2ஜி ஸ்பெக்ட்ரம்: பொதுக் கணக்குக் குழு வரைவு அறிக்கை – ஓர் அலசல்

2

இன்னம்பூரான்

Innamburanஒரு தங்கச் சுரங்கம். அது வானளாவியது. பிரபஞ்சத்தின் நன்கொடை, அண்ட கோளங்களுக்கு எல்லாம். தாவரங்களும் விலங்கினமும் புள்ளினமும் விலகி நிற்க, மானிடப் பிறவிகள் ககனத்தில் பிராண்டத் தொடங்கினர், கடந்த நூற்றாண்டிலிருந்து. அதன் பெயர் வானொலி அலைகற்றை / மின்னணுக் கற்றை / ஸ்பெக்ட்ரம் => 2ஜி / 3ஜி. அந்தந்த நாட்டுக்குச் சுரங்கத்தில் ஒரு பகுதி, 1932இலிருந்து, சர்வதேச சம்மதத்துடன், பகிர்ந்துகொள்ளப்படுகிறது; இந்திய அமைப்பு 1952லிருந்து; 1960களில், எனக்குப் பாதுகாப்பு அமைச்சரகத்தில் கிஞ்சித்துப் பரிச்சயம்; இன்றைய பகிர்வுகள் (இந்தியாவுக்கு: 9 KHz => 400 GHz.) 2007இல் தீர்மானிக்கப்பட்டன. கைப்பேசிகள் வந்தாலும் வந்தன, குட்டிப்போட்ட வண்ணம்! 2010இல், 2009ஐ விட 26 மடங்கு, உலகளவில்! அதன் பயனாக, சில இடங்களில் பணம் விழுந்து, புரண்டு, ஆடி, பாடி மகிழ்ந்தது.

ஊழல்கள் மலிந்தன, இந்தியாவில். 2001இலியே இலைமறைவு, காய் மறைவாகக் குற்றச்சாட்டுகள். 2007-08களில், நாடாளுமன்றத்திலேயே கணகணப்பு. 2010இல் சூடு பிடித்தது. நவம்பர் 16, 2010 அன்று,  ஆடிட் ரிப்போர்ட்டும் (57 பக்கங்கள் + பேசும் ஆவணங்கள் 77 பக்கங்கள்) நாடாளுமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டது.

2g spectrum voices in parliament2g spectrum voices in parliament

அந்த ரிப்போர்ட்டை ஏசினர், பலர்; அது பற்றிப் பேசினர் மேலும் பலர்; கூசினர் சிலர், நாணமிகுந்து.

புலனாய்வுத் துறையும், விசாரணைகள் பல செய்தாலும், நட்டத்தைக் குறைத்து மதிப்பீடு செய்தாலும், ஆடிட் ரிப்போர்ட்டைத் தூண் என்று தழுவியது. உச்ச நீதிமன்றமும் அந்த நிலைப்பாட்டை மதித்து, ஆவன செய்ய ஆணை பிறப்பித்து, மேற்பார்வை செய்கிறது. அமைச்சரும் அவரது சேக்காளிகளில் பலரும் சிறையில். தவணை முறையில் குற்றப் பத்திரிகைகள் வாசிக்கப்படும். இதெல்லாம் நீவிர் அறிந்ததே.

பொதுக் கணக்கு குழுவைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். அது நமது புனித அரசியல் சாஸனத்தின் செல்லப் பிள்ளை. நாடாளுமன்றத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. பிரதிநித்துவ மக்களாட்சியின் செங்கோல். 1921இல் ஜனனம். தொன்னூறு ஆண்டுகளாக ஜொலித்த இந்தக் குழு, இவ்வருடம் பொலிவிழந்தது. (போஃபர்ஸ் விவகாரத்தில் கொஞ்சம் மங்கியது, தனிக் கதை.)

தொடக்கத்தில் நிதி அலுவலகமும், பின்னர் அமைச்சரகமும் கோலோச்சியன என்றாலும், அவை முறைகேடுகளைத் தவிர்த்தன. அரசியல் சாஸனம், இந்தக் குழுவுக்கு நாடாளுமன்றக் குழு என்ற அந்தஸ்தை அளித்து, லோக் சபாவின் விதிகளில் 309 (i) படி, 15 லோக்சபா உறுப்பினர்களும், ஏழு ராஜ்ய சபா உறுப்பினர்களும் இக்குழுவில் என்று விதி வகுத்தது.

1967இலிருந்து எதிர்க்கட்சிக்கு தான், அதுவும் லோக்சபாவிலிருந்து தான், இந்தக் குழுவின் தலைமை என்ற மரபு தொடங்கியது. என்றென்றுமே, எல்லாக் குடியரசுகளிலுமே, இந்தக் குழுவின் தனிச் சிறப்பு, கட்சி எல்லைகளைக் கடந்து, எல்லா அங்கத்தினர்களும் பொது நலம் நாடுவதும், அரசின் வரவு செலவுகளைக் கண்ணியத்துடன் கண்காணிப்பதும், தணிக்கை அறிக்கைகளின் சான்றுகளை முன் வைத்து, சாட்சிகளை நேர்முக விசாரணைக்கு உட்படுத்தி, உண்மை நிலை அறிவதும் ஆகும்.

cartoon

இன்றைய துர்பாக்கியம், இந்தக் குழுவின் அங்கத்தினர்கள், அந்தத் தனிச் சிறப்பைப் பணயம் வைத்தது தான். மரபு தொலைந்தது; வாய்மை கடாசப்பட்டது. கற்பும் டேஞ்சர் லிஸ்ட்டில். அரசியல் சாஸனத்தின் செல்லப் பிள்ளைக்குச் சீக்கு; நாடாளுமன்றக் கண்ணாடியின் ரசம் குலைந்தது; மக்களாட்சியின் செங்கோல் வளைந்தது.

அநேகருக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்த 2ஜி விஷயத்தைப் பொதுக் கணக்குக் குழு விசாரிக்கத் தொடங்கியது, கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னாலேயே, ஜனவரி, 19, 2010 அன்று. தலைவர், கோபிநாத் முண்டே. முரளி மனோகர் ஜோஷி தலைமை ஏற்றது, மே, 5, 2010 அன்று. அது வரை கிடப்பில் இருந்த இந்த விஷயம் மறுபடியும் எடுத்துக்கொள்ளப்பட்டது, ஜூன் 11, 2010 அன்று. சொல்லி வைத்தாற் போல், அன்று தான், 3ஜி ஏலத்திலும், சற்றே முந்திய BWA ஸ்பெக்ட்ரம் ஏலத்திலும், முற்றிலும் வியப்பில் ஆழ்த்திய வரவு: ரூ. 1,06,262.26 கோடிகள்; எதிர்பார்த்ததை விட ஐந்து மடங்கு! (அடடா! 2ஜியில் மோசம் போனோமோ! என்று அன்று தான் உறைத்திருக்கலாம், ஆளும் தரப்புக்கு. சொல்லுவாங்களா? தேள் கொட்டினால் கூட கமுக்கமா இருக்கணும், டோய்!) அதை விடுங்கள்.

ஆடிட் ரிப்போர்ட் வருவதற்கு முன் மூன்று முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான பீ.கே. சிங்கல், இத்துறையில் வல்லுனர். விழிப்புணர்ச்சி கடமை உந்த, உகந்த சாட்சியம் அளித்தார். அது தான் அடிப்படை. பொதுக் கணக்குக் குழு, ஆடிட் ரிப்போர்ட்டையும் அலசியது. ஒரு நுட்பம். ஆடிட் ரிப்போர்ட் முறைகேடுகளைச் சான்றுகளுடன் பட்டியலிடும். முடிபுகள் கூறாது. அந்தப் பணி, பொதுக் கணக்குக் குழுவுக்கு என்ற மரபு நீடிக்கிறது. எல்லாக் குடியரசுகளிலும், தணிக்கைத் துறைத் தலைவர் (மாநிலங்களில், தலைமை கணக்காயர்) பொதுக் கணக்குக் குழுவின் நண்பர், தத்துவ போதகர், வழிகாட்டி. நமது அரசியல் சாஸனமும் அந்தப் பெருமையை உறுதிப்படுத்துகிறது.

சரி. என்ன வழ வழா…! பொதுக் கணக்குக் குழு வழக்கம் போல் அரசு சாட்சிகளையும், வழக்கமில்லாவிடினும், தனியார் துறை, தரகர் நீரா ராடியா போன்ற சாட்சிகளையும் விசாரித்தது. நண்பரும் தத்துவ போதகரும் வழிகாட்டியும் ஆன தணிக்கைத் துறைத் தலைவரும் சாட்சிக் கூண்டில். இது எல்லாம் ஆன பிறகு, பொதுக் கணக்குக் குழுவில் இழுபறி. குழுத் தலைவர் ஃபைசல் செய்யப்படாத வரைவு அறிவிக்கையை (205 பக்கம்), சபாநாயகருக்கு அனுப்பி விட்டாராம். அது ஊடகங்களில் உலா வந்தது (ஏப்ரல் 30, 2011 அன்று).

பொதுக் கணக்குக் குழுவின் காங்கிரஸ், தி.மு.க. அங்கத்தினர்கள் பெருங்குரலெழுப்பி அதைக் கண்டனம் செய்து, குழுத் தலைவர் வெளி நடப்பு செய்த பின், ஒரு மேல்சபை அங்கத்தினரை நாட்டாண்மையாக்கி, முரண்-அறிக்கை ஒன்று தரக்கூடுமாம். பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து தலா ஒருவர் நாங்கள் இந்தக் கூத்து அடிக்கவில்லை என்கிறார்களாம். ஒரே பரபரப்பு. ஆளும் கட்சித் தாக்குதல், திரு.ப. சிதம்பரம் மறுப்பு; எல்லாரும் ‘பீங்க்’, ‘பீங்க்’ விசிலடிக்கிறர்கள்.

2g spectrum PAC reportஇனி, குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரும், பழுத்த அரசியல்வாதியும், அப்பழுக்கு ஒன்றுக்கும் இலக்கு ஆகாதவரும், சர்ச்சை மன்னரும் மீண்டும் அந்தக் குழுவின் தலைவராக 2011 மே 1 அன்று நியமனம் ஆன முரளி மனோஹர் ஜோஷி, சபாநாயகருக்கு அனுப்பிய ‘அறிக்கையின்’ சாராம்சம்:

1. ஆடிட் ரிப்போர்ட் சான்றுகளோடு அளித்த ஒன்பது குற்றச்சாட்டுகள், குழுவின் முடிபுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவையாவன:
* பிரகடனம் ஆன கொள்கையைப் புறம் தள்ளியது;
* நிதி அமைச்சரகத்தின் ஆலோசனையை மிதித்தது;
* சட்ட அமைச்சரகத்தைப் புறக்கணித்தது;
* பிரதமரின் அறிவுரைகளை மதிக்காதது;
* டெலிகாம் கமிஷனைக் கலந்தாலோசிக்காத முறைகேடு;
* தன்னிச்சையாக, இறுதி தின கட்டுப்பாடுகளைக் கழற்றிய வித்தை;
* முறை தவறுதலுக்கு ஆதரவு; இங்கும் கியூ வரிசை இல்லையாமே; [எட்டாவது அத்தியாயத்தில் முழு அலசல்.]
* தகுதியற்ற பங்காளிகளுக்குக் கொடை;
* நட்டத் தொகை மதிப்பீடு. [ரூ. 57,666 கோடிகள் => ரூ. 1,76,645 கோடிகள்.]

1. ஆடிட் ரிப்போர்ட் தாக்கல் செய்த ஐந்தாவது தினம், குழுவில் அடுத்த கட்டங்களைப் பற்றி கலந்தாலோசனை; அன்றிலிருந்து நேற்று வரை படு பிஸி. இருபது முக்கிய சாட்சிகள் விசாரனை.

2. கற்றை கற்றையாக ஆவணங்கள் சோதனை;

3. அதையும், இதையும் சொல்லி மழுப்ப முனைந்தது, டெலிகாம் துறை.

4. படிக்கவே கஷ்டமாக இருக்கிறது, பாரா 3.64. நற்பெயர் வாய்த்த ரிஸர்வ் வங்கி கவர்னர் திரு. சுப்பாராவ் ( முன்னாள் நிதித் துறைத் தலைவர்) ‘நாங்கள் உகந்த கடமையிலிருந்து தவறிவிட்டோம்…’ என்ற பொருள்பட சாட்சியம் அளித்தார். (“I do not think we have done that. That would be, as your said, a systemic lapse”…)

5. மேலும் கஷ்ட காலம்: பாரா 3.72: டெலிகாம் துறைத் தலைவர், அமைச்சருக்கு அடி பணிய வேண்டிய கட்டாயம், தன்னைக் கட்டிப் போட்டது என்றார். (“….I can not say something to Finance Secretary which my Minister does not agree… We… brought all the matters to the notice of the Hon’ble Minister and if the Minister agreed, had he agreed, then we would have communicated to the Finance Minister that we have changed the policy…’).

6. ஐந்தாவது அத்தியாயத்தில், பிரதமரின் அறிவுரை புறக்கணிக்கப்பட்டதும், அவருக்குத் தவறான தகவல்களை அனுப்பியதை பற்றியும் கடுமையான விமர்சனம். இது பிரதமர் அலுவலகத்திலிருந்து: வயிற்றை பிசைகிறது: பாரா 5.15: ‘டெலிகாம் அமைச்சரின் ஆணவக் கடிதத்தைப் பற்றி: ‘அத்துறையுடன் இன்ஃபார்மல் தொடர்பு போதும்; நாம் தள்ளியே நிற்கவேண்டும் என்றார், பிரதமர்’ என்ற குறிப்பு! (‘…One important noting on the file was made by the Private Secretary to the Prime Minister on 23rd January, 2008 which reads as follows:-” – PM wants this informally shared with the Department”. ” – Does not want a formal communication and wants PMO to be at arms length”.

7. டெலிகாம் கமிஷனின் விநோத அமைப்பைக் குறை சொல்கிறது, இந்த வரைவு ரிப்போர்ட். அத்துறை அதிகாரிகள் மூவர் இருந்தால் போதும். எனவே, இந்த கமிஷன் செயலாற்றல் அற்றது. எப்படியும், அமைச்சர் தன்னிச்சையாகத்தான் நடந்துகொண்டார்.

8. ஏழாவது அத்தியாயத்தில் முறைகேடாக இறுதி நாள், அக்டோபர் 1, 2007இலிருந்து செப்டம்பர் 25க்கு மாற்றியதை அலசும்போது, சொல்வதாவது => ‘… என்னது இது! உங்கள் அமைச்சர் 15 MHz ஸ்பெக்ட்ரம் மட்டுமே இருப்பதால் என்று சொல்லி தேதியை மாற்றுகிறார். அந்த தினமே, பிரதமரிடம் 60-65 MHz  ஸ்பெக்ட்ரம் இருப்பதாகச் சொல்கிறார்!!!  பதில் என்னமோ மழுப்பல் தான்.

9. பத்தாவது அத்தியாயத்தைப் படிப்பது கடினம். வாய் கசக்கும். முறைகேடாகக் கொடை அளிக்கப்பட்ட கம்பெனிகளின் ஜாதக அலசலது. அடுத்தபடி நஷ்டத்தைப் பற்றி. இந்த இரண்டு அத்தியாயங்களை வைத்து ஒரு முனைவர் பட்டம் வாங்கலாம். பிட்டு பிட்டு வைத்திருக்கிறார், திரு. ஜோஷி.

10. சி.பி.ஐ. விசாரணையைப் பற்றியும், ராடியா பதிவுகளைப் பற்றியும், மற்ற பணிகளைப் பற்றியும் இந்த வரைவு அறிவிக்கை கூறியதை, நான் இங்கு விமர்சிக்கவில்லை. இதுவே நீண்டு விட்டது.

11. அது அமைச்சரின் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடுகிறது. பிரதமரையும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விட்டு வைக்கவில்லை.

இப்போது சொல்லுங்கள். இத்தகைய பிரதிநிதித்துவ மக்களாட்சிக்கு, இந்திய திருநாட்டின் மக்கள் ஏற்புடையவர்களா?

=======================================

படங்களுக்கு நன்றி : http://www.domain-b.com, http://flashnewstoday.com, http://www.hindustantimes.com, http://www.thaindian.com

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “2ஜி ஸ்பெக்ட்ரம்: பொதுக் கணக்குக் குழு வரைவு அறிக்கை – ஓர் அலசல்

  1. ////இப்போது சொல்லுங்கள். இத்தகைய பிரதிநிதித்துவ மக்களாட்சிக்கு, இந்திய திருநாட்டின் மக்கள் ஏற்புடையவர்களா?//
    நாட்டு நடப்பைப் பிட்டு வைத்த தங்கள் இடுகை, பல செய்திகள் தாங்கிவந்து, இறுதியாக தாங்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆம் என்ற பதில் சொல்ல வேண்டி வந்துவிடுமோ என்று அதிர்ச்சியாகவும் உள்ளது ஐயா………..

    நம் சந்ததியினருக்கு மிச்சம் மீதம் ஏதாவது வைத்து விட்டுப் போவோமோ என்ற அச்சமும் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இளைஞர்கள் ஏதேனும் அதிரடி முடிவுகள் எடுக்கப் போகும் காலமும் வெகு தூரத்தில் இல்லையோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *