சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-5)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

சிவனேசன் வெளிநாடு சென்று சேர்ந்து விட்டான். சேர்ந்ததுமே விரிவாகப் ஃபோன் பேசினான். தனக்கு எல்லாமே சௌகர்யமாக இருப்பதாகவும், பயணம் செல்லக் கம்பெனியே கார் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னான். அது மட்டுமல்ல உணவு, தங்குமிடம் எல்லாமே அவர்கள் பொறுப்பு என்பதோடு, இவனுக்குரிய சம்பளமும் கிடைப்பதால் பணம் பற்றிய கவலை இல்லை என்றான். அது மங்கைக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது.

முன் பின் தெரியாத ஊரில், பணம் இல்லாமல் அவன் தவிக்க நேரிடுமோவென்ற அவள் பயம் நீங்கியது. மேலும் அவன் தான் அங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியிருந்தான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிலாந்தில் உள்ள வேலைகளை முடித்துக் கொண்டு, சீனா செல்லத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினான். அங்கேயுள்ள குளிர் முதலியவைகளை வர்ணித்தான்.

“மங்கை இங்கே கடுங்குளிர் இருக்கு. ரோடெல்லாம் ஒரே பனி தான். கையுறை, காலுறை, கனத்த தோல் உடைகள் இல்லாமல் வெளியில் இறங்க முடியாது. இங்குள்ள பிள்ளைங்க ஐஸ்ல உருண்டை செஞ்சு ஒருத்தர் மேல ஒருத்தர் தூக்கி எறிஞ்சு விளையாடறாங்க, அது மட்டுமில்லே, ஸ்னோ மேன் அப்படீங்கற பொம்மையை பனியிலயே செய்யறாங்க. அதுக்குத் தொப்பி, பூட்ஸ் எல்லாம் போட்டு அழகு பாக்கறாங்க. அதையெல்லாம் பாக்கும்போது எனக்கு நம்ம குழந்தைங்க ஞாபகம் வருது. சீக்கிரம் வந்து உங்களையெல்லாம் பாக்கணும் போல இருக்கு” என்றான்.

சிவநேசன் கிளம்பிய அன்று மங்கை மயங்கி விழுந்தாள் அல்லவா? அதன் பிறகு அவள் பழைய மங்கையாகவே இல்லை. ஒடுங்கிப் போய் விட்டாள். அவனோடு ஃபோனில் பேசும் போதெல்லாம் உற்சாகம் கொள்ளும் அவள் மனம் அவன் பேசி முடித்த மறு கணமே மீண்டும் கவலையில் ஆழ்ந்து விடும். சொல்லத் தெரியாத பயம் அவள் இதயத்தைச் சதா ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது. கோமு மாமி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள்.

“மங்கை நீ இப்படி இருக்கறதப் பாத்தா எனக்குப் பயமா இருக்கு. ஒன் ஆம்படையான் நல்லபடியா வந்து சேருவான். கவலைப் படாதே. இந்தச் சென்னையிலருந்து ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வெளிநாடு போறா வரா. அவா எல்லாம் நல்லபடியா வரல்லியா? ஒன் ஆம்படையானுக்கு மட்டும் அப்டி என்ன ஆகிடும்னு நீ பயப்படறே? அவர் ஊர்ல இருந்து வரும்போது நீ தெம்பா இருந்து வரவேற்க வேணாமா?” என்றும் இன்னும் என்னென்னவோ சொல்லிப் பார்த்தாள். அந்த நேரத்திற்குக் கேட்டுக் கொள்ளும் மங்கை ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் கவலையில் ஆழ்ந்து விடுவாள். அவள் அப்படிக் கவலைப்பட்டதன் பலனோ என்னவோ நெஞ்சு வலி அடிக்கடி வரத்தொடங்கியது.

ஆரம்பத்தில் மாமியிடம் கூட எதுவும் சொல்லாமல் மறைத்தாள். வலி வரும் சமயம் பேசாமல் படுக்கையறையில் போய்ப் படுத்து விடுவாள். அந்த நேரத்தில் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்தாலோ, அல்லது மாமி ஏதேனும் கேட்டாலோ சரியாகப் பதில் சொல்ல முடியாது. இதனாலெல்லாம் மாமி மங்கையின் மனநிலை பற்றிக் கவலை கொண்டாள். மங்கையை நரசிம்மர் கோயிலுக்கும், அம்மன் கோயில்களுக்கும் அழைத்துச் சென்றாள் மாமி. ஞாயிற்றுக் கிழமைகளில் குழந்தைகளோடு மங்கையையும் உட்கார வைத்துத் திருஷ்டி சுற்றிப் போட்டாள்.

அப்போதெல்லாம் மங்கையின் கண்கள் நிறையும். எந்த ரத்த பந்தமுமே இல்லாத அந்த மாமி தன் மீதும், அந்தக் குடும்பத்தின் மீதும் வைத்திருக்கும் அக்கறைக்கும், அந்த மாமியின் உதவிகளுக்கும், அன்புக்கும் எதை வேண்டுமானாலும் ஈடாகத் தரலாம் என்று தோன்றும் அவளுக்கு. அதை மாமியிடம் சொல்லவும் செய்வாள்.

அதற்கு மாமி “சீ! போடி அசடு. நீ என் வயத்துல பொறக்கலையே தவிர நீ என் பொண்ணுதான். நான் அப்படித்தான் நெனச்சுண்டு இருக்கேன். நீ என் பொண்ணுன்னா, உன் குழந்தைகள் என் பேரக் குழந்தைகள் இல்லையா? ப்ரியாவும் எனக்கு ஒரு குழந்தைதான். நான் உங்களையெல்லாம் அன்னியமாவே நெனக்கல்லே. ஏதோ என் குடும்பத்துக்கு நான் செய்யற கடமைகளாத்தான் நெனச்சிண்டு இருக்கேன். நீ ஒரு வேளை அன்னியமா நெனக்கிறியோ என்னவோ. அதான் இது மாதிரிப் பேசறே? என்று கோபித்துக் கொண்டாள். மங்கை சமாதானம் செய்த பிறகே அமைதியானாள் மாமி.

சிவநேசன் வரும் வரையில் தன் நெஞ்சு வலி வெளியில் தெரியாமல் சமாளித்து விடலாம். அவன் வந்த பிறகு அது தானே சரியாகி விடும் என்று மங்கை நினைத்துக் கொண்டிருந்தது பொய்யாய்ப் போனது. மாமியிடமும், ப்ரியாவிடமும் மங்கை ஒரு நாள் வசமாக மாட்டிக் கொண்டாள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் யோகா கிளாஸ் போயிருந்தனர். மாமி, பக்கத்துத் துர்கையம்மன் கோவிலில் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்குப் போடுவதற்காகப் ப்ரியாவையும், மங்கையையும் அழைத்து வந்திருந்தாள். கோவிலில் நல்ல கூட்டம். இவர்கள் எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொண்டு, சன்னதி அருகில் வரும் போது மங்கைக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.

எப்போதும் போல இல்லாமல், வரும்போதே இம்முறை சுரீரென்று வலித்தது. மூச்சுத் திணறியது. கால்கள் தள்ளாட நிற்கவே முடியாமல் போய் விட்டது அவளுக்கு. கண்களும் இருட்டிக் கொண்டு வர கோவில் பிரகாரத்தில் அப்படியே அமர்ந்து விட்டாள். மாமியும், ப்ரியாவும் மங்கையின் நிலை கண்டு பதறிப் போயினர். அவளைக் கைத்தாங்கலாகக் கூட்டம் குறைவாக இருந்த இடத்திற்குக் கொண்டு வந்தனர். மங்கையால் வாய் திறந்து ஒன்றும் பேசக்கூட முடியவில்லை. ப்ரியா தான் நெஞ்சை மெதுவாக மசாஜ் செய்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து ஆசுவாசம் கிடைத்தது. “இப்ப இங்க வெச்சு எதுவும் பேச வேண்டாம், வெளக்குப் போட்டுட்டு ஆத்துக்குப் போய் விவரமா பேசிப்போம்” என்ற மாமி மங்கையைப் பிராகாரத்திலேயே அமர வைத்து விட்டுப் ப்ரியாவை மட்டும் அழைத்துச் சென்று மங்கையின் விளக்கையும் சேர்த்துப் போட்டு விட்டு நடந்து வராமல் ஆட்டோவில் வீடு திரும்பினர்.

உள்ளே நுழைந்தது தான் தாமதம் ப்ரியாவும், மாமியும் பிலு பிலுவெனப் பிடித்துக் கொண்டனர். “அண்ணி நீங்க நல்ல புத்திசாலின்னு நெனச்சேன். இப்படி முட்டாளா இருப்பீங்கன்னு நெனக்கவேயில்லே. வலியை மூடி மூடி வெச்சா நோய் ஜாஸ்தி தான் ஆகுமே தவிரக் குறையாது. என்ன நெனச்சுக்கிட்டு நீங்க எங்க கிட்ட சொல்லாமே மறைச்சீங்க? என்றாள் ப்ரியா. மாமியும் தன் பங்குக்கு “இத்தனை நாள் திடீர் திடீர்னு ரூமுக்குள்ள போனதுக்கு இது தான் காரணமா? அது தெரியாமே நான் என்னென்னவோ நெனச்சேனே? அடிக்கடி நெஞ்சு வலி வந்தா டாக்டர் கிட்ட காமிக்கணும்கறது கூடவா உனக்குத் தெரியல்லை. ப்ரியா சின்னப் பொண்ணு, அவ கிட்ட சொல்லியிருக்க வேண்டாம், நாந்தான் ஒத்தி தடிமாடு மாதிரிச் சுத்திண்டு இருக்கேனே வீட்டுல எங்கிட்ட சொல்லக் கூடாதா? அதை மறைச்சதாலே என்ன சாதிச்சுட்டே நீ?” என்று சத்தம் போட்டாள்.

மங்கை சொன்ன சமாதானங்கள் ஒன்றும் அவர்கள் காதில் விழவேயில்லை. ப்ரியா அழுது விட்டாள். “அண்ணி நான் சின்ன வயசுலேயே அம்மாவைப் பறி கொடுத்தவ. அந்தக் கொறை தெரியாமே நீங்கதான் வளத்தீங்க, இப்போ நீங்களும் இப்படி இருக்கீங்க. என்னை விடுங்க, உங்க குழந்தைகளை நெனச்சுப் பாத்தீங்களா? நீங்க இல்லாமே அதுங்க நெலமை என்ன? தயவு செய்து அவங்களுக்காகவாவது டாக்டர் கிட்ட வாங்கண்ணி” என்று பேசிக் கரைத்துச் சம்மதிக்க வைத்தாள். மறு வாரமே ஒரு பெரிய டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி மங்கையைக் காண்பிப்பதாக ஏற்பாடு. அங்கே அவர்களுக்கு ஒரு இடி காத்திருக்கிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.

குறிப்பு: குங்குமச்சிமிழ் இதழில் தொடராக வெளி வந்தது) 

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி:http://www.shutterstock.com/pic-78062518/stock-photo-thousand-candles-burning-on-a-temple.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *