தமிழர்களின் மொழிக்கொள்கை – ஒரு பார்வை
தேமொழி
மொழியினைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்டக் கருத்துண்டு.
நமது தமிழ்மொழியைப் பொறுத்தவரை, தனது தாய்மொழி தமிழின் மீது பற்று கொண்டிருப்பவர்கள் உள்ளனர். இவர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள். தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்ததல்ல என்ற கருத்தினை இறுகப் பற்றிக்கொண்டு பிறமொழி பேசுபவர்களை எதிர்க்கும் மொழி வெறியர்களும் நம்மில் உண்டு. இவ்வகையில் கண்மூடித்தனமாக மொழியின் மீது ஈர்ப்பு கொண்டவர்களில் பலருக்கு மிஞ்சிப் போனால் மூன்று அல்லது நான்கு மொழிகள் தெரிந்திருக்கலாம். தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்தல்ல என்று கருதும் இவர்களது முடிவு பற்பல மொழிகளையும் ஒப்பிட்டு ஆராயும் மொழியியல் வல்லுனர்களைப் போல ஆராய்ந்து கொண்ட முடிவாக இருத்தல் அரிது.
அதுபோலவே நடைமுறை வாழ்க்கைக்காக, சூழ்நிலையின் கட்டாயத்தினால் பிறமொழிகளைக் கற்றுப் பேசுபவர்கள் நம்மில் உள்ளனர். இது காலத்தின் கட்டாயம் என்பதால் இதனைக் குறை சொல்வதற்கில்லை. பிறமொழிகளைக் கற்கும் ஆர்வத்தில் எந்தவிதக் கட்டாயமும் இல்லாமலே பிற மொழிகளைக் கற்று, அந்த மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவரைவிட மொழிக்குத் தனது பங்களிப்பை வழங்கிச் சென்றவர்களும், செல்பவர்களும் உண்டு. இத்தகையவர்கள் கிடைப்பது அந்த மொழி பெற்ற பேறு. அத்துடன் இப்பிரிவினரைக் காண்பதும் அரிது.
பல அந்நியமொழியினரால் நம் தமிழுக்கும் அந்த பேறு கிடைத்திருக்கிறது. அவ்வாறு அந்நிய மொழியினர் தமிழ் கற்க நேர்ந்ததன் நோக்கம் சுயநலமாக (தனது மதத்தினைப் பரப்புதல் போன்ற காரணங்கள் என்பதாக) இருந்தாலும் தங்கள் பங்களிப்புகளின் மூலம் தமிழ் மொழியின் மேன்மையை உலகிற்கு வெளிபடுத்திச் சென்றுள்ளார்கள். இவரிலும் வேறுபட்டு, அயல்நாட்டின் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சியாளர்களாக இருப்போர், எந்தவிதக் கட்டாயமும் இன்றியே தமிழறிந்து பேசவும் எழுதவும் விரும்பி தமிழுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்தார்கள், செய்து வருகிறார்கள். சமீபத்தில் சீனப்பெண்மணி ஒருவர் தமிழ் நூலும் வெளியிட்டுள்ளார்.
மேற்கூறிய எந்த ஒரு பிரிவினராலும் தமிழ் வளர்ச்சிக்கு எக்காலத்திலும் தடை ஏற்படப் போவதில்லை. வளர்ச்சிக்குத் தடங்கலை ஏற்படுத்தும் பணியைச் செய்பவர்கள் யாவர் என ஆராய்ந்தால், தமிழராகப் பிறந்த பின்னரும் உடனிருக்கும் தமிழரிடம் தான் வசிக்கும் தமிழகத்திலேயே தமிழில் பேசவிரும்பாமல் ஆங்கிலத்தில் உரையாடுபவர்கள்; தனது தாய் மொழியில் பிற மொழிக் கலப்பின்றிப் பேச விரும்பும் சக தமிழர்களை எள்ளி நகையாடுபவர்கள்; தமிழ் மொழியில் பெயர்ப்பலகைகள் வைக்க, தமிழில் திரைப்படங்களுக்குப் பெயர் சூட்ட, தனது குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிட என அரசு தலையிட்டு வேண்டுகோள் விடுக்கவும், ஊக்கப்படுதவும் வேண்டிய நிலையில் தமிழைப் புறக்கணிப்பவர்கள் என்பது தெரிய வரும். இவர்கள் போன்ற குலத்தைக் கெடுக்கும் கோடாலிக் காம்புகளே இடையூறாக இருப்பவர்கள்.
சென்ற மாதம் (நவம்பர் 2013) வெளியிடப்பட்ட “செம்மொழி தமிழ்க் குறும்படம்: தமிழ்ப் பேசுவோம் தமிழர்களிடம் தமிழில் மட்டும் பேசுவோம்”(http://youtu.be/ebmajdLYtT8) என்ற கருத்தின் அடிப்படையில் தமிழர்களிடம் உள்ள இந்த வருத்தத்திற்குரிய நிலைபாட்டினைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. திரைக்கதையின் நாயகன் தமிழில் பேச விரும்புவதால் என்னென்ன இடர்களை எதிர் கொள்கிறார், எவ்வாறு கேலி செய்யப்படுகிறார் என்பதே படத்தின் மையக்கருத்து. பிற மொழியினரிடம் இல்லாத இந்த மயக்கம் (தனது மொழியினருடன் தனது மொழியில் பேச விரும்பாதது) மனிதர்களின் இயல்புக்கு எதிராகவேப் படுகிறது. இவ்வாறு பாசாங்கு செய்வது தமிழர்களினால் இன்னமும் அடிமை மனப்பாங்கிலிருந்து விடுபட முடியாததின் எதிரொலியாகவேத் தோன்றுகிறது.
இவ்வாறு தேவையற்று தமிழர்கள் அயல்மொழிகளில் பேசும் செயலுக்குச் சற்றும் குறைந்ததல்ல தமிழகத்திலேயே தமிழில் பெயர்பலகைகளை வைக்காது புறக்கணிப்பது. இந்த சீரழிவைப் பிற மொழியினருடன் ஒப்பிட்டால் தமிழர்களின் குணக்கேடு அதிர்ச்சி தரும் அளவிற்குத் தெளிவாகப் புரியும்.
வடநாட்டுப் பயணக் கட்டுரை ஒன்றில் தோன்றும் புகைப்படங்கள் அம்மாநில மக்களிடம் தமிழர்களுக்கு முற்றிலும் நேர்மாறான மனப்பான்மை இருப்பதைக் காட்டுகிறது. பிறமொழியினர், பிற நாட்டினார் வருகை தரும் சுற்றுலாப் பொதுவிடங்களில் மற்ற மொழியினர் பற்றிய பொதுநலக் கருத்தோ, அக்கறையோ அம்மாநில மக்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பல மொழி கொண்ட இந்தியர் அனைவரும் அங்கு சென்றால் அவ்விடத்தைப் பற்றியச் செய்திகளைப் புரிந்து கொள்ள வழியில்லாது தங்கள் மாநில மொழியில் மட்டுமே அறிவிப்பு/செய்திப் பலகைகள் வைத்துள்ளனர். ஆங்கிலம் என்ற பொது மொழியைப் படித்து தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ள பிற மொழி பேசும் இந்தியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக அவர்கள் மதிப்பது இதன் மூலம் தெளிவு படுத்தப் படுகிறது.
கான்பூரில் இருந்து கிட்டத்தட்டப் பதினைந்து மைல் தொலைவில் பிட்டூர் உள்ளது. அங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளின் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அறிவிப்புப் பலகையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மொழி புரியாதவர்களுக்காக அக்கட்டுரையின் ஆசிரியர் நமக்கு மொழி பெயர்த்து வழங்கியுள்ளார் (நன்றி: வல்லமையாளர் திருமதி. கீதா சாம்பசிவம்)
மேல் காணும் அறிவிப்புப் பலகையின் வாசகங்கள்
புராதன காலத்தில் ப்ரஹ்மவர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தான் மஹரிஷி வால்மிகி அவர்கள் ராமாயண மஹாகாவ்யத்தை எழுதினதாகச் சொல்லப்படுகிறது. அவருடைய ஆசிரமும் இங்கேயே அமைந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஶ்ரீராமனால் கைவிடப்பட்ட அவருடைய பத்தினி சீதா தேவிக்கு வால்மீகி இங்கே தான் அடைக்கலம் கொடுத்தார். சீதையின் இரு புத்திரர்களான லவனுக்கும், குசனுக்கும் இங்கே தான் வித்யாரம்பம் நடந்ததோடு இங்கேயே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தனர். அவர்கள் இருவரும் இந்த க்ஷேத்திரத்தில் தான் ஶ்ரீராமனுடைய அஷ்வமேத யாகக் குதிரையைப் பிடித்து அடக்கினார்கள். இங்கே தான் மஹரிஷி வால்மீகியின் மூலம் தந்தை மற்றும் புத்திரர்களுடைய முதல் சந்திப்பு நடந்தது.
ஆசிரமத்தின் உள்ளே உள்ள மற்றொரு அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள்.
ஶ்ரீராமசந்திர மூர்த்தியின் ஆக்ஞையின்படி ஶ்ரீலக்ஷ்மணன் சீதையை இங்கே தான் விட்டுச் சென்றான். இந்த ஆசிரமத்தின் உள்ளே தான் சீதா மாதாவின் குடிசை இருந்தது. இங்கே தான் லவனும், குசனும் பிறந்தனர். ஶ்ரீராமரின் அஷ்வமேத யக்ஞத்திற்காக விடப்பட்ட அஷ்வக் குதிரையை இந்த க்ஷேத்திரத்தில் தான் லவனும், குசனும் பிடித்து வைத்தனர். இங்கே தான் சீதை அருகே இருக்கையிலேயே ஹநுமானை லவனும் குசனும் பிடித்துக் கட்டிப் போட்டு ஆசிரமத்துக்குள் கொண்டு வந்தனர். உள்ளே உள்ள கோயிலில் சீதாதேவி, லவன், குசன், மேலும் புராதனமான தக்ஷிணமுக ஆஞ்சநேயரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.
புராதன சித்த பீடம், ஜீர்ணோத்தாரணம் ஆன வருடம் 1999 ஆம் ஆண்டு.
மேலும் ஒரு மொழிபெயர்ப்பு:
வால்மீகிக்கு ஞானம் கிடைத்த இடம் இதுவெனவும், இங்கே தான் ராமாயணத்தை எழுதினார் எனவும் குறிக்கும் அறிவிப்புப் பலகை.
இந்த வடஇந்திய மாநிலத்தவராது தங்கள் நாட்டில், தங்கள் மாநிலத்தில் இவ்வாறு தங்கள் மொழியை மதித்து தங்கள் மொழிப்பற்றைக் காண்பிக்கிறார்கள். இவர்களையும் மொழிப்பற்றில் எங்கேயோ பின்தள்ளிவிட்டார்கள் அமெரிக்கா வாழ் சீனமொழி மக்கள். சீனர்கள் தங்களது தாய் மொழியில் மட்டுமே தங்களது வணிக நிறுவனங்ககளின், கடைகளின் பெயர்ப்பலகைகளை வைப்பதைக் கண்டித்து, சீன மொழியுடன் ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை வைக்கச் சொல்லி சட்டம் இயற்ற விரும்பிய அமெரிக்க மாநகராட்சியை அந்த எண்ணத்தைக் கைவிட வைத்துவிட்டார்கள் இந்த சீனமொழி பேசும் மக்கள்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் நகருக்கு அருகில் இருப்பது மாண்ட்டரே பார்க் என்ற ஒரு நகரம். அங்கு வசிப்போரில் 70 விழுக்காட்டினர் ஆசியாவில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் அல்லது அவ்வாறு வந்தவர்களின் வழித் தோன்றல்கள். பெரும்பான்மையோருக்கு சீனமொழியே தாய்மொழி. ஒருசிலர் இவர்களின் வணிக வளாகங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் தங்களது சீன மொழியில் மட்டுமே கடைப் பெயர்களை எழுதி வைத்துள்ளனர். துளியும் ஆங்கிலம் என்பது கிடையாது. நகரின் ஆட்சியாளர்களுக்கு இச்செயல் பாதுகாப்பைப் பற்றியக் கவலையைத் தந்துள்ளது. ஓர் அவசர காலத்தில் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், அவசரகால விரைவு ஊர்திகள் போன்றவற்றின் சேவை தேவைப்படுமானால் நகர் ஊழியர்களால் அங்குள்ள பெயர்ப்பலகைகளைப் படிக்க முடியாது போகலாம். எனவே, உயிரிழப்புகள் ஏற்படும் சமயத்தில் உதவி செய்வதற்கு அமெரிக்கர்களுக்குப் புரியாத மொழி தாங்கிய பெயர்பலகைகள் இடையூறாக இருக்கக் கூடிய சூழ்நிலையை எண்ணினர் நகராட்சி மன்றத்தினர். பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்ற நியாயமான சட்டத்தை வரையறுத்தனர்.
ஆனால் அப்பகுதி சீன மக்கள் கொதிப்படைந்து, இது சிறுபான்மையினர் மீது நிகழ்த்தும் அடக்குமுறை என எதிர்ப்புத் தெரிவித்தனர். சிறுபான்மையினரின் மேல் நிகழ்த்தும் உரிமைமீறல் செயல் என்ற எதிர்ப்பு தோன்றியவுடன் நகராட்சி மீண்டும் கூடித் தற்பொழுது ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற சட்டத்தை சிறிது காலத்திற்குத் தள்ளிவைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளது. அதற்குப் பதிலாக பல மொழிகளும் புழங்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு வணிகர்கள் எவ்வாறு உதவுவது என்று விளக்கும் அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது மாண்ட்டரே பார்க் நகராட்சி.
பலமொழிகள் புழங்கும் இடங்களில், அனைவருக்கும் உதவும் வகையில் அப்பகுதி மொழிகளிலும் பெயர்ப்பலகை வைக்கவேண்டும் என்ற பொது அறிவு மக்களுக்கிருப்பது அவசியம் என்ற கருத்தினை நகராட்சி உறுப்பினர் ஒருவர் தெரவித்துள்ளார். சட்டம் போட்டுப் பெயர்ப்பலகையின் இருமொழித் தேவையை நிறைவற்றுவது சிறந்த முறையாக இருந்தாலும், அவ்வாறு செய்வது ஓரினத்தின் மீது நிகழ்த்தும் அடக்குமுறை எனத் திசை திருப்பப்பட்டு நகரின் அமைதிக்கு ஊறு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே சட்ட நடவடிக்கையை எடுக்காமல் நகராட்சி பின்வாங்கியுள்ளது.
இவ்வாறு ஓர் அயல்நாட்டில் வாழும் சீனர்கள் அயல்நாட்டிலும் தங்கள் மொழியில் பெயர்ப் பலகைகள் வைப்பதும், பலமொழி மக்கள் வாழும் இந்தியாவின் வடமாநிலங்கள் பிறமொழிகளைப் புறக்கணித்து தங்கள் மொழியில் மட்டும் அறிவிப்புப் பலகைகள் வைப்பதும் அவர்களது மொழியின்மீது அவர்களுக்குள்ள அன்பினைக் காட்டுகிறது. ஆனால் தமிழர்களுக்கு ஏனோ தமிழ்நாட்டிலேயே தமிழில் பெயர்ப் பலகைகளை வைப்பது அவமானத்திற்குரிய செயலாகப்படுகிறது. நம்மில் பலருக்கு பிறமொழிக்குத் தேவை இருந்தும் இவ்வாறு இம்மக்கள் தங்கள் மொழிகளில் மட்டுமே பெயர்ப் பலகைகள் வைப்பது மொழிவெறியின் பால் அடங்குவதாகத் தோன்றவேத் தோன்றாது. அது அவர்களின் மொழிப்பற்று என விட்டுத் தள்ளுவோம். ஆனால் பிறமொழிக் கலப்பின்றி தமிழ் பேச விரும்பும் தமிழர்களை மொழி வெறியர்கள் என்றப் பட்டம் சூட்டி இகழ்வதை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே வாடிக்கையாகச் செய்து வருகிறார்கள் என்பதை இங்கு கவனத்திற்குக் கொண்டு வரவேண்டியது அவசியமாகிறது.
இதுவரைக் குறிப்பிட்ட தாய்மொழித் தமிழை வெறுக்கும் தமிழர்களோ, கான்பூர் மக்களோ, சீன மக்களோ முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றைத் தவறவிட்டிருக்கிறார்கள். மொழி என்பது ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள மனிதகுலத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி. அதைத் தேவையறிந்து சரியான முறையில், சரியான இடத்தில் பயன்படுத்தினால்தான் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும். மொழி என்பது தன்மானப் பிரச்சனை அல்ல. மொழி என்பது கெளரவப் பிரச்சனை அல்ல. மொழி என்பது உரிமைப் பிரச்னையும் அல்ல.
இக்கருத்தை தெளிவுறுத்த மேலும் பல விளக்கங்களும் கொடுக்கலாம். அமெரிக்காவின் சோசியல் செக்யூரிட்டி என்ற சமூகப்பாதுகாப்பிற்கான நலத்திட்டத்தின் அடையாள எண் அனைவருக்கும் இருப்பது அவசியம். பணிபுரிய, வண்டி ஓட்ட, வரிகட்ட எங்கும் எதிலும் இந்த எண்ணின் தேவை இன்றியமையாதது. இந்த எண்ணைப் பெற அது வழங்கப்படும் அலுவலத்திற்குச் சென்று விண்ணப்பம் கேட்ட பொழுது, அங்கு பணிபுரியும் ஊழியர் எனது தோலின் பழுப்பு நிறத்தைக் கண்டு அவராகவே நான் ஒரு ஸ்பானிஷ் மொழி பேசும் ஹிஸ்பானிக் இனத்தவள் எனக் கருதி ஸ்பானிஷ் மொழியில் உள்ள விண்ணப்பம் கொடுத்தார். பிறகு ஆங்கில விண்ணப்பத்தைக் கோரி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் பிறமொழியினருக்கும் உதவ வேண்டும் என்ற கொள்கையினைக் கொண்டிருப்பது வெளிப்படுகிறது.
கலிஃபோர்னியா மாநிலத்தின் ஓட்டுனர் உரிமம் பெற விரும்பும் பலமொழியினருக்கும் உதவ விரும்பி அம்மாநில அரசு ஓட்டுனர் விதிகளைக்கற்கப் பலமொழிகளிலும் விதிமுறைகளை விளக்கும் பயிற்சிப் பாடங்களை உருவாக்குகிறது. இவ்வாறே வாக்காளர் விண்ணப்பத்திலும் பலமொழியினருக்கும் உதவ, அவர்கள் மொழியில் உரையாடி உதவிபெற அம்மொழியினருக்கான தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அலுவலங்கள் என்றுமட்டுமல்ல, பிறமொழி பேசுவோருக்குத் தேவை என்றால் உதவப் பல பொதுச்சேவை செய்யும் நிறுவனங்களும் மொழிபெயர்ப்பாளர்களை தங்களது சொந்த செலவில் ஏற்பாடு செய்து உதவுவதற்கானத் தயார் நிலையிலேயே உள்ளன.
மருத்துவ மனைகளும் இந்த உதவியைச் செய்யத் தவறுவதில்லை. மருத்துவமனைகளில் பலமொழிகளிலும் எழுதப்பட்ட ‘உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவை எனில் உங்கள் மொழியினைச் சுட்டுங்கள், நாங்கள் ஏற்பாடு செய்வோம்’ என்ற அறிவிப்புப் பலகைகளைக் காணலாம். படத்தில் காணப்படும் இந்த அறிவிப்பு ஒரு மருத்துவமனையின் வரவேற்பறையில் இருந்த அறிவிப்புதான்.
மொழியின் தோற்றத்தின் காரணமும், பயன்படுத்துவதின் நிமித்தமும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்வதற்கென்ற அடிப்படை உண்மையைக் கருத்தில் கொண்டு தேவைக்கும் இடத்திற்கும் தக்கவாறு அதற்கான நடவடிக்கைகளை மட்டும் முன்னிறுத்துவோம். மொழிவெறியையும் இனப்பேதத்தையும் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளைக் கைவிடுவோம். தாய்மொழி தமிழில் பேசுவதில் அவமானமுமில்லை, நம்முடன் வாழ்க்கையில் பங்கு கொள்ளும் பிறமொழியினருக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பதில் எந்தத் தவறுமில்லை. தமிழரைத் தவிர பிறர் தங்கள் மொழியினைப் புறக்கணிக்கத் தயாரில்லை என்பதைக் கண்டபிறகாவது தமிழர்கள் தாய்மொழியைப் புறக்கணிக்காது, பிறமொழி மயக்கத்தில் இருந்து விடுபடுவது தமிழுக்கு செய்யும் உதவியாக இருக்கும்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
ஆதாரம்:
Monterey Park drops plan for English signs amid community outcry, By Frank Shyong Los Angeles Times, December 5, 2013
http://www.latimes.com/local/lanow/la-me-ln-monterey-park-table-signs-20131205,0,6370878.story#ixzz2nipUy9WP
எல்லாருக்கும் வணக்கம்! கீதா சாம்பசிவம்
https://groups.google.com/d/msg/mintamil/I-MqBqbTzPw/htPkiiI9qhEJ
China’s first Tamil author looks to build bridges, January 18, 2013, The Hindu
http://www.thehindu.com/news/international/chinas-first-tamil-author-looks-to-build-bridges/article4316604.ece
காணொளி:
செம்மொழி – தமிழ்க் குறும்படம்
படம் உதவி:
http://www.trbimg.com/img-52a10a89/turbine/la-me-ln-monterey-park-table-signs-20131205-001/600
https://groups.google.com/d/msg/mintamil/I-MqBqbTzPw/htPkiiI9qhEJ
அருமையான கட்டுரை. தமிழர்கள் தங்களுக்குள்ளாகத் தாய்மொழியிலேயே பேசவேண்டும் என்று சொல்வது சரியே. ஆனால் இதை முதலில் கடைப்பிடிக்க வேண்டியவர்கள் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும், எஃப்.எம். வானொலி சேவைக்காரர்களுமே. அவர்களே ஆங்கிலம் கலந்த கலப்பு மொழியிலும், கொச்சைத் தமிழிலும் பேசி மொழியில் மாற்றத்தை தமிழ்த் தேசியமாக்கி வருகின்றனர். ஆங்கிலக்கலப்பில்லாமல் பேசும் தொலைக்காட்சி நிறுவனங்களில் சென்னை பொதிகைத் தொலைக்காட்சியும், மக்கள் தொலைக்காட்சியும் மட்டுமே ஆகும்.
பல்லாண்டுகளாக அனைத்து தொழில் நுட்ப சேவைகளுக்கும் உரிய தமிழ்ப்பெயரை அறிமுகம் செய்து வைப்பதில் பொதிகை முன்னணியில் உள்ளது. என்றாலும் என்னுடைய கட்டுரையில் உள்ள அறிவிப்புப் பலகை குறித்த செய்தியில் ஒரு சிறிய தவறு. வட மாநிலங்களில் உள்ள மக்களுக்கு ஆங்கில அறிவு மிகக் குறைவு. அதிலும் முக்கியமாய் உத்தரப் பிரதேசத்தின் இந்த சின்னக் கிராமத்து மக்களுக்கு ஆங்கில அறிவு என்பதே இல்லை. ஏழ்மையிலும், அறியாமையிலும் உள்ள மக்கள்.
அதோடு இந்த இடம் அரசால் அரசின் தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படும் இடமும் அல்ல. சுற்றுலா என்பது இங்கே அத்தனை மும்முரமாகவும் கிடையாது. இந்த இடத்தைக் குறித்த தகவல்களை மிகவும் நன்கு அறிந்தவர்கள் மட்டுமே வருகின்றனர். இன்னமும் மின் விநியோகம் கூடச் சரிவர வராத கிராமங்கள் இவை. இவர்களுக்குத் தெரிந்தது அவர்கள் மொழி மட்டுமே.
ஆனால் அதே சமயம் லக்னோ, கான்பூர் போன்ற ரயில்வே நிறுத்தங்களில் ரயில்வே அறிவிப்புக்கள் ஹிந்தியில் மட்டுமே செய்யப்படுகின்றன என்பதையும் ஒப்புக்கொள்ளவே வேண்டும். இதற்குக் காரணம் ஹிந்தி மொழியிலேயே படிப்பதும் தான். ஆங்கில வழியில் கல்வி கற்பது அங்கு மிகக் குறைவாகவே காணமுடியும். பெரிய நகரங்களில் இருக்கும். ஆனால் பெரும்பாலான உள்ளூர் மக்கள் ஹிந்தி மொழியில் படித்துவிட்டு உள்ளூரிலேயே கிடைக்கும் வேலையைப் பார்க்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய சாதனையாகவும் நினைக்கின்றனர்.
நாங்கள் பலரிடம் பேசிப் பார்த்ததில் பெரிய நகரங்களில், பெரிய பணக்காரக் குடும்பங்கள், உயர் மத்தியதர வர்க்கக் குடும்பங்கள், அரசாங்க அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் குடும்பங்களைத் தவிர மற்றப் பெரும்பான்மை சாதாரண மக்கள் உயர்கல்வியைக் கூட விரும்புவதில்லை. தங்கள் சொந்த ஊரை விட்டு, சொந்த இருப்பிடம், அதன் சுகங்களை விட்டு வெளிக்கிளம்புவது அவர்களுக்கு மிகக் கஷ்டமான ஒன்று ஆகும்.
இது குறித்துப் பேசவும், எழுதவும் நிறையவே இருக்கிறது. இப்போக் காலை வேளையில் அதிக நேரம் உட்கார முடியாது. முடிந்தால் பின்னர் வருகிறேன். மற்றவர் கருத்துக்களையும் அறிய வேண்டுமே! 🙂
தொல்பொருள் துறையின் அறிவிப்போடு சரி. அலுவலகமோ, நிர்வாகமோ அங்கே நடைபெறவில்லை. அந்த வரிகள் மேலே எழுதியவையில் விட்டுப் போயிருக்கின்றன.
நுட்பமான உணர்வுப்பூர்வமான ஒரு கட்டுரையை மிகவும் நேர்த்தியாக பல தகவல்களைத் தொகுத்து மொழியின் நோக்கத்தை விளக்கியுள்ள கட்டுரை ஆசிரியர் திருமதி.தேமொழி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசினால் கல்வி அறிவு இல்லாத பாமரர்கள் என்ற மாயத் தோற்றம் பரவலாக அனைவரின் மனதிலும் தவறாக விதைக்கப்பட்டுள்ளதால், தாங்கள் பாமரர்கள் அல்ல, படித்தவர்கள்தான் என்பதை வெளிப்படுத்திக் கொள்வதற்காக வலுக்கட்டாயமாக உரையாடல்களில் புகுத்தப்பட்டது ஆங்கிலம். மேலும் பல அரசியல் மற்றும் சமூகக் காரணங்களுக்காகவும், அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்ததாலும், ஆங்கில வார்த்தைகளைத் தமிழ் மொழியில் கலந்து பேசுவது கட்டாயம் ஆகிவிட்டது. ஆனால்…..
தமிழ் மொழி என்னும் வயலில் ஊடுபயிர் போல் மெல்லத் தலைகாட்டிய ஆங்கிலம் காலப்போக்கில் மெல்ல மெல்ல ஒரு களையாக வளர்ந்து தமிழ் வயலையே ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகும், “எனக்கென்ன வந்தது?” என்று கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமல் பெரும்பாலான தமிழர்கள், எதிர்காலத்தில் வரப்போகும் பேராபத்தை உணராமல் செயல்படுவது வேதனையாக உள்ளது. நிச்சயமாக ஆங்கிலத்தை ஊடுபயிர் என்ற அளவில் பயன்படுத்தாமல் களையாக வளரவிட்டால், களை, வயலைத் தின்பதோடு, வயலின் உரிமையாளர்களையும் தின்று கொழுத்துவிடும்.
இருக்கும்வரை தாயின் அருமையை உணராமல் விட்டுவிட்டு, அவர் இல்லாமல் போனபின்பு அழுது புலம்புவதால் ஒரு பயனும் இருக்கப் போவதில்லை என்பதை அனைத்துத் தமிழர்களும் உணர வேண்டும்.
தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் KGFல் ஏறக்குறைய அனைத்துக் கடைகளிலும் பெயர்ப் பலகைகள் தமிழிலும் வைக்கப்பட்டுள்ளது என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி.
அன்பு உடன் பிறவாச் சகோதரி கீதா உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பயணக்கட்டுரையும் அது குறித்த நீங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளும் மேலதிகத் தகவல்களும் எங்களுக்கு இந்தியாவின் வடபகுதியின் நடைமுறை வாழ்க்கையைப் பற்றி மேலும் நன்கு அறிந்து கொள்ள உதவுகிறது. மீண்டும் நன்றி.
அன்புடன்
….. தேமொழி
தங்களின் பாராட்டுக்களுக்கும், கட்டுரை விளக்க முற்படும் வெவ்வேறு பரிமாணங்களுக்கான மேலதிகத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு தங்கள் கருத்தைக் கூறியதற்கும் மிக்க நன்றி திரு. சச்சிதானந்தம்.
அன்புடன்
….. தேமொழி
தமிழர்களின் குழந்தைகளைப் பெற்றோர்கள் தங்களை அப்பா, அம்மா என்று கூப்பிட்டால் கோபமடைந்து, மம்மி, டாடி என்று அழைக்க வற்புறுத்தும்போதே இங்கு இந்தப் பிரச்சினை தொடங்கிவிடுகிறது. ஆங்கில வழிக் கல்வி கொடுக்கும் கல்வித் தாபனங்கள் தங்கள் வளாகத்தினுள் மாணவர்கள் தமிழில் பேசினால் அபராதம் விதித்து அவர்களை ஆங்கிலத்தில் பேச வற்புறுத்துகிறார்கள். வீட்டில் பெற்றோர், உறவினர், நண்பர் என அனைவரும் ஆங்கிலம் கலந்த மொழியில் பேசுகிறார்கள். அந்த நாளில் சம்ஸ்கிருதம் கலந்து பேசும் தமிழை மணிப்பிரவாளம் என்று குறிப்பிடுவர். அதைக் கடுமையாக விமர்சித்து எழுதியும் பேசியும் வந்த தனித்தமிழ் ஆர்வலர்கள் இன்று இவர்கள் பேசும் “தங்கிலிஷ்” குறித்து எந்த எதிர்ப்பையும் காட்டுவதில்லை. இளம் வயதில் உருவான இந்த வழக்கம் நாட்பட நாட்பட வளர்ந்து வீட்டில்கூட ஆங்கிலத்தில் பேசும் வழக்கைத்தை உருவாக்கிவிட்டது. நன்கு படித்து, நல்ல வேலையில் தமிழ்நாட்டு நகரமொன்றில் பணியாற்றும் ஒருவரை தவறு இல்லாமல் ஒரு பத்தி தமிழில் எழுதச் சொல்லுங்கள். இடையின ‘ர’ எங்கு வரவேண்டும், சந்திப்பிழையின்றி எப்படி எழுத வேண்டுமென்பதெல்லாம் கூட தமிழ்நாட்டு நவயுக தமிழர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மகாகவி பாரதி தமிழ் அன்னை வாயிலாக நமக்குச் சொன்னதைத்தான் மீண்டும் நினைவு கூரவேண்டிய சமயம் இது. “விதியே விதியே தமிழச்சாதியை என்செய நினைத்தனை?” நீண்ட நாட்களுக்குப் பிறகு சகோதரியின் கட்டுரைக்கு பின்னூட்டம் இடுகிறேன்.
இந்த விஷயம் பகிர்ந்து கொண்டதற்கு முதலில் பாராட்டுக்கள் . சீனர்களை கண்டு நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் ஒரு ஆயிரம் இருக்கிறது. சீனர்கள் அமெரிக்காவில் என்று மட்டுமல்ல தென் கிழக்காசியாவின் அனைத்து நாட்டிலும் பரவலாக இருந்தாலும் பலமாக மொழிப்பற்றில் பவராக இருக்கிறார்கள். நம்மவர்கள் தான் வேஷம் போட்டுக்கொண்டு வாழ்கிறார்கள்.
வளர்ந்துவிட்ட உலகில் ஆங்கிலம் அத்தனை அவசியம்.அதில் மாற்றுக்கருத்து இல்லை , அதற்காக் வீட்டில் மனைவி, பிள்ளைகளிடமும் ஆங்கிலம்,பேசுவதன் பிரதிபலன் இன்னும் சில ஆண்டுகளில் பட்டவர்த்தனமாக தெரிய இருக்கிறது அது , அழிவு என்பதைத்தான் உங்களின் கட்டுரை சொல்கிறது.
மீண்டும் பாராட்டுக்கள்.
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தஞ்சாவூர் ஐயா.
///இவர்கள் பேசும் “தங்கிலிஷ்” குறித்து எந்த எதிர்ப்பையும் காட்டுவதில்லை///
என நீங்கள் குறிப்பிட்ட நிலை வருத்தம் தருவது என்றால், அதையும் விட ஒரு சிலர் “தங்கிலிஷ்” தங்கள் மொழி என்று பெருமையுடன் கூறிக் கொண்டு, ஃபேஸ்புக் இல் ஒரு பக்கமும் உருவாக்கி வைத்துக் கொண்டு பெருமைப் பட்டுக்கொள்கிறார்கள் ஐயா. இந்தக் கொடுமையைக் கண்டு நொந்து போகாமல் இருக்க முடியவில்லை.
https://www.facebook.com/pages/Tanglish/106022929438592
அன்புடன்
….. தேமொழி
உங்கள் கருத்துரைக்கு நன்றி தனுசு. நீங்களும் பல மொழிகள் பேசுவோருடன் வாழும் சூழ்நிலையில் இருப்பதால் பிறமொழியினர் யாவரும் அவரவர் தாய்மொழி மீது கொண்ட ஈடுபாடு என்ன என்பதை நேரில் காணும் அனுபவம் பெற்றிருக்கிறீர்கள்.
சீனர்கள் தங்கள் மொழியிலேயே கல்வி பெறுவதையும், பேசுவதையும் கைவிடாமல், உலக அரங்கிலும் அனைவரையும் தங்களது தொழில் நுட்பத்தினால் கலங்கடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் முன்னேற்றத்திற்குத் தங்கள் தாய்மொழி உபயோகம் எந்த வகையிலும் தடையாக இருப்பதாக அவர்கள் கருதுவதில்லை போலிருக்கிறது. சீனர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மீண்டும் உங்கள் கருத்திற்கு நன்றி.
அன்புடன்
….. தேமொழி