பயிர் மேயும் வேலிகள்!
தலையங்கம்
குருவிற்கு பணிவிடைகள் செய்து, அவர் கற்றுத் தரும் பாடங்களை சிரமேற் கொண்டு அவர் சொல்லிற்கு மறு பேச்சென்பதே அறியாமல், குரு சொல்வது மட்டுமே வேத வாக்கு என்ற கன்மூடித்தனமான குரு பக்தி இருந்த காலமும் உண்டு. அது அரச குலத்து வாரிசாக இருந்தாலும் சரி, அடி மட்டத்து சராசரி குடும்பத்து வாரிசாக இருந்தாலும் சரி அல்லது பெரும் பண்டிதர்களின் குடும்ப வாரிசாக இருந்தாலும் சரி அனைவரையும் சரிசமமாக உட்கார வைத்து சமமாக கற்பிப்பதையே வழமையாக கொண்டிருந்த போது குருவை தெய்வமாகவே வழிபட்ட காலமாக இருந்தது அது. காலம் மாற, காட்சியும் மாறி குருகுலக்கல்வி முறை மாறினாலும், குருபக்தி மாறாத காலமாக இடைக்காலம் இருந்தது. ஆசிரியர் முன் நின்று அவரை எதிர்த்துப் பேசுவோர் மிக சொற்பம். வளர்ந்து பெரிய பட்டமும், பதவியும் பெற்ற பின்புகூட தம்மை வளர்த்துவிட்ட ஆசானை மறக்காமல் நன்றி செலுத்துவதை கடமையாகக் கொண்டு வாழ்ந்து வருபவரும் பலர்.
ஆனால் இன்றைய நிலையைப் பார்க்கும் போது வேதனையின் உச்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறது, சில நாட்கள் முன்பு நடந்த சம்பவம்! ஒரு 9ஆம் வகுப்பு பயிலும் மாணவன் வகுப்பு ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தான் கடையில் சென்று கத்தி வாங்கி வந்து, யாரும் இல்லாத நேரமாக தேர்ந்தெடுத்து, திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். எத்துனை வஞ்சம் அந்த பிஞ்சு நெஞ்சில்! நன்றாக படிப்பதில்லை என்று கண்டித்து, பெற்றோருக்கு கடிதம் எழுதி திட்டு வாங்க வைத்த ஒரே காரணத்திற்காக கொலை செய்ததாகச் சொல்கிறான் அந்த மாணவன். இத்தனைக்கும், 160 ஆண்டு காலமாக நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு ஆங்கிலோ-இந்தியப் பள்ளி,. தந்தையும் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிபவர். ஆனால் இந்த மாணவன் இப்படிச் செய்யக் காரணம் என்னவாக இருக்க முடியும். நம் கலாச்சார சீரழிவு!
நேற்று என் தோழி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கிராமப்புற அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு கணக்கு ஆசிரியை. மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கரை கொண்டவர். எப்படியும் அவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டிருப்பவர். நகர்ப்புற குழந்தைகள்தான் இப்படிக் கலாச்சார சீரழிவில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்ன விசயங்களைக் கேட்கும் போது மேலும் அதிர்ச்சிதான் தாக்கியது. ஒட்டு மொத்தமாக நம் இந்தியக் கலாச்சார சீரழிவினால், குழந்தைகள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. ஆசிரியையைக் குத்திக் கொன்ற சம்பவம் நடந்த மறுநாள் பள்ளிக்குச் சென்ற அந்த ஆசிரியையைப் பார்த்து ஒரு மாணவன், “ என்ன டீச்சர், நேத்து நடந்தது தெரியுமா, டீச்சரோட அளப்பல் தாங்காம பையன் குத்திக் கொன்னுப்பிட்டான், பார்த்தீங்களா” என்றானாம். அவருக்கு அடி வயிறெல்லாம் கலங்கி, “அதில்லைப்பா.. அவனுக்கு என்னமோ உளவியல் பிரச்சனையாக இருக்கும், இப்போது அவன் வாழ்க்கைதானே போய் விட்டது “ என்று ஏதேதோ காரணம் சொன்னாலும், ஒரு எகத்தாளமான சிரிப்பின் மூலம் அவன் போக்கை தெளிவுபடுத்திச் சென்றிருக்கிறான் அந்த 10ம் வகுப்பு மாணவன். ஊடகங்கள் மூலமாக எளிதாகப் பரவும் செய்திகள் ஏற்படுத்தும் பலவிதமான பின் விளைவுகளில் இதுவும் ஒன்று.
இதைவிட, ஒரு கிராமத்தில், பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளின் குழந்தைகளே படிக்கும் அரசு பள்ளியில், நடப்பதாக அவர் சொன்ன சம்பவங்கள் என் ஈரக்குலையையே நடுங்கச் செய்கிறது. எட்டாம் வகுப்பு மாணவர்களில் ஆரம்பித்து 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் செய்யும் செயல்கள், தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் ஒருவித அச்சத்துடன் கண்டிப்பது போன்ற தோற்றம் மட்டுமே ஏற்படுத்திக் கொண்டு காலம் ஓட்டுவதாக அவர் சொன்னதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. அத்தனை வக்கிர புத்தியில் அந்தக் குழந்தைகள் ஊறிப்போய் இருப்பது புரிந்தது அவர் சொன்ன சம்பவங்களைக் கேட்கும் போது! எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், தன் இருக்கையின், மேசையின் உட்புறம், மோசமான பெண்கள் படங்களை ஒட்டி வைத்துக் கொண்டு வகுப்பு நடக்கும் சமயங்களில் குனிந்து, குனிந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த ஆசிரியர் அருகில் சென்று பார்த்தால், கண்டுபிடித்து விட்டார்களே என்ற அச்சம துளியும் இல்லாமல் எகத்தாளமாகப் பார்க்கிறானாம் அவன். அதைவிடக் கொடுமை, கண்டிப்பாக இருக்கும் ஆசிரியரின் பெயருடன் வாயில் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளை இணைத்து கழிவறையில் எழுதி வைத்து விடுவார்களாம். ஓர் ஆசிரியை ஒரு மாணவனை திட்டி விட்டதற்காக அலுவலக அறைக்குச் சென்று ஒரு வருடத்திய வருகைப் பதிவேட்டை எடுத்து தூள் தூளாகக் கிழித்து அதை அனைத்தையும், கரும்புக் காட்டில் கொண்டு சென்று போட்டிருக்கிறான்! ஆசிரியை மாணவர்களைக் கடந்து செல்லும் போது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பேசுவதாக அவர் சொன்ன விசயங்கள் என்னால் வெளிப்படையாக எழுத முடியாத அளவிற்கு உள்ளது என்றால் அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் நரக வேதனை, அவமானத்தில் கூனிக்குறுகிப் போக வேண்டியதாக உள்ளது என்றார். இதைவிட கொடுமையின் உச்சமாக ஆசிரியரின் இருக்கையை அன்றாடம் கழிவறையாக்கியிருக்கிறான் ஒரு மாணவன் பல நாட்களாக! இதைச் செய்தவனைக் கண்டுபிடிப்பதற்கே பிரம்மப்பிரயத்தனம் செய்திருக்கிறார்கள்…. இப்படிப் பலச் சம்பவங்களை அவர் கூறியதைக் கேட்கும் போது அதிர்ச்சியும் வேதனையும்தான் மிஞ்சியது. நம் வருங்காலத் தூண்கள் உளுத்துப் போய்விடுமோ என்று அச்சமாகவும் உள்ளது. இதனை எப்படி சரி செய்யப் போகிறோம்? ஆசிரியர்கள் குடும்பங்களில் பணிக்குத் தங்கள் குடும்பத்த்வரை அனுப்பவே அச்சம் கொள்ளும் இது போன்ற சூழல் மாணவர்களின் வளர்ச்சிக்கு உகந்ததல்லவே? ஆசிரியர் தினம் என்று ஒரு நாள் கொண்டாடினால் போதுமா? அவர்களுக்குரிய பாதுகாப்பு வேண்டாமா? அரசாங்கமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து மாணவர்களிடம் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அத்யாவசிய, அவசர நிலையில் நம் நாடு இருப்பது தெளிவாகிறது. அதே போன்று ஆசிரியர்களும் தங்கள் பொறுப்புணர்ந்து, மாணவர்களிடம் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. மாணவர்களிடமே தன் சிகரெட்டிற்கு நெருப்பு வாங்கும் சில ஆசிரியர்களும் தங்கள் போக்கை முற்றிலும் மாற்றிக் கொண்டு, தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.
தவறான சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக, மருத்துவ உலகமே திரண்டெழுந்தது. தன் மாணவன் நல்லபடியாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று உண்மையாக உழைத்த ஒரு ஆசிரியையின் குழந்தைகள் இன்று நிர்கதியாக நிற்கின்றது!
பயிர் மேயும் வேலிகள்- நம் நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக
வடித்துக் காட்டுகிறது. தம்மை விட தம் குழந்தைகள் அறிவு மிக்கவர்களாக
விளங்குவதுதான் இவ்வுலகிற்குச் சிறப்பு என்கிறார் வள்ளுவர். இக்காலத்தில்
பிள்ளைகளை அறிவுடையவர்களாக ஆக்குகிறோம் என்று பணத்தை வாரி
செலவு செய்து பாடத்தைப் படிக்க வைக்கிறார்களே தவிர பண்புள்ளவனாக
வளருகிறானா என்பதைப் பார்க்க நேரமில்லை. சொல்லிக் கொடுக்கும்
ஆசிரியருக்குகேனும் பண்பாட்டுக் கல்வி தெரிந்திருந்தால் அல்லவா
சொல்லிகொடுப்பார்? அப்படியே தெரிந்திருந்தாலும்( சிலபஸ்ஸில் )
பாடத்திட்டத்தில் இல்லாத பண்பாட்டுக் கல்வியை எப்படிச் சொல்லிக்
கொடுப்பார்? நல் ஒழுக்கம் (moral ) என்ற வகுப்பையே பள்ளியிலிருந்து
எடுத்து விட்டார்களே ! தங்களுடைய பிள்ளை ஒரு டாக்டராக வேண்டும்,
இஞ்சினியராக வேண்டும் என்று கனவு மட்டும் கண்டு கொண்டிருந்தால்
அந்தப் பிள்ளை மனிதனாக வருவானா என்பது சந்தேகமே!
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.
மிகுந்த கலக்கத்தைத் தந்த சம்பவம். இந்தக் கேள்விகள், வருத்தம், பயம், ஆதங்கம், இவற்றுக்கெல்லாம் பதில்தான் எப்படித் தேடுவது என்று தெரியவில்லை 🙁
‘வல்லமை’ தலையங்கத்தை பலமுறை படித்தேன். சிந்தனையை அளித்து, சிந்தனையை கிளரும் கருத்துக்கோவை; அனுபவ தொகுப்பு; கேட்டறிந்தவை. பள்ளிப்பருவமும், விளையாட்டு புத்தியும், கிருத்திரமங்களும், ஒன்றையொன்று அணைத்து வருவதால், பால பருவத்தின் நினைவுகள் பசுமை. தலைமுறை தலைமுறையாக, பெற்றோர்-சிறார், ஆசிரியர்-மாணவர் சிக்கல்களும், பிரச்னைகளும் லாகவமாக கையாளப்பட்டன. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக, சிக்கல்களும், பிரச்னைகளும் வலுத்து விட்டன; லாகவமும் இழந்தோம். முக்கியமாக, வன்முறை புகழ், அரசியல் தகிடுதத்தங்கள், கல்வி துறையில் காசின் மகிமை, தகுதியற்ற உபாத்தியாயர்கள் வருகை, பெற்றோரின் தவறான கண்ணோட்டம் ஆகியவை தான் காரணம். அவை ஒவ்வொன்றின் பின்னால், திரைப்படம், தொலைக்காட்சி. என் செய்யலாம்? கிராமம் தோறும், பேட்டைகள் எல்லாவற்றிலும், ஆக்கப்பூர்வமான, முறையே பயிற்சி பெற்ற தன்னார்வக்குழுக்கள் தேவை. ஸுபாஷிணியின் சொல் ஒவ்வொன்றுடனும் எனக்கு உடன்பாடு. இன்னம்பூரான்12 02 2011
பள்ளிக்கூடம்
கொலைக்கூடமான கொடுமை..
உறுதுணையாகும் ஊடகங்கள்..
அறிவுச்சிற்பிகள்
அழிக்கப்படும் அவலம்..
அறிவுத் தொழிற்சாலைகளின்
அலங்கோலங்கள் கண்டு
எழும்
ஆசிரியரின் அச்சம்
அனைவருக்கும் வந்துவிட்டது..
அதை
அகற்றும் கடமையும் நமக்கே…
-செண்பக ஜெகதீசன்…
(பணி தொடங்கியது அரசுப்பள்ளி ஆசிரியராக)
வீடுகளின் உள்ளரைகள்வரை ஊடுருவிவிட்ட ஊடகங்ககளுக்கும், திரைப்படங்களுக்கும் இப்போதிருக்கும் “சென்சார்” முறை சரியில்லைஎன்பதை காட்டுகிறது. நமது இந்தியாவில் இந்த “சென்சார்” முறையினை இன்னும் கொஞ்சம் கட்டுகோப்புடன் சரிசெய்யவேண்டும். சென்சாருக்கு கட்டுபாடுகள் அதிகமாக்கபட வேண்டும்.