வா என்றது உருவம், நீ போ என்றது நாணம் …

0

— கவிஞர் காவிரிமைந்தன்.

வா என்றது உருவம் … நீ போ என்றது நாணம் … பார்என்றது பருவம் …

காத்திருந்த கண்கள் திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல்! விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவர் இசையில் மலர்ந்த மனோரஞ்சிதம்! பி.சுசீலாவின் குரலில் கேட்கும் தேவகானம்!! எளிமையான வரிகள் இனிமையான பொருளை அள்ளித் தெளிக்கும் கோலம்! அழகுரதம் ஒன்று அசைந்துவருவதைப்போல் கதையின் நாயகி தன் முகபாவனைகளால் வார்த்தைப் பூக்களைக் கோர்த்து ஒரு மாலையாக்குகிறாள்!

பெண்மை என்ன சொல்லும் … எப்படி தவிக்கும் … என்கிற இலட்சணங்கள் அட்சர சுத்தமாய் இறக்குமதியாகியிருக்கிறது கவிஞரின் கற்பனையில்!

வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்

சொல் ஒன்று சொன்னால் செயல் என்னவாகும்? கவிஞரின் பாடல் அதற்கும் பதில் சொல்கிறது! மயக்கம் வருகிறது, தயக்கம் தருகிறது, கலக்கம் பெறுகிறது! உறக்கம் என்ன ஆச்சு.. பாருங்கள்!!

கண் கொண்டது மயக்கம்
இரு கால் கொண்டது தயக்கம்
மனம் கொண்டது கலக்கம்
இனி வருமோ இல்லையோ உறக்கம்

வாடிக்கையான கற்பனைகளால் வரைந்துவிடாமல், வாழ்க்கையை மனிதன் எப்படி அனுபவிக்கிறானோ அதை அங்குலம்விடாமல் சொல்லிவிட முடிவது கவிஞர் கண்ணதாசனுக்கே! ஆசை என்றதாம் நிலவு அதை ஆமோதித்ததாம் மனது!! தற்குறிப்பேற்றணியைக்கூட திரைப்பாடலுக்கு சமர்ப்பணம் செய்திடும் சாதுர்யம்!!

மாலை நிலாவினைக் கேட்டேன்
என் மனதில் வந்தது என்ன
ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது மனது

கவிதை ஒன்று வரைந்து அதைப் பாடலாக்கித்தரும்போது கதையின்போக்கிற்கு வளைக்க வேண்டுமே. இதோ பாருங்கள்!! தன் காதலனைப் பின் தொடருகிறாளாம் நாயகி!

ஏதோ ஒரு வகை எண்ணம்
அதில் ஏனோ ஒரு வகை இன்பம்
ஒரு நாள் ஒரு முறை கண்டேன்
அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
படம்: காத்திருந்த கண்கள் (1962)
பாடல்: கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வனாதன், டி .கே. ராமமுர்த்தி
குரல்: பி. சுசீலா
காணொளி: https://youtu.be/OLV16AX3z2c
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ …
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்

கண் கொண்டது மயக்கம்
இரு கால் கொண்டது தயக்கம்
மனம் கொண்டது கலக்கம்
இனி வருமோ இல்லையோ உறக்கம்
(வா என்றது உருவம்)

மாலை நிலாவினைக் கேட்டேன்
என் மனதில் வந்தது என்ன
ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது மனது
(வா என்றது உருவம்)

ஏதோ ஒரு வகை எண்ணம்
அதில் ஏனோ ஒரு வகை இன்பம்
ஒரு நாள் ஒரு முறை கண்டேன்
அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்
(வா என்றது உருவம்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *