ராமன் எத்தனை ராமனடி
கவிஞர் காவிரி மைந்தன்
காலமகள் தந்த கவிதைக் கோமகன் கவியரசு கண்ணதாசன் திருவுருவச்சிலை திறந்துவைத்த பெருமகிழ்வில் .. கலைவாணர் அரங்கில் முழுநாள் வைபவங்கள்! கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், இசைவிருந்து நடைபெற்ற நாள் 11.12.1994. திரைவரலாறுகளைத் தன் விரல்நுனியில் வைத்திருக்கும் திரை அகராதி அருமைக்குரிய பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களின் ஆலோசனையேற்று திராவிடக் கவிஞர்கள் மூவரைத் தேர்ந்தெடுத்து ‘கண்ணதாசன் விருதுகள்’ வழங்கிப் பெருமையுற்ற கவியரங்கில்.. திருமிகு ஆருத்ரா.. தெலுங்குக் கவிஞர் – பின்வருமாறு கூறினார். தமிழ் கலந்த தெலுங்கில் அந்த இனியமகன் செப்பியதாவது..
“நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள்.. அடிக்கடி நேரிலும்..அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு! இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார்.. நான் சொல்லுவேன்.. அதே போல்.. நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்க அதையும் அறிந்துகொள்வேன். அப்படி ஒரு சமயம்.. நான் கேட்டபோது.. அவர் ஒரு பாடல் சொன்னார். அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன்.
அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது. என்ன பாடல் தெரியுமா? லட்சுமி கல்யாணம் என்கிற திரைப்படத்திற்காக கண்ணதாசன் இயற்றிய ‘ராமன் எத்தனை ராமனடி’ என்கிற பாடல்தான் அது. கவிஞரிடம் எப்படி இத்தனை ராமனை வரிசைப்படுத்தினீர்கள் என்று கேட்டேன். எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு என்று கேட்டேன். கண்ணதாசன் சொன்னார்.. இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப்பிறகுவரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக.. ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவனன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பியபோது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பான்.. அப்போது லக்குவனன் அண்ணன் ராமனைப் பார்த்து.. ஏனன்னா.. இது என்ன ? நீங்கள் தான் ஆணையிட்டீர்கள்.. இப்போது அழுதுகொண்டிருப்பதென்ன? என்று கேட்க..
‘ஆணையிட்டது கோசலராமன்..
அழுதுகொண்டிருப்பது சீதாராமன்’ என்று
இப்பொறிதான் .. இப்பாடல் உருவானதற்கான கருவானது என்றார்.”
வம்சத்திற்கொருவன் – ரகுராமன்
மதங்களை இணைப்பவன் – சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் – ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் – அனந்தராமன்
என 18 ராமன்களின் பவனியல்லவா இந்தப் பாட்டு!
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!
ராம்! ராம்! ராம்!!
வெண்ணிற ஆடை நிர்மலா வெள்ளித்திரையில் தோன்றி நடித்த காட்சி இது.. பெண் பார்க்கும் படலத்தில் பெண்மை மென்மையை அள்ளி வழங்கிய பாட்டு!
மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த பாட்டு!! பி.சுசீலா பின்னணி தந்த பாட்டு!
கேளுங்கள் மீண்டும் ஒரு முறை..
ஆருத்ரா அவர்களின் கண்ணதாசன் தரிசனத்திற்குப் பின்னர்!
கவிஞரின் அனுமதியுடன் தெலுங்கில் இப்பாடலை மொழிப் பெயர்த்து மாநில அரசு விருதினைத் தாம் பெற்று நெகிழ்ந்ததையும் நினைவு கூர்ந்தார்!
ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
(ராமன் எத்தனை ராமனடி)
கல்யாண கோலம் கொண்ட – கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த – சீதாராமன்
அரசாள வந்த மன்னன் – ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த – சுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)
தாயே என் தெய்வம் என்ற – கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட – தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் – கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் – ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)
வம்சத்திற்கொருவன் – ரகுராமன்
மதங்களை இணைப்பவன் – சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் – ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் – அனந்தராமன்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!