அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் …
— கவிஞர் காவிரிமைந்தன்.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் …
பொங்கும் புனல்தானே பாய்ந்துவரும் வெள்ளம்! அணைகளும் தடை செய்ய முடியாத ஆழிவெள்ளம் சூழ்கையில் எல்லாம் அடங்கத்தான் நேருமே! சமுதாய அவலங்களைத் தட்டிக் கேட்கும் எண்ணம் நம் எல்லோருக்கும் இருந்தாலும் நடைமுறையில் அனைவரும் முன்வருவதில்லை! நம் கண் முன்னே நடக்கும் தீயவர்களின் செயல்களைத் தடுத்திடவும் நாம் முனைவதில்லை! எதற்கு வம்பு என்கிற நோக்கில் பெரும்பாலோர் வழிநடக்க, எதிர்த்துக்குரல் கொடுக்க ஒருவன் பிறப்பெடுத்து வர மாட்டானா என்கிற ஏக்கம் நிறைந்திருக்க, திரைப்படங்களில் அப்படி ஒருவன் வருகின்றான், அவனே கதாநாயகனாய் திகழ்கின்றான்.
திரைப்படங்களில் அமைக்கப்பட்ட இதுபோன்ற காட்சிகளில் தன் இயல்பான நடிப்பால், ஏழைகளின் இதயங்களில் எல்லாம் இன்றைக்கும் நிறைந்திருக்கும் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்கள் உச்சம் எவரும் எட்ட முடியாதது!
சத்யா மூவிசாரின் ரிக்க்ஷாக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலிது!
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது…
நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா
தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா
உண்மை தன்னை ஊமையாக்கி தலை குனிய வைப்பதா…
நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று போகப் போகக் காட்டுகிறேன் …
வாலியின் வைர வரிகள் வீறு கொண்டு எழுகின்றன. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கதாநாயகனுக்காகவே அமைக்கப்பட்ட காட்சியில் பொருத்தமான உணர்வு மிக்க வார்த்தைகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் ஓங்கார நாதத்தோடு கலந்து உண்டாக்கும் அதிர்வுகள். அந்தச் சமுதாய அவலங்களைத் தகர்க்கும் புரட்சி நடையோடும் பொலிவோடும் அரங்கேறுகின்றன. புரட்சி நடிகர், புரட்சித்தலைவராய் பரிணாமம் பெறப் பயன்பட்ட படிக்கட்டுகளில் இப்பாடலும் அடங்கும் என்பதில் மிகையில்லை!
காணொளி: https://youtu.be/lPfUcBCYews
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது…
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு… ஆணவச் சிரிப்பு …
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே
நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே
எழுதி வைப்பார் ஏட்டிலே …
[அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்]
நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா
தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா
உண்மை தன்னை ஊமையாக்கி தலை குனிய வைப்பதா
தலை குனிய வைப்பதா …
[அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்]
தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ
நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று போகப் போகக் காட்டுகிறேன்
போகப் போகக் காட்டுகிறேன் …
[அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்]