இலக்கியம்கவிதைகள்

மரங்களே வரங்களாய்!

பூமித்தாயின் மண் மேனியில்
பூரித்துக் கிளம்பிய மலை மார்பகங்கள்
விருட்சப்பால் சுரப்பது
காற்றைத் தாலாட்ட மட்டுமல்ல!
நம் காரியங்களுக்கும் பயன்படத்தான்!

யோசித்துப்பார் மனிதா!

உன் ஜீவ காவியத்தின் எந்த அத்தியாயமாவது
மரத்தின் முன் மண்டியிடாத மணித்துளியுண்டா?

கட்டைகளின் காரியசித்திக்குப்
பட்டியலே உண்டு படித்துணர்வீர்!

அடுப்பு தேவதை அன்னவரம் தர
விறகுக் கட்டைகளின் அக்கினித்தவம் வேண்டும்!

ஆனந்த சயனத்தில் ஏகாந்தம் பெற
ஊஞ்சல் பலகையின் உபகாரம் வேண்டும்!

கல்விக் கடலில் கலங்கரை விளக்கம் தொட
சிலேட்டுப் பலகையின் சிநேகம் வேண்டும்!

கடுங்குளிர் காலத்தில் உஷ்ண ஒத்தடம் பெற
சுள்ளிக் கட்டைகளின் சுட்டெரிப்பு வேண்டும்!

காமச்சூடு தகிக்கையில் கூடல் சுகம் பெற
கட்டில் கட்டைகளின் ஒத்துழைப்பு வேண்டும்!

வேட்கையின் வெளிப்பாடாய் வந்திறங்கிய மழலைக்கும்
தொட்டில் கட்டையின் தாலாட்டு வேண்டும்!

இறுதியாய்….

முதுமை வந்து முடிவுரை எழுதியதும்
யாக்கையைப் பொசுக்க மரக்கட்டைகளின் மரிப்பு வேண்டும்!

ஆம்!

தொட்டில் தொடங்கி கட்டில் வரை
கட்டில் தொடங்கி காடு வரை
மரங்களே வரங்களாய்!

படத்திற்கு நன்றி
http://krazykk.wordpress.com/carey-corea/big-tree/

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க