தீராத விளையாட்டுப்பிள்ளை
சாந்தி மாரியப்பன்
சிறைப்படும்
ஒவ்வொரு தருணங்களிலும்
குதித்துக் கூத்தாடுகிறது காற்று
குழந்தைகள் கைகளில்
பலூன்களாய்..
ஊழிக்கூத்தாடியதும்
ஊரையே புரட்டிப்போட்டதும்
வேறெதுவோ என்று மறுதலித்து விட்டு
கட்டிச்சமர்த்தாய்ப்
புல்லாங்குழற் சிறுவன் பின்
ஆட்டுக்குட்டியென வந்த தென்றல்
பரிந்தூட்டும் தாயென
வியர்த்த முகங்கள் துடைத்தபின்
கலைத்து விளையாடுகிறது மேகங்களை
தீராத விளையாட்டுப்பிள்ளையாய்..
ஆஹா.. அருமை..
அது சரி, “குழல்ச்சிறுவன்” புணர்ச்சியில் ச் வருமா?
வராதுதான்.. குழற்சிறுவனாக்குவதற்குள் அவசரப்பட்டு வந்து விட்டான். திருத்தி விட்டேன். சுட்டியமைக்கு நன்றி.
காற்றைப் பற்றி அழகான கவிதை. ரசிக்கவும் வைக்கிறது. சிந்திக்கவும் வைக்கின்றது. பொதுவாகவே கவிதை என்றால் மென்மைதான் பிரதானம். அந்த மென்மை உங்கள் கவிதையில இழையோடித் தெரிகின்றது. “ஊழிக்கூத்து”…“ஊரையே புரட்டிப் போட்டு” என்ற அதிரடி வார்த்தைகள் கூட அதிர்வின்றித் தெரிவது தங்களின் திறமை வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.
முகில் தினகரன்.
சுகமான கவிதை 🙂