‘குடிபாடுவா’ – மராட்டியப் புத்தாண்டு விழா

0

விசாலம்

மும்பையில் ஒரு தடவை மராட்டியர் புத்தாண்டில் நான் டோம்பிவிலி என்ற இடத்தில் பாகசாலா மைதானத்திற்குப் போயிருந்தேன். “குடிபாடுவா ” என்ற புத்தாண்டு விழா அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

gudipadwa

நம் தமிழ்நாட்டில் சில பிரிவினரிடத்தில் எதாவது விசேஷம் வந்தால் பெண்மணிகள் ஒன்பது கெஜம் புடவை கட்டிக்கொண்டு பூஜை செய்யும் கலாச்சாரம் இருந்திருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் அவற்றைக் காண முடிவதில்லை. அப்படியே அவர்கள் அணிந்தாலும் பல்லைக் கடித்துக்கொண்டு எப்போது அதிலிருந்து மாறுவோம் என்ற பாவனையுடன் இருந்து, உடனே அவிழ்த்து, சல்வாரில் புகுந்துவிடுகிறார்கள். ஆனால்

sridevi madisarமஹாராஷ்டிரிய பெண்கள் தங்கள் கலாசாரத்தை மிகப் பெருமையுடன் பின்பற்றுகிறார்கள். நான் போன அந்த இடத்தில் முக்கால்வாசிப் பெண்கள், ஒன்பது கெஜம் புடவையை அவர்கள் பாணியில் கட்டியிருந்தார்கள். எனக்கு “மாதுரி தீக்ஷித்” ஒரு ஹிந்தி சினிமாவில் நடித்த  ஞாபகம்தான் வந்தது. அவர்கள் மூக்கிலும் முத்தால் ஆன “நத்து” அலங்கரித்தன.

பெண்கள் சிலர் சைக்கிளிலும் சிலர் பைக்கிலும் மெள்ள ஓட்டியபடியே வர, அதன் பின்னால் “லேசிம்” கைகளில் ஏந்தி, “ஜல் ஜல்” என்ற சலங்கைச் சத்தம் போல் மிக அழகான ஒலி வர, செவிக்கு மிக ஆனந்தமாக இருந்தது. ஒரே மாதிரி அவர்கள் கால்கள் ஜதி போட, டோல் சத்தத்துடன் “லேஜிம்” என்ற பொருளை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் மேலேயும் அசைய வைத்துக் குதித்தபடி ஆடியது, மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று, அவர்கள் முகம் பிரகாசிக்க, பச்சைக் கலரில் பிறைச்சந்திரன் போல் நெற்றியில் குங்குமத்தின் கீழே இடப்பட்டு அழகை மேலும் கூட்டின.

அதன் பின் பழைய காலத்தில் ஓடும் மாட்டு வண்டிகள் மிகுந்த அலங்காரத்துடன் பவனி வர, அதை இழுத்துவரும் காளைகளும் சிங்காரித்தபடி நடையைப் போட்டன. அதன் கழுத்தில் தொங்கிய குண்டு மணிகளின் ஒலியோ, ஒவ்வொரு நடைக்கும் சரியான “ரிதம்” கொடுத்து, தாள வாத்தியக் கச்சேரி போன்ற பிரமை ஏற்பட்டது.

சத்ரபதி சிவாஜி மஹராஜ் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று, இந்த “குடிபாடுவா” தினத்தன்று திரும்பி வந்தாராம். பிரும்மா இன்றுதான் எல்லா லோகங்களையும் சிருஷ்டித்தாராம். இதனால்தான் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பால்கனியிலும் சன்னலிலும் “குடி” {gudi} என்ற ஒரு அடையாளம் அமைக்கப்படுகிறது. பிரும்மாவின் கொடி அது.

ஒரு மூங்கில் கம்பை எடுத்து, அதைச் சிவப்பு, பச்சை வர்ணப் பட்டுத் துணியால் மூடி, அதை ஒரு சொம்பால் மூடிவிடுகிறார்கள். அந்தப் பாத்திரம் வெள்ளியாகவோ, செம்பாகவோ இருக்க வேண்டும். பின் அந்தக் கம்பில், ஸ்வஸ்திக் சின்னத்தை எழுதுகிறார்கள். பின் அதன் மேல் பெரிய மாலையும் மாட்டுகிறார்கள். பின் அதை எல்லோருக்கும் தெரியும்படி வெளியில் வைக்கிறார்கள். இந்த “குடி” அடையாளம், பல தீய சக்திகளை விரட்டி, வீட்டிற்கு வளத்தைத் தருகிறது என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது.

இந்த நன்நாளில் ஒவ்வொரு வீட்டு வாசலையும் “ரங்கோலி” என்ற கோலங்கள், பல வர்ணங்களுடன் அலங்கரிக்கின்றன. அதில் புள்ளிக் கோலங்கள், கணபதி, சிவாஜி போன்ற சித்திரங்கள், இயற்கைக் காட்சிகள் என்று ஒன்றை ஒன்று விஞ்சி, சக்கைப் போடு போடுகின்றன. இன்றுதான் மஹாவிஷ்ணு ‘மத்ஸ்யாவதாரம்’ எடுத்தார் என்றும் கூறுகின்றனர்.

பூரன் போளி என்ற வெல்லப் போளியும் ‘ஸ்ரீகண்ட்’ என்ற இனிப்பும் அவர்களது புத்தாண்டு ஸ்பெஷல். குவாலிடி நிறுவனத்தில், ஐஸ்க்ரீம் விற்பது போல் “ஸ்ரீகண்டும்” விற்கிறார்கள்.

ஏப்ரல் நாலாம் தேதி மராட்டியப் புத்தாண்டு கொண்டாடும் எல்லோருக்கும் என் அன்பு கனிந்த வாழ்த்துகள்.

===========================

படங்களுக்கு நன்றி: http://www.indusladies.com, http://www.tribuneindia.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *