வல்லமை – சிந்தனை,செயல், முன்னேற்றம் – தலையங்கம்

0

பவள சங்கரி

மங்கை எனும் கங்கை!

அவள் பள்ளி இறுதியாண்டு படிக்கும் துடிப்பான 15 வயது இளம் பெண். தந்தையின் மரணம் அவளையும் அவள் தாயையும் பல விதங்களில் பாதித்துள்ளது.வாழ்க்கைச் சீற்றத்தை எதிர்த்துப் போராட எந்த பின் புலமும் இல்லாத நிலையில் மாமனின் வீட்டில் தாயும், மகளும் அடைக்க்லமானார்கள். அந்த இளம் பிஞ்சு உள்ளத்தில் ஆயிரம் கனவுகள். எப்படியும் படித்து உயர்ந்த நிலைக்கு வந்து தன் தாயையும் காக்க வேண்டுமென்று. ஆனால் விதியின் விளையாட்டோ வேறு திசையை நோக்கி இழுத்துச் சென்றது.ஆம், மனைவியை இழந்து, மறுமணம் செய்து கொள்ளும் ஆவலில் அலைந்து கொண்டிருந்த ஒரு 38 வயது இளைஞரின்(?) கண்ணில் அந்த இளம் பிஞ்சு பட, துபாயில் தான் சம்பாதித்துக் கொண்டு வந்து சேர்த்து வைத்திருக்கும் சொத்தை காட்டி மயக்க, மாமன்காரனோ நல்ல சம்பந்தம் திருமணம் செய்து கொடுத்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்த தாயும் மனம் மாறி மகளை வற்புறுத்த, செய்வதறியாது திகைத்த அந்த மன முதிர்ச்சியற்ற இளம் பெண் பாவம் தனக்கு உறற தோழியாக இருந்த உறவுக்காரப் பெண்ணின் வீட்டிலேயேச் சென்று எலி மருந்தைச் சாப்பிட்டு உயிர் துறக்க முடிவெடுத்து விட்டாள். தனக்கும்  17 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டு எதிர்காலத்தையே தொலைக்க வைத்த சொந்தங்களின் மீது உள்ள கோபத்தில், தன் கண் முன்னே திரும்பவும் இது போன்று இன்னொரு பெண்ணிற்கு நடக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவளுக்கு நல்லறிவுரைகள் சொல்லி கல்வியைத் தொடரச் செய்ய முயற்சித்தும் உறவினரின் கட்டாயம் அவள் செய்வதறியாது தன் உயிரையே இழக்கத் துணிந்தாள்.

இதெல்லாம் திரைப்படக் கதையோ அல்லது தொலைக்காட்சித் தொடரோ அல்ல. திருச்சி மாவட்டத்தின் வாலசிராமணி எனும் கிராமத்தில் ஒரு பெண்ணிற்கு நடந்த கொடுமைதான். அந்தப் பெண் ஆண்டவன் கிருபையால் இறப்பின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்டு, மாவட்ட சமுக நலத்துறை அதிகாரி ஆர்.சாந்தா மற்றும் மன நல மருத்துவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் ஆலோசனைகளால் ஓரளவிற்கு தெளிவடைந்தவள் இனிமேலும் இது போன்று ஒரு தவறை செய்வதில்லை என்று உறுதியளித்தாள்.சமூக நலத்துறை அதிகாரி சேலத்திலுள்ள அரசாங்க விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்தும் அந்தப் பெண் அதை விரும்பாமல் திரும்பவும் நம்பிக்கையுடன் அந்த வீட்டிலேயே இருந்து படிக்க விரும்புவதாகக் கூறி விட்டாள்.இருப்பினும் உறவினர்களால் ஏதும் பிரச்சனை வந்தால் அவள் எந்த நேரமும் தங்களை நெருங்கலாம் என்ற நம்பிக்கையும் அளிக்கப்பட்ட காரணத்தினால் இன்று நம்பிக்கையாக இல்லம் திரும்பியுள்ளாள் அந்த அப்பாவிப் பெண்.நாமக்கல் மாவட்டத்தில் ஜம்புமடை எனும் இடத்தில் 20 பெற்றோர் சென்ற ஒரு வாரத்தில் பெண் குழந்தைகளுக்கு சட்ட விரோதமாக 18 வயதிற்கு கீழே திருமண்ம் செய்ய முயற்சித்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் அதிர்ச்சியான தகவல் ஆகும்.

இந்த 21ம் நூற்றாண்டில் கூட இப்படி ஒரு கொடுமை எங்கனம் சாத்தியம்.பெண்கள் இன்று நுழைந்து சாதிக்காத துறையே இல்லை எனலாம். ஆண் குழந்தைகளுக்குச் சமமாக அனைத்துத் துறைகளிலும் சரிசமமாக, இன்னும் சொல்லப் போனால் அதிக உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் சில நேரங்களில் ஒரு பெண்ணே ஒரு பெண்ணிற்கு தடையாக இருக்கிற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஒரு தாயாகவோ, தமக்கையாகவோ, மாமியாராகவோ, பாதுகாப்பு என்ற பெயரில் முன்னேற்றத்திற்கு தடையாகவும் நிற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள் என்பதும் நிதர்சனம். ரேகிங், பாலியல் வன்முறை இப்படிப்பட்ட பல கொடுமைகளிலிருந்து பாதுகாக்க திருமணம் ஒன்றே தீர்வு என்றே பல பெற்றோர் அந்த காலந்தொட்டு முடிவெடுக்கிறார்கள். இது போன்று தவறான முடிவெடுப்பதை விட்டு,அந்தக் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகள், மன உறுதி, துணிச்சல், தைரியம் போன்றவற்றை தாய்ப்பாலுடனே ஊட்டி வளர்க்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் அவசியமாகிறது இன்று.

ஆ‌ண்டு தோறு‌ம் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டு ‌உ‌யி‌ரிழ‌ப்பவ‌‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே வரு‌கிறது.  இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 68 ‌விழு‌க்காடாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதில் 75 சதவீதம் பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 14 வயதுக்கு குறைவான 2,500 குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களிடையே, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க அரசாங்கம் மற்றும் சமுக நல அமைப்புகள் மூலம் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் இதில் குடும்பத்தில் உள்ளவர்களின் பங்கு மிக அவசியமானதாகும். வாழ்க்கையை முழுதாக புரிந்துகொள்ளாத 25 வயதுக்கும் குறைவானவர்களே, தற்கொலை முயற்சியில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.

75 சதவீத தற்கொலைகள் மன நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத குறைந்த வருவாய் நாடுகளிலேயே நடைபெறுகின்றன.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்பவர்களே அதிகம். ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதை எளிதில் தடுத்து விட முடியும். இதற்கு அரசு துறைகளும் சமூக நல அமைப்புகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.மக்களிடம் தேவையான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது.

இது போன்ற நிகழ்வுகளால் பெருமளவில் மனதளவில் பாதிக்கப்படுகிற பெற்றோர்கள் பெண் குழந்தைகள் பிறப்பதையே தவிர்க்கக் கூடியச் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தற்போதைய கணக்கெடுப்பின்படி ஆண், பெண் பிறப்பு விகிதங்களில் பெரும் இடைவெளி ஏற்பட்டு, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதங்கள் குறைந்து வருவது கவனித்து வருந்த வேண்டிய செயலாகும். அரசாங்கமும், சமூக நல நிறுவனங்களும் அக்கரை கொண்டு செயல்பட்டால் சிறப்புடையதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *