வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல்போல் இருக்குதடி…. கவிஞர் பூவை செங்குட்டுவன்

காவிரி மைந்தன்

அன்பர்களே! ஆன்மீக நண்பர்களே!

அருந்தமிழ் விருந்துவைத்தால் அது ஆண்டவனுக்கே அமுதம் அளித்ததாய் கருதப்படும். அதுவும் முத்தமிழில் விருந்தல்லவா –  அழகன் முருகனுக்கே படைக்கின்றார் பாடலாசிரியர்!

poovai senguttuvanஇந்தப் பாடலின் பல்லவி கற்பனையின் ஒரு சிகரம் என்றே களிப்போடு சொல்வேன்! எத்தனையோ கண்கள்  இதற்கு முன் முருகனது வேலின் வடிவத்தைக் கண்டிருக்கின்றன. எத்தனையோ கவிஞர்கள் பார்வையில் வேல் பட்டிருக்கிறது! எனினும் பட்டென்று தோன்றிய கற்பனை பூவை செங்குட்டுவனுக்குத்தானே!

திரு.ராமச்சந்திரன் இசையின் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய இப்பாடல் பக்திரசம் வழியும் பாடல்!  கந்தன் பெருமை சொல்லும் கனிந்த மனமிங்கே எண்ணத்தில் தோன்றியதை எழுத்திலே  வடித்து ஒரு செந்தமிழ்க்கோலம் காட்டுவதைப் பாருங்கள்!

முத்தமிழ் பிறந்தது எப்போது என்று இவரை எவரோ கேட்டிருப்பார் போலும்.. பாடலிலே பதிலுரைக்கிறார்  பாருங்கள்!

சக்தியவள் தந்த வேலாயுதம் முத்தமிழ் முருகனுக்கு – அழகுக்கு அழகு சேர்க்கிறது! அதன் வடிவம் எண்ணித் தொடங்கிய இப்பாடல் சந்தம் சீர் மாறாமல் தமிழ் சதிராடி வருவதைப்போல் அதுவும் ‘கற்பூரம்’ திரைப்படத்திற்காக இப்பாடலை தீப ஆராதனை எனலாம்!

வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்
வேல்போல் இருக்குதடி
வேல்கொண்டு நின்றவன் திருமுகம் பர்த்தால்
பால்போல் தெரியுதடி

vel

கூவிடும் சேவல் கொடிமே லிருந்து
விழித்திடச் சொல்லுதடி
விழித்ததும் என்னை நினைத்திரு என்றவன்
சொல்வது தெரியுதடி

கந்தனின் கருணை மழைவரும் என்றே
மாமயில் ஆடுதடி!
மாமயில் விரித்த தோகையின் கண்கள்
வேலனைத் தேடுதடி!

முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
முத்தமிழ் பிறந்ததடி!
முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
திருமுகம் தோன்றுதடி

எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும் – அது
ஆறு முகங்களடி!
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் – அது
பன்னிரு கைகளடி
பாடல் ஆக்கம்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்
இசை: திரு. ராமச்சந்திரன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்

1 thought on “வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல்போல் இருக்குதடி…. கவிஞர் பூவை செங்குட்டுவன்

 1. எத்தகைய அற்புதமான கவித் திறனும் கற்பனை வளமும் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கு
  வணங்குகிறோம் ஐயா🙏🙏
  இந்த அரிய பதிவினை மேற்கொண்ட கவிஞர் காவிரி மைந்தன் அவர்களுக்குப் பலகோடி நன்றிகள்

  மேலதிகமாய் ஒரு தகவலையும் தெரிவிக்க விரும்புகிறேன்
  திரைப்படத்தில் இப்பாடலை இணைந்து பாடியவர்கள் பி.சுசீலா அவர்களும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி அவர்களும்
  பதிவிற் காணப்படுபவதுபோல் சூலமங்கலம் சகோதரிகள் அல்ல

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க