தமிழ்த்தேனீ

Tamil thenee“சரஸ்வதி, டெல்லிலெல்லாம் ரொம்பக் குளிராம். அதுவுமில்லாமே நாம் போயிட்டு வரப் போற பத்ரிநாத் இமய மலைக்குப் பக்கத்திலே இருக்கு. தாங்க முடியாத அளவுக்குக் குளிர் இருக்குமாம். எதுக்கும் ரெண்டு கம்பளி எடுத்துக்கோ” என்றேன் சரஸ்வதியிடம். பல காலமாக கோடித்து  இப்போதுதான் வேளை வந்திருக்கிறது. கடமைகளையெல்லாம் ஓரளவு முடித்தாயிற்று. பத்ரிநாத் சென்று தரிசித்து வரவேண்டும் என்னும் ஆசை நிறைவேறும் தருணம்.

மிக உற்சாகமாக, “சரி, நீங்களும் உங்களுக்கு வேண்டியதெல்லாம் எடுத்து வெச்சிக்கோங்க. அங்கே போனா எது கிடைக்கும், எது கிடைக்காதுன்னு தெரியாது” என்றாள்.

எனக்கு புரிந்தது, அவள் பூடகமாக எதைச் சொல்கிறாள் என்று.

எனக்கு, அவ்வப்போது சிகரெட் பிடிக்கும் வழக்கம் உண்டு. அதை அவ்வப்போது கண்டிக்கும் வழக்கம் அவளுக்கு. ‘ஜாக்கிரதை, இதையெல்லாம் நிறையப் பிடிக்காதீங்கோ. உடம்பு கெட்டுப் போயிடும்’ என்பாள். ஆனாலும் வாட்ச்மேனிடம் காசு கொடுத்து, வாங்கி வரச் சொல்லும் போது  கண்டுகொள்ள மாட்டாள்.

“சரி, டிக்கெட்டெல்லாம் பத்திரமா எடுத்து வெச்சிக்கோங்க. அப்புறம் டெல்லிலே போயி இறங்கி, ஒரு டாக்சி வெச்சிண்டு வெங்கடேஸ்வரா மந்திருக்கு போயிடலாம். அப்புறம் அவர் பொறுப்பு, அங்கேருந்து தேவநாதன், பத்ரிநாத்துக்குக் கூட்டிண்டு போயிடுவார்” என்றாள்.

“சரி சரி, இது வரைக்கும் பத்து வாட்டி சொல்லிட்டே. நானும் பத்திரமா டிக்கட்டெல்லாம் எடுத்து வெச்சிண்டுட்டேன்னு சொல்லியாச்சு” என்றேன்

ஆரம்பத்திலேருந்து இவளுக்கு இவளோட பயத்தையெல்லாம் என்மேலே ஏத்தி வெக்கெறதே வழக்கம்.

வாசலில் ஏதோ சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தேன்!

லக்‌ஷ்மி மன்னி காரிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தாள். என்னடா இது உலக அதிசயம்! என்று மனம் ஆச்சரியப்பட்டாலும் சுதாரித்துக்கொண்டு வாசலுக்கு ஒடினேன். ஆச்சு மன்னி கதவின் அருகே வந்து நிற்கிறாள். வாங்க என்று கூப்பிடவா? நீங்க எதுக்கு என் வீட்டுக்கு வந்தீங்க என்று கேட்பதா? என்று குழம்பி ஏதோ ஒன்று உள்ளுக்குள்ளே உணர்த்த, “வாங்கோ மன்னி”  என்று கதவைத் திறந்து விட்டேன்  அண்ணாவின் மூத்த மகனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.. “சித்தப்பா, பத்ரிக்கு போயிட்டு வரப் போறீங்களாமே. அம்மாவும் உங்களோட வராளாம், கூட்டிண்டு போயிட்டு  வரமுடியுமான்னு கேக்கச் சொன்னா” என்றான் அவன்.

சரஸ்வதியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு காத்திருந்தேன். ‘என்ன சொல்வாள் இவள்?’ அவள் வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன். திருமணமாகி வந்ததிலிருந்து, மன்னி படுத்திய பாடெல்லாம் தெரிந்தும், அடுத்தும் அவள் படுத்திய பாட்டுக்கெல்லாம் ஈடுகொடுத்து அமைதி காத்த சரஸ்வதியின் வாயிலிருந்து என்ன பதில் வரப் போகிறது என்று அவள் வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“வரச்சொல்லுங்கோ, கூட்டிண்டு போயிட்டு வரலாம், மன்னிக்கு மட்டும் வேற யாரு இருக்கா? நாமதானே செய்யணும்” என்றாள் சரஸ்வதி.
“பழசையெல்லாம் மறக்கறதுதான் நல்லது. நாம என்ன தலையிலேயா தூக்கிண்டு போய்ட்டு வரப் போறோம். கொஞ்சம் பத்திரமா   பாத்துக் கூட்டிண்டு போயிட்டு திரும்பக் கொண்டுவந்து விடணும், பாத்துபோம்… பகவான் இருக்கார்” என்றாள்.

இவ பாவம் இதுவரைக்கும் எனக்கு வாழ்க்கைப்பட்டு எங்கும் போனதில்லை. போகச் சந்தர்ப்பமே அமையவில்லை. திருமணம், அதன் பின்னர் வரும் வருமானத்தில் நடுத்தர வாழ்க்கை. அதிகப்படி ஏதும் செய்ய முடியாதபடி, அரைகுறை வருமானம். பிள்ளைகள் படிப்பு. பற்றாக்குறைக்கு நிமிர முடியாத அளவுக்குக் குருவியின் தலையில் பனங்காய் போல, அம்மாவின் புற்று நோய்க்கே மாதா மாதம் சக்திக்கு மீறிச் செலவு.

மன்னியிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டு, வேலை வேலை என்று எப்போதும் வேலை செய்து வரக்கூடாத நோய், கொடிய நோய் வந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள் அம்மா.

கணவனின் அம்மா என்றாலே அவளைக் கொடுமைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அவள் உன்னைக் கொடுமைப்படுத்துவாள் என்று மன்னிக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ. அம்மாவை எவ்வளவு துளைக்க வேண்டுமோ அவ்வளவு துளைத்துவிட்டாள். வார்த்தைச் சவுக்கடிகளாலும் குடும்பத்தை இரண்டாக்குவதிலும்.

மனத்தில் ஏற்பட்ட காயம், அம்மாவுக்குப் புற்று நோயாக உருவெடுத்து, செய்யாத வைத்தியமில்லை, வேண்டாத தெய்வமில்லை. டாக்டர் ராஜலட்சுமி புற்று நோய் மருத்துவமனையின் பிரதான வைத்தியர் தீர்மானமாகச் சொல்லிவிட்டார். ‘இனி வைத்தியம் செய்து உபயோகமில்லை. இவ்வளவு நாட்கள் உங்கள் சம்பளத்தை வைத்துக்கொண்டு எப்படி செய்தீர்களோ? உங்கள் பாசத்தை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இனி அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது’ என்றார்.

ஆனால் இறைவன் எங்களுக்குப் பூலோக நரகத்தை என் அம்மாவின் வியாதி மூலமாகப் புரியவைத்தான். ஆமாம் அவதிப்பட்டுக்கொண்டே அம்மா  எட்டு வருடம் உயிரோடிருந்தாள். என்னதான் முடிந்த வரை வைத்தியம் பார்த்தாலும் அம்மாவின் வலியை வாங்கிக்கொள்ள முடியவில்லையே.  அம்மாவின் மேல் உயிரையே வைத்திருந்த எங்களையே ‘இறைவா, அம்மாவை எடுத்துக்கொண்டு விடு, அவள் படும் பாட்டை சகிக்க எங்களால் முடியவில்லை’ என்று வேண்ட வைத்தான் இறைவன். அது, கொடுமையின் உச்சகட்டம். இந்த நிலை யாருக்குமே வரக் கூடாது என்று இருவருமே இறைவனை மனமார வேண்டினோம்.

பூலோக நரகத்தின் வலையில் மாட்டிக்கொண்டு மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் விதியின் கரங்களுக்கு மறுப்புச் சொல்ல எண்ணி, கையைக் காலை ஆட்டி, இன்னும் வகையாக வலையில் சிக்கிக்கொண்டு, எப்படி மீள்வது என்றே தெரியாமல், விதி என்னும் சிலந்தி எப்போது  வந்துவிடுமோ என்னும் பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் நிலை முப்பது வருடமாக.

***************************************************

முதல் நாள் இரவு நினைவே இல்லாமல் படுத்திருந்த அம்மாவிடம் உட்கார்ந்து  அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ தோன்றியது  என்னைப் பெற்றெடுத்த தெய்வத்திடம் அமுதம் குடித்து வளர்ந்த நான், அந்தக் கனக முலையையும், நான் குடியிருந்த கோயிலான அவள் வயிற்றையும் ஒரு முறை இதமாக தடவி விட்டு, இரு கையையும் கூப்பிக்கொண்டு, ‘என்னை பெற்ற தாயே, உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். என்னைப் பெற்று இந்த பூமிக்குக் கொண்டு வந்த உனக்கு எப்படி என் நன்றிக் கடனைத் தீர்ப்பேன்’ என்று எண்ணி, கண்ணில் நீர் வழிய, மனதுக்குள் பிரார்த்தனை செய்துகொண்டே சற்று நேரம் இருந்தேன். பல நாள்களாக நினைவில்லாமல் இருந்த அந்த உடலில் கூட உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு சலனம் ஓடுவதை உடல் அசையாவிட்டாலும் உணர்வுகள் அசைவதை என் மனத்தால் உணர முடிந்தது.

‘அம்மா இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கு மகனாகவே பிறக்கவேண்டும். அதற்கு அருள் செய்வாய் தாயே’ என்று வேண்டிக்கொண்டேன். ஆமாம் அப்பா இறந்து போகும்போது எனக்கு பதினோரு வயது. அன்றிலிருந்து இன்று வரை என்னை ஆளாக்க, இவள் பட்ட கஷ்டம், கண்முன்னால் நான் கண்ட இவள் உழைப்பு, நேர்மை, மனோதிடம், அப்பப்பா. இவள் இறந்து, தந்தை உயிரோடிருந்தால் கூட நடந்திருக்குமா என்பது சந்தேகமே!

தூக்கம் கண்களைச் சுழற்றியது. அப்படியே கட்டிலின் கீழே படுத்துக் கண்ணயர்ந்தேன். நல்ல தூக்கத்தில் என் மனைவி என்னை எழுப்பினாள். என்ன என்றேன். கண்களைக் கசக்கியபடி, வாயில் முந்தானையைப் பொத்தியபடி “அம்மா..” என்றாள்.

திடுக்கிட்டு எழுந்து அம்மாவைப் பார்த்தேன். அவள் நிச்சலனமாக இறந்து போயிருந்தாள். இத்துணை நாட்களாக, வலியினால் ஏற்படும் முகச் சுழிப்பைக் கண்டிருக்கிறேனே, தவிர புன்னகையைக் கண்டதில்லை. அவள் இதழ்க் கடையோரம் இப்போது நிம்மதியான புன்னகை.

நான் மானசீகமாகச் சொன்னது, உனக்குப் புரிந்ததா அம்மா. அதுதான் புன்னகைக்கிறாயா? உண்மையாகவே என்னை விட்டுப் போய்விட்டாயா? “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்கிற வரிகள், தானாய் என் மனத்துக்குள் ஓடின. அடக்க மாட்டாதவனாய், தாயின் மேல் விழுந்து குமுறிக் குமுறி அழுதேன். ‘இனி நான்தான் ஆதாரம் உனக்கு கவலைப்படாதே’ என்பது போல், என்னை ஆதரவுடன் எழுப்பி, தன் தலைப்பினால் என் கண்ணையும் முகத்தையும் துடைத்துவிட்டு, தன் மேலே ஆதரவுடன் தாங்கிக்கொண்டாள் என் மனைவி.

ஆயிற்று, அக்னி தேவனின் அசுரப் பசிக்கு அன்னையை கொடுத்துவிட்டு, அடுத்தடுத்து செய்யவேண்டிய காரியங்களைச் செய்து, அன்னையைக் கரையேற்றியாயிற்று. சாதாரண மனிதன் தானே நான். நமக்கெல்லாம் மறதி ஒரு வரப்ப்ரசாதம். வழக்கம் போல் இயந்திர கதியாய் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியாயிற்று. அடுத்தடுத்து அம்மாவின் ஆசியுடன் முதல் பெண் கல்யாணம். அடுத்த மகன் கல்யாணம், அடுத்து கடைக்குட்டியின் கல்யாணம் எல்லாம் முடிந்து, ஓரளவு கடமைகளை முடித்தாயிற்று என்று இருக்கும் நிலையில் ஒரு தைரியம். வெகுநாட்களாக ஆசைப்பட்டுக்கொண்டிருந்த பத்ரிநாத் பயணம். அதற்கு வேண்டிய பணமும் கட்டியாயிற்று. இன்னும் இரண்டு நாட்களில் கிளம்பவேண்டும்.

*******************************************************************

அப்பா இறந்து, குடும்பப் பொறுப்பு, அண்ணாவின் தலையில் வந்து, சில காலத்துக்குள் அண்ணாவின் திருமணம் முடிந்து, வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து, ஆறே மாதத்துக்குள் அம்மாவைப் பாடாய்ப் படுத்தி அழவிட்டு, வேலைக்காரியைப் போல நடத்தி, மனிதர்களிடம் சொன்னால் வம்பு வரும் என்று கோயிலில் போய் உட்கார்ந்து, அழுது குமுறி, தன் சோகங்களை அவனிடம் கொட்டித் தீர்த்துவிட்டு நிராதரவான நிலையை மனத்தில் கொண்டு, என்னையும் என் தம்பியையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய கடுமையான சூழ்நிலையில் எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக்கொண்டு வேலைக்காரியாய் வலம் வந்துகொண்டிருந்த அம்மா, நினைவுக்கு வந்தாள். ஒரு பெண்ணால் இப்படிக்கூட ராட்சசி போலச் செயல்பட முடியுமா  என்று அனைவருமே வியக்கும் வண்ணம் அம்மாவையும் என்னையும் என் தம்பியையும் வேலை வாங்கி, பட்டினி போட்டு, அப்படியும் தன் கொடுமையின் உச்ச கட்டமாக, அண்ணாவை விட்டே எங்களை வீட்டைவிட்டுத் துரத்திய மன்னி.

அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. மாலையில் வீட்டுக்கு வந்த அண்ணாவிடம், ‘நாளையிலிருந்து இந்த வீட்டில் நான் இருக்க வேண்டுமென்றால் உங்கள் அம்மாவும் தம்பிகளும் இங்கே இருக்கக் கூடாது. அப்பிடி அவங்கதான் வேணும்னா நான் எங்கேயாவது ஓடிப் போயிடுவேன். உங்களுக்குதான் மானம் போகும். என்னை நீங்க வீட்டை விட்டுத் துரத்திட்டீங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்வேன்’ என்று ப்ரகடனம் செய்தாள் மன்னி.

ஒரு பரிதாபமான சூழ்நிலைக் கைதியான ஆண்மகனை அன்றுதான் வாழ்வில் கண்டேன், ‘வேணாம் லக்‌ஷ்மி. என் அம்மாவையும் என் தம்பிகளையும் என்னை விட்டுப் பிரிச்சிடாதே’ என்று குடும்ப மானம் போகக் கூடாதே என்று அஞ்சி, ரகசியமாகக் கதறிய அண்ணனிடம்.

‘நான் சொன்னதைச் செஞ்சிட்டு, என் வீட்டுக்கு வந்து விவரம் சொல்லுங்க. அதுக்கப்புறம் நான் இங்கே திரும்பி வரேன்’ என்றபடி, துணிமணிகளை எடுத்துகொண்டு, ஒரு வயதுக் குழந்தையையும் எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே போனாள் லட்சுமி மன்னி.

அம்மா, அண்ணாவைப் பார்த்து, ‘டேய் எனக்கு உன்னோட வாழ்க்கைதான் முக்கியம். நாங்க வெளியிலே போறாம்’ என்று வேறு வழியில்லாமல், வீட்டை விட்டு வெளியே வந்து, நடுத்தெருவில் நின்று, எங்கே போவது என்றே தெரியாமல் விழித்துக்கொண்டு நின்ற அம்மாவை, யதேச்சையாக விஷயம் கேள்விப்பட்டு, ஆதரவுக் கரம் நீட்டி, அரவணைத்து, எனக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்து, பத்து ரூபாய்க்கு ஒரு வீட்டையும் வாடகைக்கு ஏற்பாடு செய்த உறவுக்காரப் பெண்மணி.

அதன் பிறகு சுய உழைப்பால் அணு அணுவாய் வளர்ந்து அந்த ஆலையில் வேலைக்கு சேர்ந்து இரண்டு நாட்கள் வேலை செய்த பின் கைகளைப் பார்த்தேன். ஆங்காங்கே கிழிந்து, உள்ளங்கை ரணகளமாக இருந்தது. வீட்டுக்குப் போய் அம்மாவிடம், ‘என்னால் முடியாதும்மா. நாளையிலேருந்து வேலைக்குப் போகமாட்டேன்’ என்றேன். அம்மா என்னைத் தீர்க்கமாகப் பார்த்தபடி, ‘இல்லே நீ வேலைக்கு போற’ என்றாள்.

உள்ளங்கையும் மனதும் பழகிவிட்டது இந்த வாழ்க்கைக்கு. ‘நம்ம உடம்பும் மனசும் நாய் மாதிரி எப்பிடிப் பழக்கறோமோ அப்பிடி இருக்கும்’ என்று அம்மா சொன்னது நியாபகத்துக்கு வந்தது. இந்த நாய்க்கும் உடம்பும் மனசும் பழகியது. ஒரு தைரியம் வந்தது. இன்று நிமிர்ந்து நிற்பதற்கு அன்னிக்கு அம்மா சொன்ன வார்த்தைதான் வேதமாக, அடி நாதமாகச் செயல்பட்டிருக்கிறது.

ஆயிற்று, அண்ணாவும் லட்சுமி மன்னியிடம் தாக்குப் பிடிக்காமல் சீக்கிரமே போய்ச் சேர்ந்தார். மனிதர்களுக்குக் கைவிட்டுப் போன பின்னால்தானே  அருமை புரிகிறது. மன்னியும் உணர்ந்தாள்.

ஒரு நாள் மன்னியிடமிருந்து போன்.

‘என்ன கண்ணா, ரொம்ப நாளாச்சு. சரஸ்வதியையும் கூட்டிண்டு வந்துட்டு போயேன்’ என்றாள்.

ஆச்சரியம்! வீட்டுக்குப் போனாலே, ‘உன்னை யாரு வரச்சொன்னா?’ என்பாள் மன்னி. அந்த மன்னி இப்போது எப்படி மாறிவிட்டாள். தனிமை  மனிதரைத் திருத்திவிடுமோ! ‘ஏன் நீங்க ரெண்டு பேரும் வரவே மாட்டேங்கறீங்க? ஒரு நாள் வந்துட்டுப் போங்களேன்’ என்கிறாள்.

அந்த மன்னி எங்களோடு பத்ரிநாத் வருகிறாளாம். மன்னியிடமிருந்து போன். “என்ன கண்ணா, நானும் உங்களோடு வரட்டுமா? கூட்டிண்டு போக முடியுமா?” என்றாள். மன்னியும் அம்மாவுக்குச் சமம்தான் அப்பிடீன்னு அம்மாவோட குரல் காதுலே கேட்டது. “வாங்கோ மன்னி, நாங்க கூட்டிண்டு போயிட்டு வரோம், ஒண்ணும் கஷ்டமில்லே” என்றேன் நான்.

ஆயிற்று, பத்ரிநாத்  போகும் வழியிலெல்லாம், சரஸ்வதியின் கையைப் பிடித்தபடி வந்துகொண்டிருக்கிறாள் மன்னி.

வயசாச்சு நடக்க முடியலை, மூச்சு வாங்கறது மன்னிக்கு. நான் சொன்னேன் “நிதானமா வாங்கோ. அவசரமில்லே” என்று ஒரு பக்கம் நானும் இன்னொரு பக்கம் சரஸ்வதியும் கையைப் பிடிச்சு அழைச்சிண்டு போனோம்.

கங்கைக் கரை ஓரம். கங்கை பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.

“கண்ணா, நானும் கங்கையில் குளிக்கணும்” என்றாள் மன்னி.

“நீங்க இங்கே கரையோரமா உக்காருங்கோ. நானும் உங்க பிள்ளை மாதிரிதானே. நான் சொம்பாலே மொண்டு கொட்றேன், குளிங்கோ” என்று சொல்லிவிட்டு, சொம்பால் ககையின் புனித நீரால் மன்னியைக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறேன்.
மனதுக்குள் எங்க அம்மாவைக் கங்கைக்குக் கூட்டிண்டு வர முடியலை. அதுக்காகத்தான் பகவான் எனக்கு இப்பிடி ஒரு கொடுப்பினையைக் கொடுத்தானோ என்னும் எண்ணம். அம்மாவைக் குளிப்பாட்டுவது போலவே இதமாகக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேலே ஆணென்ன, பெண்ணென்ன. எல்லோருமே அர்த்தநாரிகள்தான் அப்பிடீன்னு மனசிலே தோன்றிக்கொண்டிருந்தது.

ஆயிற்று, கங்கையில் குளித்துவிட்டு, மன்னிக்கு சரஸ்வதி உடம்பு துடைத்துக்கொள்ளவும் புடவை உடுத்திக்கொள்ளவும் உதவிக்கொண்டிருந்தாள்.  மூவரும் கங்கைக் கரையில் சற்றே உட்கார்ந்தோம். மன்னி கங்கையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.

“ஏன் மன்னி, என்ன ஆச்சு? ஏன் அழறீங்க?” என்றேன்.

“அழலை. அண்ணாவை நினைச்சிண்டேன்” என்றாள்.
என்னவோ தெரியலை திடீர்ன்னு என் கையைப் பிடிச்சிண்டு, “டேய் நீயும் சரஸ்வதியும் நன்னா இருப்பேள். உங்களுக்கு ஒரு குறையும் வராது” என்றாள் மன்னி.

“நாம உடுத்திண்டு இருக்கற வஸ்திரத்தை கங்கையிலே  விட்டுட்டா நாம பண்ண பாவமெல்லாம் அந்த வஸ்திரத்தோட போயிடும்னு சொல்லுவா”  அப்பிடீன்னு சொல்லிண்டே ஒரு புடவையைக் கங்கையில் விட்டாள் மன்னி. கங்கையின் பிரவாகத்தில் புடவையும் சுழித்துக்கொண்டு காணாமல் போனது. அதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் மன்னி லக்‌ஷ்மி.

“சரி மன்னி, நாம இங்கே பத்ரிநாத் கோயிலுக்குப் போயிட்டு அப்பிடியே மானான்னு ஒரு இடம் இருக்கு. அங்கே சரஸ்வதி நதியோட உற்பத்தி ஸ்தானம் இருக்கு. அங்கேயும் போயி பாக்கலாம். ஆனா ஒண்ணு, அங்கே கொஞ்சம் உயரமா மலை ஏறணும். சரஸ்வதி நதியை வேறெங்குமே பாக்க முடியாது. அவ பூமிக்கு அடியிலேயே ரொம்ப ஆழமா பிரயாணம் பண்ணிண்டு இருக்கா” என்றேன்.

“வேண்டாம். என்னாலே இந்த உயரத்துக்கு மேலே வரமுடியும்னு தோணலே. அதுவும் நீங்க ரெண்டுபேரும் கையைப் பிடிச்சுக் கூட்டிண்டு வந்ததாலே முடிஞ்சிது. நான் சரஸ்வதியை இதோ இங்கேயே பாத்துக்கறேன். புரியலையா? இவளைத்தான் சொன்னேன். உன் பொண்டாட்டி சரஸ்வதியைத்தான் சொன்னேன்” என்றாள், சரஸ்வதியின் கையையும் என் கையையும் பிடித்தபடி.

மன்னியின் கண்களில் இருந்து வழிந்து பெருகி, கங்கையும் யமுனையும் ஸரஸ்வதியும் சங்கமித்து, மூலஸ்தானத்திலிருந்து பொங்கி வழிவது போல்  கடைக்கண்ணால் என்னையே பார்த்துக்கொண்டு, பிரவாகமா பரவசமாய் ஓடிக்கொண்டிருந்தாள், ஆகாயத்திலிருந்து புறப்பட்டு பூமியின் பாவங்களையெல்லாம் நீக்கும் கங்கை.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வேருக்கு நீர்

  1. அந்தக்காலத்திலே, ‘இதுக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும்’ என்பார்கள். அந்த ரகத்தை சேர்ந்தது, இந்த நிகழ்வு. இது போன்றவற்றை நான் பார்த்திருக்கிறேன். பங்கு ஏற்றுக்கொண்டு இருக்கிறேன்.

    அழகாக, உண்மையை, கதை யாக படைத்திருக்கிறார்,ஆசிரியர்.

  2. மூத்தமகன் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதையும் பார்த்திருக்கிறேன். மூத்தவனே எல்லாவற்றையும் சுமைதாங்கி மாதிரிச் சுமக்கும் நபர்களையும் கண்டிருக்கிறேன். அடுத்த குழந்தைகளுக்காக மூத்த மகன் திருமணம் செய்து கொள்வதையும், அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்னும் தாயையும் கண்டிருக்கிறேன்.. இங்கே இம்மாதிரி! உலகம் பலவிதம்! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம்!

    மொத்தத்தில் அனைவரிடமும் ஒரு ராமாயணமே உள்ளது.

  3. EXECALLANT NARRATION, SUPERB CONVERSATION, TOUCHING……ALL THIS WOULD NOT FILL UP THE INNER FEELINGS AROUSED WITHIN ME…Thank you very much for the nice informations….Wish you good luck. i do remeber the situations once you said about your mother. The poetry you have writted on mother Day….is also Great…..You are Equal to Yourself.
    Do post More…
    namaskaram
    jayashree shankar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.