நிதிநிலை அறிக்கை – கானல் நீர்
பவள சங்கரி
தலையங்கம்
நேற்று நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2012 – 13க்கான நிதிநிலை அறிக்கையை சிறந்ததொன்று என பாராட்டும்படி இல்லை. தொடரும் ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்த்விதமான அறிவிப்புகளும் இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை. தொழில் வளர்ச்சிகளுக்கான ஊக்குவிப்பிற்கும் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த அமெரிக்க டாலர் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் நிலை இல்லாத அமெரிக்காவைவிட, அதிகமாக வேலை வாய்ப்புகள் இருக்கின்ற நம் இந்தியாவில் ரூபாயின் மதிப்பு மீண்டும், மீண்டும் குறைவதை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவிதமான ஏற்பாடும் இல்லை. தொழில்துறை முன்னேற்றத்திற்கான அத்தியாவசியமான மின்சார உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. கருப்புப் பணம் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள். அது உண்மையாக நடந்தால் வரவேற்கலாம். இந்த நிதி நிலை அறிக்கையால் பொது மக்களுக்கும் பரவலான பயன் இல்லை. தொழில் வளர்ச்சிக்கும் எந்தவிதமான முன்னேற்றத்திற்குரிய அறிவிப்பும் இல்லை. வருமானவரி வரம்பை 1,80 லட்சமாக இருந்ததை ரூ 2 லட்சமாக உயர்த்தி அறிவித்ததில் எந்த பலனும் இல்லை. ரூபாயின் மதிப்பு டாலருக்கு 40 ரூபாயிலிருந்து 51 ரூபாயாகக் குறைந்ததால் ஏற்படும் மதிப்பு இழப்பை பார்க்கும்போது இதனால் எந்த விதமான பயனும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆக, இந்த நிதிநிலை அறிக்கையால் பொது மக்களுக்கும் எந்த விதமான பயனும் இல்லை, தொழில் வளர்சிக்கும் உகந்ததாக இல்லை. இது, வழக்கமான நூற்றோடு ஒன்றான நிதிநிலை அறிக்கைதான்!