பதைபதைக்கும் நெஞ்சம்!

1

 

பவள சங்கரி

தலையங்கம்

70 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி மாஹி மீட்புக் குழுவினரின் 85  மணி நேர போராட்டத்திற்குப் பிறகும் உயிருடன் மீட்கப்படாமல் போனது பெரும் வேதனைக்குரிய விசயம். ஹரியானா மாநிலம் குர்காவ்ன் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த பால் மணம் மாறாத 4 வயது சிறுமி மஹி சென்ற புதன் கிழமையன்று இரவு 11 மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது தவறி அங்கு இருந்த 70 அடி ஆழ்துளை கிணற்றின் குறுகிய குழிக்குள் விழுந்து அலறியிருக்கிறாள். கிட்டத்தட்ட 15 நிமிடமாக உள்ளிருந்து கதறியிருக்கிறாள் குழந்தை. அதன்பிறகே கிராமத்தினர் ஓடி வந்து பார்த்துவிட்டு, தகவல் தெரிவித்து அதற்குப் பிறகு இரவு 12.30 மணிக்கு மீட்புக் குழுவினர் வந்து சேர்ந்துள்ளனர்.

4 வது பிறந்தநாள் அதுவுமாக குழந்தை மாஹி போர்வெல் கிணற்றிற்காக தோண்டப்பட்ட ஆழ்துளையில் தவறுதலாக விழுந்து விட்டது அறிந்து கிராமமே கூடி வேதனையில் ஆழ்ந்திருக்கிறது. தீயணைப்புப் படையினர், இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு, அக்குழந்தையை காப்பாற்ற இறுதி வரை போராடியுள்ளனர். இந்த ஆழ்துளையின் அருகிலேயே மற்றொரு பெரிய சுரங்கமும் அமைத்து குழந்தையை நெருங்க முயற்சித்தாலும், சுற்றிலும் பாறைகள் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ள்து. கிணற்றுக்குள் ஆக்சிஜன் சப்ளையும் கொடுத்திருக்கின்றனர். குழந்தையின் நிலையை கண்காணிக்கும் பொருட்டு காமிராவும் பொருத்தப்பட்டது. கிணற்றுக்குள் கயிரைப் போட்டு குழந்தை பிடித்துக் கொண்டு மேலே வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ஆயினும் குழந்தை அதற்கு தயாராக இல்லை.

85 மணி நேரம் மீட்புக் குழுவினர் போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியாதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குழந்தையின் தாய் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டதே குழந்தையின் இறப்பின் காரணம் என்று கூறினாலும், மீட்புக் குழுவினர் தன்னலமற்று சேவையில் ஈடுபட்டிருந்தாலும், கால தாமதமானதற்கு பல காரணங்களும் ஆராயப்பட்டாலும் இழந்தது ஒரு உயிர். அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் வாடிக்கையாகவும் போய்விட்டது..

இன்றைய சூழலில் எந்த ஒரு செயலும் தொலைநோக்கில் சிந்தித்து செய்ல்படுவது அரிதாக இருக்கிறது. பாதாளச் சாக்கடைகளும் அங்கங்கு தோண்டப்பட்டு அதனை சரியான அளவுகளில் கட்டப்படாமல், அடிக்கடி செப்பனிடப்பட்டு அதற்குப் பிறகு சரியாக சாலையும் போடப்படாமல் தெருவெங்கும் வருடக்கணக்காக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பது ஒரு புறம் என்றால், எந்தவித கட்டுப்பாடும் இன்றி மக்கள் அவரவர் தேவைக்கும் வசதிக்கும் ஏற்றவாறு அவர்களுடைய சொந்த நிலங்கள் என்ற உரிமையில் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் தோண்டலாம் என்று இருப்பதால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாமல் போகிறது. 400 அடிக்கும் மேலாக அதிக ஆழம் தோண்டுவதால் ஏற்கனவே 250 அடி ஆழம் தோண்டியிருப்பவர்களுக்கு நீர்நிலை குறைந்து போகவும் வாய்ப்பாகி விடுகிறது. அரசாங்கம் இத்ற்கெல்லாம் எந்த வரைமுறையும் இல்லாமல் கண்டு கொள்ளாமல் விட்டு வைத்திருப்பது பிற்காலத்தில் பெரும் பிரச்சனையாகலாம்.

அக்கம் பக்கத்தில் குழந்தைகள் விளையாடக்கூடிய இடம் என்ற சிந்தனையோடு இந்த ஆழ்துளைக் கிணறு தோண்டியவர்கள் சரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தாலோ அன்றி துள்ளி விளையாடும் பருவத்தில் கட்டவிழ்ந்து ஓடும் கன்று போல திரியும் குழந்தையை பெற்றோர் கவனமுடன் கவனித்திருந்தாலோ இப்படி ஒரு சம்பவம் நடந்திராமல் தவிர்த்திருக்கலாம். இந்தத் தாய்க்கு ஆறுதல் பெற வழியில்லாததே பெரும் தண்டனை. ஆனால் அந்த ஆழ்துளை தோண்டி அதை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் போட்டு வைத்த நில உரிமையாளர் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அடிக்கொரு முறை இது போன்று அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்க இயலும். மாஹிக்கு நடந்த அவலம் இனி எந்த குழந்தைக்கும் நடக்கக் கூடாது என்பதே நம் பிரார்த்தனைகள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பதைபதைக்கும் நெஞ்சம்!

  1. எல்லாவித அசம்பாவித சம்பவங்களுக்கும் நாமே  காரணமாக இருந்துவிட்டு, கடைசியில் வேறுவழியில்லாமல் அரசாங்கத்தின் மீது பழிபோட்டுவிடுகிறோம்.  

    தனிமனித கவனமும், விழிப்புணர்வும், சமூக நலம் என்ற உயர்ந்த எண்ணமும் நம்முள் வந்து விட்டால், இது போன்ற துயர சம்பவங்களைத் தவிர்ந்து விடலாம்.

    அவ்வப்போது ஆழ்துணைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ இளம்பிஞ்சுகளின் உயிர் பரிபோவதும்,

    ஒன்றும் தெரியாத அப்பாவிகள் வஞ்சகர்களின் வலையில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வதையும்,

    முகநூலின் (Facebook) மூலம், முகம் தெரியாத நபருடன் அப்பாவி இளம்பெண்கள் ஏமாந்து விடுவதையும்,

    இது வரை யாரும் தடுக்கமுடியவில்லை என்பதே உண்மை.

    பெருவை பார்த்தசாரதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *