விசாலம்

கடந்த வாரம் நாங்கள் கோயம்புத்தூருக்கு ஒரு கோயிலைப் பார்க்க ஒரு நாள் மட்டும் போயிருந்தோம் ,காலையில் பிளேனில் ஏறி ஏர்போர்ட்டிலேயே ஒரு கார் அமர்த்திக் கொண்டோம் அந்த ஓட்டுனர் மிகவும் அடக்கத்துடனும் பணிவுடனும் இருந்தார் ,சிரித்த முகத்துடன் பேசினார் நெற்றியில் பளிச்சென்று திருநீரும் நடுவில் குங்குமம் இட்டுக் கொண்டிருந்தார் , நிச்சயமாக ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டவராக இருப்பார் என உணர முடிந்தது .நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

“எங்களுக்கு பொள்ளாச்சியில் இருக்கும் மாசாணியம்மன் கோயிலுக்குப் போக வேண்டும்.அங்கும் எஙகளை அழைத்துப் போக முடியுமா “

இதைக்கேட்டு அந்த ஓட்டுனர் அப்படியே மெய்மறந்து போய் தன் வண்டியை நிறுத்தினார் .நான் அவரை ஒரு கேள்விக்குறியுடன் பார்க்க அவர் சொன்னார் .
“அம்மா ரொம்ப நாளாக எனக்கு அங்கு போக வேண்டும் என்ற ஆசை . முன்பு அடிக்கடி நான் அங்கு போய் வருவேன் கடந்த சில மாதங்களாக வீட்டில் கொஞ்சம் அசௌகரியம் .இதனால் வருந்திய மனதுடன் இரவில் படுத்துக் கொண்டேன் கண் மூடியவுடன் கனவில் மாசாணி அம்மன் வந்தாள்.

“நான் இருக்க உனக்கு என்ன கவலை? நாளை நீ என்னிடம் வருவாய்.” என்று மறைந்து போனாள்.அவளை நம்பியபடி வண்டியில் அமர்ந்திருந்தேன் .இத்தனை வண்டிகள் நிற்க என்னை மட்டும் அழைத்து உங்களுக்கு அமைத்துக் கொடுத்து விட்டாள் அந்த அம்பாள்’ என்று மனம் நெகிழ்ந்தபடி கூறினார்.

என் கணவர் அவருடன் நாட்டின் நிலைமையைப் பற்றி ஊழல்களைப் பற்றியும் பேசிக்கொண்டு போக அவரும் நம் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று வருந்தினார். அத்துடன் இளம் மாணவ மாணவிகளின் போக்கும் நடத்தையும் பார்த்தால் நாம் வெளிநாட்டிலே இருக்கிறோமோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது என்றார் ,

“ஏன் அப்படி சொல்கிறீர்கள் ? உங்களுக்கு எதாவது அனுபவம் ஏற்பட்டதா ?” என்று கேட்டேன் நான் ,

“ஆமாம் போன மாதம் ஒரு நாலு இளம் வட்டங்கள் பெங்களூருவிலிருந்து இங்கு வந்து {கோயம்பத்தூர்} என் வண்டிலே ஏறிண்டாப்பல, அவங்க ட்ரெஸ்ஸோ நம் நாட்டுக்கு ஏத்தாற்போல இல்லீங்க…. கவர்ச்சி அதிகமா இருந்துச்சு குறைவான உடையாக இருந்தாப்ல . நம்ம ஒன்னும் இதுலே தலயிட முடியாதே! வண்டியை ஓட்ட ஆரம்பிச்சேன் .எனக்கு இங்கிலீஸ் தெரியாதுன்னு நினச்சு அவங்க ரொம்ப ஆபாசமா பேச ஆரம்பிச்சாங்க,”

“அப்படி என்ன ஆபாசமா பேசினாங்க “?

“அத சொல்லவே கூசுறது அம்மா ஒரு புள்ள சொல்லுது

” இன்னிக்கு கிருஷ் வரேன்னு சொல்லியிருக்கான் டேடிங்க்கு . நல்ல ஹோட்டெல்ல ரூம் எடுத்துடுன்னு சொன்னேன் நீ எங்கே போகப்போறே ஹனி?”

அந்த ஹனி சொல்லுது ” எனக்கு all the three days booked “

ஏ டியர் உங்கம்மாட்டே என்னடி சொல்லிட்டு வந்தே நீ முதல்ல வரமாட்டேன்னியே “

“பெஸ்ட் பிரண்ட் வீட்லே பார்ட்டி மேரேஜ் நிச்சியம் செய்யப் போறான்னு ஒரு ரீல் விட்டேன் அப்படியே நம்பிட்டாடி “

அவவளவுதான் ……..ஒரே சிரிப்பொலி எனக்கு வண்டிலேந்து அவங்களை இறக்கி விட்டுடலாமான்னு தோணிச்சு “

“ஐயோ இப்படியா நடந்தது இந்த கால ஆம்பள பசங்களே எத்தனையோ தேவல போலேருக்கே “என்றேன் நான்

அந்த டிரைவர் மேலே பேசினார் ,

“இத்தோட நிக்கல அந்தப் பொண்ணுக . திடீர்ன்னு ஒரு சிகரெட்டை பத்த வச்சுண்டு என்ன பாத்து ஒரு பொண்ணு “ஏய் இந்த ஊர்லே டிஸ்கொத்தே இருக்கா entertaining club இருக்கான்னு கேட்டாப்ல .அதுக்குள்ளாற இன்னொரு புள்ள ஒய் காருக்குள்ள விஸ்கி அடிக்கலாமா ஒரு பெக்ன்னு சொன்னாப்ல அத கேட்டுப்புட்டு நான் அப்படியே என் வண்டிய நிறுத்திப்புட்டேன் ,

“என் வண்டிக்குள்ளாற இதெல்லாம் செய்யக் கூடாது இறங்குங்க வெளிலே செய்யறதெல்லாம் செஞ்சுண்டு வண்டி ஏறுங்க”னுட்டு கோபமா கத்தினேன்

பின்னாலே அவங்க இறங்கி வண்டி பின்னாலே நின்னு பாட்டில திறந்து கிளாசில் விஸ்கி ஊத்தி தண்ணி அடிச்சாப்பல, எனக்கா மனசெல்லாம் வேதனை யார் பெத்த புள்ளைகளோ , இப்படி அழிவு பாதெலே போறதேன்னுட்டு “

அவங்க பேச்சுலே இருந்த ஆபாசம் வெளில சொல்லவே நா கூசுறது ஐயா ” என்று என் கணவரிடம் சொல்ல நான் அப்படியே மனம் வெதும்பி நின்றேன்

நாம் எங்கே போகிறோம் நம் பாரத நாட்டின் பண்பாடு எங்கே மறைந்து போயிற்று ஓரிருவர் கலாசாரத்தை அனுசரித்து வந்தால் அவர்களை ஏளனமாகப் பார்க்கும் கூட்டமும் அதிகரித்து வருகிறதே , புரட்சிகரமான எண்ணம் வேண்டும் ஒரு இலட்சியம் வேண்டும் என்பது உண்மைதான் பரந்த நோக்கும் வேண்டும் பாரதி கண்ட புரட்சிப் பெண்மணியும் வேண்டும்.

அதற்கென்று சீர்கெட்டுப் போவது தான் புரட்சியா ? எத்தனையோ நல்ல விஷயங்கள் வெளிநாடுகளில் இருக்க நம் நாட்டிற்குப் பொருந்தாத ஒன்றை ஏன் வருங்கால இளைஞர்கள், குடிமக்கள் காப்பி அடிக்கிறார்கள்.? அவர்களது சுத்தத்தை, எந்த விஷயமானாலும் நன்கு ஆராய்ந்து ,கவனம் செலுத்தி கற்றுக் கொள்ளும் விதத்தை, தெருவில் அனுசரிக்கும் நியமத்தை…….. என்று பல காப்பியடிக்கலாமே. அதையெல்லாம் விட்டுவிட்டு இது தேவையா? இந்த சீனியர் சிடிசனுக்கு ஒன்றும் புரியவில்லை .

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “போகும் பாதை சரியா?

  1. அந்நியநாட்டு அலுவலகங்களின் வருகையும்அவர்கள் தருகின்ற சம்பளத்தின்
    அதிகரிப்பும் இக்கால பெண்களில் சிலரை இப்படி மாற்றிவிடுகிறது. இக்கால
    பெண்களின் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பெண்ணின் தவறுகளை
    திருத்துவதை விட அதை, வேடிக்கை பார்த்து ரசிப்பவர்கள்தான் அதிகமாக
    உள்ளார்கள். மனதுக்குள் வருத்தபடுவதும். இதுபோல
    எழுதுவதையும் விட வேறு என்ன செய்ய இயலும் நம்மாலோ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.