கோயில் எனும் சொல்!…
நூ.த. லோகசுந்தரம்
“கோயில்” & “கோவில்”
கோ + இல் = கோயில்
கோ = இறைவன் = கடவுள்
கோ = இறை = நாடாளும் மன்னன்
என ‘கோ’ விற்கு இரு பொருள்கள் உள்ளன அறிவோம்
இல்= வாழும் இடம் = இல்லம்
கோவில்: இச்சொல் இறைவனை வழிபடும் இடம் என்னும் பொருளில் வழங்குதல் ஏனோ இந்நாள் நன்கே பரந்துள்ளது.
எனினும் மேற்காட்டிய இருவித பயன்பாடுகளில் கோயில் என யகர இகரம் (யி) இட்டு எழுதுதலே பிழை அற்றதாகும்.
இச்சொல் நிலைமொழி யின் ‘ஓகார’ த்துடன் வருமொழியின் இல் லின் ‘இகரம்’ சேரும் புணர்வில் ‘இ’ யின் இணைஒலியான (அணித்ததான) ‘’யி’’ கரம்தன் இயல்பாக வரமுடியுமே அன்றி ‘வி’ என இதழ் குவியும் சேய்மை ஒலியாக வருவது இயைபு உடையது ஆகாதது காணலாம்
மேலும்……..
கோயில் எனும் சொல்தான் நம் இலக்கிய நூல்களில் யாங்கணும் காண்கின்றோம் சங்க நூல்களிலும் சிலம்பு மணிமேகலை முதல் பிற்கால நூல்கள் வரை யாவற்றிலும், கோவில் என எவ்விடத்திலும் காணாது, கோயில் எனும் சொல்தான் தெள்ளத் தெளிவாக நூறு சதம் பயனில் உள்ளமை காணமுடிகின்றது. இணைப்பில் உள்ள இரு கோப்பினைக் காண்க. அதனில் வைத்துள்ள 90 எடுதுக்காட்டுகள் அல்லாமல் இறைவழிபாட்டு திரு மறை நூல்களாம் 12 சைவத் திருமுறைகள் ஆழ்வார்களின் 4000 திவ்யப் பிரபந்த பாசுரங்களை நோக்க ஆங்கெல்லாம் கோயில் எனும் சொல்லே பயன் கொள்ளப்படவும் அந்த 1150 இடங்களில் யாங்கணும் கோவில் என காணவே இல்லை என்பதும் உணரப்பட்டது. சைவம் வைணவம் எனும் இரு மரபுகளின் தலையாய தலங்களாம் தில்லை திருவரங்கம் இரண்டும் கோயில் எனத்தான் குறிக்கப் படுகின்றனதும் அறிவோம் அல்லவா?
எனவே நாம் இனி கோயில் எனவே வழுவின்றியே எழுதுவோமே “கோவில்” எனும் சொல் பயன்பாட்டினைத் முற்றிலும் தவிர்ப்போம்
பள்ளித் தமிழ்ப் பாடத்திலேயே கோவில் என்பது தவறு கோயில் என்பதே சரி என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். ஆயினும் பள்ளிக் கல்வியைக் கடந்து வந்த அனைவரும் கோவில் என்றே தொடர்ந்து பயன்படுத்துவது ஏன் என்று புரியவில்லை. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா!