— ஜெயஸ்ரீ ஷங்கர்.

யோகத்தின் முகவரிகள்:
நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, மரங்களாகி நந்தவனமாகியது. அதையும் கடந்து, இள நெஞ்சங்களுள் அவரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தின் ஆதிக்கம் அபாரமானது என்றே சொல்ல வேண்டும்…

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு யோகம் கைதூக்கி விட்டு கடைசி வரையில் கூட வரும் என்றும் சொல்வார்கள். அந்த விதத்தில் பரிபூரணமா அமைந்த ‘யோக ஜாதகம்’ அவருடையது தான். அப்பேர்பட்ட யோகக்காரருக்கு தனது உயர்ந்த பண்பால், செல்வமும், பெரும்புகழும், அழிவில்லாத மக்கள் செல்வாக்கும் வாழ்வின் எல்லை வரை அமையப் பெற்றால் அவர் மனிதருள் மாணிக்கமாவர் .

இந்நிலையில் தான் ஒரு நாள் நம்ப ஊருக்கு எம்.ஜி.ஆர் வருகிறார் என்ற செய்தி ‘காட்டுத் தீ’ போலப் பரவியது. எந்தவித தொலைத் தொடர்பும் அதிகரித்திராத காலம். மதுரையில் அவருக்கு ரசிகர்கள் கடலளவு என்பதை உணர்த்திய அனுபவம் எனக்கு அதுதான். திரையில் பார்த்திருந்த ஒரு மனிதனை நேரில் பார்க்கும் அந்த சந்தர்ப்பம் மிகவும் பிரமாண்டமானது என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பிரமிப்பு மனத்துள். நேரமாக நேரமாக மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது. அந்த ரசிகர் கூட்டத்தின் மத்தியில் நானும் எனது தோழியின் வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி அவரைக் காணும் ஆவலுடன் நின்றிருந்தேன். அவர் நடித்த திரைப்படப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தது.

“நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே”

அத்தோடு கூடவே இன்னொரு பாடலாக …

“வாங்கய்யா வாத்தியாரையா
வரவேற்க வந்தோமைய்யா “

இந்தப் பாடலும் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருந்தது. மதுரையின் தெருக்கள் முழுதும் அவருக்காக அலங்கரிக்கப் பட்டு அத்தனை இதயங்களுக்குள்ளும் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ‘ஒரே எண்ணம் ‘ நிறைந்ததாக இருந்ததைக் உணரவும் முடிந்தது. அத்தனை அன்புக்கும் சொந்தக்காரர் ‘அமாவாசை வானில் எழுந்த முழு நிலவாக’ வசீகரமான தோற்றப் பொலிவோடு வெண்பஞ்சுத் தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும், வெள்ளை அங்கியும் கழுத்தைச் சுற்றிய ஷாலோடு , கூப்பிய கரங்களில் ஒரு வாகனத்தில் நின்று அனைவரையும் பார்த்து கையசைத்த வண்ணம் எங்களைக் கடந்து சென்றார். வானுலக தேவனே வந்து எழுந்தருளியது போன்ற ஒரு நிம்மதி அவரைக் கண்டுவிட்ட முகங்களில் தெரிந்தது. கூட்டத்தில் பெருத்த ஆரவாரம். அந்த ஆனந்த அலை ஓயாது நீண்ட நேரம் ஒலித்தவண்ணம் இருந்தது. இன்றும் கூட நான் முதன் முதலாகக் கண்ட அந்த மாபெரும் பிரம்மாண்டமான மக்கள் திரள் கண்ணுள் நிறைந்து வழிகிறது. அன்றிலிருந்து எனது மனத்துள் அவரை ஒரு அதிசயப் பிறவியாகவே எண்ண ஆரம்பித்தது.

பள்ளியில் மாறுவேடப் போட்டியில் அநேகமாக அத்தனை தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு ‘எம்.ஜி.ஆர்” வேடமிட்டு ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘ என்ற அவர் மேடையில் பேச ஆரம்பிக்கும் போது, பொது மக்களிடையே தனக்கு இருக்கும் பந்தத்தை உறுதி செய்யுமுகமாக உபயோகப் படுத்தும் அந்த சக்திப் பிரயோக வாக்கியத்தையே வசனமாகச் சொல்ல வைத்து அப்படியே மெய் சிலிர்த்துப் போவார்கள். அத்தனை ஈடுபாடும், அன்பும், பக்தியும் கொண்ட தாய்குலங்கள் அவரை ஒரு அவதார புருஷராகவே எண்ணியிருந்தனர் . அவர் மக்கள் இதயத்தின் தாரக மந்திரம்.

வெள்ளித் திரை நடிகர் என்பதையும் மீறிய ஒரு பிணைப்பும், ஆளுமையும் அவர் மீது பொது மக்களிடையில் இருப்பதை காணும் போதெல்லாம் ‘இது எப்படி சாத்தியம்’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் அத்தனை பேர்களின் உள்ளத்தையும் ஈர்த்த வினோத காந்தமாக அவரது எளிமையும், காருண்யமும் இருந்தது தான் அந்த உயர்ந்த ஆன்மாவின் உன்னத சாட்சி. அவரைச் சந்திக்கும் எவரையும் அவரது ரசிகனாகவே மாற்றிவிடும் இரகசியம் தெரிந்தவர். அவர் பிறந்ததும், வாழ்ந்ததும், வெள்ளித் திரையில் சாதனைகள் புரிந்ததும், அரசியலில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பற்றி பொது மக்களின் நலனுக்காக சேவைகள் பல புரிந்ததும் அறியாதவர் யாருமே தமிழ் நாட்டில் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் என்ற இந்தப் பெயரில் தான் எத்தனை ஆணித்தரமான நம்பிக்கை மக்களிடத்தில் இருந்திருக்க வேண்டும்.

செல்வம்:
இந்நிலையில் அவர் நடித்து வெளிவந்த படங்களும், கருத்துமிக்கப் பாடல்களும், பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்பும் ஏணியாகி, அவரைத் தமிழக மக்களின் மத்தியில் ஓர் அரிய மேதையாக,மங்காத புகழ் தாங்கி நிற்கும் ‘மக்கள் திலகமாக’ மாற்றக் காரணமாயிருந்தது.. அவரை ‘ரத்தத்தின் ரத்தமாக’ அவர் நடித்த நடிப்பு வளர்த்ததா, அவரது சமூக சிந்தனை வளர்த்ததா, மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு வளர்த்ததா என்றெல்லாம் ஆராய இயலாத குறுகிய காலக்கட்டம், அவர் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொல்லும் போதே ஒரு மிகப்பெரிய கடலுக்கு முன்னால் கம்பீரமாக எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கம் போன்றதொரு பாதுகாப்பு அவரிடத்தில் நமக்கு ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை எனலாம். அத்தனை இறைவனும் அவர் பக்கம் நின்று ஒன்றாக ஆசீர்வதித்திருக்க வேண்டும். ஒரு சாமானிய மனிதனால் அசாதாரண உயரத்தில் ஒவ்வொரு இதயத்திலும் கோலோட்சி செய்தவர் நமது எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் தான் என்றாலும் அது மிகையில்லை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பரந்த மனப்பான்மையை நெஞ்சில் விதைத்தவர் திருமூலர். அந்த உயர்ந்த கருத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி மனித நேயத்தை வளர்த்தவர் நம் புரட்சித்தலைவர். அவருக்காகவே கவிஞர்கள் இதயத்தில் சுரக்கும் அமிர்த சஞ்சீவியாக கவிதை வரிகள் பொங்கி எழும். அதை எம்.ஜி.ஆர். பாடும்போது, ரசிகர்களின் நெஞ்சம் பெருமையில் பூரித்துப் போகும். சாமான்ய மக்களையும் அவரது திரையிசைப் பாடல்களால் வாழ்வியல் முறைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள வைக்கும். எத்தனையோ பேர்களின் உந்து சக்தி அவரது பாடல்களாகவே இருந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் அஸ்திவாரத்தை அதன் மூலமாகவே மக்களிடம் எழுப்பி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

எந்த உயரமும் ஒரே நாளில் ஏற்பட்டு விட முடியாது என்பது நியதி. இருப்பினும், அவரது அரசியல் உயரம் ஆரம்பித்த போதே பிரம்மாண்டமாக வளர்ந்து உயர்ந்த நிலையில் தான் உருவானது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இருந்தாலும், ஒரு சராசரி மனிதன் தனது சொந்த வாழ்வில் படும் அத்தனை அவஸ்தைகளையும் சந்தித்தவர் தான் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவித்தவர் தான். இதிலிருந்தெல்லாம் அவர் வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும் நல்ல மனமும் மட்டும் தான் துணையாக இருந்தது. அங்கிருந்து நாடே போற்ற அந்த மனிதர் மாமனிதர் ஆனார். வயது வித்தியாசமில்லாமல் சகலமானவர்களும் போற்றும் உயர்ந்த பொக்கிஷமாக கருதப்பட்டார். அவரைச் சுற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள். ஒரு நாட்டின் அத்தனை இதயங்களுக்கும் ஒரே ‘ஏகாந்தம்’ அவராகவே திகழ்ந்தார், அவரது புகழ் உயர்ந்தாலும், அவர் வந்த பாதையை மறக்காமல் , ஏழை எளிய மக்களுக்கு அவரது உதவும் கரங்களை நீட்டிக் கொண்டே இருந்தார். அவருக்கு வாழ்க்கை தந்த திரை உலகத்தையும், அவரால் மக்களுக்கு வாழ்க்கை தர முடிந்த அரசியல் உலகத்தையும் தனது இரண்டு கண்களாகவே போற்றியவர் தனது அரசியல் சின்னத்திற்கு ‘இரட்டை இலையை ‘ அடையாளமாக்கி அதையே என்றென்றும் அரசியல் செல்வத்தின் முத்திரையாகப் பதித்தவர்..

பெரும்புகழ்:
பள்ளிக் கூட கல்வி என்பது அவரது வாழ்வில் எட்டாத கனியாகி இருந்தாலும், தமிழகக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணர்த்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் பள்ளிகளில் ‘மதிய உணவு திட்டத்தை ‘ ஏற்படுத்தி அதன் மூலம் வருங்கால சந்ததியினரின் அறிவுக்கும் உணவு ஊட்டி அழகு பார்த்தார்.. இது ஒரு சமுதாயப் புரட்சியாகவே மக்களிடையில் பெருமையாகப் பேசப்பட்டது. நல்லதொரு தலைவன் நம் நாட்டைக் காக்கிறான் என்னும் நம்பிக்கையில் மக்கள் கவலைகளற்று இருந்த நேரம். மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளும் எளிமையானவை. வாழ்க்கையும் எளிமையானவை தான். காலம் அவருக்கான செயல்களை மிகவும் சிறப்பாகவே செய்தது. அதே போல்,

தமிழக மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவை வேறு எதனாலும் அளவிட்டுக் குறித்து விட முடியாததாகும். அவரையே தன்னுயிராக பாவித்து வாழ்ந்தவர்கள், அவருக்கு ஒன்றென்றால் தனது உயிரையும் துச்சமாக எண்ணி உயிர் கொடுத்து உயிர் காக்கக் கடமை பட்டவர்களாகவே பெரும்பாலான அவரது ரசிகர்கள் இருந்தார்கள் என்பது கண்கூடு. அப்படித்தான் ஒருமுறை ‘எம்.ஜி.ஆர் அவர்களின் திடீர் மரணச் செய்தி ‘ கொண்ட பொய்யான தகவல் காற்றுவாக்கில் பரவத் தொடங்கியதும், மக்களின் வேதனை கரை மீறியது. அந்த மாலை வேளையில் ஊரே ஸ்தம்பித்து ஆக்ரோஷித்தது. அந்தச் செய்தியை ஜீரணிக்க இயலாத பல ரசிகர்கள் தங்களையே எமனுக்குத் தாரை வார்த்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் அந்தக் கொந்தளிப்பை அடக்க, அந்தச் செய்தி பொய்யான வதந்தி என்ற செய்தியால் மட்டுமே முடிந்தது. அவர் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்களின் வலிமையை அனைவரும் உணர்ந்து கொள்ள அந்த ஒரு நிகழ்வு போதுமாயிருந்தது.

மனிதன் என்று பிறந்தானோ மரணமும் அவனோடு சேர்ந்தே பிறந்து விடும் என்னும் உண்மையைப் பொய்யாக்கி எம்.ஜி.ஆர் அவர்களை சிரஞ்சீவியாக வாழவைக்க வழி தேடியது அவரது ரசிக மனங்கள். அதன் வெளிப்பாடும் தெரியப் படுத்தும் விதமாக அந்த நாளும் வந்தது.

அழிவில்லாத மக்கள் செல்வாக்கு:
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம் தான் அது. ஒரு நாட்டையே உலுக்கி எடுத்த நாட்கள் அவை. கூட்டுப் பிரார்த்தனை இல்லை. நாட்டுப் பிரார்த்தை அது. எங்கள் எம்.ஜி.ஆர். மீண்டும் நலம் பெற வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனை. தொடர்ந்த பிரார்த்தனையாக அவர் நடித்த படப்பாடலே எங்கும் ஒலித்து பிரபஞ்ச சக்தியை கெஞ்சிக் கொண்டிருந்தது.

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு…!

இதன் அடுத்த வரி நம் அனைத்து இதயத்துள்ளும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பிரார்த்தனை வரிகள் தான்..நம்பிக்கையோடு பல்லாயிரக் கணக்கான இதயங்களின், ஒரே ஒரு மனிதனின் இதயத்துடிப்பின் தொடர்ச்சிக்காக இசையால் கையேந்திக் கதறிய நாட்கள் அவை. இந்த நாட்டுப் பிரார்த்தனை எந்தக் காலக்கட்டத்திலும் நடந்திராத ஒரு உலகளாவிய அதிசயம் தான். அதன் முன்பும், அதன் பின்பும் யாருக்காகவும் நடந்திருப்பதாக சரித்திர வரலாறு கூட இல்லை எனலாம்.. ஒரு உயிரின் மீது லட்சோப லட்ச மக்களின் ஆளுமையும் அன்பும் கரை புரள அதைத் தாங்கிய புரட்சித் தலைவர் எனும் அந்தப் பொன்மனச் செம்மலை மட்டுமே சேரும். பிரபஞ்சம் விடை சொன்னது. அவரை மீட்டுக் கொடுத்தது. மக்களின் மனத்துள் பால் வார்த்தது. இந்த நாடே அவர் ஒருவருக்காகவே உருவானதோ என்று எண்ணும் அளவுக்கு அவரது செல்வாக்கும் புகழும் ஓங்கி உலகளந்தது .

ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.