வானம் – திரை விமர்சனம்

3

மோகன் குமார்

vaanam movie

‘தாய் மூகாம்பிகை’, ‘தேவரின் திருவருள்’ போன்ற படங்கள் பார்த்துள்ளீர்களா? இத்தகைய படங்களின் காட்சிகள் பின்வருமாறு இருக்கும்:

முதல் காட்சி: முத்துராமன்- கே.ஆர். விஜயா தம்பதிக்குக் குழந்தை இல்லை. இதற்கு மருமகளே காரணம் என்கிறார் மாமியார் ! மன வேதனை உடன் கே.ஆர் விஜயா சாமி படம் முன்பு அழுகிறார் .

இரண்டாம் காட்சி: ஸ்ரீ காந்த் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. நம்ப வைத்துக் கழுத்தறுப்பது இவர் வேலை. கன்னத்தில் மச்சத்துடன் ஒரே மாடுலேஷனில் பேசி யாரையோ ஏமாற்றுவார் இவர் ! (எல்லாப் படத்திலும் இவருக்கு இந்தப் பாத்திரம்தான்)

மூன்றாம் காட்சி: ஏ. வி. எம் ராஜனுக்கு வியாபாரத்தில் பெரும் நஷ்டம். கடன் தொல்லையால் நொந்து போயிருக்கிறார் இவர்.

இப்படியாக சிவகுமார் மற்றும் மேஜர் சுந்தர்ராஜனை வைத்து இன்னும் இரு கிளைக் கதைகளை மாறி மாறிக் காண்பிப்பார்கள். கடைசிக் காட்சியில் பழனி மலையிலோ,, தாய் மூகாம்பிகை சந்நிதியிலோ இவர்கள் அனைவரும் ஒன்று கூடுவர். அது தான் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை.

இந்த ரகத்திலான கதையொன்று நீண்ட நாள் கழித்து தெலுங்கு ரீ மேக்காக வந்துள்ளது. அது தான் ‘வானம்’. கடைசிக் காட்சியில் கோயிலுக்குப் பதில் இங்கு மருத்துவமனை.

மேற்சொன்ன தெய்வ கதைகள் டைட்டில் ஓடும் போதே ஒரு பாட்டு போடுவார்கள். பின் டைட்டில் முடிந்து வசனம் ஆரம்பிக்கும் முன்பே

சீர்காழி கோவிந்தராஜனோ, கே.பி. சுந்தராம்பாளோ ஒரு பாட்டு பாடுவார்கள். வானத்திலும் இதே போல் டைட்டிலில் ஒன்று, படம் தொடங்கும் முன் ஒன்று என டபிள் பாட்டு போடுகிறார்கள்.

சரி வானத்திற்கு வருவோம். ஐந்து குட்டி கதைகள். இவை அனைத்திலும் வரும் மனிதர்களும் வாழ்க்கையில் அநியாயத்துக்குக் கஷ்டப்படுகிறார்கள். இவை மிக விரிவாகச் சொல்லப்படும் போது அயர்ச்சியாக உள்ளது. “ஏம்பா.. சினிமா பார்ப்பதே சற்று ஜாலியாக இருக்கத்தான்! இவ்வளவு கஷ்டங்கள் சீரியலில் கூட இல்லையே ” என பெருமூச்சு எழுகிறது. ஹீரோ சிம்பு “என்ன வாழ்க்கை இது !” என எப்போதும் அலுத்துக்கொள்கிறார். மற்ற பாத்திரங்களுக்கும் இதே நிலைமை தான். நல்ல வேளையாக சிம்புவின் நண்பராகச் சந்தானம் வருகிறார். இவர் மட்டும் இல்லாவிடில் நாம் படம் முழுதும் சிரிப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

ஐந்து கிளைக் கதைகளில் நம் மனத்தைச் சற்றேனும் பாதிப்பது சரண்யா குடும்பக்கதை தான். கிட்னியை விற்றுப் பிழைக்கும் ஏழைகள் பற்றியும், அதில் உள்ள நெட்வொர்க் பற்றியும் பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. ஒரு லட்சத்திற்குக் கிட்னி விற்கப்படுகிறது. நடுவில் உள்ள புரோக்கர்கள் ஒவ்வொருவரும் கமிஷன் அடிக்க, கடைசியில் 37 ,000 ரூபாய், கிட்னி தானம் தந்தவர்கள் கையில் கிடைப்பதைப் பார்க்க மனது வலிக்கிறது.

சிம்பு ஒரு செயற்கைக் காதலியைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அழைத்துச் செல்ல நாற்பதாயிரம் பணம் சேர்க்க அலைகிறார். என்னே லட்சியம்! அனுஷ்கா பலான தொழிலை வெறுத்து ஓடுகிறார். இனியாவது திருந்தி வாழவா என்றால், அதற்கு இல்லை; முழுப் பணமும் கமிஷன் இன்றி, தனக்கே வரும்படி தனி வியாபாரம் செய்வேன் என்கிறார். பிரகாஷ் ராஜ் டிராக் சற்று பரவாயில்லை எனினும், இதில் மிகைப்படுத்தல் நிறையவே உள்ளது.

கிளைமாக்சில் பத்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தாலும் முழுதாக உள்ள ஹீரோ, ” என்ன வாழ்க்கைடா இது ” என்று தெளிவாகச் சொல்லிவிட்டு செத்துப் போகிறார்.

நல்ல விஷயங்களே இல்லையா என்றால், உள்ளது பார்ப்போம்.

ஹீரோ-ஹீரோயின் என்கிற வழக்கமான பார்முலா இல்லாமல் வித்தியாசமான கதைக் களன் சற்று மாறுதலாகத்தான் உள்ளது. (மெலோ டிராமாவைக் குறைத்திருக்கலாம்). சந்தானம் ஆங்காங்கு நன்கு சிரிக்க வைக்கிறார். விரல் வித்தை செய்யாத சிம்பு சற்று ஆறுதல். அனுஷ்கா அழகு! பிரகாஷ் ராஜ் கொடுத்த பாத்திரத்தில் சரியே செய்துள்ளார் . “தெய்வம் வாழ்வது எங்கே” பாடல் வரிகளும் பாடலும் சிந்திக்க வைக்கின்றன. முதலில் சொன்ன மாதிரி சரண்யா டிராக், சற்று மனத்தைப் பாதிக்கிறது.

ஆயினும் ஆனந்த விகடன் 44 மதிப்பெண் தருமளவு நிச்சயம் இந்தப் படம் இல்லை. திரைக்கதையில் தமிழுக்கென்று மாறுதல் செய்கிறோம் எனச் சொதப்பி விட்டார்களோ என்னவோ? தமிழ், தெலுங்கு ரெண்டு படமும் பார்த்த நண்பர்கள்தான் சொல்லணும்.

சிலர் நன்றாக உள்ளதாகச் சொன்ன படம், நமக்கு ஏன் பிடிக்கலை என யோசிக்கிறேன். சில நேரங்களில் படங்களை நாம் எந்த மன நிலையில் பார்க்கிறோம், நமது அந்த நேரத்து மன அழுத்தம் இவற்றைப் பொறுத்தும் நமக்குப் படம் பிடிப்பது மாறுபடலாம்தான். ஆனால் ஒரு நல்ல படம் நமது மன நிலையை மாற்றி, நம் கவலைகளைத் தற்காலிகமாக மறக்க வைத்து, அந்தப் பாத்திரங்களுடன் ஒன்ற வைக்க வேண்டும். வானத்தில் அது நடக்க வில்லை என்பதே கசப்பான உண்மை.

===========================================

படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Vaanam

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வானம் – திரை விமர்சனம்

 1. 1. நான் சினிமாவைப் பார்க்கவில்லை. கேலிக்கிடையை, தற்செயலாக நிகழ்ந்த ‘விமர்சனத்தை நம்புகிறேன்.
  2. ‘கிளைமாக்சில் பத்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தாலும் முழுதாக உள்ள ஹீரோ, ”என்ன வாழ்க்கைடா இது” என்று தெளிவாகச் சொல்லிவிட்டுச் செத்துப் போகிறார்.’
  => என்னா சார் இது! தெளிவு இல்லாத ‘கிளுகிளுப்பை’ சினிமாவில் எதிர்பார்க்கலாமா?
  3. அனுஷ்கா அழகுன்னு சொல்லித்தான் தெரியணுமா?
  4. ஆனந்த விகடன் 31 1/2 தான் மார்க்’கும்’!

 2. கருத்துக்கு நன்றி நண்பரே. ஆனந்த விகடன் இந்த படத்துக்கு44 மார்க் தந்துள்ளது என விளம்பரமே செய்கிறார்கள். ஆகவே தான் அத்தனை மார்க் தருமளவு படம் வொர்த் இல்லை என எழுதினேன்.

 3. ஒரு படத்தினுடைய நிறை குறைகளே தெரியாமல் எப்படி விமர்சனம் பன்றிங்களோ… யப்பா தாங்க முடியலடா சாமி….
  வினவு விமர்சனத்தைப் படியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *