’இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜா தான்’ – இயக்குநர் பி.வாசு
சென்னை,ஜூலை,30
இளையராஜா போல அருமையான மெலடி பாட்டை போட்டு தந்துள்ளார் என்று இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவாவுக்கு இயக்குனர் பி.வாசு புலிவேஷம் இசை வெளியீட்டு விழாவில் பார்ராட்டு தெரிவித்தார்.
பி.வாசு இயக்கத்தில் ஆர்.கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா கலையரங்கில் நடைபெற்றது. ரசிகர்கள் முன்னலையில் கலைநிகழ்ச்சிகளோடு கோலகலமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு பாடல் சிடியை வெளியிட புகழ்பெற்ற சர்வதேச ஸ்குவாஷ் விராங்கனையான ஜோஸ்னா சின்னப்பா பெற்று கொண்டார்.
இசையமைப்பாளர் , ஸ்ரீ காந்த் தேவா, நாயகி சதா, மற்றொரு நாயகி திவ்யா பத்மினி, இயக்குநர் வாசுவின் மகன் இளம் நடிகர் ஷக்தி, நடிகர் எம். எஸ். பாஸ்கர், தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் இயக்குனர் பி.வாசு பேசும்போது கூறியதாவது:
”ஒரு படத்திற்கு வியாபாரமும் மிகவும் அவசியம் . நாயகன் ஆர்.கே மிகவும் புத்திசாலித்தனமாக இந்த இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்.
வேலை கிடைச்சிடுச்சி படத்திற்கு பிறகு மிகவும் வித்தியாசமான திரைக்கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். நாயகன் ஆர்.கே கதைக்கேற்ற வகையில் பொருத்தமாக நடித்திருக்கிறார். கார்த்திக் மிகவும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நான் அறிமுகம் செய்த மன்சூர் அலிகான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு என படத்தில் நடித்துள்ளார்.
இசை என்றால் என்னைப் பொருத்தவரை இளையராஜா தான். இந்த படத்தில் ஸ்ரீ காந்த் தேவா இளையாராஜாவுக்கு நிகராக ஒரு மெலடி பாட்டு போட்டிருக்கிறார். சின்னதம்பி ’போவோமா ஊர்கோலம்’ போல இந்த பாட்டு ஹிட்டாகும். என் மற்ற படங்களைப் போலவே எல்லா வகையான பாடல்களும் இதில் இருக்கிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.
நாயகி சதா பேசும் போது இயக்குனர் பி.வாசுவின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது விருப்பம் , ஆனால் ஒரு முறை வாய்ப்பு வந்தும் அது நழுவிப் போய்விட்டது. இப்போது புலிவேஷம் படம் மூலம் அந்த ஆசை நிறைவேறிவிட்டது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
மற்றொரு நாயகி திவ்யா பத்மினி பேசும் போது இளம் நடிகையான தனக்கு இயக்குநர் வாசு மிகவும் ஆழமான பாத்திரம் தந்துள்ளார் என்று நன்றியோடு கூறினார்.
இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா பேசும் போது, இயக்குநர் பி வாசு படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது தமது நீண்ட நாள் கனவு என்று கூறினார். பி.வாசு படங்களில் இளையராஜா பாடல்கள் மிக விஷேசமாக அமைந்து இருப்பதை தனது கனவுக்கான காரணம் என்று கூறிய அவர் புலிவேஷம் மூலம் அந்த கனவு நினைவாகி விட்டது என்றார். வழக்கமாக ஸ்ரீ காந்த் தேவா என்றால் குத்துபாட்டு தான் நினைவுக்கு வரும். ஆனால் புலிவேஷத்தில் தன் மெலோடி பாட்டு பேசப்படும் என்று நம்பிக்கையோடு கூறினார்.
திரு வாசு அவர்களே, நீங்கள் சொல்வது உண்மைதான். உங்களைப் பொறுத்தவரை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பலருக்கும் அப்படித்தான். எத்தனையோ உயரங்களைத் தொட்ட மாபெரும் கலைஞன் இளையராஜா என்பது மறுக்கமுடியாத உண்மை. 70 களும், 80 களும், 90 களும் தமிழ் சினிமாவின் பொற்காலம். இன்றைக்கும், இயக்குனர் ஒரு காட்சியில் சொல்ல நினைத்ததை நடிகர்களின் உரையாடல்களுக்கு அல்லது முகபாவங்களுக்கும் மேலாக ரசிகர்களின் மனதில் இறங்கச் செய்யும் ஜால வித்தையை ராஜாவின் இசை செய்து கொண்டிருக்கிறது. ராஜா என்றும் ராஜா தான்.