பொது

“சிறப்பு முகாம் வாசிகளை விடுவியுங்கள்” – செந்தமிழன் சீமான் வேண்டுகோள்

 

”செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 3 பேர் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த 13ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்வம், அருங்குலசிங்கம், தர்மலிங்கம் ஆகிய அந்த மூன்று பேரில், செல்வத்தின் உடல் நிலை மோசமாகி அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களைச் சந்தித்த செங்கல்பட்டு தாசில்தார் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு – எப்போதும் கடைபிடிக்கும் சம்பிரதாயப்படி கோரிக்கை விடுத்துள்ளார். போராட்டக்காரர்கள் அவரின் வேண்டுகோளை ஏற்கவில்லை.

தங்களை விடுவித்து, தமிழ்நாட்டில் இதர முகாம்களில் வசித்துவரும் தங்கள் உறவினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதே கோரிக்கையைத்தான் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களும் கோரி வருகின்றனர்.

இலங்கைக்கு உணவு கடத்தினார்கள், மண்ணெண்ணை கடத்தினார்கள், இரத்தம் கடத்தினார்கள் என்கிற குற்றச்சாற்றின் பேரிலும், ஐயத்தின் பேரிலும் சற்றேறக்குறைய 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் இப்படி சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான வழக்குகள் போடப்படவில்லை. அப்படியே போடப்பட்டிருந்தாலும் அவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமலும், சட்டப்படி பிணைய விடுதலை போன்ற நிவாரணங்களைப் பெற அனுமதிக்காமலும், தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு மனிதாபிமானமற்ற வகையில் நடத்தி வருகிறது.  அவர்களும் தங்களை விடுவிக்கக்கோரி பல முறை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இப்படி ஒரு முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டபோது, சிறப்பு முகாமிற்குள் நள்ளிரவில் புகுந்த காவல் துறையினர் அவர்களை கடுமையாகத் தாக்கினர். இதில் அகதிகளில் பலர் படுகாயமடைந்தனர்.

ஐயத்தின் பெயரால் ஈழத் தமிழர்கள் பலரை இப்படி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைத்து வைப்பது என்பது கடந்த ஆட்சியில் அடிக்கடி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருந்தது. சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் பல ஆண்டுகளாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  தங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தவறு செய்திருந்தால் தண்டியுங்கள், இல்லையேல் எங்களை விடுவித்து இதர முகாம்களில் உள்ள எம் சொந்தங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.  ஆனால் கடந்த ஆட்சியில் அவர்களின் எழுப்பிய கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவும், அடக்குமுறைக்கு உட்படுத்தப்படும் நிலையைத்தான் ஏற்படுத்தியதே தவிர, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை.

இப்படி வழக்கு, விசாரணையின்றி அவர்களை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மறுப்பாகும் என்பதை எடுத்துக்கூறி தமிழர் இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திவிட்டன. ஆனால் அரசு பெரிதாக அசைந்துகொடுக்கவில்லை.

தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், தாயுள்ளத்துடன் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து விடுதலை செய்ய வேண்டும் என்று ’நாம் தமிழர்’ கட்சி கேட்டுக்கொள்கிறது.

அவர்களை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்று அரசு கருதுமானால், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, ஈழத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்கியிருக்குமாறு கட்டளையிடலாம்.

ஈழத்தில் போர் முடிந்த பிறகு வன்னியில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட நிலையே, இங்கு சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு அவமானமல்லவா? தமிழகத்தின் முதல்வர் இதைச் சிந்தித்துப்பார்த்து அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று சீமான் கூறினார்.

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க