ஆண்டுவிழாக் காணும் வல்லமைக்கு வாழ்த்து!
— இசைக்கவி ரமணன்.
வல்லமையின் வல்லமைக்கு எல்லோரும் காரணம், அதில்
எல்லோரின் வல்லமைக்கும் வல்லமையும் காரணம், இது
நல்லவர்கள் கூடியேற்றும் நற்றமிழின் தோரணம், இனி
நாற்றிசையும் பரவட்டும் நமதுதமிழ்ப் பூமணம்
இணையதளம் என்றாலும் இனிமையினால் நற்பண்பால்
இதயதள மாகிவிட்ட வல்லமையே வாழ்க!
அணைத்தபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லுகின்ற
அன்னையவள் கரம்போன்ற வல்லமையே வாழ்க!
கணப்பாகக் குளிர்நீக்கும்! கடுங்கோடைப் பொழுதினிலே
கற்கண்டுப் பனித்துளியாய்க் கால்நனைத்து மனம்குளிரும்!
பிணைப்பாகி, ஒரு குழுமம் பெருங்குடும்ப மாகியதே!
பிரிவில்லா உறவொன்றில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறதே!
ஏதேதோ மரம்கொடிகள் எத்தனையோ மலர்வகைகள்
எல்லோர்க்கும் தனித்தனியாய் சேர்ந்திருக்க இடமுண்டு!
காதலுண்டு கவிதையுண்டு வாதமுண்டு பேதமுண்டு
கடுகளவும் பகையின்றிக் கைகுலுக்கும் பண்புண்டு!
பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
சொல்லாண்டு வாழ்க! சுவைபலவும் காண்க!
சோகமே இல்லாத சொர்க்கமாக விரிக!
எல்லோர்க்கும் இடம்தந்தே மிகவிரிந்து வளர்க! இந்த
ஏழைக்கும் இடம்தந்தீர் என்நன்றி ஏற்க!
வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!
அன்புடன்,
ரமணன்
16.05.2015
மிக அற்புத வாழ்த்துப்பாடல் ரமணன். ரொம்ப நாள் கழித்து இங்கே உன் குரல் கேட்கின்றேன்,
யோகியார்
அழகான வாழ்த்துப்பா ….!!
வல்லமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ….!!
வல்லமை ஆறாம் ஆண்டில்
வல்லமையால் வலையுலகில் வட்டமிடும் நன்மதியே
எல்லையெதும் இல்லாது எழுத்துலகம் வளர்க்கின்றாய்
தமிழுக்கு வலையிதழாய் கலைவளர்க்கும் வல்லமையே
தமிழ்மக்கள் அனைவரையும் அரவணைக்கும் மலரிதழே
வயதாறு உந்தனுக்கு நீ வாழ்வதற்கு நூறாண்டு
வண்ணங்கள் ஆயிரமாய் இடுகைகளால் மலர்தூவும்
எண்ணச் சிறகுகளால் நிறைந்து என்றென்றும்
வல்லமை நிறைவதற்கு நீ வாழ்க பல்லாண்டு.
கணபதிராமன்
கல்லிடைக்குறிச்சி