— முனைவர் சி. சேதுராமன்.

purananooru

நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு, அம்மக்கள் சார்ந்த சமுதாயத்த்தால் பாதுகாக்கப்படுகின்றன.மனிதனின் தன்னல மற்றும் சமுதாய உணர்வுகளே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. இந்நம்பிக்கைகள்காலந்தோறும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராதபொழுதும், மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத பொழுதும் மனிதமனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவ்வாறு காரணம் கற்பித்துக்கொண்டவைகளே பின்னர் நம்பிக்கைகளாக உருவாகின்றன.

மனித மனத்தின் விளைவாக நம்பிக்கைகள் தோன்றுகின்றன. இந்நம்பிக்கைகள் காலங்காலமாக ஒருதலைமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன. மனித வாழ்க்கையின்பிரதிபலிப்புகளாகத் திகழும் இலக்கியங்களிலும் இந்நம்பிக்கைகள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

நாட்டுப்புற நம்பிக்கைகள்:
அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்பர; அறிஞர். காரணகாரியத்தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறு முடிவதை நம்பிக்கை என்றும் சான்றுகளின்அடிப்படையிலோ, காரண காரியத் தொடர்பின் வாயிலாகவோ விளக்க முடியாதவற்றை மூடநம்பிக்கை(ளுரிநசளவவைழைn) என்றும் வகைப்படுத்துவர். மனிதனின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்பண்பாட்டின்கண் அடங்கி விடுகின்றன. நாட்டுப்புற நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் பண்பாட்டுவளர்ச்சியின் படிக்கற்கள் என்பது நோக்கத்தக்கது. மனிதன் தனது பிறப்பு முதல் இறப்பு வரையில் பலவிதமானநம்பிக்கைகள் கொண்டிருக்கின்றான். மனிதனின் இந்நம்பிக்கைகளே அவனது வாழ்வை இயக்குகின்றன. மேலும்மனிதன் வாழ்வில் வளம் பெறுவதற்கு இந்நம்பிக்கைகளே அடித்தளமாக அமைந்திலங்குகின்றன.

இந்நம்பிக்கைகள் எப்பொழுது தோன்றின என்று அறுதியிட்டுக் கூற இயலாது. இந்நம்பிக்கைகள்மக்களின் நடைமுறை வாழ்வில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் இந்நம்பிக்கைகளைசமுதாயப் பண்பாட்டின் வளர்ச்சிக் கூறுகளின் தொகுதி எனக் கூறலாம். மனித வாழ்க்கையில் காணப்படும்நம்பிக்கைகளுக்குக் காரணத்தை அறிய முடியாததாக இருந்தாலும் மனித சமுதாயம் நம்பிக்கை வயப்பட்டுச்செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தனி மனித நம்பிக்கை காலப்போக்கில் சமுதாயநம்பிக்கையாக மாற்றம் பெறுவதுண்டு.

பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் சடங்குகளாக மாறுகின்றன. இச்சடங்குகள் என்பதுநிர்ணயிக்கப்பட்ட விரிவான நடத்தைகளின் வடிவமாகும் என்பர். இது மனி மனிதனின் சுயமான ஆக்கமாகவோபண்பாட்டினுடைய தனிச்சிறப்புக் கூறாகவோ அமையும். பண்பாட்டின் ஏனைய அம்சங்கள் இன்றிச்சடங்குகளிலேயே வெவ்வேறு நாகரிகங்களின் நம்பிக்கைகளும் இலட்சியங்களும் மிகத் தெளிவாகவெளிப்படுத்தப்படுகின்றன என்கிறார் ரூத் பெனிடிக்ட்.

பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். இயற்கையின் மாறுதலுக்கேற்றாற் போன்றுமனித மனமும் மாறுபடுகின்றது. இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கையில் நம்பிக்கைகள் தோன்றின.புறநானூற்றில் பல்வேறுவிதமான நாட்டுப்புற நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இந்நம்பிகைகள் அனைத்தும்சகுனம் சார்ந்து இயற்கையோடு இயைந்ததாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

சகுனங்கள் குறித்த நம்பிக்கைகள்:
சகுனம் பார்க்கும் நம்பிக்கை உலகெங்கிலும் காணப்படுகின்றது. பண்டைத் தமிழர; இதனைப் புள்,நிமித்தம் ஆகிய சொற்களால் குறிப்பிடுகின்றனர். நிமித்தம் என்பது வாழ்வில் நிகழவிருக்கும் நன்மைதீமைகளைச் சில குறியீடுகளின் வாயிலாக உணர்த்துவதாகும். நிமித்தங்கள் அனைத்தும் நம்பிக்கையைச்சார்ந்தனவாக உள்ளன. நிமித்தங்களை, நற்செயலையும், நற்பயனையும் அறிவிக்கும் குறியீட்டினைநன்னிமித்தம் என்றும் தீய செயலையும், தீமையையும் தெரிவிக்கும் குறியீட்டினை தீ நிமித்தம் என்றும்அவற்றின் செயற்பாட்டு விளைவு கருதி இருவகையாகப் பகுக்கலாம்.

இதனை நாட்டுப்புற வழக்கில் நல்ல சகுனம், தீய சகுனம் என்று குறிப்பிடுவர். ஒரு செயலைத்தொடங்கும்போது நல்ல சகுனம் தோன்றினால் அச்செயல் நன்மையாக முடியும் என்றும், தீய சகுனம்தோன்றினால் அச்செயல் தோல்வியடையும் என்றும் நம்புகின்றனர்.

நல்ல நாள், நேரம் பார்த்தல்:
ஒரு செயலை நல்ல நாளில் செய்யத் தொடங்கினால் எவ்விதத் தடங்கலின்றி நன்றாக முடியும் என்றுமக்கள் நம்புகின்றனர். மன்னர்கள் போர் தொடங்குவதற்கு நல்ல நாள் பார்த்தனர். நல்ல நேரத்தை முழுத்தம்என்று குறிப்பிட்டனர். இம்முழுத்தத்தை இன்று முகூர்த்தம் என்று கூறுகிறோம். போர் தொடங்கும் முன்னர்நல்ல நாள் குறித்து அந்நாளில் வெண்கொற்றக் குடையையும், வாளையும் செல்ல வேண்டிய திசையில் எடுத்துச்சென்றனர். இதனை வாள்நாள்கோள், குடைநாள் கோள் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
தொல்காப்பியத்தில்,
‘‘நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்”(தொல்., பொருள்., 91)
என நாள் நிமித்தமும், புள் நிமித்தமும் சுட்டப்படுகின்றது.

மன்னனைக் காணப் போகும்போது இரவலர்கள் நல்ல நாள், நல்ல நிமித்தம்(சகுனம்) பார்த்துச் செல்வர்.அவ்வாறு சென்றால்; நிறையப் பரிசில்கள் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினர். நாளும் சகுனமும்சரியில்லையெனில் அவர்கள் மன்னனைக் காண்பதற்குச் செல்லமாட்டார்கள். இதனை,

‘‘நாள் அன்று போகி, புள் இடை தட்ப,
பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும்,
வறிது பெயர்குநர்அல்லர் நெறி கொளப்
பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையன் பாடியோரே” (புறம்., 124)

என்ற புறப்பாடல் எடுத்துரைக்கின்றது. விதை விதைக்கும்போதும் மக்கள் நல்ல நாள் பார்த்தே விதைவிதைப்பர்.நல்ல நாளில் விதைவிதைத்தால் நன்கு விளைச்சல் பெருகும் என்று மக்கள் நம்பினர். பன்றி உழுத புழுதியில்குறவர் நல்ல நாள் பார்த்து திணையை விதைத்தையும், விளைந்த தானியத்தை உண்பதற்கு நல்ல நாள்பார்த்தனர். நல்ல நாளில் உண்டால் எந்தவிதமான தீங்கும் நேராது என்றும் மக்கள் நம்பினர். மக்களின்இந்நம்பிக்கையினை,

‘‘கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
கடுங் கண் கேழல் உழுத பூழி,
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்” (புறம்.,168)

என்ற கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடிய பாடல் தெளிவுறுத்துகிறது.

மன்னர்கள் போருக்குச் செல்லும்போது நல்ல சகுனங்களைப் பார்த்தே புறப்பட்டனர். எட்டுத் திசைகளிலும்எரிகொள்ளி எரிந்து விழுதல், பெரிய மரத்தின் இலையில்லாத கிளை உலர்ந்து போதல், ஞாயிறுபலவிடங்களிலே செறிந்து தோன்றுதல், அச்சம் தரும் பறவைகள் ஓசையெழுப்புதல் ஆகியவை நனவில் தீயசகுனங்களாகும். இத்தகைய பெரியதீய சகுனங்கள் ஏற்படுகின்றனவா என்று பார்த்து அவ்வாறு ஏற்பட்டால் அதன்உட்பொருளை அறிந்தபின்னர் போருக்குச் சென்றனர். இச்சகுனம் பற்றிய மக்களின் நம்பிக்கையை,

“வெல் போர் வேந்தே!
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும்,
வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்” (புறம்.,41)

என்ற கோவூர்க்கிழாரின் பாடல் தெளிவுறுத்துகிறது. இன்றும் பயணத்தின்போது சகுனம் பார்த்துச் செல்லும்பழக்கம் மக்களிடையே இருந்துவருவது நோக்கத்தக்கது. இது பழக்கம் பற்றிய நம்பிக்கையாக அமைந்துள்ளது.

தலையை விரித்துப் போடுதல்:
பயணம் செய்யும்போது எதிரில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வருவது தீய சகுனமாகக்கருதப்பட்டது. அவ்வாறு வந்தால் உயிருக்குத் தீங்கு நேரும் என்று மக்கள் கருதினர். அவ்வாறு வந்துவிட்டால்அத்தீங்கினின்று தப்புவதற்காக உடனே கடவுளை வணங்கினர். இதனை,

“தளரு நெஞ்சந் தலைஇ மனையோள்
உளருங் கூந்த னோக்கிக் களர
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி”(260)

என்ற புறநானூற்றுப் பாடல் தெளிவுறுத்துகின்றது. வழிச்செல்வோர் எதிரே, விரித்த தலைமயிருடன் ஒருத்திமுற்படவரின், அதனைத் தீநிமித்தமாகக் கருதுவது இயல்பு. தீநிமித்தத்தால் உண்டாகும் எனக் கருதிய தீங்கைவிலக்குதல் வேண்டி கள்ளியின் நிழலில் இருந்த தெய்வத்தை வணங்கினர். இத்தகைய சகுனம் குறித்தநம்பிக்கை இன்றும் மக்களிடையே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பறவை அலறுதல்:
சில பறவைகள் பறப்பதும் சிலவகையான பறவைகள் அலறுவதும் தீயதை ஏற்படுத்தும் சகுனங்களாகமக்களால் கருதப்பட்டன. இச்சகுனங்கள் மக்களிடத்தில் காணப்படும் பல்வேறுவிதமான நம்பிக்கைகளைஎடுத்துரைக்கின்றன.

‘‘கூகை அலறினால் சாவு வரும், போத்துப் பறந்தால் பேத்தடி வைக்காதே”
என்பது அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் நிலவி வரும் நம்பிக்கையாகும். அஞ்சத்தக்க கூகையும்பெருங்குரலெடுத்து அலறுகிறது. இது தீயது நிகழப் போகிறது என்பதைக் குறிக்கின்றது. தலைவன்இறந்துவிடுவதையே இவ்வாந்தையின் அலறல் எடுத்துரைக்கின்றது என்று மனைவி புலம்புகின்றாள்.

ஆந்தைஅலறினால் தீயது நடக்கும் என்ற இந்நம்பிக்கை புறநானூற்றில்,
‘‘அஞ்சுவரு குராஅல் குரலுந் தூற்றும்” (புறம்., 280)
என்று இடம்பெற்றுள்ளது. ஆந்தை அலறுவதைத் தீ நிமித்தம் என்று மக்கள் நம்பினர் இதனை புறநானூற்றின் 40-ஆவது பாடல் குறிப்பிடுகின்றது. சிற்சில பறவை விலங்குகளின் காட்சியும் அவற்றின் குரல்களும் நன்மைதீமைகளைத் தெளிவுறுத்தும் என்று மக்கள் நம்பினர். வல்வில் ஓரியைக் கழைதின் யானையார் பாடிச்சென்றபோது பரிசில் கிடைக்கவில்லை. அதற்காகப் புலவர் ஓரியைப் பழிக்கவில்லை. மாறாக,

”புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளி வருநர் பழியலர் அதனால்
புலவேன் வாழியர் ஓரி” (புறம்., 204)

என்று தான் புறப்பட்ட நேரத்தையும் எதிர்ப்பட்ட புள்ளையும் நோவது தவிர மன்னனை நோவது பயனற்றது என்றுகுறிப்பிடுகின்றார்.

மலையமான் திருமுடிக்காரியைக் காண விரும்பியோர் தீய நாளில் சென்றாலும தீய பறவைஎதிர்ப்பட்டிருந்தாலும் கூட ஒன்றும் பெறாது திரும்பமாட்டார்கள் என்பதை,

“நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
புதனன்று புக்குத்திறனன்று மொழியினும்
பெயர்குநர் அல்லர்’’(புறம்., 124)

என்று குறிப்பிடுகின்றார். இங்ஙனம் நல்ல நேரத்தில், நல்ல நாளில், நல்ல சகுனம் பார்த்து எதையும்பழந்தமிழர்கள் செய்தனர் என்பதை புறநானூறு தெளிவுற எடுத்துரைக்கின்றது.

போருக்கு வீரர்கள் செல்லும்போது சில பறவைகளின் ஒலி சகுனமாகக் கொள்ளப்பட்டது. அரசனுடன்பறவைகள் ஒலிகளைக் கேட்டு அதற்குரிய பலனைக் கூறுவோரும் இருந்தனர். ‘புட்பகை’ பற்றி,

“புள்ளிடை தட்ப”(புறம்., 124)
“உட்பகை ஒரு திறம் பட்டெனப் புட்பகைக்
கேவான் ஆதலின் சாவேம் யாமென” (புறம்., 68)

என்று புறநானூறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது. ஆந்தையின் அலறினால் தீயது நடக்கும் என்று மக்கள் நம்பினர்.இந்நம்பிக்கையினை புறநானூற்றின் 40-ஆவது பாடல் தெளிவுறுத்துகின்றது.

விரிச்சிகேட்டல்:
விரிச்சி என்பது நற்சொல் கேட்டலாகும். ஒரு செயலின் தொடக்கத்தில் பிறர் சொல்லும் சொற்களைச்சகுனமாகக் கொள்வது உண்டு. இதனையே விரிச்சி என்பர். பகைவர் நாட்ழற்குள் புகுந்து பசுக்களைக்கவருவதற்கு முன்பு வெட்சி மறவர் விரிச்சி கேட்டதைத் தொல்காப்பியர் ‘பாக்கத்து விரிச்சி’ என்றுகுறிப்பிடுகின்றார்.

முதுசெம்பெண்டிர் நாழியில் நெல்லை எடுத்துச் சென்று, சுளகில் இட்டு, நீரும் பூவும் சொரிந்து விரிச்சிகேட்பர். இதனை முல்லைப்பாட்டு,
‘‘பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை
அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்லைப்பாட்டு, 6-11)
என்று குறிப்பிடுகின்றது.

விரிச்சி கூறும் கட்டுவிச்சியான பெருமுது பெண்கள் குரல் தடுமாறாமல் கூறல் வேண்டும். அவ்வாறுதடுமாறினால் தீயது நிகழும் என்று மக்கள் நம்பினர். புண்பட்ட நிலையில் கிடக்கும் தலைவனின் இறப்பைஇதுகுறிப்பதாக மனைவி அஞ்சுகிறாள். அவளின் நம்பிக்கையை,

“நெல்நீர் எறிந்து விரிச்சி யோர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா’’ (புறம்., 280:6-7)
என்று புறநானூறு எடுத்தியம்புகின்றது.

விளக்கு அணைதல்:
நல்ல செயல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது விளக்கு அணைதல் கூடாது. அவ்வாறுஅணைந்தால் அது தீயதை விளைவிக்கும் என்று மக்கள் நம்பினர;. இந்த நம்பிக்கை எல்லோரிடத்திலும் இருப்பதுகுறிப்பிடத்தக்கது. புறநானூற்றில்,

‘‘நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா” (புறம்., 280)
என விளக்கும் அணைதல் பற்றிய நம்பிக்கை இடம்பெற்றுள்ளது. நீண்ட நகரின் மாளிகையில் ஏற்றி வைத்தவிளக்குகளும் அணைந்து விடும். அதனால் போரில் புண்பட்டுக் கிடக்கும் தலைவன் இறந்துபடுவான். தலைவன்இறந்து நான் உயிர்வாழ்வது அரிதினும் அரிதாகும் என்று மனைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.இன்றும் ஏற்றிய விளக்கு அணைவது தீயதை உணர்த்தும் சகுனமாக மக்களால் நம்பப்படுகின்றது.

கனவு:
எல்லா மக்களிடமும் கனவு குறித்த நம்பிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருகனவிற்கும் ஒவ்வொருவிதமான பலன் உண்டு. பகற்கனவு பலிக்காது என்பர். அதிகாலையில் காணும் கனவுபலிக்கும் என்பர். இலக்கியங்களில் கனவு குறித்த செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. இக்கனவுகள் வாழ்வில்நிகழப் போகும் நிகழ்வுகளை முன்னரே எடுத்துரைக்கும் தன்மை வாய்ந்தவை.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் பகைவர்கள், இரு நான்கு திசைகளிலும் உற்கம்உற்கவும், வற்றல் மரம் தீப்பற்றி எரியவும், ஞாயிறு பலவாகத் தோன்றவும், அஞ்சத்தக்க பறவைகள்ஆரவாரிக்கவும், பல் கழன்று விழவும், தலையில் எண்ணெய் ஊற்றவும், கோட்டு மாவூரவும், படைக்கருவிகள்கட்டிலொடு சாயவும் கனவு கண்டு தங்களுக்கு ஏற்படப் போகும் அழிவைக் குறித்து,

“எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
வெள்ளெரி நோன் படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா, நனவில்
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்”
என்று அஞ்சியதாக புறநானூறு(41) குறிப்பிடுகிறது.

வெள்ளியும் எரிகோளும்:
வெள்ளிமீன் வட திசையில் இருந்தால் நாட்டில் வளம் பெருகும். தென்திசைக்குச் சென்றால்மழைபெய்யாது; பஞ்சம் ஏற்படும். இன்றும் இந்நம்பிக்கை மக்களிடையே இருந்து வருவது நோக்கத்தக்கது.மக்களிடையே காணப்படும் இத்தகைய நாட்டுப்புற நம்பிக்கையானது புறநானூற்றிலும் காணப்படுகின்றது.பாரியின் நாட்டில் சனிமீன் புகையினும், எல்லாத் திசையிலும் புகை தோன்றினாலும் வெள்ளி தெற்கேசென்றாலும் மழை வளம் தவறாது என்ற பாரியின் நாட்டின் வளம் குறித்துக் குறிப்பிடும்போது,

“மைம்மீன் புகையினும். தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயலகம் நிறைய, புதல் பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்’’ (புறம்., 117)
என்று கபிலர் இயம்புகின்றார்.

வெள்ளிக் கோள் தென்திசையில் எழுவது தீய சகுனமாகக் கருதப்பட்டது. மேலும் வானில் எரிமீன்,குளமீன், தாள் மீன் ஆகிய விண்மீன்கள் புகைந்து தோன்றினும் தீய சகுனமாகும் (நிமித்தங்களாகும்). இவைநாட்டில் வறுமையும் பஞ்சமும் ஏற்படப் போவதை முன்கூட்டியே தெரிவிக்கும் தீய சகுனங்களாக மக்கள்கருதினர். மக்களின் இத்தகைய சகுனம் குறித்த நம்பிக்கையை,

‘‘வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல்,
பள்ளம், வாடிய பயன் இல் காலை” (புறம்., 388)
“அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
மிக வானுள் எரி தோன்றினும்,
குள மீனொடும் தாள் புகையினும்’’ (புறம்., 395)
என்ற பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

அதேபோன்று தூமகேது வானத்தில் தோன்றினால் நாட்டை ஆளுகின்ற அரசர்களுக்கு ஆகாது என்றுமக்கள் நம்பினர். அவ்வாறு ஒரு தூமகேது தோன்றிய ஏழாவது நாளில் சேரமான் யானைக்கட்சேய் மந்தரஞ்சேரல்இரும்பொறை மாய்ந்தான். இதனை,

“ஆடுஇயல் அழல் குட்டத்து
ஆர்இருள் அரை இரவில்
முடப் பனையத்து வேர்முதலாக்
குடைக் குளத்துக் கயம்காய,
பங்குனி உயர் அழுவத்து,
தலை நாள்மீன் நிலைதிரிய,
நிலை நாள்மீன் துறை படிய,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது,
அளக்கர்த் திணை விளக்காகக்
கனை எரிபரப்ப, கால் எதிர்பு பொங்கி
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே:
அது கண்டு யாமும், பிறரும் பல்வேறு இரவலர்,
பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
நோய் இலன் ஆயின் நன்றுமன்தில் என
அழிந்தி நெஞ்சம் மடிஉளம் பரப்ப,
அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே” (புறம்., 229)
என்று கூடலூர்க்கிழார் குறிப்பிடுகிறார்.

மேடராசி பொருந்திய கார்த்திகை நாளின் முதற்காலின்கண் நிறைந்த இருள் கொண்ட பாதி இரவு;அப்போது முடப்பனை போன்ற வடிவை உடைய அனுஷ நாளின் முதல் நட்சத்திரம் முதலாகக் குளம்போன்றவடிவை உடைய புனர்பூச நட்சத்திரத்தின் கடைப்பகுதியாக விளங்கும்; அத்தகைய பங்குனி மாதத்தில்முதற்பதினைந்தில் உச்சமாக விளங்கும் உத்தரம் சாய்ந்தது; அதற்கு எட்டாம் நாட்சத்திரமாகிய மூலம் அதற்குஎதிரே எழும்; அந்த உத்தரத்திற்கு முன் செல்லப்பட்ட மீன்களில் எட்டாவதாக உள்ள மிருகசீரிடம், துறையிலேதாழ்ந்து படியக் கீழ்த்திசையிற் போகாமலும் வடதிசையிற் போகாமல், தீத்திசையாகிய வடகிழக்கே வீழ்ந்ததுஒரு மீன். கடல் சூழ்ந்த உலகின் விளக்காக முழங்குகின்ற தீப்பரக்கக் காற்றால் விசிறப்பட்டு வீழ்ந்தது. அம்மீன்விழுவதைப் பார்த்து யாமும் இரவலர் பிறராகிய பல்வேறு வகையினரும், வேந்தன் நோயில்லாமல் இருக்கவேண்டும் என்று அஞ்சினோம். நாங்கள் அஞ்சியவாறே ஏழாம் நாள் வந்தது. இன்று மன்னன் இறந்தான் என்றுஇப்பாடலில் நாட்டுப்புற மக்களின் நம்பிகை இடம்பெற்றுள்ளது.

பேய் பற்றிய நம்பிக்கை:
கண்ணுக்குப் புலப்படாத பேய்கள் இரவில் உலவுவதாகவும் இவை பெரும்பாலும் சுடுகாட்டிலேயேஉலவியதாகவும் மக்கள் நம்பினர். இப்பேய்கள் பிணங்களை விரும்பி உண்ணும்; இறந்த வீரர்களின் குருதியைத்தலையில் தடவித் தலையை வாரும் என்ற பேய்கள் குறித்த நம்பிக்கை மக்களிடம் நிலவியதை,

‘‘வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு”(புறம்., 238)

என்று புறநானூறு குறிப்பிடுகிறது. போர்க்களங்களில் கழுகுகளும், நரிகளும் பேயொடு சேர்ந்து பிணங்களைஉண்டதாக மக்கள் நம்பினர்(புறம்., 373). பேய்கள் பிணந் தின்றதையும், இறந்து கிடந்த வீரரின் குருதியைத்தலையில் தடவித் தலைவாரியதையும் புறநானூறு(369, 62) குறிப்பிடுகிறது.

பேய்கள் போர்க்களத்தில் மண்டையோடுகளில் சமைத்து அதனைக் கொற்றவைக்குப் படைக்கும் என்றுமக்கள் நம்பினர். மக்களின் இந்நம்பிக்கையானது,
“பொருந்தாத் தெவ்வ ரருந்தலை யடுப்பிற்
கூவிள விறகி னாக்குவரி நுடங்க
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
ஈனா வேண்மா ளிடந்துழந் தட்ட
மாமறி பிண்டம் வாலுவ னேந்த
வதுவை விழவிற் புதுவோர்க் கெல்லாம்
வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கெனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய்” (372)
என்று புறநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. மனம்பொருந்தாத பகைவர் உடலினின்றும் நீங்கிய அரியதலைகளாற் செய்ப்பட்ட அடுப்பிலே கூவியங்கட்டையாகிய விறகிட்டெரித்து ஆக்கப்படும் கூழிடையே,வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க நீங்கிய மண்டையோட்டை அகப்பையாகவும் வன்னிமரத்தின் கொம்பை யதிற்செருகப்பட்ட காம்பாகவும் கொண்ட துடுப்பினால் ஈனாத பேண்மகள் தோண்டித் துழாவிச் சமைத்த மாக்களும்உண்ண மறுக்கும் ஊன்சோறாகிய பிண்டத்தை பேய்மடையன் எடுத்துக் கொற்றவைக்குப் படைப்பானாய்ஏந்திக்காட்ட களவேள்விசெய்தவனே என்று பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி மாங்குடிக் கிழார் என்றபுலவர் பாடும்போது இந்நம்பிக்கையைக் குறிப்பிடுகிறார்.

பேய்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவையாகும். இப்பேய்களிடம் இருந்துதப்பிப்பதற்குப் பல்வேறுவிதமான செயல்களைச் செய்தனர். வீட்டில் இரவம், வேம்பு இவற்றின் குழைகளைச்செருகி வைத்தனர். யாழையும் பிற கருவிகளையும் முழக்கினர். வெண் சிறுகடுகைப் புகைத்தனர். ஆம்பற்குழலை ஊதினர். காஞ்சிப் பண்ணைப் பாடினர். தூபம் எடுத்தனர். இவ்வாறு செய்தால் தீங்கு செய்ய வரும் பேயைஓட்டிவிடலாம் என்று மக்கள் நம்பினர். இதனை,

“தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ,
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க,
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி,
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசை மணி எறிந்து, காஞ்சி பாடி,
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ,
காக்கம் வம்மோ காதலம் தோழி!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே”(புறம்.,281)
என்று அரிசில் கிழார் (புறம்., 98;15, 281) குறிப்பிடுகின்றார்.

இந்நம்பிக்கை பற்றிய செய்தியை,
“வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென்றவ்வே;’’ (புறம்., 296)
என்று வெள்ளைமாளர் பாடுவதும் நோக்கத்தக்கது. இன்றும் பேய் பற்றிய பல்வேறு கதைகளும் நம்பிக்கைகளும்மக்களிடம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றும் வேம்பின் குழைகளை எடுத்து அடித்துப் பேய்ஓட்டும்பூசாரிகள் கிராமங்களில் இருக்கின்றனர்.

சமய நம்பிக்கைகள்:
சங்க கால மக்கள் இம்மை வாழ்வின் செம்மையிலும் இன்பத்திலும் விருப்பமுடையதாக இருந்தது.அவர்களின் சமயம் சார்ந்த வாழ்க்கை வாழ்வியல் நெறியாக இருந்தது. இம்மை, மறுமை, சொர்க்கம், நரகம், விதிஉள்ளிட்ட நம்பிக்கைகள் மக்களிடம் இருந்தது.

கடவுள் பற்றிய நம்பிக்கை:
பழந்தமிழ் மக்கள் மரங்களைத் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். வேங்கை, கடம்பு, அரசு, ஆல் ஆகியமரங்களில் தெய்வம் உறைவதாகக் கருதினர். அம்மரங்களைத் தாங்கள் வணங்கும் கடவுளாகக் கருதியமக்களின் கடவுள் பற்றிய நம்பிக்கையை,

‘‘கடவு ளாலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருந லுண்டன மென்னாது பின்னும்
செலவா னாவே களிகொள் புள்ளினம்”(புறம்.,199)
என்ற பெரும்பதுமனார் பாடல் எடுத்தியம்புகிறது. இன்றும் மக்கள் வேம்பினை அம்மன் தெய்வமாகவும், கடம்பு,வேங்கை ஆகிய மரங்களை முருகனாகவும், ஆலமரத்தை சிவனாகவும் கருதி வழிபட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.

சொர்க்கம் நரகம்:
அவரவர் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப நன்மையும் தீமையும் ஏற்படும் என்று அன்றிலிருந்துஇன்று வரை மக்கள் நம்புகின்றனர். அன்பையும் அறத்தையும் புறக்கணித்தவர்கள் நீங்காத நிரயம்(நரகத்திற்குச்)செல்வர் என்று மக்கள் நம்பினர். இதனை,
‘‘அன்பும் அறனும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவ ரோடொன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி”(புறம்., 5)
என்று புறநானூறு எடுத்தியம்புகிறது. இறந்தோரில் சிறந்தவர்(நல்லவர்) மட்டுமே சொர்க்கத்திற்குச் செல்வர்.தீயவர் நரகிற்குச் செல்வர். நல்லோர் இறந்து விண்ணுலகு எய்தும்போது அவரை சொர்க்கத்தின் தலைவனாகவிளங்கும் இந்திரனே எதிர்நின்று வரவேற்பான் என்று மக்கள் நம்பினர். இத்தகைய நம்பிக்கையைபுறநானூற்றின் 241-ஆவது பாடல் குறிப்பிடுகிறது.

ஒருவர் இறந்த பின்னர் அவருக்குத் துணையாக அவர் செய்த நல்வினைகளே உடன் செல்லும்.இந்நம்பிக்கை இன்றுவரை மக்களிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கையினை,
‘‘வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை’’(புறம்.,367)
என்ற ஔவையார் பாடல் புலப்படுத்துகிறது.

போர்க்களத்தில் பகைவருடன் போர் புரிந்து மரணிப்பவர்கள் சொர்க்கத்தில் தெய்வ மகளிரை மணந்துமகிழ்வர் என்ற நம்பிக்கையும் நிலவியது. இந்நம்பிக்கையை,
‘‘மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்,
உயர் நிலை உலகத்து, நுகர்ப” (புறம்.,287)
என்ற புறநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றது. படைத்தலைவன் தனது படைவீரர்கள் கிளர்ந்தெழுந்துபோர்புரியும் வகையில் அவர்களுக்கு இத்தகைய நம்பிக்கையூட்டும் சொற்களைக் கூறுவதாக இதனைக்கருதலாம்.

வீர வாழ்க்கை வாழ்ந்து தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே முடித்தவர்கள் விசும்பில்வலவன் இயக்காத வான ஊர்தியிலேறி விண்ணுலகு(சொர்க்கத்திற்கு) செல்வர் என்ற நம்பிக்கையை,
‘‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான வூர்தி
எய்துப என்பதம் செய்வினை முடித்தே” (புறம்., 27)
என்று புலவர் ஒருவர் தெளிவுறுத்துகிறார். தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து செவ்வனேமுடித்தவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வர். இத்தகைய நம்பிக்கையை,
‘‘உயர்ந்த வேட்டத்து உயர;ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்
தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி இல்லெனில்
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்” (புறம்., 214)
என்ற கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது பாடிய பாடல் எடுத்துரைக்கின்றது. சொர்க்கம் குறித்த மக்களின்நம்பிக்கையை, (134, 141, 174) ஆகிய புறப்பாடல்களும் எடுத்துரைக்கின்றன.

ஊழ்வினை நம்பிக்கை:
ஊழ்வினை குறித்த நம்பிக்கை மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துள்ளது. தமதுவாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கும், முன்னேற்றத் தடை ஏற்படுவற்கும் முதன்மையான காரணமாகஊழ்வினையே விளங்குகின்றது என்று மக்கள் நம்புகின்றனர். ஊழ்வினையை வெல்ல முடியாது என்ற எண்ணம்மக்களின் மனதில் வேரூன்றிப் போய்விட்டது. இவ்வூழ்வினையை, பால், வரை, தெய்வம் எனப் பலவாறுகுறிப்பிடுவர். காதலர் ஊழின் ஆற்றலால் மீண்டும் சந்தித்து உறவு கொள்வர். இவ்வகையில் கணியன்பூங்குன்றனாரின்,

‘‘வானம் தண்டுளி தலைஇ யானாது
கல்பொருது இறங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
முறைவழிப் படூஉம்” (புறம்., 192)
என்ற பாடல் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது.

மலையிற் பெய்த நீர் வெள்ளமாக ஓடும்போது அதிலகப்பட்ட மரத்தெப்பம் போன்றே உயிர்கள் விதியின்வழிச் செல்லும் என்று குறிப்பிடும் அவர் அதனால் பெரியோரை வியத்தலும், சிறியோரை இகழ்தலும் தமக்குஇயல்பில்லை என்று தெளிவுறுத்துகிறார். இப்பாடல் பழந்தமிழ் மக்களின் ஊழ்வினை நம்பிக்கைக்குச் சான்றுபகர்வதாக அமைந்துள்ளது. இன்றுவரை அனைத்துத் தரப்பு மக்களிடமும் இவ்வூழைப் பற்றிய நம்பிக்கை மிகுந்துகாணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஊழ் குறித்த செய்திகள், புறநானூற்றில்(75, 176, 236, 192) நான்கு பாடல்களில்இடம்பெற்றுள்ளன.
வீடுபேறு (முக்தி)

இலக்கியங்களின் பயன் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கும் ஆகும். அதிலும் வீடுபேறுஎன்பது மக்கள் அனைவரும் முயல்கின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை வீடுபேறு அடைவதே மக்களின்குறிக்கோளாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வுலகம் நிலையில்லாதது; அதனால் இதன் தன்மையைஅறிந்து இதனினும் சிறந்த இன்ப உலகமான வீட்டின்பம் பெறும் (வீடுபேறு) சிறந்த செயல்களைச் செய்தல்வேண்டும் என்பதைப் பக்குடுக்கை நன்கணியார்,

‘‘ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே” (புறம்.,194)

என்று பாடுகின்றார். நல்லது செய்தால்தான் இறையருளாகிய வீடுபேறு ஒருவருக்குக் கிட்டும்.இல்லையென்றால் அவரை எமன் வந்து வருத்துவான். நல்லது செய்ய முடியவில்லை என்றால்தீயனவற்றையாவது செய்யாதீர்கள் என்ற மக்களின் வீடுபேறு குறித்த நம்பிக்கையை,

‘‘கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
ல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல் ஆற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே’’ (புறம்.,195)
என்று நரிவெரூஉத்தலையார் எடுத்தியம்புகின்றார்.

இன்றும் மக்கள் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்றும் தீயது செய்தால் தீயது நடக்கும் என்றும்நம்புகின்றார்கள். இத்தகைய நம்பிக்கையை, ‘‘வினை விதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன்தினையறுப்பான்” என்ற பழமொழி எடுத்துரைப்பதும் நோக்கத்தக்கது.

மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை:
இப்பிறவியில் நிறைவேறாத ஆசைகளோ, செயல்களோ இருப்பின் அவர்கள் மறுபிறப்பெடுத்து அதனைநிறைவேற்றுவர். மார்கழி மாதத்தில் இறந்தோருக்கு மறுபிறப்பில்லை என்றும் மக்கள் நம்புகின்றனர். அவரவர்செய்த நன்மை தீமைகளுக்கேற்ப மறுபிறப்பு என்பது இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவர் செய்தகொடுமைக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக மறுபிறப்பெடுத்து வந்து பழி வாங்குவர் என்ற நம்பிக்கையும்மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றது. பாரி தன்னைவிட்டுப் பிரிந்தபோது தன்னுயிர் நீங்காததால் கபிலர்வருந்தினார். இப்பிறவியல் பாரியுடன் கூடிய நட்பு தொடராது தமடைபட்டதே என்று துன்புற்ற கபிலர்மறுபிறவியிலாவது பாரியுடன் தனது நட்பானது தொடர வேண்டும். அதனை விதியே செய்யும் என்று கருதிமறுபிறவிக்காகத் தானும் பாரியைத் தொடர்வதாகக் கபிலர்,

“இனையை யாதலி னினக்கு மற்றியான்
மேயினே னன்மை யானே யாயினும்
இம்மை போலக் காட்டி யும்மை
இடையில் காட்சி நின்னோ
டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே” (புறம்., 236)
என்று பாடுகின்றார். இப்பாடல், ‘‘இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே” என்ற அகப்பாடலை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளது. இப்பாடலில் விதி, மறுபிறப்புஆகியவை குறித்த நம்பிக்கைகள் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.

இறந்தவர் பற்றிய நம்பிக்கை:
இறந்தவர்களை நினைத்து வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது.இறந்தவர்களுக்காகப் படைக்கப்படும் உணவினை அவர்கள் வந்து உண்பார்கள் என்று மக்கள் நம்புகின்றனர்.இவ்வாறு உணவு படைப்பதைப் பிண்டம் படைத்தல் என்பர். இது மூடநம்பிக்கையாக இன்று கருதப்பட்டாலும்இறந்தவர்களுக்குப் பிண்டம் படைக்கும் பழக்கம் இருந்துவருவது நோக்கத்தக்கது. பாண்டியன் பல்யாகசாலைமுதுகுடுமிப் பெருவழுதியின் போர் அறத்தைப் பாடும் நெட்டிமையார்,

“தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்”(9)
என்று குறிப்பிடுகின்றார். தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக் கிரியையைப் பண்ணும்; பொன்போல் புதல்வர்ப் பெறாதீரும் பாதுகாப்பான இடங்களுக்குச்செல்லுங்கள் என்று கூறிப் போர்புரிந்ததாக புலவர் கூறுவது நோக்கத்தக்கது. இதற்கு விளக்கம் எழுதும் ஔவைதுரைசாமிப்பிள்ளை அவர்கள், ‘‘பிண்டம் – சோறு; உதகம் – நீர். ஒரு குடியில் இறந்தோர், தென்றிசைக்கண் இருந்து, தம் குடியிற் பிறக்கும் புதல்வர் தம்மை நோக்கிப் படைக்கும் சோறும் நீரும் உண்டு வாழ்வர்”(ப.,27)என்று கூறுகின்றார். இறந்தோர் தங்களுக்குப் படைக்கும் சோற்றையும், நீரையும் வந்து உண்பர் என்று மக்கள்நம்பினர்.

இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபட்டால் நல்லது நடக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.இறந்தவர்கள் தெய்வமாக நின்று தங்களையும் குடும்பத்தினரையும் காப்பர் என்றும் மக்கள் நம்புவதால்தான்இப்பிண்டம் படைத்தல் என்ற பழக்கம் தொடர்கின்றது எனலாம். பிண்டமாகப் படைக்கப்பட்ட உணவை எவ்வாறுதன் கணவன் உண்டான் என்று மனைவியானவள் கண்ணீர் விட்டு வருந்துவதாக,

“நோகோ யானே தேய்கமா காலை
பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
தன்னமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்
உலகுபுகத் திறந்த வாயிற்
பலரோ டுண்டன் மரீஇ யோனே” (புறம்., 236)
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடும்போது குறிப்பிடுகிறார்.

மேலும் பிண்டம் படைப்பதற்குரிய இடத்தை மனைவியானவள் பசுவின் சாணத்தை வைத்துமெழுகுகின்றாள். சாணத்தைத் தண்ணீர்விட்டுக் கரைத்து மெழுகாது சாணத்தில் கண்ணீரைவிட்டுக் கரைத்துமெழுகுவதாக தும்பிசேர் கீரனாரின்,
‘‘இன்றே,
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,
உயர் நிலை உலகம் அவன் புக,…. வரி
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே’’ (புறம்.,249)
என்ற பாடல் இயம்புகின்றது.

மழை பற்றிய நம்பிக்கை:
பருவ நிலைகள் மாறப் போவதை எறும்புகள், பூனைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரனங்கள் உணர்ந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும். இவ்வுயிரினங்களின் செயல்பாடுகளைப் பார்த்து அடுத்து என்ன நிகழும்என்று பழந்தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். எறும்புகள் தங்களது முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலப்பகுதிக்குச் சென்றால் மழையானது பெய்யும் என்று நம்பினர். இன்றும் கிராமப்புறங்களில் இந்நம்பிக்கைமக்களிடையே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மக்களின் இத்தகைய நம்பிக்கையை,

‘‘பொய்யா வெழிலி பெய்விட நோக்கி
முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்’’ (புறம்., 173)
என்ற சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனின் பாடல் புலப்படுத்துகின்றது. இந்நம்பிக்கையானது, ‘‘எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழைபெய்யும்” என்று பழமொழியாக மக்களிடையே வழங்கப்பட்டுவருகின்றது. மக்களின் இந்நம்பிக்கையை இளம்பூரணர் தமது உரையில், ‘‘எறும்பு முட்டை கொண்டுதெற்றியேறின் மழை பெய்தது மழை பெய்யு மென்பது” (தொல். வினை. சூ. 45, இளம்.) என்று குறிப்பிடுவதும்நோக்கத்தக்கது.

மழை பெய்யாமல் நாட்டில் வறட்சி ஏற்பட்டால் மக்கள் இறைவனை மழைவரம் வேண்டி வழிபடுவர்.இறைவனை வழிபட்டால் மழைபொழியும் என்று மக்கள் நம்பினர். அதேபோன்று மழை அதிகமாகப் பொழிந்துஅழிவானது ஏற்பட்டால் அதனைத் தடுப்பதற்காக மக்கள் இறைவனை வழிபடுவர். இறைவனை வழிபட்டால்அதிகமாக மழைபொழியாது என்றும் மக்கள் நம்பினர். இன்றும் இந்நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகின்றது.

திருவிழாக் கலாங்களில் மழைவரும் என்று அறிந்தால் உடனே மழைபொழியக் கூடாது என்பதற்காகதேங்காயை உடைத்துச் சூடத்தைக் காட்டி அதனை விழாவிற்காகப் போடப்பட்ட பந்தலின் மீது எறிவர். அவ்வாறுஎறிந்தால் பெய்து கொண்டிருக்கும் மழையோ அல்லது பெய்யப் போகும் மழையோ உடனடியாக நின்றுவிடும்என்று மக்கள் நம்புகின்றனர். மக்களின் இந்நம்பிக்கையை,

“மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய வுவகையர் சாரற்
புனத்தினை யயிலு நாட” (புறம்., 143)
எனக் கபிலர் குறிப்பிடுகின்றார்.

தெய்வத்தைப் போற்றும் குறமாக்கள், மழையற்ற காலத்து, மலையை மழை வந்து சூழ்க என்று பலியைத்தூவி வேண்ட மிகுதியான மழை பெய்தது; மழை மிகுதியாகப் பெய்ததால் அதனை நிறுத்துவதற்காக,மழை(முகில்) மேலே போவதாக என்று தெய்வத்தை வேண்டினர். அவர்களின் வேண்டுதலுக்கேற்ப, மழையும்இடம்மாறிப் பெய்தது. அதனால் குறமாக்கள் மகிழ்ந்தனர் என்று இப்பாடலில் மக்களின் நம்பிக்கையை புலவர்தெளிவுறுத்துகிறார். இந்நம்பிக்கை குறித்த செய்தியானது,

“குன்றக் குறவ னார்ப்பி னெழிலி,
நுண்ப லழிதுளி பொழியு நாட” (ஐங்குறு. 251)
என ஐங்குநுறூற்றிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புறநானூற்றில் குறிப்பிடப்படும் நம்பிக்கைகள் இன்று வரை மக்களிடையே இருந்து வருகின்றது.இவ்வாறு பல்வேறுவிதமான நம்பிக்கைகளை எடுத்துக் கூறி பண்பாட்டுக் களஞ்சியமாக புறநானூறுவிளங்குகின்றது. புறநானூறு குறிப்பிடும் நாட்டுப்புற நம்பிக்கைகள் வாழ்வியல் சார்ந்தவையாகவும், மக்களின்பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவும் அமைந்திலங்குகின்றன.

 

 

 

முனைவர் சி. சேதுராமன்,
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை – 622 001.
Malar.sethu@gmail.com

 

 

 

 

 
படம் உதவி: http://garuda-sangatamil.com/pages/third/images/purananooru.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “‘‘புறநானூற்றில் நாட்டுப்புற நம்பிக்கைகள்”

  1. 400 பாடலகளையும் துழாவி நல்ல பல செய்திகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கும் சிறந்த கட்டுரை! பாராட்ட்டும் வாழ்த்தும்!

    இது-போன்ற கட்டுரைகள் இளைய தலைமுறைக்கு மிகவும் உதவும்.

    இவண்,
    ராஜம்

    http://letsgrammar.org
    http://mytamil-rasikai.blogspot.com
    http://viruntu.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.