கலைமகள் வீணை கண்ணதாசன்!- கவியரசு கண்ணதாசன் 88வது பிறந்த நாள் சிறப்புப் பதிவு
–காவிரிமைந்தன்.
கவியரசரது சிந்தனையில் பிறந்துவந்த கற்பனையில்
கொடிகட்டிப் பறக்கும் இனிய பாடல்கள் எத்தனையோ?
கவிதை நயம், கற்பனை வளம், சொல்லாட்சி, பொருள்நயம் என
பட்டியலிட்டால் பல காத தூரம் நீளும்!!
காதலா.. தத்துவமா.. பக்தியா.. பாசமா.. மனித
உணர்வுகளை வார்த்தைகளால் மீட்டித்தந்த
கலைமகள் வீணை கண்ணதாசன்!
ஏகாந்தமாய்.. எழுத்துக்களாய்.. எண்ணமின்னலாய்
வந்தவையும் இங்கே வரவில் உண்டு!
எண்ணற்ற கவிஞர்பெருமக்கள் நம் தமிழை எடுத்து ஆண்டாலும்
என்றைக்கும் நம் நெஞ்சில் கவிஞர் என்றால் ‘கண்ணதாசன்’
பண்டிதர்மட்டுமே பயின்றிருந்த பைந்தமிழை – இங்கே
பாமரனும் முணுமுணுக்க வைத்தவர் கண்ணதாசன்!
உறவுக்கும் பிரிவுக்கும் உயிர்கொடுக்கும் வார்த்தைகளை – நம்
உள்ளங்களில் பதியவைத்தவர் கண்ணதாசன்!
அனுபவப் பிழிவுகளின் சாரங்களாம் தத்துவங்கள்!
அணிவகுத்துப் பாடல்களில் கொடுத்தவர் கண்ணதாசன்!
கனிந்துருகும் காதலினைக் கெளரவமாய் எழுதிவைத்து
காலங்களைக் கடந்துநிற்கும் கவியரசர் கண்ணதாசன்!
பெருகிவரும் உணர்வலைகள் யாவுமிங்கே ..
பெரும்பாலும் அவன்வரைந்த பல்லவியில் சரணமன்றோ?
பொருள் பொதிந்த வேதங்களையும் உள்வாங்கி
நயமான வார்த்தைகளால் பாடல்தந்து
எளிமையுடன் எடுத்துச்சொன்னப் பாவலனை..
எந்நாளும் மறவாமல் நாடு போற்றும்!!
அழகான வார்த்தை வரும்
அதற்கேற்ற ஓசை தரும்
ஆழ்ந்தபல அர்த்தங்களும்
ஆங்காங்கே நிறைந்திருக்கும்!
பழகியநல் மொழியினிலே
பல்லவிகள் கண்திறக்கும்!
சகஜமாய் நம்முடனே
சரணங்கள் தொடர்ந்துவரும்!!
பரபரப்பு மிகுந்திருக்கும் வாழ்க்கையிலே
படபடப்பு அதிகமாகி வாழுகின்றோம்!
துடிதுடிப்பு இதயத்திற்கு வேண்டும்தான்
துவளாமல் இருப்பதற்கு வழிகளுண்டு!!
அமைதியாய் சிலநேரம் கடக்க வேண்டும்!
ஆனந்தமாய் சிந்தையது நிறையவேண்டும்!
அன்புநதி ஓடிவரும் பாதையில்தான்
இன்பமது கிடைக்குமென்று நாம் அறிவோம்!
துன்பநிலை என்பதுவும் வந்துபோகும்
துயரமில்லை என்பதற்கே நெஞ்சம்வேண்டும்!
கண்ணயர்ந்து உறங்கிவிடும் முன்பாக..
காதில்விழும் தேனருவி கேட்கவேண்டும்!!
கவிதையுடன் இசைநடந்து வரும்அழகை
ரகசியமாய் தென்றல்நமைத் தொடும்விதத்தை
வரிகளிலே முழுதும்சொல்ல வழிகளில்லை!
ரகம்ரகமாய் ரசிப்பதற்கு பொருள்களுண்டு!
புன்னகையும் பூங்காற்றும் நம்மைத்தழுவ
பூத்திருக்கும் மலரிதழ்கள் போல்சிரிப்போம்!
கண்ணசைவில் கற்பனைகள் மொட்டவிழ
கனிந்துவரும் பாடல்களில் நமைமறப்போம்!!
மானிட வாழ்வியலை மணி மணியாய் வகுத்து – அதில்
மறைந்திருக்கும் உண்மைகளை தத்துவமாய் கொடுத்து
மாபெரும் கவியரசராய் உயர்ந்தவர் கண்ணதாசன்!
“மணி கொண்ட சரம் ஒன்று கனல் கொண்டு வெடிக்கும்” –
– இராமாயணத்தில் சீதையின் நிலையை (சுயவரம் நடக்கின்ற போது) எடுத்து சொல்லும் விதம் – ராமன் மேல் கொண்ட காதலினால் – அவன் வில்லை வளைப்பானா என்ற கவலை கொண்டு சோகமே உருவாகி இருந்த சீதையின் நிலையை கண்ணதாசன் தனது பாடலில் – கவலை, சோகம், துயரம் கொண்ட சீதையின் கொதிக்கின்ற மூச்சினால் எழுந்த வெப்பக் காற்றினால் அவளது கழுத்தின் மணி மாலை கருகி வீழ்கின்றது – இதை “மணி கொண்ட சரம் ஒன்று கனல் கொண்டு வெடிக்கும்” போன்ற வரிகளால் நிறைத்த கர்ணன் திரைப்பாடல்கள் காலத்தை வென்று இன்றம் கண்ணதாசன் பெயர் சொல்லித் திகழ்கின்றன.
சொல்லுக்குள்ளே சூத்திரங்கள் இத்தனை இத்தனையா
எண்ணியெண்ணிப் பார்க்கும்போது எத்தனை வியப்பு!
ஒற்றைவரியெழுத உனக்குள் ஓராயிரம் எண்ண அலைகள்!
முத்துக்குளித்தன்றோ முகிழ்த்துவரும் உன் பாடல்!
தத்துவம் எதுவென்று எவரும் கேட்டால்
தவறாமல் உன் ஒற்றைப் பாடல் போதுமென்பேன்!