திவாகர்

dhiwakar

”ஏழாவதா?”

ஒன்றும் புரியாமல் கேட்ட என்னை விநோதமாகப் பார்த்தாள் சரோஜா.. “ஆமாம் தீப்தி! நீ ஏழாவது ஆள் இந்தக் காலேஜுல..”

நான் அவளைச் சற்று கோபமாகப் பார்த்தேன்.. இருந்தாலும் அவள் உண்மையைத்தான் சொல்கிறாள்.. இவளைக் கோபித்துப் பயன் என்ன..?

”ஹேய்..  ரிலாக்ஸ்மா.. உனக்கு முப்பத்தஞ்சு வயசுதான்.. ஆனா இதெல்லாம் ஒரு வயஸா? இனிமேதான் உனக்கு எஞ்ஜாய்மெண்டே.. இதல்லாம் சகஜம் கண்ணா.. உனக்காவது முயூச்சுவல் கான்செண்ட்.. இங்கே நம்ம லக்‌ஷ்மிக்கும் ஸ்டெல்லாவுக்கும் செம சண்டையோடு முடிச்சுக் கொடுத்தாங்க.. சரி, நான் லாயர் பத்மாவதிகிட்டே பேசிட்டேன். உங்க ரெண்டு பேரு விவரம் எல்லாம் கொடுத்தாச்சு.. நாளைக்கு அவங்களைப் போய்ப் பாரு. பேப்பரோடு ரெடியா இருப்பாங்க.. அவங்ககிட்டே போனாலே வேலை முடிஞ்சா மாதிரிதான்..”

’முடிஞ்சா மாதிரிதான்’ னு முத்தாய்ப்பா சொல்லி முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டு, தன் வகுப்புப் பக்கம் நகர்ந்த தோழி சரோஜாவைப் பார்த்து மௌனமாக தலையசைத்து நகர்ந்தேன்.

’எல்லாம் முடிஞ்சுடுத்து.. வாழ்க்கைல இந்த 35 வயசுலேயே எல்லாம் அனுபவிச்சாச்சு.. போதும்பா.. நரகம்ங்கிறது பூமியிலேயே நம்ம மனசுக்குள்ளேயே அனுபவிச்சுட்டோம்.. யார் சொன்னது நரகம்ங்கிறது வான வெளியிலே இருக்கும்’னு..

முடிந்துவிட்டது என்று மனதுக்குள்ளேயே அடிக்கடி சொல்லிக்கொண்டதாலோ என்னவோ, மனம் சற்று ஆறுதலடைந்தாற்போல இருப்பதாக உணர்ந்தேன். எனக்கு வகுப்பு இல்லை.. அடுத்த பீரியட் மணி அடிக்கறவரைக்கும் ரெஸ்ட்..

’35 வயசெல்லாம் ஒரு வயசா’ன்னு சரோஜா சிரிச்சுக்கிட்டே கேட்டதும், அதே 35 வயசைக் கேலி பண்ணிப் பேசிய சேகரும் வலம் வந்தார்கள். பன்னிரண்டு வருடம்.. ஒரு மாமாங்கம் என்பாள் என் பாட்டி. இந்த பன்னிரண்டு வருட மணவாழ்க்கையில் இத்தனை நாட்களுக்குப் பிறகு சேகருக்கு நிச்சயம் நான் அலுத்துப் போய்விட்டேன் என்பது நிதர்சனம்தான். அவனது பேச்சு, செய்கை எல்லாமே அதைத்தானே இந்த ஒரு வருஷமாக உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.. நாம்தான் ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறிவிட்டோம்.. சரியாக அப்சர்வ் பண்ணாமல் விட்டுவிட்டோம்.. இல்லாவிட்டால் டைவர்ஸ் என்று பேச்சு எடுத்ததும் இவன் சத்தம் போடாமல் அலட்சியம் செய்வானேன்.. பிறகு ஒப்புக்கொள்வானேன்…

யார் மேல் தவறு..? நான் நிறைய நாட்கள் நன்றாக யோசித்துப் பார்த்துவிட்டேன். என் மேலும் கொஞ்சம் தவறு இருக்கிறது.. ஆனால் இந்தத் தவறு என் அறியாமை.. அவனளவு எனக்குச் சிந்திக்கத் தெரியாமல் போவதும் ஏதாவது தத்துபித்து என வீம்பாகப் பேசி, அவனிடமே சமயம் பார்த்து மாட்டிக்கொள்வது மட்டும்தான் நமக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் சேகர் புத்திசாலி.. எப்படிப் பேசினால் என் வாயை மூட முடியும்னு யோசித்துச் செய்யறவன்.. என்னைப் போல எடுத்ததுக்கெல்லாம் கத்தாமல் நிதானமா முடிவு பண்ணிப் பேசறா மாதிரி என்னை மடக்கி என் வாயைப் பிடுங்குபவன். பொண்டாட்டியோட பலவீனம் தெரிஞ்சவன்.. இந்த ஒரு பாயிண்ட்தான் அவனை என்னிடமிருந்து வெகு தூரம் விலக்குகிறதோ.. யெஸ்.. நான் யாரோட வீக்நெஸ்ஸையும் வெச்சு யார்கிட்டேயும் பேரம் பேசறதில்லே.. பாவம் அவங்க..ன்னு விட்டுடறவ.. ஆனா இவனுக்கு என் பலவீனமே பலம்.. அதுக்கு இனிமே நாம அடிமையாகப் போகக் கூடாது.

’எத்தனை நாள் துன்பம் இது’ன்னு யோசிச்சுப் பார்த்தாதான் தெரியும். இல்லை.. சேகர் ஆரம்பத்துலேர்ந்தே புத்திசாலியாகத்தான் இருந்திருக்கான். எனக்குதான் போறலே.. அசடா எல்லாத்தையும் நம்பி.. அவன் சொல்றத எல்லாம் ’ஆ’ன்னு வாயைத் திறந்து கேட்டுண்டு.. ச்சே.. ரொம்பவே ஏமாந்துட்டோம்.

நான் அவனை அந்த பூஜாவோட ஒருநாள்தான் பார்த்தேன்.. நிச்சயமா தெரியும், அவன் செய்யறது தப்புன்னு.. ஆனா அந்தத் தப்பே சரின்னு வாய் கூசாம சொல்ல, சேகர் ஒருத்தனாலேதான் முடியும் போல இருக்கு.. சரி.. ஒரு தப்புன்னு மன்னிச்சுடலாம்தான்.. ஆனா எங்க கொல்லீக்ஸ் நிறைய பேரு அவனை இப்படி சூப்பர் மார்க்கெட்ல, ரோட் சிக்னல்கிட்டே ஜாலியா முன்சீட்ல கார்ல இவளைப் பக்கத்துல பாத்ததாக எங்கிட்டேயே சொன்னாங்களே.. இதைப் பத்தி கேட்டா, நான் எப்பவோ ஒருநாள் என்னோட பிரின்ஸிபால் கார்ல முன்னாடி என்னை உட்காரவைத்து வீட்டில இறக்கி விட்டதைக் கம்பேர் பண்ணி, அதுவும் இதுவும் ஒண்ணுதானேன்னு கூசாமே சொல்றானே.. இது என்ன நியாயம்..?

வீட்டுக்குப் போக தாமதம் ஆனதாலே ஒரு நாள், அதுவும் சாயங்காலம் போய் இருட்டாயிடுச்சேன்னு, ஒரு பொண்ணுன்னு மரியாதைக்காக ஒரு சீனியர் கொண்டு விட்டா அது தப்பா.. அப்படி அது தப்புன்னா, அன்னிக்கு அவர் கொண்டு விடறச்சே நாக்குல தேன் தடவிண்டு அவரை உபசரிச்சு ’உங்க தங்கை மாதிரின்னு நினைச்சுக் கொண்டு விட்டதுக்கு ரொம்ப நன்றி சார்,’னு அவருக்கு ஐஸ் வெச்சியே.. அப்ப அது பொய்யா.. நானும் இல்லே, உன் வார்த்தைய நம்பி அன்னிக்கு உருகிப் போனேன்.. ஆனா இந்தப் பூஜா உன்னோட தங்கச்சியா.. சொல்லு.. அவளுக்கு என்னோட நாத்தனார் அந்தஸ்து கொடுத்து வீட்டுக்கு வரவழைச்சு, புடவை வெத்தலை பாக்கோட மரியாதை பண்ணி அனுப்பறேன்.. அப்படிக் கேட்டா.. அவன்கிட்டே பதில் இல்லையே..

ஒரு வருஷமா பார்த்தாச்சு.. நடுவுலே ஒரு தடவை அந்தப் பூஜா போன்ல வந்து ’இவர் ஏன் தன் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கார்’ நு அதிகாரமா கேட்டப்ப இல்லே, தெரிஞ்சுது இவன் வண்டவாளம்! கோபத்தோடு இவன்கிட்டே ’வீட்டுக்கே போன் பண்ண ஆரம்பிச்சுட்டாளா’ன்னு அழுத்தமா சொல்லிட்டு, போனைக் கொடுத்தா.. இவன் அவகிட்டே அசடு வழிஞ்சு ’போன் சார்ஜ் பண்ண மறந்துட்டேன்’னு சமாளிச்சு, கட் பண்ணிட்டு என்னை இல்லே திட்டறான்.. ’எனக்கு வயசாக வயசாக புத்தி குறுகிண்டு போறதாம்.. எதையும் சந்தேகக் கண்ணோட பாக்கறதாலே கண்ணு கூட உள்ளே போயிடறதாம்..’ எப்படி இருக்கு பார்த்தீங்களா.. யாரோ ஒரு பொண்ணுக்காக இப்படியா சொந்தப் பெண்டாட்டியை அவமானப்படுத்துவது..

“ஓஹோ.. அவளுக்கு என்ன வயசு.. இருவது இருவத்தஞ்சு இருக்குமா.. இல்ல என்னை மாதிரி கிழவியா?”

“இதோ பார்.. இன்னொருத்தர் வயசெல்லாம் உனக்கும் எனக்கும் எதுக்கு? உனக்கு உன் கொல்லீக்ஸ் போன்ல பேசறச்சே நான் ஏதாவது குறுக்கே பேசியிருக்கேனா?”

“முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு,,. ஆனாலும் முப்பதுக்கு வயசுக்கு மேலே போனா உனக்குப் பிடிக்காதா.. கொஞ்ச வருஷம் முன்னாடில்லாம் ‘உன் கண்ணு எத்தனை அகலமா இருக்குடி.. இது ஒண்ணே போதும்’னு கொஞ்சுவே.. இப்போ அது குறுகிண்டே போறதா?.. ஒஹோ வயசாக வயசாக, கண்ணு குறுகி, உடம்பு பாழாகிப் போனா உங்களுக்கெல்லாம் ‘ஆல்டெர்னேடிவ்’ உடனே தேடணும் இல்ல.. இன்னிக்கு அந்தப் பூஜா.. நாளைக்கு அவளும் முப்பது வயசு தாண்டிடுவா.. அப்ப இன்னொரு கூஜாவாப் பார்த்துண்டு போவியோ.. உங்களுக்கெல்லாம் எப்பவுமே வயசாகலே.. இல்லையா.. என்றும் பதினாறு.. மார்க்கண்டேயர்”

“சபாஷ்.. ரொம்ப நல்லாப் பேசறே.. அன்னிக்கு நீ கார்ல மகாராணி போல அந்த ஆளோடு இறங்கினியே.. நான் ஏதாவது உன்னைப் போல குத்தம் சொன்னேனா.. நான் அந்த ஆளை எவ்வளோ நல்லா கவனிச்சுக் கனிவா அனுப்பிச்சேன் தெரியுமா..”

”அடப்பாவி.. அந்த ஆளு, அந்த ஆளுன்னு இண்டீஸண்டா சொல்றியே.. என்னோட எவ்வளவு வருஷம் சீனியர்.. ராத்திரி நேரமாச்சே.. பொண்களுக்கு மரியாதை தரணும்னு இல்லே வீட்டு வரைக்கும் கொண்டுவந்துவிட்டார்.. உன்னை மாதிரி இண்டீஸண்ட் ஆள்னா, தெரு முனைலேயே விட்டுட்டுப் போயிருப்பார்.. நீ எத்தனை தடவை அந்த மாதிரி அந்தப் பொண்ணோட போயிருக்கே, என் கண்ணுலயே ஒரு நாள் மாட்டினியே.. மிச்ச பேரு சொல்றச்சயெல்லாம் அதை மதிக்கவே இல்லையே.. நிஜமாவே நீ ஒரு ச்சீட்’தான்..”

அதுக்கப்பறம் எத்தனையோ சண்டைங்க நடந்து போச்சு.. சேகர் மாறவே இல்லேன்னாலும் பரவாயில்லே.. இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான்னு விட்டுடலாம், விட்டுப் பிடிக்கலாம். ஆனா இவன் செய்யறது சரின்னு வீம்பு, ரொம்ப கேட்டா நான் கார்ல ஒருநாள் முன்சீட்டுல மகாராணி மாதிரி வந்து இறங்கினதுன்னு இளக்காரமா ‘சடைரிங்’ பேச்சு.. இப்படி அடிக்கடி கேக்கறேனேன்னு வீட்டுக்கு லேட்டா வரது.. ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு பொய்.. சால்ஜாப்பு.. மிகப் பெரிய நடிகன்னா இவன் தான்.. எதுவுமே தெரியாத மாதிரி முகத்தை வெச்சுகிட்டு பொய் சொல்லுவான்.. நான் நெஞ்சுக்குள்ளேயே வெந்து சாகணும்.. அதைப் பார்த்து இவன் ரசிக்கணும்..

முடிவு பண்ணி ஒரு மாசமாச்சு.. எத்தனை நாள் இப்படியே போகும்.. நினைச்சு நினைச்சுப் பாத்து நரக வேதனைதான்.. நான் அரசாங்க உத்தியோகத்துல இருக்கேன்.. இவனை ஒண்ணும் சார்ந்து இருக்கலேன்னு இவனுக்கு உரைக்கவே மாட்டேங்குதே..

சரி.. ஒருவேளை நான் அவனுக்குப் பிடிக்கலே – ஒருவேளை என்ன – நிஜமாவே என்னை அவனுக்குப் பிடிக்கலை. அந்த பூஜாவைப் பிடிச்சிருக்கு.. போகட்டும்.. இப்படியே நான் நரக வேதனை படறதை விட அவனுக்கு எது ஜாலின்னு படறதோ அதையே செஞ்சுட்டு அவன் நிம்மதியா இருக்கட்டும். நாம ஏன் குறுக்கே நிக்கணும்.. எங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும்னா அப்படியே இருக்கட்டுமே.. ஒரே பிள்ளை சந்தேஷ்.. அவனைத்தான் பாத்துக்கணும்.. நாம சந்தோஷமா அவனைப் பாத்துக்கலாம்..சந்தேஷ் சந்தோஷமா இருக்கணும்கிற என்னோட எண்ணம், இவன் அப்பாவுக்கு இல்லையே… கொழந்த அவன்..  அப்பா.. அப்பா’ன்னு கொஞ்ச நாள் முனகுவான்.. ஆனா அவனுக்கும் வயசு பதினொண்ணு ஆயிடுச்சு.. புரிஞ்சுக்குவான்.. சேகர் பணம் நமக்கு வேணாம்’னு கூட சொல்லிடலாம்.. ச்சே.. இவன் சகவாசமே இனி வேண்டாம்..

சரோஜா விவரம் தெரிந்த தோழி.. என் எல்லா விஷயங்களும் அறிந்தவள். அவளும் சொல்லிவிட்டாள், இதெல்லாம் இந்தக் காலத்துல, அதுவும் டைவோர்ஸ்’ங்கிறது ரொம்ப சகஜம்டி’ன்னு.. எல்லோருக்கும் சகஜமா இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்லையேன்னு சொல்லணும்னு என் நாக்கு துடிக்கிறதுதான்..

‘ஆனா..நீயே சொல்லிடுடி.. எத்தனைநாள் இப்படியே மனசுக்குள்ளே புழுங்குவே’ன்னு உள்மனசே சொல்ல ஆரம்பிச்சவுடனதான் அவன்கிட்டே போன வாரம்தான் பேசினேன்..

“சரி சேகர்.. எதுக்கு இப்படியே உள்ளுக்குள்ளேயே நாம வெந்து போகணும்.. உனக்கு அந்தப் பொண்ணுதான் வேணும்னா தாராளமா நீ அப்படியே உன் இஷ்டப்படியே செய்யு.. நானும் என் பிள்ளையும் எப்படியோ இருந்துக்கறோம்.. பேப்பர் எல்லாம் எழுதிண்டு வா.. போட வேண்டிய இடத்துல கையெழுத்துப் போடறேன்..”

நான் இப்படிச் சொல்வேன்னு அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முழித்துப் பாக்கறச்சேயே தெரிஞ்சுதுதான்.. நான் முகத்தை வேண்டுமென்றே கொஞ்சம் கடுப்பாக்கிக்கொண்டேன்.. ’இதுக்கு மேலே என்னிடம் எதுவும் வார்த்தை இல்லை’ என்பது போல..

“எதையும் யோசிச்சுப் பேசறதில்லேன்னு நீ முடிவு பண்ணா, நான் என்னன்னு சொல்லறது..” இப்படி சொன்னவன் ஏதும் முடிவு சொல்லாமல் போய்விட்டான். அடுத்த இரண்டு நாள் கழிச்சு அவனிடம் மறுபடியும் கேட்டேன்.. “ஏன் இப்படி என்னை வதைக்கிறாய்.. நானே சொல்லிட்டேன் இல்லையா.. ஏன்.. வாழ்நாள் பூரா என்னைத் துன்பப்படுத்தறதுன்னு முடிவு பண்ணிட்டியா..”

அவன் முகம் என்னைப் பார்க்காமல் – குற்றமுள்ள நெஞ்சுதானே – வேறெங்கோ பார்த்துக்கொண்டே சொன்னான். “பிரிஞ்சுதான் போகணும்னா போகலாம்.. நீயேதானே ஆரம்பிச்சு வெச்சே.. நீயே அதையும் பார்த்துக்கோ”..

திமிர்.. உடம்பெல்லாம் திமிர்.. நாளை யாராவது பெரியவங்க கேட்டாக் கூட சுலபமா என் மேலே பழியைப் போடலாம்.. ’இவ கேட்டா.. இவளே வாங்கிகிட்டா’, புத்திசாலித்தனம்தான்.. ஆனா எனக்கு இந்தப் புத்திசாலித்தனம் போதலே..

சரோஜா அன்று மாலை வீட்டுக்குப் போகுமுன் என்னை அவள் வண்டியில் இறக்கிவிட்டாள். ’ஏதாவது பிரச்சினை என்றால் எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்பு, ரிலாக்ஸா இரு’  என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு சென்றாள். உள்ளே நுழையும்போதே பையன் சந்தேஷ் கொஞ்சம் உம் என்று கடுப்பாக இருந்தான்.

”என்னடா.. உம்முனு இருக்கே.. ஏதாவது சாப்பிட்டியா..”

பாவம் இவன்.. எங்கள் சண்டையில் இவனைச் சரியாகவே கவனிக்க முடிவதில்லை. அவனைக் கையைப் பிடித்து என்னுடன் இறுக்கிக்கொண்டே உள்ளே போனேன். சேகரும் வீட்டுக்கு வந்தாச்சு.. அறைக்குள்ளே போயிட்டு வழக்கம்போல கதவை மூடிக்கொண்டான். எல்லாம் கொஞ்ச நாள்தானே’ன்னு சீக்கிரமா வந்திருக்கணும்.. ஆஹா.. என்ன நல்ல மனசு.

சமையல் முடித்தவுடன் சந்தேஷை அவன் படிக்கும் இடத்துக்கு சென்று அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்…

“சொல்லு சந்து கண்ணா.. இன்னிக்கு உன்னோட க்ளாஸ்ல என்ன விசேஷம்?”

“என்னம்மா.. ரொம்ப நாளைக்கப்பறம் இந்த விஷயம்லாம் கேக்கறே”

அட, ஆமாம்.. ரொம்ப நாளக்குப் பிறகுதான் இவனிடம் இப்படிக் கேட்கிறேன்.  முன்பெல்லாம் அவன் வந்தவுடன் அவன் பள்ளியில் என்னென்ன விசேஷம் என்று தினம் கேள்வி கேட்டு அவனும் பதில் சொல்லி, சில சமயங்களில் கேலியும் கிண்டலுமாய்ச் சிரித்து.. ச்சே.. எல்லாம் மறந்து போயாச்சு.. எல்லாம் இந்தச் சேகரால் வந்த வினை.. இனி சந்தேஷைத் தினம் கேட்கவேண்டும்..

“அதனால் என்னடா.. இன்னிக்குக் கேக்கறேன் இல்லே.. சொல்லேன்..”

அவன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான். பிறகு சுற்று முற்றும் பார்த்துவிட்டு மெல்லமாகக் கேட்டான் “அது சரிம்மா.. அப்பா சிகரெட் பிடிப்பாரா?”

”சேச்சே.. உங்கப்பாக்கு அதெல்லாம் கிடையாதுடா.. சின்னப்போ கல்யாணத்துக்கு முன்னாடி உண்டு.. அப்புறம் விட்டுட்டார்.. ஏன்டா திடீர்னு கேக்கறே.. மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரா அந்த மனுஷன்.. அதுவும் பிள்ளை எதிரிலேயா..”

“இல்லம்மா.. அப்பா இல்லே.. நான் சொல்ல வர்றது.. மகேஷ்.. என் க்ளாஸ்மேட்.. அட நம்ம மகேஷ்மா.. இன்னிக்கு மத்தியானம் ஸ்கூல் பாத்ரூம் பின்னாடி ஒளிஞ்சுண்டு சும்மா ஊதிட்டே இருந்தான் பாரு.. டேய் என்னடா இப்படி பண்றே’ன்னு கேட்டேன்”

“டேய் அவனா.. பட்டு பிள்ளை மகேஷா.. அவனா பிடிக்கிறான்.. ஐய்யோ.. ஏழாம் கிளாஸ் படிக்கிற வயசுல.. என்னடா இது.. அவங்கப்பாவுக்கு தெரிஞ்சா, அவனைப் பொளந்து எடுத்துடுவார்..”

பட்டு ரொம்பத் தெரிந்தவர் மட்டுமில்லை. சேகரின் அலுவலகத்தில் வேலை செய்பவர்.. ஆங்.. இந்தப் பட்டு கூட தனியாகத்தான் பிள்ளையைக் கவனித்துக்கொள்கிறார்.. பிள்ளையை ஸ்கூல் வசதிக்காகப் பட்டு கையில் விட்டுவிட்டு அவன் அம்மா வேறு ஊரில் வேலையில் இருக்கிறாள்.

“சரி.. சரி.. அந்தக் கண்றாவிய இனிமே பார்க்காதே..”

“அம்மா.. மகேஷ்தான் சொல்லறான்.. அவங்கப்பா பிடிப்பாராம்.. அங்கிள் பாக்கெட்லேர்ந்து ரெண்டு சிகரெட் எடுத்துட்டு தினம் வருவானாம்.. இங்கே பிடிக்கிறானாம்.. யாருக்கும் சொல்லாதே’ன்னு பிராமிஸ் வாங்கியிருக்கான்.. நீ ஏதாவது கத்தி, என்னைப் போட்டுக் கொடுத்துடாதே”

“ஓஹோ.. அதுதான் கேட்டியோ.. உங்கப்பா சிகரெட் பிடிப்பாரான்னு..” சந்தேகத்தோடு சற்று கோபமாகவே கேட்டேன். ஆனால் சந்தேஷ் என் கோபத்தைக் கண்டுகொள்ளவே இல்லை..

“அம்மா! இப்போ ஸ்கூல்லே மகேஷ் ஆறாவது ஸ்டூடெண்ட்.. தெரியுமா?”

“ஆறாவதா.. என்னடா.. அவன் ரேங்க் ஆறா?”

“ஐய்யோ.. அம்மா.. அதாவது சிகரெட் பிடிக்கற ஸ்ட்டுடெண்ட்ஸ் ல இவன் ஆறாவதாம்.. ஏற்கனவே அஞ்சு பேர் சீனியர் பசங்க பிடிக்கிறாங்களாம். நானும் கூட சேர்ந்து பிடிச்சா நல்லா இருக்கும்.. அப்படின்னு ஏழாவதா என்னையும் கூப்பிட்டான்.. போடா..” அப்படின்னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்..”

சிரித்தான் சந்தேஷ். எனக்கு எங்கேயோ இடித்தது. ஏழாம் கிளாஸ் படிக்கும் இவன் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தால் பள்ளியில் ஏழாவதா.. மதியம் கல்லூரியில் சரோஜா கேட்டது நினைவுக்கு வந்தது.. டைவோர்ஸ் விஷயத்தில் காலேஜில் நான் ஏழாவதாக ஆகப் போவது.

நான் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கன்னத்தில் ஒரு முத்தத்தையும் கொடுத்து “என் தங்கம்.. உனக்கு எதுக்குடா அவன் சகவாசம் எல்லாம்.. நீ அம்மா பிள்ளை இல்லியா” எனக் கட்டிக்கொண்டே சமாதானம்தான் சொல்ல முடிந்தது. சட்டென பக்கத்தில் நிழலாடியது.. சேகர்தான்.. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்கிறான்..

பிள்ளைக்கு சாதம் ஊட்டிவிட்டு அவனை என் அறைக்குள் கூட்டிக்கொண்டு படுக்க வைத்தேன். நாளைக்கு வக்கீலைப் பார்க்கப் போக வேண்டும். ஏற்கனவே கல்லூரிக்கு லீவு லெட்டர் கொடுத்தாயிற்று. சேகருக்கு அவன் சாப்பாட்டைத் தட்டில் வைத்து விட்டு என் சாப்பாட்டை எடுத்துக் கொண்டேன்.. மனம் சந்தேஷ் விஷயத்திலேயே நிலைத்திருந்ததால் சாப்பிட மனம் வரவில்லை. சேகரும் சாப்பிடப் பிடிக்காமல் எழுந்துகொண்டான்.
அன்றிரவு தூக்கம் வரவில்லைதான். சந்தேஷ் என் அணைப்பில் உறங்கிக் கொண்டிருந்தாலும் நாளை அந்த மகேஷ் சொல்பேச்சு கேட்டு சிகரெட் பிடிக்கமாட்டான் என்பது என்ன நிச்சயம்?

மகேஷ் இவன் கையில் ஒரு சிகரெட் கொடுத்துட்டு ‘டேய் நீ படிக்கிறது ஏழாம் கிளாஸ், சிகரெட் பிடிக்கறதுல ஸ்கூல்ல ஏழாவது ஆள்.. நல்ல காம்பினேஷண்டா..’

அவன் சிரிப்பது நாராசமாகக் கேட்டது. சட்டென் எழுந்தேன்.. அரைத் தூக்கக் கனவு.. தண்ணீர் குடிக்க எழுந்து வெளியறைக்கு வந்தேன்.. அதிசயமாக அங்கே சேகர் தனியாக சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தான். நைட் லாம்ப் வெளிச்சத்தில் அவன் கவலையோடு இருந்ததைப் பார்த்தேன். நான் ஒன்றும் பேசாமல் ஃபிரிஜ்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தேன்.

“குடிக்கிறியா?”

அவனிடம் தண்ணீரை நீட்டினேன். தலையசைத்தான்.

“வேண்டாம்.. நீ கொஞ்சம் இங்கே வந்து உட்காருவாயா?”

நாளை வக்கீலிடம் போய் பேப்பர் எல்லாம் சப்மிட் பண்ண வேண்டும். அதற்கு முன் இவனிடம் ஏன் விதண்டாவாதம்?

போய் எதிரில் உட்கார்ந்துகொண்டேன். “என்ன?”

“சந்தேஷ் எப்படி கேட்டான் பார்த்தியா.. எனக்கு மனசே சரியில்லை.. நானும்தான் பள்ளிக்கூட கடைசி வருஷத்தில் சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டவன்.. ஆனால் அப்போதெல்லாம் என்னை அதட்டிக் கேட்க யாருமே இல்லை. உன்னைப் போல ஒரு வேளை என் அம்மாவும் அன்று என்னைக் கட்டிப் பிடித்துக் கேட்டிருந்தால் அந்த மாதிரி செய்திருக்கமாட்டேன் இல்லையா..”

நான் ஒன்றும் பேசவில்லை. அவனே பேசினான்.

“நான் நாளைக்கு அந்தப் பட்டுகிட்டே ஜாக்கிரதையா பேசி, அவன் பையனை நல்லவிதமா திருத்தப் பாக்கிறேன். இன்னிக்கு சிகரெட் பிடிக்கிறது இந்த வயசுலேயே தப்பில்லேன்னு தெரிஞ்சா, தண்ணி அடிக்கறதும் அவ்வளோ பெரிய தப்பில்லேன்னு தோணும். அதை விட இந்தப் பசங்க கஞ்சா, ‘ட்ரக்ஸ்’ அப்படி இப்படின்னு போயிட்டாங்கன்னு வெச்சுக்கோ.. ஐய்யோ.. என்னவாகும்.. கடவுளே.. எதிரிக்குக் கூட அப்படியெல்லாம் ஆகக்கூடாது.. சந்தேஷ்லாம் இப்படி ஆயிட்டா அவ்வளவுதான்.. என் உயிரே போயிடும்..”

“சரி, விடு.. சந்தேஷை நான் பார்த்துக்கொள்கிறேன்.. இதற்காகவா இப்படி நடுராத்திரியில் தூங்காமல் இருக்கிறாய்? போய்த் தூங்கு..” நிதானமாக சொல்லிவிட்டு நான் எழுந்துகொண்டேன்.

சட்டென என் கையைப் பிடித்து மறுபடியும் உட்கார்த்தி வைத்தான். “இல்லை தீபி.. தூக்கம் வரல்லே.. இன்னிக்குன்னு இல்லே.. நீ எப்போ டைவோர்ஸ்னு ஆரம்பிச்சுயோ அன்னிலேர்ந்து சரியா தூங்க முடியவில்லை.. இன்னிக்கு அந்த லாயர் பத்மாவதி போன் பண்ணி நாளைக்கு வரச்சே கல்யாண ரிஜிஸ்டர் சர்டிஃபிகேட்டை மறக்காம எடுத்துட்டு வாங்க’ன்னாங்க.. இந்தம்மாவுக்கு எப்படி என் நம்பர் தெரியும்னு கேட்டேன். நீ அப்ளிகேஷன்ல எல்லா விவரமும் கொடுத்திருக்கியாம்.. தீபி! நிஜம்மாவே என்னைப் பிரியணும்னு முடிவு பண்ணிட்டியா.. சந்தேஷ்கோசரமாவது நீ எங்கிட்டேதான் இருப்பேன்னு நான் ரொம்ப அலட்சியமா இருந்தது என் தப்புதான்.. நான் முன்னாடியே உன்கிட்ட சாரி கேட்டுடணும்னு நிறைய தரம் நினைப்பேன். ஆனா ‘ஈகோ ஹர்ட்’ என்பார்களே.. அது இவ்வளோ தூரம் கொண்டு விடும்னு எதிர்பார்க்கலே”

குரல் தழுதழுக்க, சட்டென அவன் முகம் என் மடி மீது விழுந்தது. அவன் தலையைப் பிடித்துக்கொண்டேன். மெல்ல எழுப்பினேன்..

என்ன இது.. இவன் நம்ம பழைய சேகரா.. ஐய்யயோ.. இவன் அழுகிறானே.. அடக்கடவுளே..

“ஹேய் சேகர் என்ன இது.. சின்னப் பிள்ளை மாதிரி..” என் மனசு தீ பட்டவுடன் உருகும் வெண்ணெயாக மாறுவதை என்னாலேயே உணர முடிந்தது. அவன் குரலில் ஒரு சத்தியம்.. பெரும் சக்தியாக மாறி, என் இதயத்தைத் துளைத்தது போல இருந்தது.

“தீபி.. நான் சொல்றதை நம்பணும் நீ.. அந்தப் பூஜா எல்லாம் ஜஸ்ட் க்ரேஸ் மாதிரி வந்து அப்படியே போகற மாதிரி.. அது.. அது ரொம்ப தப்புதான்.. நான் எப்பவோ ரியலைஸ் பண்ணிட்டேன்.. ரொம்ப தப்பு பண்ணிட்டேன்.. என்னோட தப்புக்கோசரம் உன்னையும் மனசு புண்படுத்தியிருக்கேன்.. நிறைய தரம் உங்கிட்டே வந்து ’சாரிடா தீபி’ன்னு கேக்கத் தோணும்.. என்னவோ தெரியலே.. சந்தர்ப்பம் அப்படி அமையலே.. எனக்கு உன்னை விட்டா யார்டா இருக்காங்க.. தீபி.. சாரிடா கண்ணா..”

என் கண்ணில் நீர் தளும்பியதை அவன் துடைத்துவிட்டான். இதையெல்லாம் எப்போதோ செய்திருக்க வேண்டியவன்.. அவன் தலையை என் மேல் சார்த்திக்கொண்டேன்.

அறையில் இவன் பேசிய பேச்சின் சப்தம், குழந்தையையும் எழுப்பிவிட்டது போலும். கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தவன், நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தது அவனுக்கு வேடிக்கையாகப் பட்டது போலும்.. “அப்பா..” வெனச் சொல்லி எங்கள் இருவர் பின்னாலும் வந்து கட்டிக்கொண்டு, முதுகின் மீதேறி எங்களை முன்னே தள்ளினான்…

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “ஏழாவது ஆள்

 1. மிகவும் அருமை ஐயா. விவாகரத்து என்பது மலிந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், எந்த ஈகோவும் இன்றி மனம் விட்டுப் பேசினாலே இருக்கும் மனக்கசப்புகள் எல்லாம் தீர்ந்து போகும் என்பதை மிக அழகாக விளக்கும் கதை.

  நன்றி
  வர்தினி

 2. நல்லா இருக்கு. என்றாலும் உங்களிடமிருந்து இதைத் தாண்டி இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறேன்.

 3. Reasons for divorce are common now a days. But to settle the things positively and also proper way we need some shock treatment. Nicely explained Anna.

 4. Touching story. But one small doubt Sir, Husband had the privilege of flirting with intention. Finally he wanted his wife to pardon him. I understand the prevailing conditions at that time helped him. But if the same thing was reverse, will he accept her?

 5. அருமையான கதை.. வாழ்க்கையின் யதார்த்தத்தை, கணவன் – மனைவி உறவை மிக அழகாகச் சொல்லியிருக்கிறாய்.

 6. Makes you think….. divorce is so easy nowadays, but is that the solution. Again, should women be subjected to the vagaries of wandering men. Ok he has returned now to his wife, is there any guarantee that he won’t stray again. But I am happy that you ended the story on a positive note. the woman’s character is well-etched.

 7. ஏழாவது ஆள் என்பது ஒரு பொறி. புரிகிறது. பல குடும்பங்களில் இந்தப் பொறிதான் காப்பாற்றுகிறது. எத்தனைதான் மனைவி பிரிய முடிவு செய்தாலும் இந்தப் பொறி சரியான சமயத்தில் அவளுக்குள் தோன்றி, அவள் குடும்ப வாழ்க்கையைக் காப்பாற்றும். எனக்குத் தெரிந்த தோழி இதைப் போல ஒரு அனுபவத்தைச் சொல்லி, தன் வாழ்க்கையை நிலைப்படுத்திக்கொண்டது நினைவுக்கு வருகிறது.
  சமூக அக்கறையுடன் எழுதப்பட்டதோடு, நேர்த்தியாகச் சொல்லப்பட்ட கதை.

 8. only certain percent of this generation couples understand each other. Emotions play some times error games and people falls blindly

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *