இறைவன் இருக்கின்றானா ?
— கவிஞர் காவிரிமைந்தன்.
‘பூனை ஒன்று குறுக்கே போனது! சகுணம் சரியில்லை என்றார்கள்!
ஆமாம் என்றான் ஆஸ்திகன்!
யாருக்கு என்றான் நாத்திகன்? பூனைக்கா??
ஆஸ்திகத்தின் எல்லைகளையும் நாத்திகத்தின் எல்லைகளையும் கண்ணதாசன் தொட்டுத்திரும்பிய காரணத்தால் இரண்டைப்பற்றியுமே இவரின் சொல்லாட்சி தனித்துவமே!! நாத்திக மேடைகளில் பேசுவதற்கு தேவையான செய்திகளை அறிய கம்பராமாயணத்தைப் படித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கம்பரசம் தந்ததுண்டு! கண்ணதாசன் இலக்கியக் களம்புகுந்த காரணமும் அதுதான் என்றாலும், கம்பனிடம் சரணடைந்தார் என்றே சொல்லலாம்! கட்டுக்கடங்காத கற்பனைத்திறன் வளர்க்க, சொல்லாட்சி, எல்லாம் கற்க கம்பராமாயணம் போதும் என்றார்! பன்னிரெண்டாயிரம் செய்யுள்களை மனனம் செய்து பாருங்கள் நீங்களும் கவிஞர் ஆகிவிடுவீர்கள் என்றும் உரைத்தார்.
அவன் பித்தனா? என்கிற திரைப்படத்தில் ஒரு பாடல்! இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான். அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? திரு.ஆர். பார்த்தசாரதி அவர்களின் இசையமைப்பில் கவியரசு கண்ணதாசன் வரிகள். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன், நடிகை விஜயகுமாரியின் நடிப்பில் வினா விடை வகையாக, டி.எம்.எஸ்., பி.சுசீலா குரல்களில் பொங்கிவரும் உணர்ச்சி வெள்ளம்!
இந்தப் பாடலின் தொடக்க வரிகளிலே ஒரு சூட்சுமத்தைக் கையாண்டுள்ளார் கண்ணதாசன் என்கிறார் கவிஞர் பிறைசூடன் அவர்கள்.
நான் ஆஸ்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
என்ன சொல் விளையாட்டா? இல்லை, தோழர்களே. ஆஸ்திகனுக்கு அகப்படாத இறைவனை நாஸ்திகன் சந்தித்த ரகசியத்தை அதைவிட ரகசியமாய் பதிவு செய்திருக்கிறார். ஆம்!!! இறைவன் பயப்படவில்லையாம்!
இருந்தால் இருந்த இடம், இல்லையேல் மறந்துவிடும்…
ஒரு நாள் இருந்த மனம் மறுநாள் இருப்பதில்லை …
குடிசையில் ஓர் நினைவு, கோபுரத்தில் ஓர் நினைவு …
என்றும் குறிப்பிட்டு,
மனிதனை மறந்துவிட்டு வாழ்பவன் இறைவனில்லை …என்கிற வரியோடு நிறைவு செய்யப்பட்டுள்ள பாடல்!
பாட்டிலே ஒன்று பட்டிமன்றத் தலைப்பாக பல்லவியில் தொடுத்து, இரண்டு அணிகளிலுமே எதிர்த்து நின்று வாதிட்டு இறுதியில் தீர்ப்பும் சொல்லியிருக்கும் கவியரசே! யாருக்கு வரும் இந்தக் கலை?
இறைவன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா?
மனிதன் கேட்கிறான் – அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ?
எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா?
இறைவன் கேட்கிறான் – அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?
எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை
கண்ணிலே உறுதியில்லை காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருப்பதில்லை
குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது
மனிதன் இருக்கின்றானா?
பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி
இறைவன் இருக்கின்றானா?
ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்?
இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்
மனிதன் இருக்கின்றானா?
சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை
இறைவன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் – அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
காணொளி: https://www.youtube.com/watch?v=WXKbXcbGjyQ
https://www.youtube.com/watch?v=WXKbXcbGjyQ