விசாலம்

என் பார்வையில் கண்ணதாசன் . {கற்பனையில் உண்மை} 

இரவு மணி எட்டு. நான் என் வேலைகளை முடித்துக்கொண்டு ‘அப்பாடி ‘ என்று அமர்ந்தேன்..என் மனம் “ என் பர்வையில் கண்ணதாசன் என் பார்வையில் கண்ணதாசன்” என்று ஜபம் செய்தது..இரு வாரங்களாக இந்த ஜபம் தான் . அது அப்படியே ஆழ் மனதில் போய் அமர்ந்து கொண்டது .சுமார் ஒன்பது மணி இருக்கும் வாசல் கதவு திறந்தாற்போன்று ஒரு உணர்வு .தலை நிமிர்ந்து பார்த்தேன் . ஆ என்னையே என்னால் நம்ப முடியவில்லை. என் எதிரே கவியரசர் . அழகிய முகம். நெற்றியில் அழகு குங்கமப்பொட்டு .மேலே விபூதியின் சிறு கீறல் .முகத்தில் புன்னகை . “வாருங்கள் வாருங்கள் நீங்கள் இங்கு வர நான் என்ன தவம் செய்தேனோ . என் பார்வையில் கண்ணதாசன் என்று பல தடவை நான் சொன்னதால் நீங்கள் நேரே வந்துவிட்டீர்கள். இல்லையா ?. என்றபடி என் கையை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன் .பின் “அமருங்கள் “என்று ஒரு கட்டிலைக்காட்டினேன் . அவர் எப்போதும் கட்டிலில் சாய்ந்தபடியே பல முத்துக்களை நமக்குத்தந்திருக்கிறார். அவரும் அதில் அவர் அமர்ந்தார் பௌர்ணமி நிலவின் .நிலாவும் கவிஞரைப்பார்க்க ஆவல் கொண்டு சன்னல் வழியாக எட்டிப்பார்த்தது .நான் அவரிடம் நிலவைக்காட்டி

“கவியரசரே அதோ பாருங்கள் நிலா. . எனக்கு நீங்கள் பாடிய “வான் நிலா” பாடல் ஞாபகம் வருகிறது. ஆஹா அது என்ன பாட்டு ! என்ன லயம்,எல்லாமே “லா, லா என்று முடிகிறதே ! இது போல் எப்படி செய்ய முடிந்தது? அவர் முகம் பிரகாசமானது

“வான் நிலா ,நிலா அல்ல உன் வாலிபம் நிலா, என்று என் வாய் முணுமுணுத்தது.

“வாழ்க்கை வழியிலா ஒரு மங்கை ஒளியிலா .ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா ,அவள் நெஞ்சம் ஏட்டிலா” 

ஆமாம் இந்தப்பாடலை ஒரு 15 நிமிடத்தில் முடித்துவிட்டீர்களாமே! வெரி கிரேட் கவிஞர் சார். “பட்டின பிரவேசம் ‘படத்திற்காக எம் எஸ் வி அவர்கள் ஒரு டூயூனை முனகிக்கொண்டு வர அதை திரு பாலசந்தர் கேட்க அதற்கு ஒரு பாடலை உங்களிடமிருந்து வாங்கி வரச்சொன்னார் இல்லையா? அவரும் உங்கள் வீடு தேடி வந்து அந்த இசையை . ஹார்மோனியத்தில் வாசித்தவுடனேயே இந்த முத்தைத் தந்துவிட்டீர்கள் நீங்கள்…என் பார்வையில் நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள் . என்ன நிதரிசனம் “ .

கவிஞர் இதைக்கேட்டு புன்னகை புரிகிறார் .

“கவியரசரே உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ? உங்களால் தான் என் மகனும் பேரக்குழந்தைகளும் தமிழ் பேசுகின்றனர்.உங்கள் பாடல் தான் என்னையும் மாற்றியது ,உங்கள் வாழ்க்கையின் கடைசி நேரம் நீங்கள் சிகாகோவில் இருந்தீர்கள்..அப்போது அங்கிருக்கும் தமிழர்களின் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே பேசின. .அதைக்கண்டு நீங்கள் மனம் வருந்தினீர்கள்.. அப்போது ஒரு பாடல் பிறந்தது.

“மனதில் ஒன்று பட்டு சேர்ந்திடுவீர். ,
மழலைகள் தமிழ் பேச செய்திடுவீர்,
தமக்கென கொண்டுவந்தேதுமில்ல, –பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை.”

இதனால் என்வீட்டுக் குழந்தைகளும் என் முயற்சியால் தமிழ் பேச ஆரம்பித்தன. தவிர உங்கள் பாடல் ஒன்று என் தந்தையின் நிலையையே மாற்றியது.அப்போது நான் உங்கள் பாடலின் சக்தியை நன்கு உணர்ந்தேன்.”
.”அது எந்த பாடல்? உங்கள் தந்தைக்கு என்ன ஆயிற்று?”

அந்த ஒரு நாள். மறக்கமுடியாத நாள் . இரவில் படுத்த என் தாய் காலையில் . எழுந்திருக்கவில்லை. என் அப்பா நிலைக்குலைந்து போனார்.. அவருக்கு உலகமே என் தாய்தான். கேவிக்கேவி அழுதார். பின்னர் ஏதோ இயந்திரம் போல் ஆனார்.தினமும் என் தாயின் போட்டோ வைத்து மாலை அணிவித்து பூஜை செய்வார்.இரவில் தூங்கமாட்டார். எத்தனை வைத்தியம் செய்தும் பலனில்லை. ஆனால் உங்கள் பாடல் என் தந்தையின் நிலையை மாற்றியது.. அவர் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெற்றார்.டாக்டர் மருந்து செய்யாதது உங்கள் பாடல் செய்தது . என்ன சக்தியான பாடல் !

“ நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி ஏதுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே,
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே .

எங்கே வாழ்க்கை தொடங்கும் .அது எங்கே எவ்விதம் முடியும் ?
இது தான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் “

இதேபோல் தான் திரு வாலி அவர்கள் தன் வருமையின் காரணமாக மனம் ஒடிந்து தற்கொலை செய்துக்கொள்ளும் முடிவுக்கே போய்விட்டார். அவரையும் உங்கள் பாடல் மாற்றியது. ஞாபகம் இருக்கிறதா?”

இருக்கிறது என்றபடி கவிஞர் தலையை ஆட்டுகிறார்.

“ஆம் அந்தப்பாடல் “ மயக்கமா.தயக்கமா? மனதிலே குழப்பமா,
வாழ்க்கையில் நடுக்கமா?
உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு”

இந்தப்பாடல் திரு வாலி அவர்களைக் காப்பாற்றியதுமல்லாமல் அவருக்கு ஒரு புது வாழ்வும் கொடுத்து விட்டது,தவிர அவர் சினிமாவில் பல பாடல்களை எழுத நீங்கள் மனதார அவரைப் பாராட்டினீர்கள் . அவருடைய “ கடல் மேல் பிறக்க வைத்தான் “ என்ற பாடலைக்கேட்டவுடன் அவரைப்பாராட்ட அவர் வீடு தேடி போனீர்கள். அங்கு அவர் ஒரு சிறிய அறையில் இருந்தார். அந்த அறையிலும் ஏழ்மை தெரிந்தது .நீங்கள் அவரைப்பாராட்டி உங்கள் கழுத்திலிருந்த தங்கச்சங்கலியை கழட்டி அவருக்கு அணிவித்தீர்கள். என்ன பரந்த உள்ளம் ! கவியரசர் ஐயா .என் பார்வையில் நீங்கள் மிக உயர்வான இடத்தில் இருக்கிறீர்கள்..

கவிஞர் அவர்களே, வேதம் சொல்கிறது .
“ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் ,பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய, பூர்ணமேவாயா சிஷ்யதே “ ஓம் சாந்தி ……

. பூர்ணத்திலிருந்து எத்தனை எடுத்தாலும் குறைவதில்லை. எத்தனைச்சேர்த்தாலும் வளர்வதில்லை . ’
இதையே எத்தனை எளிமையாக பாடலின் மூலம்சொல்லியிருக்கிறீர்கள்..

“பூஜ்ஜியத்தினுள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுக்கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் .
அவனைப்புரிந்துக்கொண்டால் அவன் தான் இறைவன் “ {Infinity }

முழு சமர்ப்பணம், செய்ய அவன் நம்மைக் காப்பாற்ற ஓடி வருவான் என்கிறது கீதை.அதையே நீங்கள் எவ்வளவு அழகாக காட்டியிருக்கிறீர்கள்.!
ஸ்ரீரமணர் “நான் யார்” என்று தேடி உள்ளொளி கண்டார் .இதையே நீங்கள்

“தெளிவாகத்தெரிந்தாலே சித்தாந்தம் .
அது தெரியாமல் போனால் வேதாந்தம் .
மண்ணைத்தோண்டி தண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி,
என்னைத்தோண்டி ஞானம் கண்டேன் ,இதுதான் என்கட்சி” என்று பாடலில் சொல்லி விட்டீர்கள். .
“மருதமலை மாமணியே முருகய்யா” என்ற பாடலில் மருதமலை முருகனே கண்முன் வந்து நிறுத்தி விட்டீர்கள். கடவுள் யார் என்பதற்கு

“பற்று அறுத்துக்கொண்டு வந்தவர்க்கு சுற்றம் என்று நின்றிருப்பான் ஒருவன்,
அவனைத் தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன் “என்று எழுதி அசத்திவிட்டீர்கள். ‘இது போல் நிறைய நான் படித்தேன். .என் பார்வையில் நீங்கள் ஒரு மகானாக தோன்றுகிறீர்கள். சரி நான் மட்டும் பேசிக்கொண்டே போகிறேன் .குடிக்க பால் தான் இருக்கிறது எடுத்து வருகிறேன் .
“ இல்லை வேண்டாம் .நான் பேரானந்த அலையில் மூழ்கி இருக்கிறேன் அந்த போதைக்கு ஈடு வேறு ஒன்றுமில்லை. இபோதெல்லாம் என்னுள்ளேயும் வெளியேயும் ஒளிமயமாக இருப்பதை உணர்கிறேன் “

என் கைகளைக்கூப்பி அவரை வணங்குகிறேன் பின் மேலே தொடருகிறேன் .
“ கவிஞர் அவர்களே எப்படி நீங்கள் நாஸ்திகத்திலிருந்து ஆஸ்திகத்தில் குதித்தீர்கள்?
“ நான் குதிக்கவில்லை அது என் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. ,.ஆரம்பத்தில் தான் . கொஞ்சம் திசை கெட்டுப்போனேன்’ பலவிதமான கூடாத பழக்கங்கள் “

“ ஆம் நான் கூட படித்தேன் உங்கள் வம்சத்தில் எல்லோரும் பல புண்ணிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள். நாட்டுக்கோட்டை செட்டியார் பிரிவில் வந்த அவர்கள் கோயில் திருப்பணிக்கே பிறந்தவர்கள் .ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணி , வரதராசர் கோயில் திருப்பணி ,காமாட்சிஅம்மன் கோயில் திருப்பணி என்று பட்டியல் நீளும்.அப்படியிருக்கும் போது நீங்கள் எப்படி நாஸ்திகராக இருக்க முடியும் ? ஆரம்பத்தில் இராமாயணத்தை நெருப்பு வைத்துக்கொளுத்தவும் துணிந்தீர்கள் அல்லவா?

“ ஆம் உள் இருந்த இராமன் என் மனதை மாற்றிவிட்டான் .இராமன் எத்தனை ராமனடி பாடலில் பல ராமன்களைப் பார்க்கலாம் “

ஆம் இராமயணப்பாடல்கள் உங்கள் மனதையே மாற்றிவிட்டன. அது போல் திருப்பாவையில் கோதை நாச்சியாரின் திருப்பாசுரங்கள் உங்களை மாற்றிவிட்டன .ஸ்ரீ அரவிந்தருக்கு கண்ணன் தெரிந்தான் .அதுபோல் உங்கள் முன்னும் கண்ணன் தரிசனம் தந்திருப்பான் .கண்ணதாசன் என்ற பெயர் என்ன பொருத்தம் !

“ கவிஞர் அவர்களே,

“புறத்தூயமை நீரான் அமையும் அகம் தூய்மை
வாய்மையால் காணப்படும்”

என்ற திருக்குறளுக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையில் உண்மையே பேசுவதே ஒரு கொள்கையாக இருந்தது. மஹாத்மாஜிக்குப் பிறகு நீங்கள் உண்மைப்பேசுவதைக் கடைப்பிடித்துள்ளீர்கள். எப்படி சொல்கிறேன் என்றால் அது மிகையாகாது. உங்கள் படைப்புகளை ஒளிமறைவு இல்லாமல் எழுதி அதை ஒரு திறந்த புத்தகமாக ஆக்கியிருக்கிறீர்கள். .ஒருவர் தன்னுடைய பலகீனத்தை உண்மையாக ஒப்புத்துக்கொண்டு அதை எழுத்திலும் காட்டுவது மிக அபூர்வம் .
என் பார்வையில் நீங்கள் எட்டாத உயரத்துக்குச்சென்று விட்டீர்கள். .உங்களுடைய மது ,மாது ,சூது போன்ற வேண்டாத பழக்கங்கள் வாய்மை என்ற தீயில் விழுந்து சாம்பலாகி விட்டன..சத்தியமே கடவுள் இல்லையா? “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” என்ற பாடல் எவ்வளவு உண்மை !

எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீ காஞ்சி பெரியவாள் உங்களை ஆசீர்வதித்து
“அங்கிக்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஞான சூரியனாம் நம் மதத்தைப் பற்றி எழுது “ என்று சொன்னார் இல்லையா? அதனால் பிறந்தது “அர்த்தமுள்ள இந்துமதம் “ சரிதானே.”

ஆம் என்பது போல் தலையை ஆட்டுகிறார்,.

“ நீங்கள் திரு சின்னப்பதேவருடன் வரும் போது நடந்த கார் விபத்து ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் இருக்க வேண்டும்.” பிளெஸ்ஸிங் இன் டிஸ்கைஸ் “ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே ! அந்த விபத்தால் நீங்கள் ஆஸ்பத்திரியில் இருக்க தேவர் அவர்கள் காஞ்சி பெரியவாள் முன் நின்று கண்களை மூடிக்கொண்டார். அந்த மகானும் “கண்ணதாசன் எப்படி இருக்கிறான் ? என்று கேட்ட தேவர் அப்படியே பிரமித்துப்போய் நின்றார். பின் பெரியவாள் அவருக்கு விபூதி கொடுத்து அதை நெற்றியில் இடச்சொல்லி அனுப்பினார். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது எப்படி?

நீங்கள் நாஸ்திக அலைகளில் அல்லவா நீந்திக்கொண்டிருந்தார். இருந்தாலும் தேவர் உங்கள் உயிரைக்காக்க நீங்கள் மயக்கமாக இருக்கும் போது நெற்றியில் இட்டுவிட்டார்.. காலையில் நீங்கள் கண்முழித்துப்பின் முகத்தைப்பார்க்க கண்ணாடி கேட்டீர். பின் அதைப்பார்த்தீர்கள். தேவரோ பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆச்சரியம் ! நீங்கள் அமைதியாக விவரங்களைக்கேட்டு நேரே வீடு செல்லாமல் நேரே காஞ்சி மகானைப்பார்க்க அவர் இடத்திற்குச் சென்றீர்கள். அந்த கருணாமூர்த்தியைப் பார்த்து கண் கலங்கி பாவமன்னிப்பு கேட்டு வணங்கினீர்கள். “

“ ஆம் நான் அப்போது அவருக்காக ஒரு கவிதையும் சொன்னேன்.

“ பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகிற தீர்த்தம் பெருக்கு ,
திருவாசகத்தின் உட்கருத்து .

கூர்த்த மதியால் மெய்ஞானக்கருத்துணர்த்தும் முழு மூர்த்தம்.
கலி மொய்க்கும் இவ்வுலகைக் காக்க வந்த கண் கண்ட தெய்வம் .
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத்தலைவனென
தொழுதேத்தும் தெய்வக்கமலக் கழல் தொழுவோம் வாரீர்.”

“ ஆஹா! என்ன அழகு பாடல் ..காஞ்சி மகானின் ஆசிகளுடன் அவருடைய கருணாகடாட்சம் பெற்ற நீங்கள் என் பார்வையில் மிகப்பெரிய இடத்தைப்பிடித்து விட்டீர்கள் “தோன்றின் புகழோடு தோன்றுக “ என்ற குறளுக்கு உதாரணம் நீங்கள் தான் ஆன்மீகத்தில் உங்கள் சாதனை மிகப்பெரியது . அளவிடமுடியாது .”

நீங்கள் சுவாமி விவேகானந்தருக்காக பாடிய பாடல் “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு “ இல்லையா? அதில் வரும் இந்த வரிகள் மிக மிக உண்மையான வரிகள் .

ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி ,கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் “

நீங்கள் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை வெளியில் காட்டிக்
கொள்ளாமல் கடமையைப் பூர்த்தி செய்திருப்பதை தெரிந்துக்கொண்டேன்” . .
“ ஆம் . ஒன்று ஒப்புக்கொண்டால் அதை செய்துமுடிக்கவேண்டாமா?”

“ சரிதான் . ஒரு தடவை திரு எம் .எஸ் வி அவர்களுடன் பாடல் எழுதும் போது ஒரு போன்கால் வந்தது. அதைக்கேட்டப்பின் உங்கள் முகம் மாறியது .முகத்தில் ஒரு கவலை . ஆனாலும் அதை வெளியில் காட்டாமல் ஒன்றுமே நடக்காதது போல் பாடல் புனைந்தீர்கள். அந்தப்பாடல் தான் “ சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுக்கொண்டே சிரிக்கின்றேன் “ ஏன் கவிஞர் சார் உங்கள் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக வந்த போன் காலை எப்படி சாதாரணமாக எடுத்துக்கொண்டு பாடலும் செய்ய முடிந்தது. ? “

“ அதுதான் பாடலில் காட்டிவிட்டேன் . அழுதது போன் காலுக்கு .சிரித்தது பாடலுக்காக வரும் பணத்திற்கு”
“ அப்பப்பா சொல்ல வார்த்தைகளே வரவில்லை. கண்ணதாசன் அவர்களே என் பார்வையில் நீங்கள் மிக உயர்ந்து நிற்கிறீர்கள். .

நீங்கள் எம் ஜி ஆர் அவர்களையும் பாடலில் புகழ்ந்திருக்கிறீர்கள். .

“தேக்கு மரம் உடலை தந்தது. சின்ன யானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது .,பொன்நிலவே நிறத்தை தந்தது,

என்றும்

சேரனுக்கு உறவா, செந்தமிழின் நிலவா? பாரி வள்ளல் மகனா என்றும்
அவரை விவரித்திருக்கிறீர்கள். எம் ஜி ஆர் நீங்கள் எழுதிய பாடல் “ “அச்சம் என்பது மடமையடா “ பாடி தான் மனமொடிந்துப்போனால் தன்னை தேற்றிக்கொள்வாராம். நீங்கள் திரு காமராஜரையும் விட்டுவைக்கவில்லை. திரு காமராஜரை ஐக்கிய நாடுகள் அழைத்த போது

சென்று வா மகனே வென்றுவா “
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது – ஏதும்
அறியாதவன் என்றே நினக்கின்றது “
உண்மையைச்சொல்ல படிப்பெதற்கு.
உணர்ந்தவர் போல் நடிக்கும் நடுப்பெதற்கு …. என்று பாடல் போகிறது

.அவர் திரும்ப முக்கிய மந்திரியாக வர பாடல் மூலம் வாழ்த்து தெரிவித்தீர்கள்.. இதே போல அவர் தான் படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை பாடல் மூலம் போக்கினீர்கள்.

“ படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு ,ஆனால் படிக்காத மேதையெல்லாம் பாரினில் உண்டு “ சினிமாவின் பெயரும் படிக்காத மேதை என நினைக்கிறேன் . எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்த பாடல் “ சட்டி சுட்டதடா” “

“ ஆம் நான் அரசியலை விட்டுவிட தீர்மானித்தேன் அப்போது எழுதியதுதான் இந்தப் பாடல் “ நான் அரசியலை விட்டப்பின் தான் என்னை ஆட்டிப்படைத்த மிருகம் விலகிப்போயிற்று “ .
“ சூப்பர் பாடல் “ என்று சொல்லியபடி அந்தப்பாட்டை முனகுகிறேன்

சட்டி சுட்டதடா ,கை விட்டதடா, .
“புத்தி கெட்டதடா ,நெஞ்சை தொட்டதடா,
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா”

: “ அது சரி கவியரசரே .நீங்கள் எந்த சொல்லைக்கொடுத்தாலும் அதில் பாடல் எழுதி அசத்துகிறீர்கள். திரு எம் .எஸ் வி சார் உங்களுக்கு “தேன் “
என்று முடியும்படி பாடல் செய்ய சவால் விட்டவுடன் உங்கள்பேனாவால்

“பார்த்தேன் . சிரித்தேன் ,பக்கம் வர அழைத்தேன் “ என்று ஒரே தேனாகவே ஒழுக விட்டீர்களே எப்படி சார் .இந்த மேஜிக் ! மிக அருமை சார். என் பார்வையில் நீங்கள் ஆகாயத்தை தொட்டுவிட்டீர்கள் .மேலும் எல்லா மதமும் சம்மதமே என்ற உங்கள் கொள்கை எத்தனை உயர்ந்த கொள்கை. ராமன் .ஏசு. அல்லா எல்லோருமே ஒரே கடலில் கடக்கும் புண்ணிய நதிகள் என்ற பொருள் கொண்ட பாடலும் . “எல்லோரும் கொண்டாடுவோம் .அல்லாவின் பெயரைச்சொல்லி” என்று பாடலும் . ஏசு காவியமும் உங்கள் நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த அணுகுமுறையில் நீங்கள் என் பார்வையில் மிக உயர்ந்த இடத்தைப்பிடித்து விட்டீர்கள். “

“நீங்களும், இசை மன்னர் திரு எம் எஸ் வி அவர்களும் நகமும் சதையும் போல் இருந்தீர்கள். .
“கங்கை .யமுனை .இங்குதான் சங்கமம் .” சிப்பி இருக்குது முத்து இருக்குது “ போன்ற பாடல்கள் இதைத் தெரிவிக்கின்றன.

ஆமாம் நீங்கள் காமெடி செய்து உங்கள் நண்பர்களை அழ வைத்தீர்களாமே! அந்த சம்பவத்தை நானே ஞாபகப்படுத்துகிறேன் . நீங்கள் உங்கள் குரலை மாற்றிக்கொண்டு டெலிபோனில் உங்கள் இணைப்பிரியா நண்பரிடம் “கவிஞர் இறந்துவிட்டார்.” என்று சொல்ல பாவம் மெல்லிசை மன்னர் அலறி அடித்துக்கொண்டு தன் நண்பர்களுடன் அழுதபடி உங்கள் இடத்திற்கு ஓடி வந்தால் நீங்கள் சிரித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தீர்கள். ஏன் இப்படி செய்தீர்கள் கவிஞர் அவர்களே?”

“ ஓ அதுவா. நான் இறந்தால் யார் முதலில் என்னைப்பார்க்க வந்து அழுவார் என்று எனக்கு பார்க்க ஆசை .அதனால் தான் ……….”

‘ஐயோ பாவம் மெல்லிசை மன்னர்.. கவிஞர் அவர்களே உங்கள் முதல் பாடல் “கலங்காதிரு மனமே “ கடைசி பாடல் “கண்ணே கலைமானே” இரண்டும் ‘க’ வில் ஆரம்பம் உங்கள் பெயரும் ‘க’ வில் ஆரம்பம் நீங்கள் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி வாழ்க்கை பயணம் முடிந்த ஊர் சிகாகோ . இரண்டும் “சி’ யில் ஆரம்பம் .எங்கே வாழ்க்கை பயணம் அது எங்கே எவ்விதம் முடியும்?” என்ற கேள்விக்கு பதில் ஒருவருக்கும் தெரிவதில்லை . உங்கள் வனவாசம், மனவாசம் இரு புத்தகங்கள் உங்கள் வாழ்க்கையின் திறந்த புத்தகங்கள்.. நீங்கள் எழுதிய பாடல் உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கிறது . நீங்கள் கண்ணன் காட்டிய கீதையின் பல அம்சங்கள் பாடலில் கொணர்ந்து வந்திருக்கிறீர்கள்.

இது போல் கவிதைகள் செய்ய இனி ஒருவர் பிறக்க வேண்டும் . கவிஞர் அவர்களே என் பார்வையில் நீங்கள் ஒரு புடம் போட்ட தங்கமாக ஒளி வீசுகிறீர்கள் .எனக்கு ஒரு வருத்தம் . உங்களுக்கு பத்மபூஷன் பட்டம் கண்டிப்பாக கிடைத்திருக்க வேண்டும் நீங்கள் மட்டும் சிறுகூடல்பட்டியில் பிறக்காமல் அமெரிக்காவில் பிறந்திருந்தால் உங்களுக்கு மிக எளிதாக நோபல் பரிசு கிடைத்திருக்கும் .”

அருகில் இருக்கும் கோயிலின் மணி இரவு பூஜை முடியும் சமயம் “டண் டண். என்று ஒலித்தது “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்று நான் முனக “ஏன்டி இன்னும் அந்த ரூமில் தனியாக உட்காந்து என்ன செய்யறே? என்று என் கணவர் கத்த என் கவியரசரும் ஆலயமணி ஓசையுடன் மறைந்து போனார் .

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “என் பார்வையில் கண்ணதாசன்

 1. ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது என்று பாடிச் சென்ற கவிஞர் கண்ணதாசனுக்கு அதைத் தமிழ் உலகுக்கு நிரூபித்துக் காட்டி, இனியதோர் அனுபவக் கட்டுரை ஆக்கிய விசாலம் மூதாட்டிக்கு, எனதினிய பாராட்டுகள்.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்

 2. கவிஞரை வரவேற்று உபசரித்து.. அவரோடு உரையாடி மகிழ்ந்த பகுதிகளே உள்ளடக்கங்களாக.. இந்தக் கட்டுரையில் மிளிர்வது தனிச்சிறப்பு! 

  நீங்கள் எடுத்துக்காட்டியிருக்கும் அத்தனைப் பாடல்களும் பொருத்தமாக அமைந்திருக்கின்றன!  எங்குமே.. திகட்டிவிடாத இனிப்பைப்போல.. திட்டமிட்டு வரையப்பட்ட கட்டுரை.. உங்களைக் கெட்டிக்காரர் என்று காட்டிக்கொடுத்துவிட்டது!!

  கவிஞரின் வாழ்வில் நடந்த சம்பவங்களையும்கூட ஆங்காங்கே தக்கபடி எடுத்தாண்டிருக்கிறீர்கள்.. கண்ணதாசன்.. கண்ணதாசன் என்று துடித்துக் கொண்டிருக்கும் எனக்கு .. உங்கள் கட்டுரையில் கிடைத்த புதிய செய்தி சொல்லவா…  ஆம்.. சிறுகூடற்பட்டியும் சிகாகோவும் ‘சி’யில் தொடங்குகின்றன என்பதே.. 

  சீரோடும் சிறப்போடும் உங்கள் எழுத்துப்பணி மேம்படட்டும்.. அதற்கு கவியரசர் ஆத்மா ஆசி வழங்கட்டும்!  

  அன்புகலந்த நன்றிகளுடன்..

  காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *