மீ.விசுவநாதன்

 

mvs
குருவே வணக்கம் குறையைக் களைய
அருள்தா! மனத்துள் அழகுத் திருவின்
உருதா! இனிநம் உறவுப் பிரிவைக்
கருதா களிப்பே களி. (1)

சலனம் சலனம் சலனம் மனதுள்!
உலவும் எதுவும் ஒருதீக் கலகம்!
பலவும் சிலவும் பதியே எனதாய்
நிலவும் இறையே நிலா. (2)

இரவும் பகலும் இனியன் உனதே!
அரவும் அழகே! அழகு விரவும்
நிலவும் உனதே! நிலவின் நிழலின்
குலவும் ஒளியே குரு. (3)

கூப்பிட்டார் போனேன்நான்; கும்பிட்டு நின்றங்கே
காப்பிட்டார் போல்குருவைக் கண்ணாலே சாப்பிட்டேன்;
ஆப்பிட்ட வாழ்விலே ஆச்சர்யம்! ஆச்சர்யம்!
பாப்பிச்சை இட்டாரே பார்.. (4)

நிந்தித்தேன் என்குருவை; நீவாவா என்றதுமே
சந்தித்தேன்; மந்திரத்தைத் தந்தவர்தாள் சிந்தித்தேன்;
முந்தித்தேன் சொல்லமுதம் மொத்தமுமே நன்றாகச்
சிந்தைத்தேன் ஊற்றான தே. (5)

ஒருவன் இறைவன் உனதுள் உறைவன்;
துருவன் நினைவில் உருவில் வருவன்;
கருவில் தெரிவன் கருத்தில் நிறைவன்
குருவின் வழியே குறி. (6)

பனைக்கு யரவுன் பணத்தால் கொடிய
வினையை விரட்டி விடநீ நினையாய்!
நினைக்க நினைக்க நிறையும் குருவின்
தினைத்தவப் பார்வையே தீர்வு. (7)

உயிரில் கருணை உடலில் தனிமை
கயிறில் அரவம் கவனம் பயிலும்
பெரிய குணமே பெயர்நற் குருதான்;
அரிதாம் அவரை அறி. (8)

ஆணவத்தால் தூற்றுவதும்; ஆசையினால் தீண்டுவதும்
பூணுகிற மானிடப் பொய்முகம்! தாணுவிந்தாள்
காணுகிற நற்குருவின் கால்பிடிக்கத் தேவருமே
பேணுவராம் உன்கால் பிடித்து. (9)

அளவான ஆசை, அளவாய் உணவு,
களவான எண்ணம் கரைய உளத்துள்
குருபாதம் வைத்து குறிபார்த்துப் போற்ற
ஒருநாதம் கேட்குமே ஓம். (10)

மூடன், அறிஞன், முக,மனம் மாறும்நல்
வேடன், பணத்தேடன், வீட்டின்பம் நாடனவன்,
கூட(ஆ)ன் அருளாளர் கூட்டத்தில் என்றாலும்
சீடனெ னும்குருவே சீர். (11)

கூட்டுக் குருவி குரல்கேட்டான் ஓடியவ்
வீட்டுப் புலவன் விடுவித்தான்! ஏட்டுச்
சுவடினி சொத்தல்ல தூய குருவின்
சுவடினி ஒன்றேதான் சொத்து. (12)

கவிதை ரசிக்கும் கலையை, சிறுபுல்
புவியில் சிரிக்கும் பொழுதை, செவியில்
குவியும் இசையை, குறையின் றறியப்
புரியும் குருவின் புகழ்.. (13)

மழைதரும் செல்வம்; மதிதரும் சீதம்;
பிழைதரும் ஞானம்; பெருங்கண் ணழைப்பில்
தழைவிடும் காதல் தவத்தால் தெளிவாய்
இழைக்கும் குருவே இதம் (14)

முரட்டுத் தனத்தை முறிக்கும் கருணை
விரட்டும் விதியை விரட்டத் திரட்டும்
அறத்தை! அதையும் அழகாய் உணர்த்தும்
திறத்தைத் தரும்குரு தேன். (15)

எழுத்தும், கருத்தில் எழும்நற் சிறப்பும்,
அழுத்தும் மனதின் அடங்காப் பழுதாம்
கொழுத்த சினமும், குருவின் அருகில்
பழுத்து விழும்நற் பழம் (16)

துன்பம் துணிவையும், சோதனை தெம்பையும்
இன்பமாய்ச் சேர்க்கும்; இனியதை ஒன்றுதான்
உன்மனம் வேண்டினால் ஒர்குரு நிச்சயம்
உன்முன் வருவார் உணர். (17)

உன்னை உரசி ஒளியினைக் காட்டியே
தன்னை உனக்குள் தடவியந்த முன்னை
வினையை வெளிச்ச விழியால் அறிந்திடும்
பொன்னொளி ஞானி புகழ். (18)

மாத்திரை போட்டிந்த மாத்”திரை” வாழ்க்கையில்
யாத்திரை செய்கின்றோம்! அந்தநம் யாத்திரை
நேரமோர் மாத்திரை நேரம் குருவின்னற்
சீரடி போற்றுதல் சீர். (19)

அரியும் சிவனும் அதுபோல் பலவாய்த்
தெரியும் இறையும் தெளிவாய்த் தெரியும்
விரிவாய் குருவாய் விளக்க விளக்கப்
புரியும் புரியாப் புதிர். (20)
வாக்கு வரமும் வளர்கவி வார்த்தையும்
நாக்குள் நிறைய நயமுடன் தேக்கின்
பலமாய் வெளிவர, பாமகளே ஆசான்
குலமாய்த் தெரிவாள் கொலு. (21)

நதியென வாழ்வு நடக்கும் அழகில்
புதியன காண்பாய்! புரட்டும் கதியை
மதிவழி வெல்வாய்! மயக்கம் எதற்கு?
பதிவழி நற்குருநீ பார். (22)

கொஞ்சு கிளிபோல் குருவிருப்பார்; சீடனின்
பஞ்சு மனக்குகைப் பாபங்கள் கொஞ்சமும்
மிஞ்சா வகைதனில் மீட்டிடுவார்; அன்புவாழ்
நெஞ்சில் அவரே நிஜம். (23)

ஆணவம், ஆத்திரம், ஆசை அனைத்துமே
காணாது போய்விடக் கண்ணசைப்பார்! கோணாது
பூணுவோர் உள்ளத்தில் பூப்போலே தோன்றிகுரு
தூணாக நிற்பார் துணை. (24)

நிகழும் தவறும் நிறையென மாற்றும்
புகழ்மிகு நற்குரு புண்யம்; திகழும்
அகழ அரிய அறிவை அறிய
முகிழும் முயற்சி முகம். (25)

சின்ன அலகினால் சின்ன மணிநெல்லை
என்ன அழகாய் எடுக்கிறது! தின்னும்
இரைக்கி னியபாடம் இப்படிச் சொன்ன
இறைக்குக் குருவே இணை. (26)

கற்றநம் வித்தை கணக்கி லடங்காது!
பெற்றநம் செல்வம் “பினாமிக்கும்” போகாது!
சுற்றம் அழுதால் சுடலைக்குத் துக்கமில்லை;
உற்ற குருதாள் உணர் . ( 27)

தீயது வென்பதும் தீஞ்சுவை என்பதும்
மாயது வென்பதே மாகுரு வாயதன்
தாரக மந்திரம்! தன்னை அறிந்தவர்
சீரடி தானே சிவம். (28)

உதயத்தில் தீச்சிகப்பு உச்சியிலே வெள்ளை
விதவித வண்ணத்தில் விண்ணில் கதிரின்
அதிசயம் மாயம்! அனைத்துமே மாயம்!
பதியவைத் தார்குரு பார். (29)

கல்லும் கனியக் கவிபாடி னாலுமே
சொல்லும் செயலும் சுகந்தர, வெல்லும்நற்
கல்வியிற் சான்றோரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவோர்
நல்லகுரு, சீடர் நயம்.. (30)

அவனொருவ னானாலும் அத்தனையும் அந்த
அவனுள்ளே தானடங்கும்; ஆமச் சிவமே
எவருள்ளும் நீங்காத “ஏகாந்தி” என்றார்
தவகுரு! செய்வேன் தவம். (31)

நதியையே பார்த்திருந்தேன்; நன்றாக வெங்கோ
அதிராமல் மெல்ல அசைந்தே சுதியுடன்
செல்கிறது ; எத்தனையோ செய்திகளை என்குருபோல்
நல்லதுவாய்ச் சொல்லும் நதி. (32)

படித்துப் படித்தும் படியாது ஞானம்;
அடித்துப் பிடித்தே அதுதன் நடிப்புத்
திறத்தால் வெளியில் திமிறியே ஓடும்;
அறத்தான் குருவே அரண். (33)

சோலை மலரழகு சூரியன் வீழ்ந்திட
மாலையில் வாடிடும் ; மாலையின் வேலையே
காலைபோல் மல்லிப்பூக் காடெனக் காட்டுதல் ;
வேலை யிதிறை வினை . (34)

கிலிதரும் பாம்பு , கிளி ,புறா , ஆந்தை,
புலி,நரி, ஓநாய், புழு ,ஈ, எலியும்
களியுடன் உன்னைக் கனிவுடன் காண
ஒளிக்காத உள்ளன்பே ஒம். (35)

அல்லா கிறிஸ்து அரிசிவனும், பூமியில்
புல்லாய் மலையாய் புதுப்புனல் “சில்”லாய்,யோர்
கல்லாய்,அக் கல்லுள் கனியும் உயிராய்யிவ்
வெல்லாம் இலை ; குரு வேர். (36)

வைரமும் வேண்டாமோர் வைரநெஞ்ச மும்வேண்டாம் ;
வைரமும் மண்தானே ! வையாதே வைராசை ;
வை,ரச மாகவுள் வைராக் கியம்,குரு
வை,ரசித் தேதினம் வாழ். (37)

ஊர்க்குருவி வந்து ஒருசிலநாள் வாழ்கிறது ;
நீர்க்குமிழி ஒன்று நிறங்காட்டி ஓர்நொடியில்
பார்க்கும்நம் கண்ணெதிரே பட்டெனப் போகிறது ;
தீர்விதற்க்(கு) உன்குருவைத் தேடு. (38)

அடக்கமு முள்ளே அகங்காரம் கொள்ளத்
தொடக்கமு மாகும்; துளியும் அடக்க
நடக்கா அசுரனதை நற்குருவின் பார்வை
அடக்கும்; அதுநல்(ல) அருள். (39)

தீப ஒளி யைநீ தீயென எண்ணாதே!
கோபத் துடிப்பினைக் கொஞ்சமும் தாபமின்றி
ஆபத் திலாது அணைக்கிற ஆத்மவொளித்
தீப மெனவே தெளி. (40)

காற்றுள் ளிருந்து கவிதை எழுதிட
ஊற்றுக்கண் யார்சொல்? உருத்தெரியாத் தோற்றத்தால்
போற்றும் இசையெனப் புல்லாங் குழல்வழி
தேற்றும் இறையெனத் தேர். (41)

மாமழை பெய்து மணிக்குள மாறெல்லாம்
பூநுரை பொங்கியே போகிறது ; தானுறை
கோவிலாய் என்னுள் குருவிருந்(து) ஆசிகள்
தூவிடத் தீரும் துயர். (42)

கொதிக்கும் அனலும் குளிர்ந்த புனலும்
மதிக்கும் குருவின் மனதின் விதிகே
அடங்கும்; அவரின் அருகே அமர்ந்தால்
அடங்கும் அகந்தை அகம். (43)

சொப்பு விளையாடும் சூழலில் தப்பியே
அப்பாவின் தோள்தாவி அன்பாலே கப்பென
அப்பிடும் செல்லமாம் அன்புக் குழந்தைபோல்
தொப்பென வீழ்ந்து தொழு. (44)

எப்படியோ வாழ எனக்குப் பிடிக்காது ;
தப்படியே என்றாலும் தாங்கியே ஒப்படைப்பேன்
அப்படியே என்னை அவரிடம் ; அக்குருவோ
எப்படியும் காப்பார் எனை. (45)

சரிவிடு போகட்டும் சங்கடமாம் காலம் ;
எரிதொடு வாழ்வே எதிரே தெரிந்தும்
அறிவுடை ஆசார்யன் அன்பொன்றே என்றும்
குறியெனக் கொள்ளல் குணம். (46)

குமரன், அழகன், குகனவன் என்றும்
அமர சுகமே(ய) அளிக்கும் கமலன் ;
சமரில் தலைவன் ; சரியாய் குருவாய்
அமர்ந்தான் மனது(ள்) அவன். (47) 29.10.2014 இன்று “கந்த ஷஷ்டி”

செவிப்பூ குளிர செவிக்குள் குவியும்
கவிப்பூ வினங்களின் கற்பனை வாசம்;
தவிப்பு, மகிழ்ச்சி, தளர்ச்சி, அனைத்தும்
சுவைஎனச் சொன்னார் குரு. (48)

விந்ததனைக் காத்து , வெளிநினைவை உட்திருப்பி
முந்தனைதும் தூள்தட்டி மூளைக்குள் பொந்தினிலே
வந்தனைசெய் ! ஓங்கார வார்த்தைப் பொருளுக்குக்
கந்தனையே காரணமாய்க் காண்.. (49)

தேமா, புளிமாவும் தெய்வீகப் பாட்டிற்குத்
தாமாகத் தாங்கத் தவம்செய்யும் ; ஏமாந்தால்
பாட்டைக் கெடுத்துவிடும் ; பக்குவப் பட்டோரின்
கூட்டும் குருவின் கொடை . (50)

குடைக்கு ளிருந்தாலும் கொஞ்சம் மழைநீர்
உடையில் தெளிக்கும் ; உயிரோ உடையின்
கடைக்குள் சிலநாள் கலந்து பறக்கும் ;
விடைக்கு குருவே விடை. . (51)

“நான்”மறைய “நீ”தெரிவாய்! “நானழிய “நீ”யுதவு!
தேன்துளியைப் போய்ப்பருக தேவகுரு தா(ன்)னென்றும்
ஆனதெலாம் என்கின்றேன்! ஆணவப் பேயோட்ட
ஞான குருதாள் நலம்.. ( 52)

சிரிசிரி வாய்வலிக்க; சிந்தனையில் அந்த
“ஹரிஹர” வல்லவனை ஹாயா வரித்தால்
கரியுமே தானகந்தைக் காட்சி; மகிழ்ச்சி
புரியுமே தானகன்ற பூ. (53)

கண்ணைத் திறந்து கவலை மறந்துபார்
எண்ணம் எதுவும் இருந்திடா திண்ணனாய் ;
உண்மையில் உள்ளத்தை ஊமையாய் வைக்கவரும்
தண்மை அமைதி தரும். (54)

சொப்பனத்தில் வாழ்க்கையும் , சொப்பனமாய் வாழ்க்கையும்
குப்பனுக்கும் அப்பனுக்கும் கொள்கையில் அப்படித்தான் !
துப்புத் துலக்கு தொடர்ந்து குருமூலம்
அப்போ தறிவாய் அதை . (55)

அருவிதா னோடி அழகுநதி பேராய்
பெருகி கடலாகி பேரு ருகுரு
வருளாய்த் தெரியும் ! வழியை அறிந்து
வருவோர் பெறுவர் வரம். (56)

மைனாவும் பேசுமாம் , மைவிழியும் , பேனாவின்
மை”நா”வும் பேசுமாம் ! மௌனமாம் மெய்”நா”க்கள்
கைமேல் பலனுடன் கண்டாலும் வேண்டாதாம்
பொய்யாகப் பேசும் புகழ். (57)

அம்மா அசைத்த அடிமனதுள் என்முன்னே
எம்மாம் பெரிய எதிர்காலம் ! தும்பைப்பூ
சும்மா சிவன்தலை சூட்டென்றாள்! என்குரு
எம்புட் டருளினர் ஏற்று. (58)

சின்னக் குழந்தை சிரிக்கிறது ; ஓவென
என்ன நினைத்து எதற்கது தன்னை
மறந்து அழுகிறது ; மண்ணில் பிறந்தால்
இறந்தும் இருக்க இரு. (59)

திரையில் தெரியும் திருமுக மெல்லாம்
கரையில் கலந்து கரையும் திரைதான்!
விரைவில் இதனை விளங்கிட வேண்டின்
கரையில் குருதாள் கதி. (60)

வேண்ட மனமுமே வேண்டா திருக்கையில் ,
வேண்டும் வரமென்ன வேண்டுமாம் ? வேண்டுமே
தீண்டும் திரியினைத் தீபோல் , குருநாதர்
தீண்ட”நான்” தீயும் திரி. (61)

“அறுபதில் பார்க்கலாம் ஆன்மிகம் , இன்று
பெறுவதில் என்னபயன் ?” பிள்ளாய் உறுமாதீர் !
எப்போதும் உள்ளிருக்கும் இன்பமாம் ஒன்றிலே
இப்போதே ஒன்ற இதம். (62)

தெருத்தெருவாய் நீயலைந்து தேடிப் பிடிக்க
உருத்தெரி யாதுனக்கு ; “ஓமு”ள் ளிருப்பதும்
கண்ணில் படாது ; கருத்தினை நன்கறிய
எண்ணி குருதா(ள்) இணை. (63)

என்ன உபசரிப் பென்ன அவமதிப்
பென்னென்ன நித்தம் கிடைத்தாலும் – தன்னையது
பொன்னாக்கு மென்று பொறுமையைக் காப்போரை
மன்னவனாய்க் கொண்டாடும் மண். (64)

அரிதாரம் பூசி அரிவேடங் கொண்டா (ல் )
அரியாக மாட்டாய் ! அதுவோர் எரிபனி
என்று தெளிக ! இதயத்துள் கேட்குமொலி
ஒன்று யிரதுவே ஓம். (65)
ஆழக் கடலுக்குள் ஆணிமுத்தெ டுக்குமவன்
கூழுக்குக் கூலியாளே ! குற்றமில் லாழ
மனத்துள்ளே முத்தெடுத்தல் மற்றோர் பிறப்புக்
கனத்தைக் கருவறுக்கும் கை. (66)

குப்பை , மனதில் குவிந்து கிடக்கிறது ;
எப்போ தெறிவேன் எனதறியேன் ; அப்பா
குருநாதா நெஞ்சம் குவித்தழைத் தேனே !
இருதாள் இருத்தி(யி) இரு. (67)

பாயாசம் , அப்பம் , வடைஎன் றலைந்துள்ளே
ஆயாசம் இப்போ(த) அடைந்தோமே ; ஓயாத
வாயடைத்து மோனத்தின் வாய்திறந்தால் நெஞ்சுக்குள்
நோயே வராதாமே “ஓய்” ! (68)
(“ஓய்” என்பது நெல்லை மாவட்ட வழக்குச் சொல் ஓய்”)

இல்லத்தில் மூத்தோ(ர்) இருந்தால் “முதியோரின்
இல்லம்” ; முதியோரை எங்கேயோ(ர்) இல்லத்தில்
விட்டோர்க்கு வீடில்லை, பேரில்லை, “ஸத்குரு”
கிட்ட வரமாட்டார் கேள். (69)

விழும்போ தருவிநிறம் வெள்ளை; தெளித்து
விழும்நீர் நிறமில்லை ; விண்மண் னெழுகின்ற
வேத முதல்வன் நிறமும் குணமுமிலான்;
சேத னவனையே சேர். (70)

எவர்வந்து பாராட்ட இங்கே தியானம்;
சுவருக்கு மத்தியில் சுத்த சிவமாம் !
அவருக்குங் காட்டாதே ஆழ்ந்துள் இருத்தல்
தவமெனக் கொள்ளத் தகும். (71)

அழுவா ரதுபொய் ; அணைப்பா ரதுபொய் ;
தொழுவா ரதுபொய் ; துளியன் பொழுக
வருவா ரெவர்சொல் ? வருநா ளேனும்
குருவருள் தேடிக் குவி . (72)

காலைக் கதிரைக் கண்திறந் துள்ளுக்குள்
வேளை யொருகணம் வேண்டிக்கொள் ; நாளையைச்
சோலை மணம்போல் சுகமாய்ச் சீர்செய்யும்
வேலை நமக்கு விதி. (73)

துங்கைக் கரையில் துளிநேரம் நெஞ்சுக்குள்
தங்க அழைத்தேன் தவகுருவை – செங்கதிர்ச்
சோதித் திருமுகம் சோதித்தி டாதென்னுள்
போதித் தழகன்றோ பொன். (74)

குதிரையோர் சாட்டைச் சொடுக்கி லடங்கும் ;
அதிகாசை , ஞான(ம்) அரும்பின் மிதிபடும் !
ஆணவச் சிங்கம் அடங்கவே செய்யாது ;
வேணு மொருகுரு வே.. (75)

சுருள்சுருளாய் மேகம் சுருண்டடிக்கும் காற்றால்
பெருமழையைக் கொட்டும் ; பெருகும் கருவம்
குருவருள் தாளினைக் கும்பிட் டடங்கும் ;
திருவடியைப் பற்றித் தெளி . (76)

இசையில் கரைந்தே எதுவும் மறந்தே
அசையா நிலைத்த அறிவு – திசைக(ள்)
அனைத்து மெனது(ள்) அலையிசை ஆணை ;
நினைக்க இறையே நிறை. (77)

இருசக் கரவண்டி இந்தநம் வாழ்க்கை ;
ஒருசக் கரம்பெற்றோர் ; ஊக்கும் குருதாள்
மறுசக் கரமாகும் ; மண்ணி லெவர்தான்
மறுப்பரித் தெய்வ வரம். (78)

நாடகம் உள்ளம் ; நடிக்கும் குணந்தானே
பூடகமாய் உள்ளிருக்கும் பூச்சான வேடங்கள் ;
கூடிப் பிரியும் உயிரிருக்கும் தோற்கூட்டை
வேடிக்கை பார்த்துச் சிரி. (79)

வாழைக்கு என்றுமே வற்றாத நீர்வேண்டும் ;
ஆழமாய் உள்ளிருக்கும் ஆத்மாவாம் வாழைக்கு
ஆசானே பக்குவமாய் அன்றாடம் நீரிரைப்பார் ;
பேசா துனக்குள்ளே கேள் (80)

துள்ளும் குணமீன்நான் தூண்டிலுக்குள் சிக்காமல்
தள்ளியே போய்வந்தேன் ; தண்ணீரை அள்ளிக்
குடிக்கும் குருகையைக் கொஞ்சமே தொட்டேன் !
நொடிக்குள் மறைந்தயுகம் நூறு. (81)

பாண்டி விளையாடும் பச்சைக் குழந்தையாய்த்
தாண்டிக் குதித்துத்தான் “தானிருட் கூண்டு
விடவேண்டும் ; பற்றெல்லாம் விட்ட குருசொல்
நடந்தா லழியுமே நான். (82)

பொய்யும் புரட்டும் புதிதல்ல பூமிக்கு ;
கையோடு மெய்யாகக் கண்டாலு(ம்) ஐயா
வருமோ இறையின் வழிக்கே மனது !
குருவழைக்கத் தட்டுமோ கூறு. . (83)

தீபத் திருநாள் தெரிவிக்கும் நற்செய்தி ,
“பாபத்தைச் செய்யாதே , பண்பில்லாக் கோபத்தைப்
பேணும் மனிதருடன் பேணாதே நட்பென்று”
காணும் ஒளிகுரு கண். (84)
(இன்று திருவண்ணாமலை தீபத் திருநாள்.)

மலைக்கும் மடுவுக்கும் மாபெரும் மாற்ற
மிலைஎனச் சொல்லவோ வென்னுள் விலையிலா
மந்திரந் தந்தார் ; மரத்தையே பொன்னாக்கித்
தந்த குருவே சரண். (85)

உரிக்க உரிக்க உருத்தெரி யாமல்
மரிக்கும் மனமே வசமாய்த் தெரியும்
வழிக்கு வரும்போல் வழுக்கியே ஓடும் ;
வழிக்குக் குருவே வரம். (86)

பணத்தால் பணிவும் பனிபோல் பண்பும்
குணமாய் வருவது குலத்தின் மணமாம் !
சுணக்கம் வருமெனில் சொல்வாய் குருவே
வணக்கம் ; வருமே வளம். (87)

கோபக் குணமே குடிகொண்ட கீழோனாய்ச்
சாப வரம்பெற்றுச் சண்டையில் பாபத்தால்
கெட்டுப் புழுவாய்க் கிடந்த வனைகுரு\
கிட்ட வழைக்கக் கிரி. (88)
(கிரி – மலை )

கண்டவர்முன் கைகட்டிக் காணாது பொய்சொல்லும்
தண்டப் பிழைப்புத் தரவேண்டாம் ; கண்டத்தில்
நீலம் வரித்த நிசமாம் குருநாதா
சூலத்தால் “நானை”ச் சுடு. (89)

வாக்கு நலம்வேண்டும் , வற்றா நலப்பணிவும் ,
காக்கும் குணமும் கனிவான போக்குமே
வேண்டும் வரமாக வேண்டும் ! குருவருள்நாம்
வேண்டத் தருமே நிஜம் (90)

“பலேஎனக் கூறியே பாராட்டும் போதும் ,
எலேயிது நல்லா(யி) இலைசரி “போலே “
எனச்சொல்லும் போதும்நீ இன்பமே கொள்க
வெனக்கூறு வார்குரு வே. (91)
உறக்கம் , விழிப்பு , உறங்கா நினைப்பு
இறக்கும் வரைக்கும் இருக்கும் ; இறந்தும்
பிறக்கும் உயிராய்ச் சிரிக்கு மதுதான்
சிறக்குமுன் னாத்ம சிவன். (92)

புறத்தே இருக்கும் புகழில் மயங்கி
அறத்தை அழிக்கு(ம்) அகமே ; நிறுத்துன்
தவறைநீ. ! நெஞ்சுள் தனித்திருந்து “நான்”பார் !
அவரேதான் ஆத்ம அசல். (93)

பசிக்குணவும் , பட்டாய்ப் படுக்க இடமும்
மசித்தத் தெளிந்த மனதும் , சுகிக்க
சிவனின் உருவும் சிறப்பெனச் சொன்ன
தவகுரு வாக்கே வரம். (94)

செய்த பணிநன்று ; செய்யவோ அவ்விறை
செய்யும் கருணை ; வினைவழி உய்வேன் ;
விளையாடும் ஆசானோ வேறாரென் நண்பன் ;
களைப்பேது வாழ்வே களி. (95)

என்னறிவு என்திறமை யெல்லாமே உன்பிச்சை ;
உன்னைத்தான் கேட்பே(ன்) உதவிட ; அன்னையே
நான்கேட்கா மல்தருவாய் ஞானம் ; குருவாகத்
தானாக வந்தவளே தாய். (96)

பிள்ளை , மனைவி ; பிரியாத பாசத்தால்
முள்ளை மலரென்றும் மோனத்தைக் கள்ளின்
மயக்க நிலையாயும் மாற்றித் திரிந்தேன் ;
மயக்கத்தைத் தீர்த்தார் மகான். (97)

பட்டம் பதவி பணமெல்லாம் உன்னையே
விட்டு விலகும் ; விளையாடும் தொட்டில்
உறவெல்லாம் உன்னுடைய துட்டால் விலகும் ;
துறமனமே ஆன்மத் துணை. (98)

சுற்றி இருக்கின்ற சூழலே சொர்கந்தான் ;
வற்றாத ஆனந்தம் வாய்த்துளது முற்றாக !
நெஞ்சம் நிமிர்த்தியே நேராய் நடைபோட்டு
கொஞ்சிக் குடும்பமாய்க் கொள் . (99)

கூறு மொழியில் குணம்நன்கு கொண்டிருந்தால்
நூறு வயதும் நோயின்றி ஆறுகுளம்
நீந்திக் குளித்திடலாம் ; நீதிநெறி நின்றாலோ
ஏந்திக் கொளுமே இறை. (100)

“கட்டிடம் கட்டிக் கனவுலகில் வாழ்ந்தாலும்
பொட்டென உள்ளே பொறியொன்று தட்ட
விழிப்பாய் ! உலக விளையாட்டைக் கண்டு
விழிப்பாய் இரு ! உள் விழி ” (101)
முற்றுமே கற்க முடியாதென் றாலுமே
கற்றவ ரெப்போதும் கர்வத்தால் கற்றதை
மற்றவர் முன்னேபோய் மார்தட்ட மாட்டாராம் !
கற்றுத் தெளிந்தோர் கனி. (102)

மனமே மறந்திடு மற்றொர்செய் தீமை !
தினமே படிப்பு , செயலில் முனைப்பு ,
இலக்கியம் , ஏழ்மைக்(கு) இரங்குத லென்றால்
அலையாதே நிற்கும் அகம் (103)

குருவை நினை;முடிந்தால் கும்பிடு , கூப்பிக்
கிருபைதா என்றுநீ கேள்;தன் பெருமை
கருதா மனம்தர கண்ணீர் மழையால்
உருகிப் பணிந்தா(ல்) உயர்வு. (104)

பெரிது கடலே ; பெரிதுதான் வானம் ;
அரிதாம் குருவி(ன்) அருளே பெரிதினும்
மிக்கப் பெரிது ; மிகையில்லை வேண்டுநீ
தக்க குருவைத் தர. (105)

கம்பீரக் கண்ணனின் கண்களைப் பாரேன்டீ !
நம்பீரங் கிக்குண்டாய் நன்றாக எம்புட்(டு)
அழகுடீ !நீலனாய் ஆழ்கடல் வண்ணக்
குழந்தையாம் கோபால் குரு. (106)
(ஓவியர் கேசவ் முகநூலில் அனுப்பியிருந்த “கண்ணனின்” ஓவியத்தைப்பார்த்து எழுதியது)

கவலையை மீறும் களிப்பும் , கவிதைத்
திவலையமு தத்துளி தேனும் , சுமையை
ஒழித்த மனமும் உடனே எனக்குள்
பொழிய குருவே புகல். (107)

இசைஞான மில்லை , இறைபக்தி யில்லை ,
தசையாசைக் கோய்வில்லை , தர்மப் பசையென்னை
ஒட்டவே யில்லை உயர்குருவே உந்தாளி(ல்)
ஒட்டினால் உள்கேட்கு(ம்) ஓம் (108) 29.12.2014

எளிய பிராத்தனை

சிந்தனையே இன்றியும் , சித்தம் வெளியாகி
பந்தமேது மின்றியே பஞ்சாயுள் அந்தச்
சிவனையும் விட்டுச் சிரித்த விழியாய்
இவனைநீ வைப்பாய் இனிது.

(குருவே வணக்கம் என்னும் தலைப்பில் நாளுக்கொன்றாக நூற்றியெட்டு வெண்பாக் கவிதைகளை எழுத நினைத்தேன். அது இன்றோடு 29.12.2014 நிறைவடைகின்றது. குருவருள் எங்கும் நிறையட்டும்.)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.