அம்மாவின் குறிப்பில் விடுபட்டவை
ரேவதி நரசிம்ஹன்
(தம் கணவர் எஸ். நாராயணன் மறைந்த தருணம் குறித்து, திருமதி ஜெயலக்ஷ்மி நாராயணன் எழுதிய டைரிக் குறிப்புகள், வல்லமையில் வெளியாயின. அதன் தொடர்ச்சியாகச் சில முக்கிய விவரங்களை அவர்களின் மகள் ரேவதி நரசிம்ஹன், இங்கு அளித்துள்ளார். – ஆசிரியர்)
அம்மாவின் குறிப்பில் விட்டுப் போன, அவள் மறக்க விரும்பிய சில விஷயங்களில் ஒன்று, மருத்துவமனையில் அப்பா சரியாகக் கவனிக்கப்படாதது.
அவசரத்துக்குச் சேர்த்த அந்த இடத்திலிருந்து அப்பாவை மாற்றி இருக்கலாம். அப்பாவிடம் ”உன் நெஞ்சு வலிக்கிறதா” என்று கேட்டு இருக்கலாம்.
அவர்களது புத்திரச் செல்வங்கள் அவரது நோயின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளாதது ஒரு குற்றம். அவரவர் வேலைகளில் மூழ்கி, 36 மணி நேரத்தில் ஒரு விலை மதிப்பில்லாத உயிரை இழந்தோம்.
அந்த மருத்துவர், ஒரே ஒரு பூரண உடல் பரிசோதனை செய்திருக்கலாம்.
அம்மாவும் சின்னத் தம்பியும்தான் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டார்கள். இரவு முழுவதும் அவருக்கு நோவு இருந்திருக்கிறது. ஆனால் நான் காலையில் அவரைப் பார்க்கப் போனபோது எப்போதும் போல நெற்றியில் திருமண் காப்பு, ”என்னம்மா, சாயந்திரம் அகத்துக்குப் போய்விடலாமா” என்ற புன்சிரிப்புடனான கேள்வி.
அம்மா சொன்னது போல் கண்ணும் கருத்தும் இயங்கவில்லை. அன்று கல்யாணப் புடவைகளையும் திருமாங்கல்யத்தையும் அப்பாவிடம் காண்பித்தேன். எப்பொழுதும் போல மெச்சிக்கொண்டார்.
மதியத்துக்கு மேல்தான் நான் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கையில் அவரது பலவீனம், உச்சக் கட்டத்தை அடைந்தது.
வந்து பார்த்த அருமை வைத்தியர், “க்ரோசின் கொடுங்கள், காய்ச்சல் குறைந்து, வியர்த்துவிட்டால் சரியாகிவிடும். இன்னோரு ட்ரிப் ஏத்துமா” என்று
சொல்லிவிட்டு, டென்னிஸ் விளையாடப் போய்விட்டார்.
அப்பாவின் கைகள் மறுத்து, வாய்மொழியாக ஏதோ சொல்ல வந்தன. வாய்ப் பேச்சு வரவில்லை. அருகில் அமர்ந்திருந்த அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
பார்க்கச் சகிக்க முடியாமல், அறைக்கு வெளியே வந்தேன். வைத்தியரை அழைக்க மறுபடி ஓடினேன். அவர் வரும்போது அப்பாவின் முகத்தில் இணையில்லாத அமைதி. கண்கள் திறந்திருக்க, பார்வை இல்லை.
அம்மா, அப்பாவின் நெஞ்சில் காதுகளை வைத்துப் பார்த்தார். அப்படியே கைகளைக் கூப்பி, அவர் கைகளில் முகத்தை வைத்துக்கொண்டார்.
வந்த வைத்தியர் “மாஸ்ஸிவ் அட்டாக்” என்று உரைத்து விட்டு வெளியேறினார்.
பிறகு சின்னத் தம்பி வந்தான். வேலைகள் நடந்தன.
நான் அந்த நர்ஸம்மாவிடம் “என்ன ஆச்சு?” என்று கேட்டதற்கு, ”வயசாச்சு இல்லம்மா”!! என்று தன் தொலைபேசியில் சிநேகிதியிடம் பேச ஆரம்பித்தார்.
இன்றும் அந்த மருத்துவமனைப் பக்கம் போவதை நான் விரும்புவதில்லை.
கடின இதயம் படைத்த மனித மருத்துவர்களிடமிருந்து கடவுள்தான் முதியவர்களைக் காக்க வேண்டும்.
அன்பு மிகு ஆசிரியர் திரு.அண்ணாகண்ணனுக்கு என் நன்றி.
இனிமேல் இது போல நடக்க விடவும் மாட்டோம்
எங்கள் குழந்தைகள் எங்களுக்கு உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள்.
யாராயிருந்தாலும் உடனடி மருத்துவ கவனிப்பும்.
கொடுத்தாக வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ செக்கப்பும் செய்தாக வேண்டும்.முக்கியமாக வயது முதிர்ந்தவர்களை கண்ணும்கருத்துமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதில் வேறு அபிப்பிராயம் இல்லை.
வல்லிம்மா, உங்கள் அம்மா மறக்க விரும்பியவை. உங்களால் மறக்க இயலாதவை. வேதனையான இந்தப் பகிர்வின் பின்னே, ஆம், இரு சாராருக்கும் பாடம் உள்ளதுதான். மற்றவர் நலன் கருதி விழிப்புணர்வைக் கோரும் அம்மாவின் வலி மிகுந்த குறிப்புகளைப் பகிர்ந்திட முன் வந்தமைக்கு மிக்க நன்றி.
ஒரு கசப்பை மறக்கவேண்டுமானால் ஒரு இனிய கர்மாவைச் செய்ய வேண்டும் என்பதுதானெ நம் மரபு அன்பு ராமலக்ஷ்மி.
முடிந்தவரை அம்மா அப்பா மாதிரி முதியோர்களுக்கு திணையளவு
நன்மையாவது செய்யத்தான் என்னை இறைவன் தூண்டுகிறான்..நன்மைப் பயிர் நிறையவே வளரட்டும். மிகவும் நன்றி மா.
இது போன்ற விசயங்களை இத்தனை நாகரிகமாக கொடுத்துள்ள உங்கள் மேல் கோபமாக வருகின்றது. நீதிமன்றம், மருத்துவம், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றில் உள்ள மிருகங்களை பல முறை பார்த்த போது மனதில் தோன்றும் எண்ணம் இது.
இவர்களுக்கு எப்படி இரவில் ஆழ்ந்த தூக்கம் வரும்?
திரு நாராயணன் அவர்கள் குறித்த டைரி குறிப்புகள் இன்னும் என் மனதில் ஒரு சலனத்தையும் வருத்த த்தையும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. நோயாளியின் உடன் இருக்கும் உறவினர்களின் விழிப்புணர்வின் அளவிற்கு கடமை செய்யும் மருத்துவர்களும் அவரின் பணியாளர்களும் அன்பும் கருணையும் கடமை உணர்வும் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். பண்பின் பவளமாக ஜொலித்த நாராயணன் அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவரின் குழந்தைகளாக நல்ல நேயமிக்க நண்பர்களாக….
அன்பு திரு நீலகண்டன்,
என் வருத்தம் எல்லாம் ,எனக்கு இதே மாதிரி நடந்திருந்தால் எங்க தந்தை துடித்துப் போய் தன்னால் முடிந்ததைச் செய்து,
என்னை மீட்டிருப்பார்.
நாங்கள் கவனம் சிதறியதற்கு வீட்டில் விசேஷம் இருந்தாலும்,அப்பா நம்மை விட்டுப் போக மாட்டார் என்னும் நம்பிக்கையும் ஒரு காரணம். அவ்வளவு பெரிய துணை அவர்.
மிகவும் நன்றிமா.
அவர் வழி நடக்கத்தான் நாங்களும் முயற்சிக்கிறோம்.
Please do not worry about the past. It was the will of God. Your Father’s soul will defenitely bless you from vaikuntam. Both your parents will be your gaurdian angel. will protect from all evil.
அன்பு ஜோதிஜி, நன்றாகக் கோபித்துக் கொள்ளலாம்.
மருத்துவர் கவனிக்க மறந்த காரணம் வயசானவர் தானே என்ற நினைப்பும் இருந்திருக்கணும். (73)
இல்லை,,, எப்பவும் எதையும் அடித்துக் கேட்கத் தெரியாத எங்கள் புத்தியாக இருக்கலாம்.
அப்பாவின் விதி முடிந்துவிட்டது என்று ஜோதிடர்கள் சொல்லலாம்.
எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளணும் என்கிற கீதை தத்துவமாக இருக்கலாம்.
இதெல்லாம் இப்போது நான் சொல்கிறேன்.
அந்தச் சரியான நேரத்தில் வாய்விட்டுக் கூட அலறாத எங்கள் சுபாவம்???? அதற்குப் பெயர் நாகரீகமா கையால் ஆகாத்தனமா.
நன்றி ஜோதிஜி நீங்கள் காட்டும் இந்தக் கோபம் எங்களுக்கு இருந்தும் ஒன்றும் சொல்லாமல் அப்பாவை வண்டியில் தூக்கிகொண்டு வந்துவிட்டோம்.
அன்பு மிரா ஜனனி. அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் இருவரும் எப்போதும்
எங்களைக் கைவிடமாட்டார்கள்.
மனம் நிறைந்து நன்றி சொல்கிறேன்.
திடுக்கிட்டது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஹீரோக்களைக் கண்டுகொள்ளும் ஆற்றல் இல்லையே. நாராயண ஐயங்கார் தம்பதி ஒரு திவ்ய தம்பதி. இந்த ‘கையாலாகாத்தனமும்’ அன்றாட நிகழ்ச்சிகளே. எனக்கு ஆஸ்பத்திரி அனுபவம் உண்டு. இதையெல்லாம் நேரில் பார்த்திருக்கிறேன். நான் அடிக்கடி ‘மனித நேயம்’ இழையில் எழுதுவதன் உருவகத்தை இங்கு பார்க்கிறேன், ரேவதி நரசிம்ஹன்.
இன்னாம்பூரான் ஐய்யாவிற்கு மிகவும் வணக்கம்.
தற்செயலாக உங்களது பின்னூட்டத்தைப் படித்தேன்.
உண்மையில் எங்கள் பெற்றோர் திவ்ய தம்பதிகள் தான்.வாயில்லாப் பூச்சிகளாக
நாங்கள் இருந்ததுதான் வருத்தம்.
தங்களது பதிவுகளைப் படிக்கவில்லையே என்ற உறுத்தல் வருகிறது.
அதைச் சரி செய்துவிடுகிறேன்.
அன்பு வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.