முற்றிலும் ஒழிப்போம்!

1

 

பவள சங்கரி

தலையங்கம்

சென்ற மே, 30, 2012 உலக புகையிலை ஒழிப்பு தினம். இதனையொட்டி மெரினா கடற்கரையில் புகையிலைப் பழக்கத்திற்கு எதிரான மனிதச் சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கமும் அடுத்த நாள் நடந்துள்ளது. நமது நாட்டில் 34.6 சதம் பேர் புகைப்பதற்கும், 25.9 சதம் பேர் பான்பராக், குட்கா போன்ற புகையிலைப் பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளனர் என்பது வேதனைக்குரிய விசயம். .நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த அபாயகரமான பழக்கம் குறித்து, ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, (Global adult tobacco survey) புகையிலைப் பயன்பாட்டு விகித ஆய்வில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்ற ஓர் அதிர்ச்சியான தகவலை அளித்துள்ளனர்.

புகையிலைப் பொருட்களில் வெளியிடப்படும் எச்சரிக்கைப் படம் சரியான அளவில் வெளிப்படையாகத் தெரியும் வகையில் வெளியிடப்பட வேண்டும் என அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனை மீறும் புகையிலை உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமே தினந்தோறும் சராசரியாக 2500 பேர் இதன் காரணமாக உயிர் இழக்கின்றனர். இருதய நோய், புற்றுநோய், காசநோய், நுரையீரல் நோய் போன்ற பல்வேறு நோய்கள் மூலம் இந்த இறப்பு ஏற்படுகிறது. ஆண்டுக்கு 10 இலட்சம் பேர் இந்தியாவில் மட்டுமே, புகையிலைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு இது போன்று நோய்களினால் அவதியுறுகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாட்டிற்கான சட்டப்பூர்வமான ஒப்பந்தம் (Framework Convention for Tobacco Control) என்பது. இதன்படி 2005ஆம் ஆண்டு 40 நாடுகள் கையெழுத்திட்டதன் மூலம் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 2011ம் ஆண்டின் புள்ளி விவரப்படி இந்த ஒப்பந்தத்தில் 172 உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. நமது இந்திய நாடு 2004ம் ஆண்டிலேயே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி, புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துக்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 2020ம் ஆண்டுக்குள் பாதிக்குப் பாதியாக இந்த புகையிலைப் பயன்பாட்டை நிறுத்திவிட முடியும் என்று உறுதியளித்தும் உள்ளது. புகையிலைப் பயன்பாடு முற்றிலும் ஒழியும் நல்ல நாளையும் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.

கேரளத்தில் குட்கா, பான்பராக் போன்ற போதை பாக்குகள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் அம்மாநில அரசு தடை விதித்து, அதற்காக அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளும் பாராட்டுதலுக்குரியது.

புகைபிடிப்பதால், அருகில் இருப்பவர்களுக்கும் புற்றுநோய் போன்ற பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் புகைபிடிப்பதும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் பயன்படுத்தியவருக்கும், அந்த இடத்தின் பொறுப்பாளருக்கும் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களில் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால், அது பற்றிய எச்சரிக்கை வாசகம் காண்பிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவும் இருந்தும் புகையிலைப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே நிதர்சனம்.

இதற்குக் காரணம் விளம்பர நிறுவனங்களின், தடைகளை மீறிய சாமர்த்தியமான விளம்பர யுக்திகள் மூலம் மக்களைத் தம் வசப்படுத்தி, வியாபாரத்தைப் பெருக்கும் மனிதாபிமானமற்ற செயல்தான். மக்களுக்கு இன்னும் சரியான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதற்கு தொண்டு நிறுவனங்களும், மக்கள் நலம் பேணும் சமூகசேவை நிறுவனங்களும் குறிப்பாக ஊடகங்களாலும்தான் இது சாத்தியமாகும்.

புகையிலைப் பொருளான சிகரெட்டில் மட்டுமே, உடலை நோய்க்கு உள்ளாக்கும் 4000 நச்சுப் பொருட்கள் இருக்கின்றன. அதில் 56 நச்சு பொருட்கள் புற்று நோயை உருவாக்கக்கூடியவை. ஒவ்வொரு முறையும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தும் போது, அவர்தம் வாழ்நாளில் 7 நிமிடம் முதல் 14 நிமிடங்கள் வரை குறைகிறது. இதனால் அவர்களின் வாழ்நாளில் சராசரியாக 15 ஆண்டுகால வாழ்வை இழக்க நேரிடுகிறது.
புகைபிடிப்பவர்கள் மட்டுமின்றி, அவர்களின் அருகில் உள்ளோரையும், புகையிலையைப் பயிர் செய்யும் விவசாயிகளையும்கூட கடுமையான புகையிலை சார்ந்த நோய்கள் தாக்குகின்றன. புகையிலையில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு நம் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களை அழித்து விடுகிறது. அதனால் ரத்தம் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை இழந்துவிடுகிறது.
இது பல வகையிலும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஒவ்வொரு 72 வினாடிக்கும் ஒருவர் புகை பிடிப்பதனால் இறக்கிறாராம். ஒவ்வொரு நிமிடத்திற்கும் 10 இலட்சம் சிகரெட்டுகள் விற்பனையாகின்றனவாம்…

சமீபத்தில் இளைய தளபதி விஜய் திரைப்படங்களில் இனி புகை பிடிப்பது போல நடிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். அதுபோன்று அனைத்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களும் உறுதி எடுப்பதோடு அதற்கு எதிரான பிரச்சாரங்களையும் தங்களால் இயன்றவரை அங்கங்கு புகுத்தினால் நலம்.. பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களாக தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மட்டுமே என்பதாக இருப்பதனால் இந்த புகையிலை அரக்கனை முற்றிலும் ஒழிப்பதற்கு இவர்களின் பங்கு மிக அவசியமாகிறது என்பதனை உணர்ந்து திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கலைஞர்கள் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும். புகையிலை அரக்கனின் அழிச்சாட்டியம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக நம் நாடு விரைவில் மாற வேண்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “முற்றிலும் ஒழிப்போம்!

  1. சமீபத்தில் நான் திருவரங்கம் சென்றிருந்தபோது, அங்கே ஒரு வித்தியாசமான் செயல் நடந்ததைக் கண்ணுற்றேன்.  அதாவது பிளாஸ்டிக் பைகள் விற்கும் கடைகள் அனைத்திலும் அதிரடியாக் அனைத்து பிளாஸ்டிக் பைகளையும், அதனோடு கூடிய பொருட்களோடு அள்ளிச் சென்று விட்டார்கள் மாநகராட்சி அதிகாரிகள். அன்றிலிருந்து கடைகளில், பிளாஸ்டிக் பைகளைக் காணமுடியல்லை.  திருவரங்கத்தில் ஆங்காங்கே காணப்படும் ஒரு வாசகம் “காவிரி பாயும் திருச்சி, பிளாஸ்டிக் இல்லா மகிழ்ச்சி” .இதே போல திருட்டுத்தனமாக பான்பராக், குட்கா, கைனி போன்ற அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பொருட்களை , சென்னையில் உள்ள் அனைத்துக் கடைகளிலும் சர்வ சாதாரணமாக பாமர மக்களுக்குக் கிடைக்கிறது. காவல்துறைக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தெரியாமலா இத்தகைய வியாபரங்கள் நடக்கின்றன. இது போன்ற சின்னச் சின்ன அதிரடி நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியும் பின்பற்றலாமே!…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *