வாழ்ந்து காட்டுதல்
தி.ந.இளங்கோவன்
உம் வேலையென் றெண்ணி யெனக்கு
சுமையேற்றியே யதில் சுகம் கண்டாய்,
சொல்லித்தர மறந்தாய், சில நேரம் மறுத்தாய்.
சுயம்புவாய்க் கற்றேன்,
சூட்சுமங்களனைத்தையும்…
கொடுத்த பணியில்
நிலுவை வைத்தது நினைவிலேயே யில்லை…
பாராட்டென்ற வார்த்தையே யுமக்கு
பழக்கமில்லா தொன் றென்பதை
அனுபவத்தில் அனுதினமும்
எதிர்பார்த்து கண்டுணர்ந்தேன்.
ஆனாலும் அரிதிலும் அரிதாய்
இழைத்துவிட்ட சின்னஞ்சிறு
தவறொன்றை ஊதிப் பெரிதாக்கினாய்..
பிறர்முன் என்னை சிறிதாக்கினாய்.
இருந்த போதும் உமக்குப் பாதம் பணிகிறேன்…
ஒரு அதிகாரியாய் எப்படி இருக்கக் கூடாதென
உதாரண புருஷனாய் நித்தனித்தம்
வாழ்ந்தெனக்கு காட்டுவதால்…
படத்திற்கு நன்றி :
அய்யா
ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியாய் இருக்கும் என்னை தங்கள் கவிதை சற்று யோசிக்க வைத்தது. ஒரு வேளை நாமும் இப்படித்தான் இருக்கின்றோமோ?…என்று, ஒரு வேளை இருந்தால் மாற்றிக் கொள்வேன்.
முகில் தினகரன்
அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் அனைவரும், ஒரு பொது மொழியைச் சொல்வதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். அடிக்கடி இந்த வார்த்தைகள் எல்லோரது வாயிலிருந்தும் உதிரும். சில சமயம் வேலைப் பளு காரணமாக தன்னைத் தானே நொந்து கொள்பவர்களும் உண்டு. இதைத் தனது அருமையான கவிதை வரியில் வடித்திருப்பது என்னையும் கவர்ந்தது. அந்த பொதுவான வார்த்தை தான் என்ன?……
“வேலை செய்பவனுக்கு வேலை கொடு,
வேலை செய்யாதவருக்கு OT கொடு”
பெருவை பார்த்தசாரதி.
பின்னூட்டமிட்ட திரு முகில் தினகரன் மற்றும் திரு பார்த்தசாரதி ஆகியோருக்கு நன்றி.
சபாஷ் என்ற வார்த்தைக்கான தகுதியிருந்தும் மறுக்கவும்/மறக்கவும் செய்கிற விஷயம் வீடு, அலுவலகம், பள்ளி எங்குமே நடக்குது… பாடமாய் ஏற்று வாழ்ந்தால் சந்தோஷம் காத்திருக்குது… அருமை.. வாழ்த்துக்கள்
கறாரான மேலதிகாரியிடம் மாட்டிக்கொண்ட ஒருவரின் உள்ளக்குமுறலை அருமையாக வடித்திருக்கிறீர்கள் இளங்கோ.
கவிதை அருமை.
பாடமாய் ஏற்று வாழ்ந்தால் சந்தோஷம் காத்திருக்குது… அருமை.. வாழ்த்துக்கள்
அனுபவமே பாடம்.. அதைக்கவிதையாக்கிவிட்டீர்கள்.நல்ல கவிதை பாராட்டுக்கள்
பின்னூட்டமிட்டு வாழ்த்திய புவனா ஞானசெல்வம், அமைதிச்சாரல், உமாமோகன் மற்றும் ஷைலஜா அனைவருக்கும் நன்றி!
வாவ்! எனக் கூவினேன்!
“அதி” காரிகள் பற்றிய இக்கவிதையை வாசித்த நேரம்!
அதி காலை மணி நாலு இருபது!!
சொற்சுவை பொருட்சுவை சமயச் சுவை கூட்டி
சுந்தரத் தமிழில் நீர் வார்த்த இக்கவிதைக்கு
என் நா தன்னிச்சையாய் ஒலித்த காலை!
என் மகிழ்வொலி கேட்ட மாத்திரம்
என் இல்லப் பால்கனியின் அகம் வந்து
என் வாவ் நயனத்துக்கு நாட்டியச் சிறகிசை
செம்பறவையின் அதி காலை அங்கீகாரம்!
தேவ கானமாய்!!
உம் கவிதையின் குரல் எனதே போல்!
ஒவ்வொரு சொல்லும் சத்தியம்!
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
அற்புதம்! அற்புதம்! அற்புதம்!!
இக்கவி பெரும் சிறப்பு! என
செம்புள்ளின் ஆர்ப்பரிப்பு
விடியல் காலை செம்மொழி!
செம்மார்ந்த வேத வாழ்த்து!!
புலராப் பொழுதில் என் இல்லம் வந்து உம் கவிதைக்கு இங்கிருத்து வாழ்த்தொலித்த செம்பறவை காணுக:
http://3.bp.blogspot.com/_IAFuC7Qr8ew/TIaYJYtBPBI/AAAAAAAAAXY/P6PNnwlvg9s/s1600/red+bird.jpg
வாழ்த்துக்களை வள்ளலாய் வாரி வழங்கியிருக்கிறீர்கள், வாழ்த்தொலித்த பறவையுடன். மகிழ்ச்சியில் சிறகடிக்க வேறெண்ண வேண்டுமெனக்கு? நன்றி.