ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 5

அண்ணாமலை சுகுமாரன்


முதல் பால் —வீட்டுநெறிப் பால்

அதிகாரம் ௧ ( 1 )     பிறப்பின் நிலை

உடலின் 96   தத்துவங்களில் ஐந்து தன்மாத்திரைகள் ஆசையுடன் கூடி, புலன்களுடன் செயல்படும் போது வாழ்வு குழப்பமடைகிறது என்பதை முந்தையக் குறளில் கண்டோம்.

அதைப் படித்த சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசி சில வினாக்களை எழுப்பினார்கள். ஆசையில்லாத மந்த நிலை தான் வேதாந்தத்தின் லட்சியமா? வாழ்வை அப்படித்தான் நடத்த வேண்டுமா? என்று வினவினார்கள்.  அவர்கள் கேட்ட வினாக்களில் அர்த்தமிருந்தது .

நான் அவர்களுக்கு அளித்த பதிலை உங்களுடன் பகிர்ந்து கொண்டு மேலேப் போவது உசிதமாகும் என எண்ணுகிறேன்.  அப்படி ஆசை இல்லாமல் செயலற்று இருப்பதானால் நம்மைச் சுற்றி இருக்கும் கல்லும், மரங்களும் சிறந்த ஞானிகள் ஆகி விடுமே? என்பது எனது பதில் வினாவாக அமைந்தது.

அவைகள் தான் எப்போதும் ஒன்றும் செய்வது கிடையாதே! எந்த ஆசையும் அவைகளுக்கு இருப்பது போல் தோன்ற வில்லையே!  ஔவை விளக்க விரும்பியது அப்படி இல்லை.  வாழ்க்கை என்பது செயல்களால் ஆன செங்கல் கட்டிடம்.  செயல் இல்லாத வாழ்கை இல்லை.  பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், செயல்புரிவதற்கு பொதுவாக நாம் கொள்ளும் ஆசை கூட இல்லாமல் எப்படி செயல் படுவது என்று? செயலில் உணர்வும் உணர்ச்சியும் வேண்டாமா? என்று கேட்க்கிறார்கள்.  ஆனால் செயல் புரியும் போது, ஆசை எனும் உணர்வு குறையும் போது தான் நம்மிடம் அமைதி பெருகுகிறது.  செயல் அதிகம் ஆகிறது.

உண்மையான செயல் முறை என்பது, எனன நடந்தாலும் சம நிலைக் குறையாத, கலங்காத, நிரந்தர அமைதி கொண்டிருப்பவரிடத்து மட்டுமே சிறப்பாக அமையும்.  இந்த உலகின் மிகச் சிறந்த செயல் வீரர்களை, அவர்களின் வாழ்வை ஆராய்ந்தால், அவர்கள் அற்புதமான அமைதி கொண்டவராகவே இருப்பார்கள்.  அமைதியான, மன்னிக்கக் கூடிய, சம நோக்குடைய, நிலை குலையாத, மனம் உடையவனே அதிக மதிப்புள்ள செயல்களை எளிதில் செய்ய முடிகிறது.  ஆசையோ அதைத் தொடர்ந்த ஏமாற்றமோ, கோபமோ இருக்கும் இடத்தில் ஆற்றல் நஷ்டம் தான் உண்டாகிறது.  கிரிக்கெட்டில் கூட அமைதியாக சம நிலையில் உள்ள, பதற்றம் இல்லாத வீரர்கள் மட்டுமே அதிக ஓட்டங்களையும், வெற்றிகளையும் பெற முடிகிறது.  வெற்றிக்கும் சாதனைக்கும் தேவை அமைதியும், பதறாத தன்மையுமே தவிர உணர்ச்சி வேகம் அல்ல.  அது செயல் புரியும் சக்தியில் நஷ்டத்தைத் தான் ஏற்படுத்தும்.  ஆசை என்பது உயர்ந்த லட்சியங்களை குறித்து நோக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.  ஆனால் செயல் புரியும் போது, அந்த ஆசையின் வேகம், உணர்வு வெளிப்பாடு இல்லாமல், அமைதியும், சம நிலையும் கொண்டு செயல் பட வேண்டும்.

 

அடுத்த குறள், வாழ்வின் பயன்கள், புருஷார்த்தங்கள் எனன என்பதை விளக்குகிறது.  சிறுகச் சிறுக ஞானத்தின் மையப் பகுதிக்கு இட்டுச் செல்கிறது.

தருமம் பொருள் காமம் வீடெனும்  நான்கு முருவத்தாலாயபயன்

 

தருமம் = தர்மம் ,அறம்

பொருள் = செல்வம்

காமம் = இன்பம்

வீடு = வீடுபேறு

எனும் = என்று கூறப்படும்

உருவத்தால் = இந்த மேனியால், உடலால்

ஆய = உண்டான

பயன் = பயன்பாடு

 

அறம், பொருள் இன்பம் ,வீடுபேறு இவைகளே இந்த தேகம் பெற்றதன் பயன் என்கிறார் இந்தக் குறளில் சித்தர் ஔவையார்.

எவ்வளவு எளிதாக பொருள் இருக்கிறது போல் தோன்றுகிறது.  திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என வகுத்தார். ஔவை அறம், பொருள், இன்பம், வீடு இவையே இந்த மேனி பெற்றதின் பயன் என்கிறார்.  ஆனால் ஔவை கூற வந்தது மேம்போக்காகத் தெரியும் அறம்,பொருள், இன்பம், வீடு எனும் உலகாய அர்த்தத்தில் அல்ல.  இன்னும் கொஞ்சம் ஆழமான ஞானப் பொருள் படைத்தது இந்தக் குறள்.

சந்தேகம் இல்லாமல் இந்த உலகம் சில தர்மங்களால் மட்டுமே இயங்குகிறது.  தர்மங்கள் தவறும் போது, இயற்கை கோபம் கொள்கிறது.  அறம் என்பது தர்ம நியாயங்கள் நியதிகளே தவிர, பிறருக்கு ஈயும் தானம் மட்டுமல்ல.  எனவே தான், தான தர்மம் எனக்கு கூறப்படுகிறது.  தானம் என்பது தர்மங்களில் ஒன்று, தானம் என்பது ஒருவித தியாகம்.  ஆனால் இங்கே குறிப்பிடப்படும் தர்மம் அத்தகைய தர்மங்கள் அல்ல.  இது ஆன்மாவை அறியும் தர்மம், ஆன்மாவை அறியும் இயல்பு.  அதுவே மனிதனின் மாறுதலற்ற இயல்பு.  ஆன்மாவே, ’தான்’ என அறியும் தர்மம் தான் உண்மையான தர்மம்.  அதுவே பிறவியின் பயன்.

பொருள் எனக் கூறப்படுவதும் வாழ்க்கை நடத்த அறவழி செல்ல தேவைப்படும் பொருள் மட்டுமல்ல.  அற வாழ்வு நடத்த அத்தகைய பொருளும் மிகவும் தேவையான ஒன்றுதான்.  ஆனால் வள்ளுவர் கூட அருள்நிலை வேறு, பொருள் வேறு என்கிறார்.  ஔவை கூற விழையும் பொருள், இந்த மேனியில் அமைந்த மகத்தான செல்வத்தை, அதன் பொருளை உணருவதே ஆகும்.

காமம் என்று ஔவை கூறுவதும் உலகியலின் ஆசை காமத்தை மாத்திரம் குறிப்பிடுவதல்ல.  உலகப் பெருக்கத்திற்கு காமம் அவசியமே.  ஆனால் இங்கு ஔவை கூறும் ஞான விளக்கம் ஆசை என்பது உடலில் இருக்கும் உறுப் பொருளை அறியும் ஆசையே ஆகும்.  வாழும் போது வீடு பெற அனைவரும் முயலுகின்றனர்.  தினமும் வெளியே சுற்றி அலைந்து பின் வீடு சேர்வதையே ஒய்வு என்று எண்ணுகின்றனர்.  தினமும் செயல்கள் முடிந்து புறப்பட்ட இடத்தைப் போய் சேருகிறோம். அதையே வீடு என்கிறோம்.

ஆனால் மீண்டும், மீண்டும் பிறந்து தொடரும் இந்த நீண்ட பயணம் முடியும் போது, பிறவாமை நேரும் போது, இருக்க ஒரு வீடு வேண்டாமா?  இந்தப் பயணம் புறப்பட்ட போது எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போய்ச் சேர வேண்டாமா? அத்தகைய வீடு ஒன்றை வாழும் போதே தயார் செய்து கொள்ள வேண்டாமா?  அதையே வீடு என்கிறார் ஔவை இந்தக் குறளில்.  அதுவே இந்த உடம்பு பெற்றதின் பயன்.  இதுவே தேட வேண்டிய செல்வம்.  உடலில் வாழும் போதே அதற்கான நெறிகளைக் கடைபிடித்தலே வீட்டு நெறி எனப்படுகிறது.

 

–தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.