தமிழ்த்தேனீ

“கார்லேருந்து எல்லாத்தையும் எடுத்திடேன்.” என்றபடி சுப்புலட்சுமியும் சிவாவும் உள்ளே வந்தனர்.  “சரி.  நானும் கிளம்பறேங்க. வீட்டிலே அம்மா காத்துகிட்டு இருப்பாங்க சார் ரிடையர் ஆற நிகழ்ச்சியைப் பாக்கணும்னுதான் வந்தேன்”

“இரு சிவா, கைகால் ஓடவிடாம ஆக்காதே! ஒருவாய் காப்பிதண்ணி குடிச்சிட்டு, அப்புறமா போ!” என்றபடி உள்ளே போய் காப்பியை எடுத்திட்டு வந்து  கர்த்திகேயனுக்கும்..சிவாவுக்கும் கொடுத்தாள்.

“காலைலே 7 மணிக்கெல்லாம் கிளம்பி ஆபீசுக்கு போய்ட்டீங்கன்னா சாயங்காலம் 7 மணியாவும் வரதுக்கு….., இனிமே எப்பிடி பொழுது போகும் உங்களுக்கு?  ஏதாவது ப்ளான் வெச்சிருக்கீங்களா?”  என்றான் சிவா.

“டேய் சிவா! நீ என் மனசில ஓடறதை சரியாக்  கண்டுபிடிச்சா மாதிரி கேள்வி கேக்கற! அதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்.  எனக்கு அந்த வேலையை விட்டா வேறு ஒண்ணும் தெரியாது.. ஏதோ இதுவரைக்கும் வேலை கொடுத்த அந்த  ஆபீசுக்காகவே,  யோசிச்சு, யோசிச்சு வேலையை நேர்மையா செஞ்சிட்டேன். இது வரைக்கும் ஒருநாள் கூட லீவு எடுத்ததில்லே. அதுக்காகவே  எங்க எம்.டீ. மேடையிலே என்னை எப்பிடிப் பாராட்டினார் பாத்தியா! எப்போ வேணா  மறுபடியும் வேலை செய்யணும்னு எண்ணம் வந்தா இந்த ஆபீஸ் உங்களுக்கு கதவைத் திறந்தே வெச்சிருக்கும்னு சொன்னார். கவனிச்சியா?”  என்றார்  கார்த்திகேயன்.

”சார் சொல்றேன்னு…….. தப்பா நினைக்காதீங்க! எல்லோருமே மேடையிலே அப்பிடித்தான்  பாராட்டுவானுங்க, அதெல்லாம் நம்பிகிட்டு அங்க போய் நிக்காதீங்க …மதிக்கமாட்டாங்க.  அதெல்லாம் மேடை நாகரீகம் அத்தோட சரி.”  என்றான் சிவா.

”நீங்க ஒண்ணு செய்யலாம், நாலு பேரை வெச்சிகிட்டு உங்க அனுபவத்தை, அதும் மூலமா கிடைச்ச அறிவை, யுக்திகளை எல்லாம் யாருக்காவது சொல்லிக்குடுங்க. நல்ல பொழுது போக்கா இருக்கும்.   எல்லோருக்கும் உதவியாகவும் இருக்கும்.  சரி, நான் கிளம்பறேன்”.  என்றபடி சிவா கிளம்பினான்.

”ஏனுங்க இப்பவே மணி எட்டாவுது.  ஏதாவது கொஞ்சம் சாப்டுட்டு  ரெஸ்ட் எடுங்க…. உழைச்சதெல்லாம் போதும்!”

”இந்த வேலையில், உங்க உழைப்பிலே படிப்படியா முன்னுக்கு வந்து,  நம்ம பிள்ளைங்களுக்கு நம்மால் முடிஞ்ச படிப்பைக் குடுத்து கல்யாணமும் செஞ்சு முடிச்சிட்டோம்! அந்த முருகன் புண்ணியத்திலே,  எல்லோரும் நல்லா இருக்காங்க.  இனிமே பெரிய பொறுப்புன்னு எதுவும் நமக்கு இல்லே.  நல்ல நல்ல புத்தகமா வாங்கிப் படிங்க, கொஞ்ச நேரம் டீவி பாருங்க,  மனசை அமைதியா வெச்சிக்கிட்டு நீங்க அமைதியா இருக்கற வழியைப் பாருங்க” என்றாள் சுப்புலட்சுமி.

”எங்க ஆபீசிலே நான்தான்  மேனேஜர், அங்கே நான் சொன்னதை எல்லோரும் செய்வாங்க.  இங்கே நீதான் மேனேஜர்.  இனிமே நீ சொல்றதை நான் செய்யணும்! தாய்க்குப் பின் தாரம்னு சொல்லுவாங்க!”   என்றார் கார்த்திகேயன் சிரித்தபடி.

”ஆமங்க! என்னைக் கிண்டல் செய்யலேன்னா உங்களுக்கு பொழுது போவாதே.  நான் நல்லதைத்தான் சொல்லுவேன்.  நான் சொல்றதைக் கேட்டா நல்லதுதான் நடக்கும்”. என்ற சுப்புலட்சுமி தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தாள்.

அந்த சீரியலில் ஒரு பெண் தன் காதலனிடம் ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தாள் . ”ரமேஷ் என்னை ஏமாத்திடலாம்னு நெனைக்காதே……., என்னைக் காதலிச்சுட்டு வேற ஒருத்திய  நீ கல்யாணம் கட்டிகிட்டா நான் சும்மா இருக்க மாட்டேன்.  உன்னையும் வாழவிடமாட்டேன்.” என்றாள் முகத்தை கர்ண கடூரமாக வைத்துக்கொண்டு.

”காதல், காதல், காதல், இந்தக் காதலைவிட்டால் பேசறதுக்கு எழுதறதுக்கு வேற எதுவுமே இல்லையா………?” எரிச்சலோட  டீவியை அணைத்தார்  கார்த்திகேயன்.

”இவ ஏன் இப்பிடி ராட்சசி மாதிரி கத்தறா? இவளை எப்பிடி இவன் காதலிச்சான்? முட்டாள்! முட்டாள்!” என்றார் கார்த்திகேயன்.

”நீங்க இதுவரைக்கும் சீரியல் எல்லாம் பாத்ததில்லே. அதனால்தான் குழப்பம் இல்லாம தெளிவா இருக்கீங்க! நேஷனல் ஜியாகரபிக் ன்னு ஒரு சேனல் இருக்கு.  அனிமல் ப்ளானட்டுன்னு ஒண்ணு இருக்கு இதெல்லாம் பாருங்கோ! ட்ராவல் அண்ட் லிவ்விங் ன்னு ஒரு சேனல் இருக்கு அதைப் பாருங்கோ! இனிமே ரெண்டு பேரும் கிளம்பி எல்லா  ஊரையும் சுத்திப்பாக்கலாம்!” என்றாள் சுப்புலட்சுமி.

”இதோ இந்தப் புத்தகத்தை பொரட்டினா, முதல் பக்கமே காதல்ன்னு ஒரு கவிதை, டீவியோட லட்சணம் தெரிஞ்சு போச்சு! ஏன் இப்பிடி எல்லோருமே  காதல், காதல்னு இதைப் பத்தியே பேசிண்டிருக்கானுங்க. இத விட்டா பேசறதுக்கும், எழுதறதுக்கும், சினிமா எடுக்கறதுக்கும் வேற ஒண்ணுமே இல்லையா…. ?  எப்பிடி எல்லோருக்கும் மூளை இப்பிடி வறண்டு போச்சு?  அது சரி இந்தக் காதலப் பத்தி உன் அபிப்ராயம் என்ன?” என்றார்.

சுப்புலட்சுமி ”காதலைப் பத்தி பேசற வயசைப் பாரு …… இதப்பத்தியெல்லாம்  எனக்கொண்ணும் தெரியாது.  உங்களை எனக்கு கல்யாணம் கட்டி  வெச்சாங்க.  வாழ்ந்து நம்ம கடமையை நெறைவேத்தியாச்சு. அவ்ளோதான் எனக்குத் தெரியும்! தனித்தனியா பொறந்தோம், ஒண்ணா சேர்ந்தோம், தனித்தனியா போகப்போறோம், இதுலே காதல்னா என்னான்னு சொல்றது?”

”உங்களுக்கு என்னைக் கல்யாணம் கட்டிக் குடுக்கும்போது, எங்கம்மா சொன்னாங்க…. ’நீயும் சந்தோசமா இரு. உன் புருசனையும் சந்தோஷமா இருக்க விடு’ன்னு,  அதைத்தான் நானும் செஞ்சுகிட்டு இருக்கேன்.  இப்போ காதலிக்கறவங்க யாரு சந்தோசமா இருக்காங்க..?   சரிங்க எனக்குத் தூக்கம் வருது, உங்களுக்கு கிச்சன்லே பால் காச்சி வெச்சிருக்கிறேன்,  ’மறந்து போயிட்டுது’ன்னு அப்பிடியே வெச்சிட்டு தூங்கிடாதீங்க!  எறும்பு மொச்சிடும்.  குடிச்சிட்டு  வந்து, நேரத்தோட துங்குங்க” என்றபடி உள்ளே போனாள் சுப்புலட்சுமி.

அப்பிடியே சோபாவில் உட்கார்ந்து அசை போடத் துவங்கினார்.  கார்த்திகேயன், சற்று நேரம் சென்றபின் பாலை எடுத்து குடித்துவிட்டு  படுக்கை அறைக்குப் போன  கார்த்திகேயன் சுப்புலட்சுமியைப் பார்த்தார். அவள் நல்ல தூக்கத்தில் இருந்தாள்.  ’கள்ளங் கபடம் இல்லாதவ! படுத்தா உடனே தூங்கறா!’ அருகே சென்று குனிந்து போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டுப் படுத்தார்….

காதல் என்றால் என்னவென்று புரிந்தது அவருக்கு

 

 

 

 

 

 

 

 

 

 

படங்களுக்கு நன்றி : http://1.bp.blogspot.com/_1S8g9P9UX3Y/SsqvXdLDKTI/AAAAAAAAG7c/1-g9ecTXa4k/s400/Elderly+Indian+couple.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காதல் என்றால் ?

  1. காதலில் வாஞ்சை இருக்கும். வாஞ்சை இருக்குமிடமெல்லாம் காதல் இல்லாமல் போகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.