குறவன் பாட்டு – 19
குறத்தி கானகத்தில் கண்டுகளித்த காட்சிகள்
நாரைகளும் வண்டுகளும் பலாக்கனிக்குக் கண்கள் வழங்குதல்
மாலை வானில் நாரைக் கூட்டம்,
மேலும் கீழும் சிறகை அசைத்து,
மேவிப் பரந்த கடலின் கரையில்,
மெல்லப் புரளும் அலைபோல் பறந்தன! 150
அலைபோல் பறந்த நாரைக் கூட்டம்,
ஆயிரக் கணக்கில் பலா மரத்தில்,
அழகுத் தோரணம் போல அமர்ந்து,
அசைத்துக் குலுக்கின உச்சிக் கிளைகளை! 151
கிளையில் அமர்ந்து தூளிகள் ஆடிக்,
காற்றில் சிறகினை நாரைகள் அடிக்க,
கணத்த கனிகளைச் சுமந்த மரமே,
குதித்துப் பறக்க முயல்வதாய்த் தெரியும்! 152
வேகவைத்துத் தோலுரித்து, நுனிதொடங்கிப் பாதிவரை
பிளந்தபின்பு, நடுத்தண்டை நீட்டி நிற்கும்,
பனைங் கிழங்காய் நாரை தன்,
பேரலகைப் பிளந்து நாநீட்டி நிற்கும்! 153
நீரில் மீன்களைப் பிடிக்கும் விசையுடன்,
நீண்ட அலகினை நொடியினில் செலுத்தி,
நறுமணக் கனிகளைக் குத்திக் குத்தி,
நாரைகள் நீண்ட துளைகள் இட்டன! 154
யானைத் தந்த நுனிநுழை விட்டத்,
துளையைச் செய்து அலகைச் செலுத்தி,
சுளையைக் கவ்வி வெளியே எடுத்து,
மீனை விழுங்கும் நினைவில் விழுங்கின! 155
கொக்குகள் இட்ட மஞ்சள் துளையில்,
கருவண்டுகள் அமர்ந்து கனியை உண்ண,
மஞ்சள்விழிப் படலத்தின் மீது உருண்ட,
கருவிழிப் படலம் உள்ளதாய்த் தோன்றும்! 156
துளைகளின் வழியே சென்றிட அஞ்சித்,
தயங்கித் தயங்கி வண்டுகள் நகர,
தேன்சிந்தும் கண்களை மெதுவாய் உருட்டி,
தீஞ்சுவைக் கணிகான் காண்பதாய்த் தோன்றும்! 157
மூட்டை போன்ற பசும்பலா, மேனியின்
ஓட்டை மஞ்சள் வண்டுக் கண்களால்,
காட்டைக் கண்டு கவினில் இலயித்து,
வாட்டம் கொடுக்கும் வலியை மறந்தது! 158
வேடன் விரித்த வலையில் சிக்கி,
வாடும் பறவைகள் கூட்டம் போல,
வெளிறிய மஞ்சள் சடையின் பிடியில்,
வண்டுகள் நுண்கால் சிக்கித் தவித்தன! 159
சிக்கித் தவித்த வண்டுகள் சிறகை,
அச்சத்தோடு படபடத் தடிக்க, அவ்வொலிகேட்ட
மந்திகள் வந்து, மானுடன் போலச்
சிந்தனைகொணடு, வண்டுகளை விடுவித் தனவே! 160
பவளக் கூர்வாய் செங்கால் நாரையின்
அழகு வர்ணனை அழகுதான்…!