக்கு இருந்தது. அதனால் எந்த படங்கள் வந்தாலும் அதை செய்தேன். இப்போது அவர்களை பார்த்துக்கொள்ளும் நம்பிக்கை வந்துவிட்டது.

அதனால் என் ஆத்ம திருப்திக்கு படங்கள் பண்ணவேண்டுமென முடிவெடுத்துள்ளேன். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தெளிவான ஒரு நடிகையாக என்னை தமிழ் சினிமாவில் நிறுத்திக்கொள்ள ஆசை.

அந்த ஆசை நிறைவேறும் விதமாக வந்த படம் அதியமான் சாரின் ‘அமளி துமளி’. சாந்தனுவுடன் இணைந்து கலக்கும் ரோல். அடுத்து அதியமான் சார் இயக்கும் ‘தப்புத்தாளங்கள்’ படத்திலும் நடிக்கிறேன். அந்த படத்தில் சுஜாவாருனீ யா இது? என்று ஆச்சர்யப்படும் ஒரு நடிப்பாளினியை பார்ப்பீர்கள். வெற்றி வீரன் இயக்கும் ‘காதல் தீவு’ படத்தின் மூலம் எனக்கு வரும் வருடத்தின் சிறந்த நடிகை அவார்டே கிடைக்கும்.. அந்தளவு மிரட்டலான ரோல்.

மெல்ல இந்த வருடத்தில் அடுத்தடுத்து முன்னேறும் சில சவாலான படங்கள் கிடைத்துள்ளது. சென்னையில் இருக்கிறேன். ஒரு நாளைக்கு பன்னிரெண்டாயிரம் செலவில் ஹோட்டலுக்குத் தரத் தேவையில்லை. விமானச் செலவு இல்லை. தமிழ் பேசி நடிக்கத் தெரியும். அப்புறமென்ன.. இன்னமும் பழைய சுஜாவா இருந்தால் சரிப்படாதுன்னு சொல்லிட்டு சுஜாவாருனீ யாகிட்டேன்” என்று கலகலவென சிரித்தார்.

 

About செய்தியாளர்-3

வல்லமை செய்தியாளர்-3

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க