அரசுப் பள்ளி- மறவபாளையம்

கல்வி துளிர்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் சொல்றது கொங்குநாட்டு சிங்கிங்க. நான் இன்று உங்களிடம் பேசப் போவது கல்வித்துளிர் என்னும் தன்னார்வ அமைப்பைப் பற்றி.

காங்கயம் அருகிலுள்ள மறவபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் செயல்படும் அமைப்பே கல்வித்துளிர். எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க,காரணம் சொல்றவன் காரியம் செய்யமாட்டான், காரியம் செய்யறவன் காரணம் சொல்லமாட்டான்னு. அது போல, அரசுப் பள்ளியில் படித்து முட்டிமோதி கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் தலைமுறை பட்டதாரிகளால் நடத்தப்படும் முன்னாள் மாணவர்கள் அமைப்பே கல்வித்துளிர்.

பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சிவப்ரகாசம் அவர்களே மீண்டும் அப்பள்ளிக்கு 2009 ம் ஆண்டு இறுதியில் தலைமையாசிரியராக வந்துள்ளார். அவரின் முயற்சியாலும், முன்னாள் மாணவர்களிடம் அவருக்கு இருந்த நல்லுறவின் காரணமாக உதயமானதே கல்வித்துளிர்.

பணம் என்னும் மாயக்காரனால் பள்ளிக் கல்வி மறுக்கப்படும் அனைவருக்கும் உதவுவதும், இயற்கை விவசாயம், சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக உழைப்பதும் அவர்களின் நோக்கம். ஊர் மக்களை தன்னுடன் இணைத்துக் கொள்வது, கல்விக்கு உதவிட விரும்பும் மனமுள்ளவர்களை தன்னுடன் அணைத்துக் கொள்வது என திண்ணிய நெஞ்சமுடனும் தெளிந்த நல்லறிவுடனும் ஜந்தாண்டுகளுக்கு மேலாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது கல்வித்துளிர்.

ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் அரசுப்பள்ளியில் பல பேர் படித்து பலனடைந்த வரலாறு, வெறும் சில பேர் படிக்கும் பள்ளியாய் மாறிப் போனது. எட்டு வகுப்புக்கள் கொண்ட பள்ளிக்கு இரண்டே இரண்டு ஆசிரியர்கள். ஆசிரியர்களின் சம்பளத்தில் ஒரு சிறு பகுதி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கல்வித்துளிர் தரும் சிறு பகுதின்னு போட்டு மூன்று பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு கல்விக்கண் திறந்துள்ளனர். இடைவிடாத போராட்டத்தின் விளைவாய், தமிழக அரசு ஒரு ஆசிரியரை இந்த கல்வியாண்டு முதல் நியமித்துள்ளது.

பிள்ளைகளுக்கு கல்வியோடு சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என வாழ்ந்து படிக்கும் பாடங்களை சுயமுன்னேற்ற வகுப்புகள் மூலமாகவும்,ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது.

மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை வளர்க்க தனித்தனி அஞ்சலகக் கணக்குகளில் சிறுசேமிப்பு. தொலைக்காட்சியில் தன்னை தொலைக்காமல் இருக்க, காக்னிஸண்ட் மென்பொருள் நிறுவனத்தால் ரூ.30,000 அதிகமான மதிப்பில் வழங்கப்பட்ட புத்தகங்களைக் கொண்டு பள்ளியிலேயே நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள கணினிகள் மூலம் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவும், இணையம் பற்றிய பயிற்சிகளும் தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்படுகிறது.

டைல்ஸ் / கிரானைட் தரை,அனைவருக்கும் தரமான சீருடை,LCD புரஜெக்ட்டர், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறை என காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை அடிப்படை வசதிகளுடன் சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் உழைத்துக் கொண்டுள்ளனர். தங்கள் தேவைக்கும் அதிகமாக வரும் அன்பளிப்புகளை சென்னிமலையில் உள்ள பாரதியார்.மன நலம் குன்றிய அமைப்பு, சிவன்மலை கோயிலால் நடத்தப்படும் கருணை இல்லம் என கொடுத்துவிடுகிறார்கள்.

முகநூலில் பக்கம் அமைத்து முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்களை இணைக்கின்றனர் (https://www.facebook.com/govtschoolmaravapalayam).

மறவபாளையம் அரசுப் பள்ளியில் வேர் விட்டு உலகெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் தற்போது வேரைத் தாங்கும் விழுதுகளாய் முளைக்கத் தொடங்கியுள்ளனர். வரும் காலங்களில் அவர்களின் விழுதுகள் பக்கத்துக் கிராமங்களுக்கும் வேர் பிடிக்க நாமும் வாழ்த்துவோம்.

கல்வித்துளிரில் இணைய : [email protected].
முகநூலில் : https://www.facebook.com/kalvi.thulir

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க